April 24, 2010

கறுப்பு தங்க மீன் எங்கே? - கடுகு

குப்புசாமி வீட்டிற்கு நான் போனபோது வீடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் மேல் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள்.
``ஜன்னலை ராத்திரி மூடி வைக்கணும்னு சொன்னேனே... யார் மறந்தது?'' என்று குப்புசாமி கத்த--
``கொக்கி உடைஞ்சு போச்சுன்னு கழுதையாகக் கத்தினது உங்க காதில விழுந்துதா..?''- என்று அவன் மனைவி பங்கஜம்..கத்த -
`` கத்தினேன்னு நீ சொன்னா போதும். `கழுதையா' என்ற அடைமொழிக்கு அவசியமே இல்லை. ...போச்சே... இப்ப என்ன செய்யறது?''

இனிமேலும் இந்த எபிஸோடைப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல என்பதால் நான், ``என்னப்பா குப்புசாமி?  என்ன... என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.
``வாப்பா... வா,,,இந்த மீன் தொட்டியிலே ஏழு தங்க மீனும் ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தது. ராத்திரி இருந்தது. இப்ப காணோம்...''
``மீன் தொட்டியிலிருந்து துள்ளி வெளியே விழுந்திருக்குமோ என்னவோ... பூனை கீனை வந்த எடுத்துக்கிட்டுப் போயிருக்கும். இதுக்குப் போய் வீட்டை ரெண்டாக்கறீங்களே!'' என்று கேட்டேன்.
``பாத்தியா... பாத்தியா... பங்கஜம்... என்ன கேட்டார் பாத்தியா? வீடு இரண்டாக்கறோமாம். அப்படி நிச்சயமாக ஆகப் போகிறது. ஐயோ... இந்த மீன் போனதால என்னென்ன இரண்டு படப் போகுதோ'' என்றார் குப்புசாமி.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. குப்புசாமியைக் கேட்டேன்.
``அப்பா... மீன் தொட்டியில ஏழு தங்க மீனும், ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தால் வீட்டில் லக்ஷ்மி தாண்டவமாடுவாள்னு சாஸ்திரம் சொல்லுது!''
``எந்த சாஸ்திரம் அப்படி சொல்றது?  வேடிக்கையான சாஸ்திரமாக இருக்கிறதே!''
``வாஸ்து அப்பா... வாஸ்து சாஸ்திரம்!''
``வாஸ்துன்னா வாசக்காலை மாத்தி பின் பக்கம் வை. கிச்சனை தலைகீழா வை. வீட்டுக் கூடத்தை பக்கத்துத் தெருவில் வை, அப்படி இப்படின்னு தானே சொல்வாங்க?''
``கேலியா இருக்குதா உனக்கு?''
``மீன் தொட்டி, மின்சார ஏரேட்டர் கருவி என்றெல்லாம் இப்பதான வந்திருக்குது? இதெல்லாம் வரும் என்று தெரிந்து ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடியே இப்படி எழுதி வெச்சிருக்காங்களா?''
``இப்படியெல்லாம் சாஸ்திரங்களைக் கிண்டல் பண்றதாலதான் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தவியாய்த் தவிக்கிறீங்க... வாயில்லாப் பிராணிக்கு மீன். அதுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்தால் நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்'' என்றார்.
``அப்ப ஒண்ணு செய். ஒரு திமிங்கிலத்தை வெச்சு அதுக்கு இரண்டு டாங்கர் தண்ணி கொடு. உன் வீட்டிலே தினமும் மழை கொட்டு கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கும்...''
குப்புசாமி பல்லை நறநறவென்று கடித்து ஏதோ கத்த நினைத்தபோது கூரியர் தபால் வந்தது. அதில் கையெழுத்துப் போட்டு வாங்கிய போது பார்த்தேன். ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடும் போது அவர் பெயரின் கடைசியில் ஐ, ஒய், ஈ என்று மூன்று எழுத்துக்களையும் போட்டிருந்தார்.
``என்னப்பா புது ஸ்பெல்லிங்?'' என்று கேட்டேன்.
``சொன்னால் ஒரு கிண்டலா இருக்கும். இது நேமாலஜி, நியூமராலஜி ஆகிய அடிப்படையில் அமைஞ்சது. இப்படி மாத்தின பிறகு அடுத்த நாளே ரோடில் ஒரு ரூபாய் கிடந்தது. அது நல்ல அறிகுறி.''
``இன்னும் நாலைந்து  ஈ, ஐ எல்லாம் போடு. ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைக்கும்! தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த சாஸ்திரம் இங்கிலீஷ் பெயருக்கு மட்டுமா? தமிழில் நீ கையெழுத்துப் போடும் போது `குப்புசாமிஈஈஈ' என்பது போலப் போடுவியா?''
``இப்போ உன் முதுகிலே பலமாகப் போடப் போகிறேன்.''
``போடு. அதுக்கு முன்னே ஒரு சின்னக் கேள்வி...''
``ஏடாகூடக் கேள்வியாகத்தான் கேட்பாய். கேளு...''
``இல்லை. இப்படி பெயரில் ஏ, ஈ என்று சேர்க்கச் சொல்லும் இந்த நிபுணர்கள் தங்கள் பெயரிலும் `ஏ', `ஈ'யை சேர்த்தால் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாமே... ஏன் அவர்கள் அப்படிச் செய்வதில்லை? அவர்களுக்கு கோடீஸ்வரர்கள் ஆகும் ஆசை இல்லை என்று நினைக்கிறேன்...''
``எந்த சாஸ்திரமும் பிறருக்கு உதவுவதற்காகத் தான் நமது முன்னோர்கள் உருவாக்கி உள்ளார்கள். தனக்கு உபயோகித்துக் கொள்ள அல்ல.''
``சரி, இப்போது நீ சொன்னது எந்த சாஸ்திரத்தில் இருக்கிறது?''
``சாஸ்திரம் கீஸ்திரம் என்று ரொம்பக் குடையறே? எனக்கு ஆத்திரம் வருது.''
``நன்றாக முழுசாக வர்றதுக்குள்ளே நான் இடத்தைக் காலி பண்றேன். இந்த இடத்தில் நிற்பதில் எனக்கு நல்லது இல்லை என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது என்று நினைக்கிறேன்'' என்று கூறிவிட்டு கட்டினேன் நடையை!

