டெல்லி தூர்தர்ஷனில் வந்தத் தலைப்புச் செய்திகளில் ஒன்று : நாளைக் காலை முதல் சூபர் பஜாரில் சூரிய அடுப்பு விற்பனைக்கு வருகிறது.
உடனே, செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த என் அருமை மனைவி கமலா, "நாளைக்குப் போய் ஒரு ஸோலார் குக்கர் வாங்கிக் கொண்டு வந்துடுங்க. என்ன, திக்பிரமை பிடிச்ச மாதிரி பார்க்கறீங்க? ஆரம்பத்தில் 200 ரூபாய் குறைத்துக் கொடுக்கிறார்கள்'' என்று ஆரம்பித்த அவளை இடைமறித்து,
"ஒரு காஸ் அடுப்பு, இரண்டு ஸ்டவ், ஒரு நூதன், ஒரு எலக்ட்ரிக் அடுப்பு இத்தனை இருக்கிறது. இன்னொரு அடுப்பு எதுக்கு?'' என்றேன்.
"காசு செலவு இல்லாமல் சமையல் ஆயிடுமே இதில்? இரண்டு மணி நேரம் வெய்யிலில் வைத்தால் போதும். நாலு பாத்திரத்தில் சமையல் ரெடி. இரண்டு மணி நேரம் சூடு ஆறாது...''
"உனக்கெப்படித் தெரியும்?''
"இப்பத்தான் டி.வி.யில் சொன்னார்களே, என்ன நியூஸ் கேட்டீர்களோ?''
"சரியாகக் கவனிக்கலை...''
"கவனிக்கலையா? நியூஸ் படிக்கிறவளைச் சாப்பிடுகிற மாதிரி கண் கொட்டாமல் பார்த்துட்டு இருந்தீங்களே? நன்னா தான் கவனிச்சீங்க. எந்தக் கற்பனை லோகத்தில் இருந்தீங்களோ. சரி...சரி, நாளைக்கு முதலில் ஒரு குக்கர் வாங்கணும்.'' என்றாள் தீர்மானமாக.
"எதுக்கு வீண் செலவு?''
"நான் ஒரு குண்டூசி கேட்டால் கூட உங்களுக்கு வீண் செலவு. அதுவே உங்க அக்கா சரோஜாவுக்கு..................''
"........ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தால்கூட அவசியமான செலவு! சரி, சரி, ஸோலார் குக்கர் வாங்கிக் கொடுக்கிறேன். இருந்தாலும்....''
"என்ன இருந்தாலும்? திடீர்னு ராத்திரி எட்டு மணிக்கு உங்க ப்ரண்ட்ஸ் நாலு பேரை அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போடு என்கிறீர்களே, அதற்காக ஒன்றுக்கு இரண்டு அடுப்பு இருந்தால் செüகரியமாக இருக்குமில்லையா?''
"கமலா, ராத்திரியிலே சூரிய அடுப்பு வேலை செய்யாது... ஒண்ணு செய். ராத்திரியில் சமைக்கணும் என்றால் அடுப்பை எடுத்துக் கொண்டு நேரே அமெரிக்கா போ. அங்கே பகல் நேரமாக இருக்கும். வெய்யில் இருக்கும். சமைத்து எடுத்துக் கொண்டு வந்து விடு.''
"அமெரிக்கா தானே? இதோ, போய்ட்டு வரேன். இந்தக் கேடு கெட்ட கரோல்பாக்கிற்குப் போயே ஆறுமாசம் ஆச்சு. ஏதாவது சொல்லி என் கோபத்தைக் கிளறாதீங்க. அடுப்பும் வேண்டாம், துடுப்பும் வேண்டாம். அந்தக் காலத்திலே தண்ணீரில் ஊற வெச்ச வெறகா பாத்து வாங்கி வந்து உசிரை வாங்கினீங்க. பம்ப் ஸ்டவ்வில் பம்ப் அடிச்சது நூறு டிராக்டருக்குக் காற்று அடிச்சதுக்குச் சமம்...''
"இதுக்குப் போய்க் கண் கலங்கலாமா? நாளைக்கே ஒரு குக்கர் வாங்கலாம், என் டாப் டக்கரே!'' என்றேன்.
கமலா கலகல வென்று சிரித்தாள். "இதென்ன மெட்ராஸ் பாஷை, டக்கர்!'' என்றாள். எவ்வளவோ அதி அற்புதமான என் ஜோக்குகளுக்கெல்லாம் சிரிக்காமல் கல்லுளி மங்கியாக இருக்கும் கமலா இப்போது சிரித்தது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. சிலர் சிரித்தால் முத்து உதிரும். கமலா சிரித்தால் என் பர்ஸிலிருந்து பணம் உதிரும்.
சுளையாக 402 ரூபாய் கொடுத்து ஒரு ஸோலார் குக்கரை வாங்கிக் கொண்டு வந்தோம் மறுநாள்.வீட்டிற்கு வந்து சேர்வதற்கும் வானம் இருள்வதற்கும் சரியாக இருந்தது. திடீரென்று மழை! கடந்த 50 வருஷத்தில் டில்லியில் ஏப்ரல் மாதத்தில் மழையே பெய்ததில்லை!
"நீங்கள் மூக்கால் அழுதுகொண்டே வாங்கித் தந்ததால் ஆகாசமே அழுகிறது? உம், என் ராசி! உங்களுக்குப் பால் பாயசம் சாப்பிட்ட மாதிரி இருக்குமே...'' என்று சீறினாள் கமலா.
அடுத்த மூன்று நாள் நான் பால் பாயசமாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் (கமலாவின் கணிப்புப்படி)! நான்காவது நாள் வெய்யில் வந்தது. அவுட்டோர் ஷூட்டிங் நடத்துபவர்களுக்குக் கூட அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டு இருக்காது. கமலா ஒரே உற்சாகமாக இருந்தாள்.
"முதன் முதலில் ஸோலார் குக்கரை உபயோகப்படுத்துகிறோம். பால் பாயசமே பண்ணி விடுகிறேன்'' என்றாள்.
"பால் பாயசமா? வெரிகுட்! அட்டகாசம் பண்ணு. அதிருக்கட்டும் கமலா, நாம் இருப்பது இரண்டாவது மாடி. இங்கே வெய்யில் பால்கனியில் தான் வரும். வெய்யில் வந்த பிறகு குக்கரை வை'' என்றேன்.
"முதல் தடவை புத்திசாலித்தனமாக ஒரு வார்த்தை சொன்னீங்க'' என்று அவசர சர்டிபிகேட்டைக் கொடுத்து விட்டு டெலிபோனைச் சுழற்ற ஆரம்பித்தாள்.
"பத்து மணிக்கு வாங்கோ. குக்கர் வெக்கப் போறேன். ராஜத்தையும் அழைச்சிட்டு வாங்கோ. மிஸஸ். கிருஷ்ணமூர்த்திக்கு நேத்து சொல்லியிருக்கேன். பால் பாயசம்... ஹலோ சந்திரா மாமியா? வெய்யில் வந்துட்டுது. ஆமாம், பத்து மணிக்கு வந்துடுங்கோ... யார், லீலாவா? கட்டாயம் வந்துடு...''
இப்படிப் பத்து பேரை இருபது முப்பது ராங் நம்பருக்குப் பிறகு கமலா அழைத்து விட்டாள். "சீக்கிரம் ஓடுங்கோ. மதர் டெய்ரி மூடிடப் போறான். நாலு லிட்டர் பால் வாங்கிட்டு வாங்கோ. வர்றவங்களுக்குக் காப்பி கொடுக்க வேண்டாமா? அப்புறம் பாயசத்துக்கும் பால் வேண்டும். ஓடுங்கோ.''
ஓடினேன்.
பத்துமணிக்குத் தான் எங்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. எங்கள் வீட்டு பால்கனியில் சாதாரணமாகச் சாயங்காலம் மூன்று மணிக்குத்தான் வெய்யில் வரும் என்று.
வந்திருந்த மாமிகளுக்கு கேஸ் அடுப்பில் காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, அங்கில்லாத மாமிகளைப் பற்றி வம்பு பேச ஆரம்பித்தாள் கமலா.
"கமலா... தினமும் இப்படி மூணு மணிக்கு வெய்யில் வந்தால் பிரேக் ஃபாஸ்ட் சாயங்காலம் தான் ஐந்து மணிக்குத்தான் ரெடியாகும்!'' என்று ஒரு மாமி, நான் மனத்திற்குள் நினைத்திருந்ததை சொன்னாள். கமலாவிற்குச் சுர்ரென்று கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, "பிரேக் ஃபாஸ்ட்டைத்தான் பண்ணணுமா என்ன? நைட் மீல்ஸ் பண்றோம். இவர் என்னமோ சௌத் எக்ஸ்டன்ஷன்லே பங்களா வாங்கலாமென்று இருக்கார். அங்கே போனால் வேண்டிய வெய்யில் கிடைக்குமே?'' என்றாள்.
கமலாவின் கற்பனை என்னைத் தூக்கிப் போட்டு விட்டது. சௌத் எக்ஸ்டன்ஷனில் பங்களாவா? அப்படிக் கனா காணுவதற்குக் கூட ஆயிரம் ரூபாய் செலவாகுமே!
கலியாணங்கள், பிரசவங்கள், மாமியார் கொடுமைகள், நாத்தனார் படுத்தல்கள், பக்கத்து வீட்டுக்காரிகளின் வீண் ஆடம்பர ஜம்பங்கள் ஆகியவைகளைச் சவிஸ்தாரமாகப் பேசி முடிப்பதற்கும் பால்கனியில் வெய்யில் தலை நீட்டுவதற்கும் சரியாக இருந்தது.
"வெய்யில் வந்துடுத்து!'' என்று "காதல் வந்திருச்சு' மாதிரி உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே ஸோலார் குக்கருக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வெய்யிலில் வைத்தாள் கமலா. ஒரு பாத்திரத்தில் பாலையும் இன்னொரு பாத்திரத்தில் அரிசியையும் வைத்தாள். வெய்யில் பளீரென்று காய்ந்தது. குக்கரின் ரிஃப்ளக்டரைச் சற்றுச் சாய்த்து வைத்தாள்.
"இந்தச் சூட்டுக்குப் பத்தே நிமிஷத்தில் சமையல் ஆயிடும் பாரேன். இப்ப மணி என்ன? சரியாக மூணு ...பாரேன். ஐந்து மணிக்கு ரெடியாயிடும்'' என்றாள்.
( கணக்கு உட்படப் பல விஷயங்களில் கமலா வீக்!)
அரை மணி நேரம் ஆயிற்று. பாத்திரம் லேசாகச் சுட்ட மாதிரி இருந்தது.
"கமலா, வேண்டுமென்றால் கொஞ்சம் விசிறிவிடேன். சூடு உறைக்கும்'' என்றேன். ஜோக்காகத் தான் சொன்னேன். ஆனால் கமலா தான் சூடாகி விட்டாள்!
அப்போது ராஜம் மாமி, "கமலா, பாலை முதலில் காஸ் அடுப்பில் முக்கால் வாசி காய்ச்சிவிட்டு, அப்புறம் இந்த ஸோலார் குக்கரில் வைத்துவிட்டால் சீக்கிரம் பொங்குமோ என்னவோ.'' என்றாள். (இந்த ராஜம் மாமியைப் பற்றிப் பின்னால் கமலா சொன்ன கமெண்ட்களையும் நான் எழுதப் போவதில்லை. தன்னைப் போல் பிறரையும் நினைத்துப் பார்ப்பவன் நான்.)
சுமார் ஒன்றரை மணிக்குப் பிறகு பாத்திரங்கள் நன்றாகச் சுட்டுவிட்டன. சரியாக ஐந்தேமுக்காலுக்குக் குக்கர் டப்பாவைத் திறந்தாள் கமலா.
சொல்லக்கூடாது. சாதம் பொல பொலவென்று வெந்திருந்தது. பாலும் காய்ந்திருந்தது. இதற்குள் எதிர் பிளாக்கின் பின்னால் சூரியன் போய்விடவே சாதத்தையும் பாலையும் கேஸ் அடுப்பில் வைத்து ஐந்து நிமிஷத்தில் பிரமாதமான பால் பாயசம் செய்தாள்.
அனைவரும் சாப்பிட்டு உற்சாகமாகப் பாராட்டினோம்.
* * * * * * * * *
இப்போது சௌத் எக்ஸ்டன்ஷனில் பெரிய மைதானத்துடன் கூடிய வீட்டை வாங்கினால் தான் ஸோலார் குக்கரை உபயோகிக்க முடியும்.
அங்குசத்தை வாங்கியாகி விட்டது. யானையை வாங்க வேண்டும். அதுவரை அங்குசம் (அதாவது குக்கர்) பரணில் நிம்மதியாக இருக்கும். அதற்கு நிம்மதி. ஆனால் எனக்கு?
Dear Sir,
ReplyDeleteExcellent... especially அடுத்த மூன்று நாள் நான் பால் பாயசமாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் (கமலாவின் கணிப்புப்படி)!
Regards
Rangarajan
கண்ணுபடர அளவுக்கு விகடன்லேந்து செக் வந்துருக்கு .மாமிக்கு குக்கர் வாங்க இத்தனை அழுகையா?
ReplyDeleteஇல்ல சவுத் எக்ஸ்டன்ஷனில் மாமிக்கு தெரியாம இடம் வாங்கிடீங்கலோ?
//இதற்குள் எதிர் பிளாக்கின் பின்னால் சூரியன் போய்விடவே// எங்கே அடுப்பை துாக்கிக்கொண்டு எதிர் பிளாக்கிற்கு ஓடினீர்களோ என்று நினைத்தேன்
ReplyDeleteSir,
ReplyDeleteSuperb!!!!!! Tasted the 3rd suvai.
Kothamalli
:-)))
ReplyDeleteIf you had taken your PM's idea seriously, think what will be your south block bungalow worth now! - R. J.
ReplyDeleteI did not take PM's idea since my bank balance at the time was in two digits only!!!!
ReplyDelete<<>>
ReplyDeleteசவுத் எக்ஸ்டன்ஷனில் ஒரு பங்களாவை ஒரு நிமிஷம் உற்றுப் பார்க்கிறதுக்கே ஆயிரம் ரூபாய் கொட்க்கணும்!
//நான் ஒரு குண்டூசி கேட்டால் கூட உங்களுக்கு வீண் செலவு. அதுவே உங்க அக்கா...//
ReplyDeleteஅடடடா , இது universal dialogue நு நினைக்கிறேன்
அப்படியே எல்லோர் வீட்டிலும் புகுந்து புறப்பட்டா மாதிரி ,super.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://www.virutcham.com
<<<....Virutcham said... அடடடா , இது universal dialogue நு நினைக்கிறேன்அப்படியே எல்லோர் வீட்டிலும் புகுந்து புறப்பட்டா மாதிரி ,super.>>>>>>>
ReplyDeleteஇப்படி இருப்பதால் தான் எல்லாருக்கும் ஏதோ த்ங்கள்கள் வீட்டில் நடந்த சம்பவம் மாதிரி தோன்றுகிறது... :கமலா என்பது ஒரு GENERIC வார்த்தை. அது மனைவி என்றும் பொருள் படும்.
என் ’அருமை மனைவிதான்’ இப்படி பாடுபடுத்துகிறாள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கமலா என்று வரும் இடங்களில் எல்லாம் உங்கள் மனைவியின் பெயரைப் போட்டுவிட்டுப் படியுங்கள். ’நான்’ என்பது படிக்கும் உஙகளைக் குறிக்கும்.
படித்தேன், சிரித்தேன், ரசித்தேன்
ReplyDeletemigaum yadarthamana nagaisuvaiudan irundhathu.
ReplyDelete