April 14, 2010

லைப்ரரியில் ஒரு அனுபவம் -- கடுகு

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது ட்யூக் சர்வகலாசாலையில் (நார்த் கரோலினா) உள்ள லில்லி லைப்ரரிக்குச் சென்று புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
லண்டனிலிருந்து வெளி வந்த `சாடர்டே புக்' இதழ்களின் பைண்ட் வால்யூம்கள் கண்ணில் பட்டன அந்த காலத்தில் இது  மிகவும் மதிப்பு மிக்கப்  பத்திரிகை.. 1944ம் வருடத் தொகுப்பை எடுத்துப் புரட்டிய போது முதல் பக்கத்தில் யாரோ எழுதியிருந்தார்கள். அதைப் படிக்கப் படிக்க வியப்பு ஏற்பட்டது.
ஃப்ரெட் ஜோசப் என்று கையெழுத்திட்டு ஒருவர் எழுதியிருந்தார்.
``இது 1944 வருஷத்திய சாடர்டே புக் இதழின் தொகுப்பு. இதில் கடைசிக் கட்டுரையை எழுதியிருப்பவன் நான். அடுத்த 12 வருடங்கள் ஒவ்வொரு ஆண்டு தொகுப்பிலும் என் கட்டுரை இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். (இந்தக் குறிப்பை 1956ம் வருடம் எழுதுகிறேன் என்பதைக் கவனிக்கவும்.) இப்படி, தொடர்ந்து 12 வருடங்கள் எவருடைய கட்டுரையும் இடம் பெற்றதில்லை.
இப்படிப்பட்ட பெருமையைப் பெற்ற நான் ஒரு எழுத்தாளன் இல்லை.
லண்டனில் நான்காம்தர பகுதியில் நடைபாதையில் பழைய புத்தகங்களை விற்கும் மூன்றாம் தர ஆசாமி நான்.

ஒருநாள் கடையை விரித்து விட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அருகே இருந்த சாடர்டே புக் இதழைப் படித்துப் பார்த்தேன். அதில் ஒரு கட்டுரையைப் படித்தேன். மிக மிகச் சாதாரணமாக இருந்தது கட்டுரை. இதைவிட நன்றாக என்னால் எழுத முடியும் என்று தோன்றியது. உடனே எழுதத் துவங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் சாமர்செட் மாமின் கதைகள். அவரது எழுத்துக்களின் மேல் எனக்கு ஒரு மோகம் உண்டு. அவரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதை விரிவாக எழுதி அனுப்பினேன். சாடர்டே ரீடரில் அது பிரசுரமாகியது. அந்தக் கட்டுரைதான் இந்தத் தொகுப்பில் உள்ளது.
12 வருடங்கள் தொடர்ந்து கட்டுரைகள் வந்தாலும் நான் மாறவில்லை. அதே நடைபாதையில், அதே கோட், குல்லா போட்டுக் கொண்டு புத்தகம் விற்றுக் கொண்டிருக்கிறேன்'' என்று எழுதியிருந்தது.
பிறகு தொகுப்பில் உள்ள ஃப்ரெட் ஜோசப்பின் கட்டுரையைப் படித்தேன்.
அந்தக் கட்டுரையின் சுருக்கம்:
எனக்கு சாமர்செட் மாம் கதை, நாடகங்களில் மிக்க ஈடுபாடு உண்டு. ஒரு சமயம் அவரது நாடகத்தை யாரோ போட்டார்கள். போய்ப் பார்த்தேன். நாடகம் எனக்குப் பிடிக்கவில்லை.
பதினாலு வயதுப் பையனான நான் சாமர்செட் மாமிற்கு நாடகத்தை விளாசி கடிதம் எழுதிப் போட்டு விட்டேன். அவர் பிரான்சில் அப்போது இருந்தார். திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து அன்பான கடிதம் வந்தது. என்னைப் பார்க்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார்.
கிருஸ்துமஸ் சமயத்தில் அவரிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது. என்னைச் சந்திக்க வருவதாக எழுதியிருந்தார். சரியான குப்பத்தில் உள்ள என் வீட்டிற்கு உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் வரப் போகிறார்! குறிப்பிட்ட தினம் அம்மா பிஸ்கட், டீ எல்லாம் தயார் பண்ணி வைத்தார். அப்பா வீட்டை ஓரளவு சுத்தமாக வைத்தார்.
சாமர்செட் மாம் ஒரு பெட்டி சாக்லேட்டுடன் வந்தார். (அதை அம்மா ஆறு மாதம் வைத்திருந்தாள். முக்கியமான நாட்களில் ஒரே ஒரு துண்டு கொடுப்பாள்.)
வீட்டுப் பின்புறம் குப்பைத் தொட்டி அருகில் சாமுடன் நின்று போட்டோ பிடித்துக் கொண்டோம்.
அவர் எழுதிய எட்டு புத்தகங்கள் என்னிடமிருந்தன். எல்லா புத்தகங்களிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். `நல்ல விலைக்கு விற்றுக் கொள்' என்று சொன்னதுடன் `உனக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் எழுது. என் கையெழுத்துப் போட்ட புத்தகங்களை அனுப்புகிறேன்' என்றார்.
சுமார் ஒரு வருடம் கழித்து அவர் எனக்குக் கடிதம் எழுதிவிட்டு, என் வீட்டிற்கு வந்தார். தான் எழுதிய கதை, கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் (48 தொகுதிகள்) இருப்பதாகச் சொன்னார். `இந்த கையெழுத்துப் பிரதிகளை 10 ஆயிரம் டாலருக்கு விற்றுக் கொடுத்தால் உனக்கு ஆயிரம் டாலர் நான் தருகிறேன்'' என்றார். அந்தக் காலத்தில் இது பெரிய லாட்டரிப் பரிசுத் தொகை போன்றது!
பத்தாயிரம் டாலரில் ஒரு அறக்கட்டளை துவங்கப் போவதாகச் சொன்னார். நான் பலருடன் தொடர்பு கொண்டேன். ஹில் என்பவர் வாங்க ஒத்துக் கொண்டார்- ஒரு நிபந்தனையுடன். அந்த அறக்கட்டளையில் சாமர்செட் மாம் பெயருடன் அவர் பெயரும் இருக்க வேண்டும். மாமிற்கு எழுதினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
பிறகு உலக யுத்தம் மூண்டபோது சாமர்செட் பிரான்சை விட்டு வெளியேறி விட்டார். அவரது ஒப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் என்ன ஆயின என்று தெரியவில்லை.
*                    *                                   *
அடுத்த 12 வருடங்கள் ஃப்ரெட் ஜோசப் எழுதிய கட்டுரைகள் யாவும் மிகவும் சுவையானவை. ஒரு சமயம் ஹிட்லரைச் சந்திப்பதற்கு ஜெர்மனி போனதையும் எழுதியுள்ளார். சிகரெட் கார்ட் என்ற பட அட்டைகளை சேகரிக்கும் ஹாபி அந்தக் காலத்தில் வெகுவாகப் பரவி இருந்தது. ஜோசப் நிறையக் கார்டுகள் சேகரித்து வைத்து இருந்தார். ஹிட்லருக்கும் இந்த ஹாபி உண்டு என்று அறிந்து அவரிடமிருந்து சில அட்டைகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்காகப் போன ஜோசப்,  ஹிட்லரைப் பார்க்க முடியாமல் லண்டனுக்குத் திரும்பினார். அவரது கப்பல் லண்டனை அடைந்த அன்று ஹிட்லரின் குண்டுகள் லண்டனில் பல இடங்களில் விழுந்தன. ஒரு குண்டு ஜோசப்பின் வீட்டின் மீது விழுந்து பலத்த சேதத்தையும், அவர் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிகரெட் கார்டுகளையும் அழித்து விட்டது!
பின்குறிப்பு:  அவரது மற்ற கட்டுரைகளும் சுவையானவை.  குறிப்புகளைத் தேடவேண்டும்

8 comments:

  1. Thirai kadalodi vishayam saerththu pagirnthu koLvatharku nandri! I am wondering that a person (Mr. Fred Joseph) with a talent to write couldn't come out of his pavement shop. - R. J.

    ReplyDelete
  2. Fresd Joseph wrote about his experiences with Maugham and about the reactions to his articles in Saturday Book - sort of Diary entries! But they were very intersting

    ReplyDelete
  3. கடுகு அய்யா,
    சுவாராசியமாக உள்ளது, நன்றி!
    BTW,
    உங்கள் இங்கிலாந்து பயணம் எப்பொது?
    உங்களை எனது இல்லத்திற்கு அழைப்பதில் மிகுந்த பெறுமை அடைகிறேன்!
    (கண்டிப்பாக இது சம்ப்ரதயமான அழைப்பு அல்ல!)

    Essex Siva

    ReplyDelete
  4. <<>>
    Thank you for your kind invitation. In recent years, I transitted thru London some 4-5 times. may be next time....

    ReplyDelete
  5. அப்படியே, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பக்கமும் (birmingham ) வந்து விட்டு போங்கள்.

    ReplyDelete
  6. <<>>
    ஏற்கனவே பக்கிங்ஹாம் பேலஸ்லெ புளியோதரை பார்ட்டி இருக்கு. அங்கே போகாட்ட ராணி வருத்தப்படுவா.... அடேடே.. ஒரு செகண்ட் கண் அசந்து போய்விட்டேன்...ஏதேதோ கன்வு... ஹூம்.... :)

    ReplyDelete
  7. I have just started reading your blog and it is quite interesting. I study at the Duke University. Glad to know that you had been to Duke. Hope you enjoyed our University and North Carolina.

    ReplyDelete
  8. Dear Mr KK,
    Thanks for your comments. I used to shuttle from UNC Chapel Hill by the Library Shuttle to Duke Library and also Lily Library and spend at least 5 hours there. If you visit Lily you will find the Saturday Books in the first floor shelves. You will find Fred Joseph's note in one of the bound volumes. YOu may read all teh 11 more articles he wrote. They are interesting. I do not visit North Carolina these days.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!