August 05, 2010

புள்ளிகள்: வானதி திருநாவுக்கரசு

“நான் மட்டும்  படிச்சவன்!:
தினமணி கதிர் சார்பில் 1972-ம் வருஷம் ஆசிரியர் சாவி எனக்காக ஒரு வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்தார். கீதா கார்டன்  ஹோட்டலில் (தற்சமயம் காஞ்சி ஹோட்டல்) நடந்த அந்த நிகழ்ச்சியில் நான் எழுதிய “சொல்லடி சிவசக்தி: நாவலை வெளியிட வானதி திருநாவுக்கரசு முன்வந்தார், அமைச்சர் ராஜாராம் தலைமையில் கி,வா,ஜ வெளியிட டைரக்டர் ஸ்ரீதர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் சுந்தா, தமிழ்வாணன், ஆகியோரும் கலந்து கொண்டு 
பேசினார்கள். வானதி திருநாவுக்கரசு பேச வேண்டியதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து படித்தார்,
விழா முடிந்ததும்  எல்லரும் கிளம்பிப்போகும் சமயம் சாவியிடம்  வானதி திருநாவுக்கரசு  ” இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாரும் பேசினீர்கள்..என்ன பிரயோசனம்.. இத்தனை பேரில் நான் ஒருத்தன் தான் ‘படிச்சவன்’ என்ற பெயரைத்தட்டிகொண்டு போய்விட்டேன்!” என்று சொல்லி கலகலப்பை ஏற்படுத்தினார்!
சாவி,  “போட்டிங்களே சரியான போடு. வருகிற வார  தினமணி கதிரில். இதை ஒரு ‘பாக்ஸ் மேட்டராகப் போட்டு விடுகிறேன்” என்றார்..

============ 
பால ஹனுமான் எழுதிய பின்னூட்டம்:
:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.
அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார். ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.
விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.
மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார். 'அவா வேற தர்ராளாமா ? நாமதான் ஏற்கனவே உனக்கு 'சமய இலக்கிய பிரச்சார மணி' னு பட்டம் தந்தாச்சே" என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார். உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாலையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார். 
மகானே பட்டம் கொடுத்த பிறகு.....வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ? அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம் அவருக்கு வரவே இல்லை.

5 comments:

  1. வானதி திருநாவுக்கரசு கூறுகிறார்....

    ஒவ்வொரு நாளும் பதிப்பகம் திறந்தவுடன் வாசகர்கள் கேட்கும் நூல்களான ஸ்ரீ காஞ்சி மகாசுவாமிகள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலைச் சொல்வதா, மூதறிஞர் ராஜாஜியின் இராமாயணம், மகாபாரதத்தைச் சொல்வதா, முக்கூராரின் குறையொன்று மில்லையைச் சொல்வதா, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தைச் சொல்வதா, சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைச் சொல்வதா, அமரர் கல்கியின் நூல்களைச் சொல்வதா என்று திகைப்புத்தான் மேலிட்டது.

    கடுகு சார்,
    வானதி திருநாவுக்கரசு தனது சுயசரிதையை 'வெற்றிப் படிகள்' என்ற பெயரில் எழுதியதாக ஞாபகம். தங்களுக்கு நினைவிருக்கிறதா ?

    ReplyDelete
  2. ஆம்..வானதி திருநாவுக்கரசு 'வெற்றிப் படிகள்' என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  3. இன்று ‘தேவதை’ பத்திரிகையில் ஸ்ரீ கோபு எழுதும் பகுதியைப் பார்த்து உங்கள் சகோதரரின் பெயரும் என் பெயரும் ஒன்றே என்று தெரிந்து ஒரு சந்தோஷம். அதாவது நானே உங்கள் சகோதரனாக எண்ணிக்கொண்டேன்! - ஜெகன்னாதன்

    ReplyDelete
  4. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

    வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.

    அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார். ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.

    விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.

    மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார். 'அவா வேற தர்ராளாமா ? நாமதான் ஏற்கனவே உனக்கு 'சமய இலக்கிய பிரச்சார மணி' னு பட்டம் தந்தாச்சே" என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார். உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாளையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார்.

    மகானே பட்டம் கொடுத்த பிறகு.....வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ? அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம் அவருக்கு வரவே இல்லை.

    ReplyDelete
  5. சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே...

    ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே -- மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

    அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் -- மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

    சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

    மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் --

    "அவளைத் தினமும் 'திருமுருகாற்றுப்படை' படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். " என்றார்.

    "அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே" என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு... இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே ! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்" என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

    அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

    "உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு' என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

    அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊர்ருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார் ? மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

    மகான் சொன்னவாறே மீனாளிடம், 'திருமுருகாற்றுப்படை' புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்... மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!