January 01, 2010

கேரக்டர்: மாரிமுத்து -- கடுகு

          கோடம்பாக்கம் ஒவர்பிரிட்ஜ் கைப்பிடி சுவரில் அமர்ந்திருக்கும் ஏழு ஆசாமிகளில் நடுநாயகமாக இருப்பவரைக் கவனியுங்கள். அவர் தான் சினிமா ரசிகர் மாரிமுத்து!

கண்ணைப் பறிக்கும் சிவப்பு சாட்டின் சட்டை, லுங்கி, பஞ்சாபி சப்பல், படியாத கிராப்பு, கழுத்தில் மைனர் செயின் (பித்தளை தான்),  வாயில் வெற்றிலைப் பாக்கு, பன்னீர் புகையிலை-- இதுதான் மாரிமுத்து..
அரண்மனைக்காரத் தெருவில் வாட்ச்மேன். ஆகவே பகலெல்லாம் ஐயா ப்ரீ!தூங்கி ரெஸ்ட் எடுப்பதைவிடப் பாலத்தின் மேல் உட்கார்ந்து காரில் போகும், வரும் சினிமா நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவர்களைப் பற்றி கிசுகிசு செய்திகளை உற்சாகமாக அரட்டை அடிப்பதும் தான் அவருக்கு பொழுது போக்கு, ஓய்வு எல்லாம்!
இடது கையில் பெரிய ரிஸ்ட்  வாட்ச் கட்டியிருக்கிறாரே, அது மூர் மார்க்கெட்டில் வாங்கியது. விலை முப்பது ரூபாய். பார்க்கப் பிரமாதமாக இருக்கும். அவ்வப்போது உதறினால் தான் ஓடும்! இதன் காரணமாக கையை அடிக்கடி உதறும் பழக்கமே வந்து விட்டது மாரிமுத்துவிற்கு!