14 comments:

  1. ஆமாம் இப்படி தான் சில பேர் பித்து பிடித்து அலைகிறார்கள் .இவர்களுக்கு நாம் எதாவது எடுத்து சொன்னால் நாம் பைத்தியகாரர்கள் ஆகிவிடுவோம்

    ReplyDelete
  2. Dear sir,
    Firstly, kindly guide me as to post in tamil.
    Now,Like you , I am also looking at Vaasthu followers with great disdain.My close friend, who is also my mentor in many ways, has a penchant ( weakness?) for these kind of Vassthu stuff. I think people who have money by the crore are the first victim to this , as they are scared stiff about losing money.
    he demolished his ceiling ( RCC roof) as some vaasthu man advised him and rebuilt it again in the same place.
    I attended a house warming recently and the owner was bragging about the house being 100% Vaastu compliant.I asked him how the toilet is attached to the bedroom when during the old days ( Vaasthu period) th toilets were only far away from the main building. He certainly missed the humour.

    I enjoy your works as ever.

    Shankar

    ReplyDelete
  3. இந்த நேமாலஜி போன்ற சமாச்சாரங்களை சில பிரபலங்களும் செய்வதால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட சாத்தியம் இருக்கிறது. இது போன்ற கட்டுரைகள் பத்திரிகைகளில் வந்தால் பலரையும் சென்றடையும். (ஏற்கெனவே வந்திருக்கா?)

    இப்படிக்கு

    அறீவீளீ :-))))

    ReplyDelete
  4. <<>>>
    இல்லை. இது புதுசு

    ReplyDelete
  5. <<< Shankar said...,Firstly, kindly guide me as to post in tamil.>>>>
    இது மிகவும் சுலபமானது. http://software.nhm.in/products/writer
    இந்த லிங்கில் போய் டவுன்லோட் செய்யுங்கள். அங்கு செயல் முறை விளக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  6. அறீவீளீ :-))))

    பிரமாதம்

    ReplyDelete
  7. எல்லாம் பித்து பிடிச்சு திரியுறாய்ங்க. ஒரு மனுஷன் வாழ போறது என்னமோ அதிக பட்சம் 35,000 நாட்கள் மட்டுமே. அதுல வந்தது, போனது, தூங்குனது, தூங்க முடியாம கிடக்குறதுல பாதி போயுடும். மிச்சம் சொச்சம் என்னமோ ஒரு பத்தோ பதினைந்தாயிரம் நாட்களே. இதுக்கு ஏன் இவ்வளவு ஆட்டமும், ஆர்பாட்டமும்.

    நான் மதுரையில் இருந்த போது எனக்கு தெரிந்த மளிகை கடைக்காரர் குடும்பம் தினமும் அருகில் இருந்த ஒரு பொது கழிப்பறையில் தான் காலை கடன்களை கழித்து வந்தனர் (சொந்தமாக வீடு இருந்த போதும்). விசாரித்த போது தெரிந்தது அது அவருக்கு பிடிச்ச வாஸ்து செய்த வேலை என்று.

    ReplyDelete
  8. Thanks for guiding. I will try to post in tamil next time.

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. த்மிழில் தட்டச்சு செய்ய சரியான வழிகாட்டுதல் நன்றி பல. கனரா வங்கியில் சந்தித்த அதிகப் ப்ரஸங்கி
    அடியேன் கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  11. <<<< சிறியவன் said...த்மிழில் தட்டச்சு செய்ய சரியான வழிகாட்டுதல் நன்றி பல. கனரா வங்கியில் சந்தித்த அதிகப் ப்ரஸங்கி--அடியேன் கிருஷ்ணமூர்த்தி>>>
    எளிமையாக இருப்பது தவறில்லை. எளிமை வேறு தாழ்த்திகொள்வது வேறு!

    ReplyDelete
  12. அமெரிக்க வந்தும் இந்த வாஸ்து சாஸ்திரத்தை விடறதா இல்லை.....

    என்னுடைய உறவினர் ஒருவர் தனது வீட்டில் கீழ் தளத்திலுள்ள கழிபிடத்தை மூடிவைதுள்ளனர், கேட்டால்... வஸ்துவாம்...

    இங்குள்ள அமெரிக்க வீடு புரோகர்களிடம்(அதுதாங்க Real Estate Agent) இந்தியர்கள் கேட்கும் படி வீடுதேடி தருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்..... நானும் அவர்களை என் பெற்றோர் மற்றும் மாமனார், மாமி, இன்னும் எல்லோரும்.... சொல்லும் வாஸ்து கலை எல்லாம் அமெரிக்க வீடு புரோகர்களிடம் விலக்கி, அப்பப்பா போதுமட சாமி....

    ReplyDelete
  13. super sir, semma comedy

    deva

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!