January 11, 2010

கேரக்டர்: ராம சேஷு - கடுகு

டில்லியில் உள்ள பெரிய மனிதர்களில் தமிழர்கள் வீட்டுக் கலியாணங்கள் பருப்பில்லாமல் கூட நடந்து விடும் --ஆனால் ராமசேஷன் இல்லாமல் நடக்காது.  கலியாண மாப்பிள்ளையை விட முக்கியமான ஆசாமியாகக்  காட்சியளிப்பார் ராமசேஷன்.ஐம்பது வருடங்களாக டில்லியிலிருப்பவர் ராமசேஷன். பத்தாவது வயதில் சித்தி அடித்ததால் டில்லிக்கு ஓடிவந்துவிட்ட சேஷு, யாரோ ஒரு பெரிய மனிதரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். எடுபிடி ஆள், சைக்கிள் பியூன், சமையல்காரன், மெட்ராசுக்குத் தனியாகப் போகும் பெரிய மனிதரின் மாமிக்கு எஸ்கார்ட்; கான்வென்டில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டுபோய் விடுவது, கரோல்பாக் சென்று காப்பிப் பொடி அரைத்து வருவது -- -- இப்படி பல காரியங்கள் செய்தார்.
இன்று பெரிய மனிதர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் ராம சேஷுவின் தோளில் குழந்தையாகச் சவாரி செய்தவர்கள் தான். ஆகவே ராமசேஷனுக்கு எல்லார் வீட்டிலும் சமையலறைவரை செல்லும் உரிமை உண்டு
"விமலா, எங்கே உன் அகத்துக்காரர்? டூரா? சரியாப் போச்சு, காலேஜில் படிக்கச்சே "சிம்லா டூர் போகணும்'னு அப்படி பிடிவாதம் பிடிச்சவனம்மா உன் ஹஸ்பெண்டு. உங்க மாமனார், "அதெல்லாம் முடியாதுடா, வருகிற மாசம் பரீட்சை, படிடா பாடத்தை' என்றார். அப்புறம் எங்கிட்ட வந்தான். "சேஷு, அப்பாகிட்டே நீ சொல்லு' என்று கெஞ்சினான். நான் சொன்னப்புறம் தான் இவனுக்கு பர்மிஷன் கிடைச்சுது. இப்போ என்னடா என்றால் டூரே பொழப்பாப் போய்டுத்து.. என்ன டிபன் பண்ணியிருக்கே? மலபார் அடையா? ஒண்ணே ஒண்ணு கொடு, காப்பி வேண்டாம், டீயே போடு'' -- இப்படி உரிமையுடன் கேட்டுச் சாப்பிடுவார்.
ஒரு இடத்திலும் இப்போது அவருக்கு வேலை கிடையாது, இருந்தாலும் ஏதோ வருமானம் வந்து கொண்டிருக்கும். யார் வீட்டிலாவது கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது என்றால் "சேஷுவிற்குச் சொல்லியனுப்பு, கல்யாணம் முடிகிறவரை வீட்டோடு இருக்கட்டும்.... கடை கண்ணிக்குப் போகணும்,'' என்பார்கள். சேஷவும் "காம்ப்' போட்டு இரவு பகல் என்று பாராது உழைப்பார்.

முகூர்த்தம் ஆனதும் தம்பதிகள் இவரை நமஸ்கரிக்க வரும்போது, "பணம் காசு கிடையாது, மனப்பூர்வமான ஆசீர்வாதம் தான் தரமுடியும். குழந்தையும் குட்டியுமா செüக்கியமா இருக்கணும் நீங்க'' என்பார். தன் ஏழ்மையைக் கண்டு அவர் வருந்தியதே இல்லை. ஆனால் அவர் சர்வ சாதாரணமாகச் சொல்லி ஆசீர்வதிக்கும் போது மணமக்கள் நெகிழ்ந்து போவார்கள்.

