April 18, 2010

சிவாஜிகணேசனும் நானும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் பல தடவை பேசி இருக்கிறேன். ரேடியோவிற்காகப் பேட்டி எடுத்திருக்கிறேன். படப் பிடிப்பில் பார்த்து இருக்கிறேன். ஆனால் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று கூற மாட்டேன்.
ஸ்ரீதர் என் நண்பர் என்பதால் ஸ்ரீதரின் படப்பிடிப்பிற்கு நிறைய தடவை போய் இருக்கிறேன். அப்போது சிவாஜியைப் பார்த்திருக்கிறேன் .
பேசும் படம் பத்திரிகை உதவி ஆசிரியருடன் சென்று அவரைச் சந்தித்து  இருக்கிறேன். அவருடைய படத்தை வரைந்து அவர் வீட்டிற்குச் சென்று அதில் கையெழுத்து வாங்கி இருக்கிறேன். தமிழ் மொழியின் அழகை அவர் பேசும் போது தான் முழுமையாக ரசிக்க முடியும்.
அவர் முதன் முதலாகக் கட்டபொம்மன் நாடகத்தை தேனாம்பேட்டை காங்கிரஸ் கண்காட்சியில் அரங்கேற்றினார். நாடகத்திற்கு அனுமதி இலவசம்.
கட்டபொம்மன் நாடகம் .நடிப்பது , சிவாஜிகணேசன், அனுமதி இலவசம் - இந்த மூன்றும் என் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு மாலை 5 மணி வாக்கில் கண்காட்சிக்குப் போய் திறந்தவெளி அரங்கை அடைந்தோம். கூட்டம் நீக்கமற நிறைந்திருந்தது.
எல்லாரும் ஒரு புல் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நடுநடுவே பாத்தி கட்டிய மாதிரி இடைவெளி விட்டு உட்கார வைத்திருந்தார்கள். அந்த பாத்தி பாதையில் வேகமாக நடந்தோம். எங்கேயும் இடம் இல்லை. டவல், கைக்குட்டை, பை என்று பலர் துண்டைப் போட்டு வைத்திருந்தார்கள்.
”கொஞ்சம் இடம் கொடுங்கள்” என்று சொல்லியபடி உட்கார்ந்தால் உடனே ”எழுந்திரு... எழுந்திரி... தம்பி வரான்,  அத்தை வராங்க” என்று எல்லா உறவினரையும் குறிப்பிட்டு விரட்டினார்கள். (முதல் முறையாக பல உறவுப் பெயர்களைக் கேள்விப்பட்டேன் என்பது தொடர்பில்லாத தகவல்) போதாதற்கு எங்கோ நின்று கொண்டிருந்த போலீஸ்காரரை உதவிக்கு அழைத்தார்கள். இப்படி இடத்திற்கு இடத்திற்குத் தாவிக் கொண்டிருந்தோம். ஒட்டிக் கொள்ள இடம் கிடைக்கவில்லை. ஒரு மூலையில் காலே அரைக்கால் அங்குல இடம் இருந்தது. அசடு வழியும் சிரிப்புடன் அங்கு உட்கார்ந்தேன்.
பெரிய குங்குமப்  பொட்டுடன் மகாலட்சுமி மாதிரி இருந்த பெண்மணி அடுத்த கணம் காளியாக மாறினார். குங்குமப் பொட்டு இருந்த இடத்தில் மூன்றாவது கண் திறந்தது. ”அய்யா டாணாக்காரரே... இங்க பாருங்க..”. என்று குரல் கொடுத்தார். 1950களில் ரவுசு, அலம்பல், லொள்ளு என்பதெல்லாம் செம்மொழியில் வரவில்லை. ஆகவே  அவைகளை அந்தப் பெண்மணி உபயோகிக்கவில்லை!
போலீஸ்காரர் வந்தார். ”தம்பி... எழுந்திரு. இடம்தானே வேண்டும்? பின்னாலே போ... இருக்குது” என்றார். பின்னால் என்பது கிட்டத்தட்ட கண்காட்சி மைதானத்துக்கு வெளியே.
     அப்போதுதான் டேல் கார்னகியின் ”ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்” என்ற புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன்.. அதில் கற்ற பாடத்தை சோதித்துப் பார்க்கலாம் என்று எண்ணி “ சார்... இதப் பாருங்க... இந்த நாடகத்தைப் பார்க்க செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கிறோம். எப்படியாவது எங்கள் இரண்டு பேருக்கும் துளியூண்டு இடம் பிடித்துக் கொடுத்திங்கன்னா, ஆயுளுக்கும் மறக்க மாட்டோம்..உஙகளாலே உதவி செய்ய முடியும்..கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள வாய்ப்பு” என்று அடித்து விட்டேன்!  அவருக்கு . என்ன தோன்றியதோ,  முகத்தை கடுமையாக்கிக் கொண்டு, ”சொன்னா கேக்க மாட்டீங்க.. இப்படி வாங்க./ உம்.. வாங்க இப்படி... என்னோட... வாங்கன்னு  சொல்றேன்.”.. என்று இரைந்தார்.
அவர் முன்னே போக, நாங்கள் பின்னே உதறிக் கொண்டே போனோம்.  .மேடையை நோக்கி அழைத்துப் போனார். மேடைக்கு முன்னே முதல் வரிசையில், கிட்டத்தட்ட மேடையிலிருந்து 4, 5 அடி தூரத்திற்கு அழைத்துச் சென்று கடுமையான் குரலில் “உம்... இங்கே உட்காருங்க. இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது..  ஆமாம்.” : என்று கடுமையாகச் சொன்னார், மற்றவர்கள் எங்களைக் கிளப்பிவிடக்கூடாது என்பதற்காக் அப்படி சிம்மக்குரலில் முழங்கினார் என்று அப்போது  நாங்கள் நினைக்கவில்லை. . நாங்கள் சட்டென்று உட்கார்ந்தோம். அவர் பூட்ஸ் காலை கையாக நினைத்து மனதிற்குள் குலுக்கினோம்.
       ஆக, முதல் வரிசையில் சிவாஜியின் கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த சிலருள் நானும் ஒருவன். (நான் வார்த்தை காப்பாற்றுபவன் பாருங்கள், 50 வருஷம் ஆனாலும் கூட அந்த போலீஸ்காரர் செய்த உதவியை மறக்காமல் சொல்லி இருக்கிறேன்.)
நல்ல இடம் கிடைத்ததனாலும் சிவாஜியை மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்ததாலும் நாடகத்தை கண் கொட்டாமல் பார்த்தேன். அடாடா! முதல் நாள் நாடகமாக.  இருந்தும் (எனக்குத் தெரிந்த வரையில்) பிசிறோ குழப்பமோ இல்லாமல் நாடகம் நடந்தது, நாடகம் முடிந்ததும் எழுந்து நின்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். மொத்த கூட்டமே பொறாமையுடன் என்னைப் பார்ப்பது போல் தோன்றியது!
(டேல் கார்னகியின் உத்தியை அதன் பிறகு பல சமயங்களில் உபயோகித்தேன். பலன் பெரிய பூஜ்யம்தான்.)
• • •
சிவாஜி அவர்கள் ராஜ்ய சபை உறுப்பினராக நியமனம் ஆனதும் டில்லிக்கு வந்தார். அப்போது நான் டில்லிவாசி.
ஆல் இந்தியா ரேடியோவின் வெளிநாட்டுத் தமிழ் ஒலிபரப்புக்காக அவரை பேட்டி காண நிலைய டைரக்டர் நேரம் கேட்டிருந்தார். இன்னும் அரை மணியில் இங்கே தமிழ்நாடு ஹவுசிலேயே ரிகார்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்றார்.
பேட்டி காண்பதற்கு யாரைக் கூப்பிடுவது என்று புரியவில்லை. என் அலுவலகம் வானொலி நிலையத்திற்கு நேர் எதிர் கட்டடம் என்பதால் புரோகிராம் எக்ஸ்க்யூட்டிவ் திருமதி லீலா என் ஆபீசுக்கு வந்து, கிளம்புங்கள். சிவாஜியைப் பேட்டி காண்பதற்கு என்று அவசரப்படுத்தினார். உடனே கிளம்பினோம்.
என் ஆபீஸ் அருகிலேயே இருந்ததாலும்   ’இவன் அரசு ஊழியன்; ஆகவே எப்போது வேண்டுமானாலும் பையை மாட்டி விட்டு வெளியே போகலாம்’ என்பதாலும் என்னைக் கூப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். (’அதென்ன பையை மாட்டிவிட்டு’ என்று தானே கேட்கிறீர்கள்?  டில்லி ஆபீசில் நீங்கள் சீட்டில் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை;  உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பை இருந்தால் போதும். நீங்கள் சீட்டில் இருப்பது மாதிரி கணக்கு!)
    தமிழ்நாடு ஹவுஸ் போனோம். சிவாஜி வந்தார். வணக்கம் சொன்னோம். ஒரு சின்ன கேள்விக்குறியுடன் தலையை லேசாகச் சாய்த்து என்னைப் பார்த்தார். சான்ஸை விடுவேனா?.. ஸ்ரீதரின் நண்பன் என்று ஆரம்பித்துப் பழைய சந்திப்புகளைச் சுருக்கமாகச் சொன்னேன்.
”வெரிகுட். ஆரம்பிக்கலாமா?”  என்றார்.
பேட்டி ஆரம்பித்து விறுவிறு என்று போயிற்று. சிவாஜி மிகுந்த சினேக பாவத்துடன் மிகவும் சகஜமாகப் பேசினார். அதனால் என் மனதினடியில் ஒரு குறும்பு எண்ணம் தோன்றியது.
”சார், உங்கள் ஞாபகசக்தித் திறனைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே கிடையாது, இப்போ உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். பராசக்தி படம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு வந்தது. அதில் நீங்கள் பேசிய வசனங்கள் எல்லாரையும் கட்டிப் போட்டவை. இப்போது அந்த வசனத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.
”ஓஹோ... உங்களுக்கு ....என்.... நினைவுத்திறன் மேல் நம்பிக்கை இல்லையோ? ஆகவே டெஸ்ட் பண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களோ?” என்று நாடக பாணியில் தோளைக் குலுக்கிக் கேட்டார். நான் மையமாகத் தலையாட்டினேன்.
”ரெடி, ஸ்டார்ட்” என்று சொல்லிவிட்டு வசனத்தைச் சொல்ல ஆரம்பித்தார் பாருங்கள்... என்ன குரல் வளம், என்ன உச்சரிப்பு, என்ன உணர்ச்சிக் கலவை... அடாடா!   பேசி முடித்து விட்டு, ”என்ன சரியாகச் சொல்லி விட்டேனா/” என்று குறும்புடன் கேட்டார்!
சந்தேகமில்லாமல் அவர்  நடிகர் திலகம் தான்!

17 comments:

  1. கொடுத்து வைத்தவர் தான் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. //1950களில் ரவுசு, அலம்பல், லொள்ளு என்பதெல்லாம் செம்மொழியில் வரவில்லை. ஆக்வே அவைகளை அந்தப் பெண்மணி உபயோகிக்கவில்லை!//
    வாய்விட்டுச் சிரித்தேன். நான் கூட சிவாஜியை இரண்டு தபா பார்த்திருக்கிறேன். நாகையில் காமராஜ் காலத்தில், அதன் பிறகு புரசைவாக்கத்தில் சுந்தரம் பிள்ளைத் தெருவில் நடந்த சவாலே சமாளி வெற்றிவிழாவின் போதும்.

    ReplyDelete
  3. Dear Kadugu Sir,
    Sivaji became Rajya Sabha MP in 1984. Parasakthi was released in 1952. Therefore, it should have been 35 years when you interviewed him (sometime in 1985/86) and not 25 years as mentioned.

    ReplyDelete
  4. <<<< Nagarajan said ...Sivaji became Rajya Sabha MP in 1984. Parasakthi was released in 1952. Therefore, it should have been 35 years>>> எனக்கு சினிமாவை பற்றிய் துல்லிய்மான் விவரங்கள் தெரியாது. அதனால்தான் "கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு வந்தது" என்று சொன்னேன், Thank you for the info

    ReplyDelete
  5. Sir,
    When ever you write Naanum....avarum it becomes superhit!!!!!! Keep it up.

    Kothamalli

    ReplyDelete
  6. Kothamalli அவர்களுக்கு, நன்றி
    superhit என்பதற்குத் தமிழில் ’செம குத்து’ என்றும் பொருள் கொள்ளலாம்.அந்த அர்த்தத்தில் நீங்கள் எழுதவில்லை என்று நம்புகிறேன்!!!:)

    ReplyDelete
  7. சும்மா சொல்லக்கூடாது, உங்களுக்கு எவ்வளவு தொடர்புகள் - அதுவும் எப்படிப் பட்ட தொடர்புகள்! நிஜமாகவே கொடுத்து வைத்தவர் தான்.

    நானும் 3 சிவாஜி ட்ராமாக்கள் பார்த்தேன் மும்பையில் பல் வருடங்கள் முன்னால். தங்கப் பதக்கம் நாடகத்தை மறக்க முடியுமா? அவர் மனைவி இ்றந்த செய்தி கிடைத்ததும், police uniform-il,மேல் அதிகாரிக்கு salute அடித்துவிட்டு, விறைப்பாக திரும்பி நடக்க ஆரம்பித்து, கொஞ்ஜம் கொஞ்ஜமாக தளர்ந்து மேடையி்ன் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நடப்பார். என் கண்கள் குளமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி இப்படி ஒரு நடிகர் தோன்றுவாரா?

    இதில் இன்னொரு விஷயம். அவருக்கு அந்த சமயத்தில் ஷண்முகானந்தாவி்லோ வேறு ஹாலிலோ மேடை கிடைக்காமல், மாதுங்கா - தாதர் இடையில் ஒரு வேகண்ட் ப்ளாட்டில் டெம்பொரரி மேடையில் நடந்தது. பார்வையாளர்கள் ஓபன் ஏர் த்யேட்டரில்!

    - ரா. ஜெகன்னாதன்

    ReplyDelete
  8. /உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பை இருந்தால் போதும். நீங்கள் சீட்டில் இருப்பது மாதிரி கணக்கு!)/
    என் CPWD friend சொன்னது - மேஜையில் ஒரு மூக்குக் கண்ணாடியும், குளிர் காலத்தில், நாற்காலியில் ஒரு கோட் தொங்கவிட்டும் போவார்களாம்!
    - ரா. ஜெகன்னாதன்

    ReplyDelete
  9. Sir,
    More than the article, your reply was simply superb!!!! (Sarcastic nature is in your DNA....get it checked)

    Please take extra care when you hit(super)...then i will cry!!!!

    Kothamalli

    ReplyDelete
  10. Kothamalli....அவர்களுக்கு, மிக்க நன்றி. அன்று பிட்டுக்கு மண் சுமந்தார். இன்று பலர் ஹிட்டுக்கு மவுஸ் ஓடடுகிறார்கள்!ஹிட்டுடன் சில சமயம் சொஞ்சம்/நிறைய ஷொட்டு/ குட்டு கிடைக்கிறது.

    ReplyDelete
  11. <<<< Jagannathan said...சும்மா சொல்லக்கூடாது, உங்களுக்கு எவ்வளவு தொடர்புகள்.>>>
    அந்தத் தொடர்புகள் ஓரளவு என்னை செதுக்கின. ஆண்டவனுக்கு தான் ந்ன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
  12. What a writing about our NT. thank you sir. Please keep writing more about our NT.

    Cheers,
    Sathish

    ReplyDelete
  13. Thank you for your interesting interaction with our NT.

    Cheers,
    Sathish

    ReplyDelete
  14. Thank you, Go through all my earlier postings. There are many intersting, inspirng, touching postings.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!