"டேய் மாணிக்கம், மணி எட்டடிக்கப் போவுதா? பாரு... பெரிய வண்டியிலே சிவாஜி வருவாரு... ஏன்னா. சின்ன வண்டி சர்வீசுக்கு ஒர்க் ஷாப்புக்கு போயிருக்குது. நேற்று மவுன்ட் ரோடில் பார்த்தேன். இருடா.. அது வர்றது யாரு? இந்திக்கார ஆக்டர் மாறி கீது. ஆமாண்டா, அமிதாப் பச்சன் தான். விஷயம் தெரியுமாடா? அவருக்கும் அவர் பொண்சாதிக்கும் தகராறு. ஒரு நாள் இவரு ஏதோ பார்ட்டிக்குப் போய் லேட்டா வந்தாராம். ஜயா பாதுரி ரொம்ப ஸ்ட்ரிக்ட். சும்மா வுடுவுடுன்னு வுட்டுது. ’இந்த மாதிரி எல்லாம் ஊர் சுற்றி விட்டு வந்தால் நான் என்ன செய்வேன்னு தெரியாது’ அப்படின்னு சொல்லிடுச்சு. அதற்கு அப்புறம் தான் இவரு டயத்திற்கு வந்து டயத்திற்குப் போகிறார்! இன்னா ஒண்ணுடா, தினமும் பம்பாய்க்கு கால் போட்டு குழந்தைகிட்டே பேசாம இருக்கமாட்டார்டா. கடைசி ரீல் தான் எடுக்கறாங்கடா, கிளைமாக்ஸ் சீன். "கண்ணீர் சிரிக்கிறது' படம் இல்லே, அதைத் தான் இந்தியிலே எடுக்கறாங்கடா, தமிழ்லே தான் டப்பாவாய்ட்டுது. இந்தியிலேயாவது நல்லா ஓடணும். இல்லாட்டி பைனான்ஸியர் அவுட். பத்து லட்சம் போட்டிருக்கானே.. !'
"ஆமாம் மாரிமுத்து, இப்போ பாத்தியா, எல்லா படத்திலேயும் முத்துராமன் வராரு.''
"பின்னே என்னடா, அவரு ரொம்பத் தன்மையானவரு. அவரை இன்னிக்கு நேத்திக்கா தெரியும்? டிராமா கம்பெனியிலிருந்து அவரைத் தெரியும். ஒரு நாள் ஷøட்டிங்கிலே அவரைப் பார்த்தேன். "ஸார், உங்க விசிறின்னேன்.'' "உன் மாதிரி ரசிகர்கள் ஆதரவு தான் எனக்கு வேண்டும்'' என்று சொல்லி செட் பையனைக் கூப்பிட்டு, எனக்கு காபி கொடுக்கச் சொன்னாருடா. அவரு தாண்டா மரியாதை தெரிஞ்சவரு. ஒவ்வொருத்தரு மாதிரி இவர் ரேட்டு விஷயத்திலே கறாரா இருக்க மாட்டார். ஒரு பெரிய புரொட்யூசரு... அவர் பேரைச் சொல்லக்கூடாது-- அவருக்கு பாவம், மூணு படம் அடிபட்டிடுச்சு. அவருக்கு கை கொடுக்க முத்துராமன் காசு வாங்காம நடிக்கிறாரு. அது தாண்டா மனுஷத்தனம். நாலு ஏரியா கூட வித்துப்புடிச்சு. மைசூர் ஸ்டேட் இன்னும் விக்கலையாம்.''
"ஆமாம் மாரிமுத்து, ஷூட்டிங் நீ நாலைந்தாவது பார்த்திருப்பே இல்லையா?''
"வாயை அலம்புடா. நான் பார்க்காத ஷூட்டிங்காடா! இன்னா ஒண்ணு சொல்றேன்,  படா பேஜாருடா ஷூட்டிங் பாக்கறது. எனக்கு ஆயிரம் ரூபா கொடு, ஊம்.. நான் பாக்க மாட்டேன். இன்னா பப்பி நடிக்கறதைப் பார்த்தா மட்டும் குஷியா இருக்கும்..."
"யாரண்ணே பப்பி.''
"நீ நேற்று பொறந்த பயல்! அதான் இப்படி கேட்கறே. பத்மினிடா . அமெரிக்காவிலே இப்போ இருக்காங்க. நடிப்புன்னா அவங்க நடிப்பு தாண்டா நடிப்பு! உசிரை விட்டு நடிப்பாங்க. தில்லானா மோகனாம்பாள் படத்திலே ஒரு இடத்திலே அவங்க கண் கலங்கறாங்க.... அதைப் பார்த்து இந்த மாரிமுத்துவுக்கே அளுகை வந்திடிச்சுன்னா பார்த்துக்க.
"முன்னே இங்கே கேட் இருந்ததே, அப்போ ஒரு நாள் அவங்க கார் இங்கே நின்னுது. நீ இருக்கறயே, அவ்வளவு தூரத்திலே அவங்களைப் பார்த்திருக்கிறேன். இன்னா கலர்டா? தக்காளிப்பழம் மாதிரி...! இப்போ எல்லாம் மேக் அப் அடிச்சிக்கிறாங்க. அவ்வளவு தான்.. நடிப்பு பூஜ்யம். இந்த அழகிலே பேட்டியிலே என்னமா அளக்கறாங்க?
"அந்த இஷாகுமாரின்னு வந்.திருக்குதே, அது என்னடா நடிகை? "தம்பி நீட்டிய கம்பி'யில் அந்த ஜெயில் சீனில் டயலாக் பேசும் போது அப்படியா உணர்ச்சியைக் காட்டுவது? அப்படியே கொட்ட வேண்டாமா? டைரக்டர் டில்லி பாபுவுக்கு இஷா மேல் கண், அதுக்காகத்தான் படத்திலே போட்டாரு. இந்த ரோலில் ஜயரோஜாவைப் போட்டிருந்தா  என்னமா பண்ணியிருக்கும்... அதாண்டா..  வந்து, நான் கதை வசனம் எழுதி டைரக்ட்  பண்ணிப் போட்டேனே, "இடிந்த காதல் கோட்டை' நாடகம், அதில் என்னோடு ஹீரோயினா நடிச்சுதே, அவ தான் ஜயரோஜாஸ்ரீ, நானும் டைரக்டர் பாலச்சந்தர் கிட்டே அதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். "மாரிமுத்து மனசிலே வச்சிருக்கேன். டைம் வர்றபோது சொல்லி அனுப்பறேன்' என்று சொல்லியிருக்காரு. இன்னாடா அப்படிப் பாக்கறே, சந்தேகத்தோடு?
"பாலசந்தர் எத்தினி வருஷமா பழக்கம் தெரியுமா?. அவர் டிராமா போடுவாரே, அப்போ நான் தான் சீன் இழுப்பேன். அந்த சீன் கம்பெனி முதலாளி கிட்டே, ’மாரிமுத்து தான் வரணும்'னு சொல்லுவாரு. ஏன்னா நான் தான் கரெக்டா ட்ராப்பை விடுவேன்!
"எதுக்கு சொல்ல வந்தேன்னா நம்ம ஜயரோஜாவுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சால் நமக்கு ஒரு சான்ஸ் அது வாங்கிக் கொடுக்கும்.! அதுகிட்டே போய் கேளு, "மாரிமுத்து அண்ணன் தான் என் கலை உலக குரு'ன்னு சொல்லும். ஏதோ நம்மாலே நாலு பேர் முன்னுக்கு வந்தால் சரிதான்!
"ஏய் சிங்காரம், போய் ரெண்டு சிகரெட்டு வாங்கி வாடா. மணி ஆவுது. இன்னும் மஞ்சுளாவைக் காணோம். ஏழாம் ப்ளோரில் ட்ரீம் சீன் ஆச்சே! ஆமாண்டா, பெங்களூருக்குப் போயிருக்குதே... பேப்பர்லே வந்திச்சே...
"டே, பார்த்சாதி. பார்த்தியா யார் கார்லே போனாங்கன்னு? நம்ம லெட்சிமிடா. "ஜூலி படம் பார்த்தியா? சேதுமாதவன் நல்லா டெக்னிக்கா எடுத்திருக்காரு. இல்லைன்னு சொல்லக்கூடாது. இதே கதையை என் கிட்டே கொடுத்திருந்தால்...''

பாவம். மாரிமுத்து ஒரு பெரிய கற்பனை உலகத்திற்குள் சினிமா உலகம் ஒன்றை சிருஷ்டித்துக் கொண்டு வாழ்ந்து வருபவன். அந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை

3 comments:

  1. romba nalla irrukku. thodarnthu ezhuthunghal. vannakkam.

    ReplyDelete
  2. Kadugu sir,

    " Wish you a very happy new year to you and your family "

    Your narrations are very interesting and amusing.
    My mail id is vadivam_03@yahoo.co.in

    ReplyDelete
  3. Vazhthukkal kadugu. ungal kadhaigalai kalkiyil niraya padithu irukkiren. Romba kalam aale kanavillai. marubhadi ungal ezhuthukkalai padikka malarum ninaivugal pola irukkirathu.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!