மல் பனியன், நாலு முழ வேட்டி, மேல் துண்டு--  இது தான் சேஷுவின் ஸ்டாண்டர்ட் உடை. நரை ஓடிய தலை. நெற்றியில் சந்தனப்பொட்டு. மூன்று நாளாக ஷேவ் செய்யாத வளர்ச்சி.

சேஷுவை எல்லாரும், ஐந்து வயதுப் பொடியன் உட்பட  "சேஷ்,  "நீ” "வா' "போ' என்று தான் பேசுவார்கள். மரியாதைக் குறைவு அல்ல, அவ்வளவு அந்நியோந்நியம். அதே மாதிரி தான் சேஷுவும், எல்லாரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார். ஏகவசனத்தில் தான் பேசுவார்!

சில சமயம் இவர் பெரிய அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்திலேயே சந்திக்கப் போய்விடுவார். ஆனால் அங்கு  இவரை உள்ளே விட மறுப்பார்கள். அரசாங்க அலுவகங்களில் பாஸ் இல்லாமல் போக முடியாது. ரிசப்ஷன் குமாஸ்தாவிடம், "வெங்கட நரஸிம்மனுக்கு போன் செய், நான் பேசறேன்" என்பார். பிறகு போனில் "என்ன வெங்குட்டு, உள்ளே விடமாட்டானாம், அதனாலே நீ வா இங்கே'' என்பார். தன் பி. ஏ வை அனுப்பி சேஷுவை உள்ளே வரவழைப்பார் அவர்.
" சேஷு, ஆபீஸுக்கெல்லாம் எதுக்கு வரே?''
"நல்லா இருக்கே, அனந்தசயனம் ஸ்பீக்கரா இருந்தாரே, அப்போ நான் நேரே பார்லிமெண்ட் உள்ளேயே போவேன், உன் ஆபீஸ் என்ன சுண்டைக்காய் ஆபீஸ்?.. ஜஸ்டிஸ் ராகவனின் மாமனார், மாமியார் பத்ரிநாத் போகிறார்கள். "சேஷு, நீ துணைக்குப் போய் வா' என்கிறார் ராகவன். குளிரா இருக்கும். பழைய கம்பளிக் கோட்டு ஒண்ணு  கொடு, ஏகப்பட்டஏற்பாடுகள் பண்ண வேண்டியிருக்கு. என்னாலே வரமுடியாது. உன் டிரைவர் மூலமாக கொடுத்தனுப்பு,'' என்பார்.

ராமசேஷுவிடம் யார் என்ன உதவிகளை வேண்டுமானாலும் கேட்கலாம். அதே மாதிரி இவரும் யாரிடமும் உதவிகளைக் கேட்கத் தயங்க மாட்டார். இவரிடம் முகம் கோணியவர்கள் கிடை.யாது. ஏனென்றால் சேஷு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் கருதுவது தான் காரணம். சேஷு÷ அவர்கள் வாழ்க்கையின் அங்கம்.
அவரிடம் உள்ளவை ஓயாத உடல், அழுக்கில்லாத மனம்..
சேஷு ஒரு தனிப் பிறவி!

3 comments:

 1. அன்புள்ள கடுகு சார்,
  உங்களின் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இயல்பான, நகைச்சுவையான மற்றும் எளிமையான நடை. எனது அப்பா அம்மாவை உங்களின் எழுத்துக்களை படிக்க சொல்லி இருக்கிறேன்.
  நன்றி

  ReplyDelete
 2. மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள். இன்னும் நிறைய வரும்...

  ReplyDelete
 3. "பணம் காசு கிடையாது, மனப்பூர்வமான ஆசீர்வாதம் தான் தரமுடியும். குழந்தையும் குட்டியுமா செüக்கியமா இருக்கணும் நீங்க'' என்பார். ஆனால் அவர் சர்வ சாதாரணமாகச் சொல்லி ஆசீர்வதிக்கும் போது மணமக்கள் நெகிழ்ந்து போவார்கள்.

  Really...I was moved while reading this.

  please keep writing , Sir.Expecting more of your Delhi experiences...very interesting.Thanks.

  Ramesh, Bangalore.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :