April 14, 2010

கேரக்டர்: பூபதி - கடுகு

குறுகலான மார்க்கெட் வீதியின் ஆரம்பத்தில் உள்ள பழையகால கடையில், சுற்றும் பல வித டின் டப்பாக்கள் சூழ, நடுநாயகமாகச் சின்ன ஸ்டூலில் சம்மணமாக உட்கார்ந்து கொண்டு, ஒரு கையால் உத்திரத்திலிருந்து தொங்கும் கயிற்றைப் பற்றியபடியே மற்றொரு கையால் சாமான்களை எடுத்துக் கொடுத்து, பணத்தை வாங்கிப் பக்கத்தில் உள்ள கல்லாப் பெட்டியில் பணத்தைப் போடுபவர் பூபதி. ஊரின் ஒரே நாட்டு மருந்து கடையின் அதிபர்.
கடை பரம்பரை சொத்து. மருந்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் டின்களின் மேல் உள்ள துருவே, கடையின் வயது ஐம்பதுக்கு மேல் என்பதை நிரூபிக்கும். அந்த டப்பாக்களின் மேலே கோணல் மாணலாக வசம்பு, திப்பிலி, கண்டங்கத்திரி, இந்துப்பு, கிச்சிலிக்கிழங்கு, குங்கிலியம், ஏலரிசி என்று பல நாட்டுமருந்துப் பெயர்கள்.  கடைப் "பையனு'ம் ரொம்ப புராதன ஆசாமிதான்.
பளிச்சென்ற வெள்ளை வேட்டி. ஸ்லாக், கழுத்தில் தங்கப் பூண்போட்ட ஒற்றை ருத்திராட்சம், இடது கையில் தங்கச் செயின் போட்ட கோல்ட் வாட்ச், விரலில் இரண்டு மூன்று மோதிரங்கள், உட்கார்ந்தே வியாபாரம் செய்வதால், சற்றுப் பருமனடைந்த உடல், உப்பி இருக்கும் கன்னம், புல்தரை போன்ற மீசை, சதா பேசிக்கொண்டிருக்கும் வாய் ---இவைதான் பூபதி.

தமிழ்ப் பேப்பரைப் படித்தபடியே கமெண்ட் அடிப்பார். தெருவில் போகிறவர்களை இவராகக் கூப்பிட்டு, ஏதாவது உள்ளூர் அரசியல் வம்பு பேசுவார். தனது மருந்து மூலிகைகளின் மேல் அவருக்கு அபார நம்பிக்கை. ஆகவே எந்த வம்புப் பேச்சுடனும் தன்னுடைய நாட்டு மருந்துகளுக்கு விளம்பரமும் தருவார்.
"போங்க, அண்ணாச்சி, போங்க... கையில மருந்துக் குப்பியை எடுத்துக்கிட்டு தர்மாஸ்பத்திரி க்யூலே போய் நில்லுங்க. உம், என்னவோ இந்த இங்கிலீஸ் மருந்து மேலே மோகம்.... எங்க நாயினா ஒரு தபாகூட இங்கிலீஸ் மருந்தை சாப்பிட்டதில்லை. தொண்ணூறு வயசாச்சு... வூட்ல போய்ப் பாருங்க.... இன்னமா இருக்காருன்னு பாருங்க.... வைரம், அசல் வைரக்கணக்கா இருக்கார்,. அத்த வுடு. உனக்கு இன்னா உடம்பு? காலில் பித்த வெடியா? ... அதுக்கு மதார்சிங்கு களிம்பு போடு. மூணே நாள். இருக்க இடம் தெரியாம பூடும். போங்க போங்க ஓமியோபதி, அலோபதி எல்லாம் பாத்துட்டு கடைசியிலே நம்ப கிட்டே தான் அல்லாரும் வர்றாங்க.... அதோ சேட் வர்றார்...இன்னா சேட்டு..முனிசிபாலிடி எலெக் ஷன்லே நிக்கப் போறியா? உனக்கு ஏம்பா வம்பு. உன் கடையை நல்லா கவனிச்சியானா போதும்... ஆமாம், நேத்து சினிமா கொட்டாவுலே இன்னா தகராறு?... நீ தான் படம் பாக்கிறயோ இல்லியோ, தெனைக்கும் அங்கே போவியே, போறவங்க வர்றவங்களை பாக்க...
"வாங்க முதலாளி... இன்னிக்கி என்ன ஈரங்கியா? போ, உன் கரும்பு வித்த பணமெல்லாம் அந்த வக்கீலுக்குத்தான் போகுது.... ஒரு வேடிக்கைப் பாத்தியா, அவர் பேரு சக்கரை... நீ கரும்பு போடறே;  அவரு அறுவடை செய்யராரு. இரு, இரு. நல்ல முந்திரிப் பருப்பு வந்திருக்கு. வாங்கிக்கிட்டு போ...

"டேய் சின்ன பையா, அந்த கோடி டப்பாவிலே நீர்முள்ளி விதை இருக்கு. இந்தப் புள்ளாண்டான் கையிலே எடுத்துக் கொடு... நாலணா குடு தம்பி... பத்து பைசாவுக்கு மயில் துத்தமா? எதுக்கு? பரீட்சை கிரீட்சை எளுதி பைல் ஆயிட்டியோ? மயில் துத்தம் வெஷம்பா... பசங்க கிட்ட கொடுக்கமாட்டேன்... உங்கப்பாரு வாங்கியாரச் சொன்னாரா? இன்னாத்துக்கு? அச்சாபீஸ் பைண்டரா? கூழ்லே போடப்போறாரா? சின்ன பை.யா, அந்த புட்டியிலே இருக்க நீல மருந்தை ஒரு ரூபாய் எடை கட்டிக்கொடு.. ஆமாம் தம்பி உங்கப்பா வஜ்ரம் மட்டும் மெட்ராஸிலேர்ந்து வாங்கியாந்துடுவாரா? நம்ப கடைலே வாங்கினா இன்னா?
 ''சின்ன பையா! அந்த ஸ்டூலை எடுத்துப் போடு.  தலைவர் வராரு .. வாங்க தலைவரே, இன்னா இந்த பக்கம். அரசியல்? நெலவரம் எப்படி இருக்கிறது? மேட்டுத் தெருவுக்கு தார் ரோடு போட்டதிலே ஏதோ ஊழல் கீழல் அப்பிடின்னு நேத்து மீட்டிங்க்லே பேசினாங்களாமே... அல்லாம் நீங்க வச்ச வத்தியாகத்தான் இருக்கும். கவுன்ஸிலர் கனகசபையை என்னமோ லேசுப்பட்ட ஆளுன்னு நெனச்சுக்கிட்டாங்க.... அப்புறம் ஒரு விஷயம், கனகசபை அண்ணே. நம்ப வூட்டு வரியை அநியாயமா ஏத்திப்புட்டார் முனிசிபல் கமிஷனர். போய்ப் பாத்தேன். ரொம்ப இங்கிலீஸ் பேசறாரு ... நீ பாத்து செஞ்சாதான் உண்டு. டேய் சின்ன பையா... ஐதராபாத் திராட்சை வந்ததே, ஒரு கிலோ கட்டு... ஐயோ தலைவரே... நீங்க ஒண்ணு... சும்மா வெச்சுக்குங்க. நமக்குள்ள காசு பணம் எதுக்கு? சாம்பிள் வந்த சரக்கு தான்....
"அதோ போறாரே மைனரு... தலைவரே, புதுப் பணம் இன்னா பண்ணுது பாத்தீங்களா? இன்னா அல்டாப்பு! இன்னா கித்தாப்பு! சிங்கப்பூர் பணம்!  உம், நீயும் நானும் இருக்கிறோமே, இன்னா பிரியோசனம்... நம்ப புள்ளைக்கு சின்னதா ஒரு வூடு கட்ட ஆரம்பிச்சேன். லட்சத்துக்கு மேலே போய்ட்டுது. நமக்கு மூச்சு தெணர்றது... மைனர் என்னடான்னா கார் வாங்கப் போறாராம்...  சின்ன பையா, பேச்சைப் பாத்துக்கினு இருக்கியே வைத்தியர் லிஸ்ட் சாமானைக் கட்டினாயா?...கோரோசனம் வராகனெடை...   அப்புறம், கஸ்தூரி மஞ்சள்... ''
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்திருப்பவர் பூபதி!

1 comment:

  1. /ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்திருப்பவர் பூபதி! / - It is seen from your description of him how successful was he - with all jewellery and clean dress and stout body! - R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!