April 20, 2010

கமலாவும் நிட்டிங்கும் - கடுகு

    ஆண்கள் ஸ்வெட்டர் பின்னியது கிடையாது என்று ஒரு பத்திரிகையில் படித்ததும் எனக்கு ரத்தம் கொதித்து. அதன் விளைவே இந்த உண்மைக் கதை.    டில்லி வந்த புதிதில் நான் நிட்டிங்கில் முனைந்தேன். அதுவும் இந்த டெல்லிப் பெண்கள் பழைய கால சார்லி சாப்ளின் படங்களில் வேக வேகமாக கைகால்களை ஆட்டுவதைப் போல் படுவேகமாக, ஊர் அரட்டை அடித்துக் கொண்டு, ஊசிகளைப் பார்க்காமல், மடமடவென்று நிட்டிங் செய்வதைப் பார்த்து, நானும் இதில் இறங்கத் தீர்மானித்தேன்.
    அப்பளம் இடுவது, இலை தைத்தல் போன்ற நச்சுப் பிடித்த காரியங்களைக் கூட செய்தவன் நான். என்றாலும், இந்த நிட்டிங் போரடிக்க ஆரம்பித்தது. என் மனைவியோ, பத்து சதவிகிதம் அன்பு ,  தொண்ணூறு சதவிகிதம் திட்டு கலந்து சொல்லிக் கொடுத்தாள்.

    நிட் என்றும், பர்ள் என்றும், கீழே வாங்குங்க, மேல் வழியாக வாங்குங்க, ஒண்ணொண்ணா ஒவ்வொரு லைனிலும் குறைச்சுகிட்டு வாங்க என்றும், சில சமயம் டில்லியில் சொல்கிறபடி "உல்டா' என்றும் "சீதா' என்றும் சொல்லிக் கொடுத்தாள்.
    என்ன சீதாவோ என்ன ராமாவோ என்று அலுத்துக் கொள்வேன். காரணம், நூறு சதவிகிதம் கவனத்துடன் போட வேண்டியிருந்தது. எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் எத்தனை போட்ட பிறகு கலர் நூலை மாற்ற வேண்டும் என்று கவனமாக இருக்க வேண்டும். வரிக்குப் பத்து தப்புகள் வந்துவிடும். வரியைப் போட்டு முடித்தவுடன் நாலு இடத்தில் துளைகள், இரண்டு இடத்தில் பக்கத்து பக்கத்தில் நிட் அல்லது பர்ள் இருக்கும் இரண்டு இடத்தில் இரண்டு கண்ணிகளையும் சேர்த்துக் கோக்கப்பட்டிருக்கும். போட்ட வரியைப் பிரிக்க வேண்டும். இது மிகவும் சுலபம். சர்ரென்று இழுத்தால் போதும், ஒரே செகண்ட்தான். இது சுலபமே தவிர, என் மனைவி என்னையும் (சில சமயம் எங்கள் பரம்பரையையும்) சில தேர்ந்தெடுத்த பரிபாஷைகளால் வர்ணிப்பதைக் காது கொடுத்து கேட்பது கஷ்டம்.
   கடைசியில் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. அவசரப்படாதீர்கள். தோல்வியை ஒப்புக் கொண்டது நானல்ல. என் மனைவிதான். "உங்களுக்கு ஏழு ஜன்மத்துக்கும் நிட்டிங் வராது. இதை எந்த கோர்ட்டிலே வேண்டுமானாலும் சத்தியம் பண்ணிச் சொல்லத் தயார்... உங்களுக்கு நிட்டிங் சொல்லித் தர எனக்குத் திறமை கிடையாது. என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்'' என்றாள். (என் மனைவி எத்தனையோ தடவைகள் தோல்வி அடைந்திருக்கிறாள் என்றாலும், முதன் முதலாகத் தானாக ஒப்புக் கொண்ட தோல்வி இதுதான்.)    "இதென்ன நிட்டிங்? புளியம் இலையைச் சேர்த்துத் தைக்கிற மாதிரி தொண தொண வேலை. என்னை மாதிரி சுறுசுறுப்பு ஆசாமிகளுக்கு ஒத்து வராது.'' என்று சொல்லி விட்டேன்.ஆனால் நிட்டிங் என்னை விடவில்லை.
    சில வருடங்கள் கழிந்தன. நிட்டிங் மெஷின் வந்து விட்டது. இரண்டு மணி நேரத்தில் மெஷினை  சரசரவென்று கையால் ஓட்டி ஒரு ஸ்வெட்டர் தயாரித்து விட முடியும். (டில்லியில் குளிர் காலத்தில் பல பெண்கள் மெஷின் நிட்டிங் செய்து அனாயாசமாக ஆயிரம் இரண்டாயிரம்  ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.)
    ஒரு நாள் என் மனைவி, "எழுபத்தொன்பதுக்காரி தன் சிமேக் நிட்டிங் மெஷினை விற்றுவிடப் போகிறாளாம். நாம் வாங்கிக் கொள்ளலாமா?'' என்று கேட்டாள். (டில்லியில் பலரை அவர்கள் வீட்டு எண்ணால்தான் குறிப்பிடுவார்கள்.)
    "என்ன விலையாம்?'' என்று கேட்டேன்.
    "இரண்டு நாள் போட்டுப் பார்த்துப் பிடித்தால் பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாள்'' என்றாள் என் மனைவி.
    தையல் மெஷினில் நான் தேர்ச்சி பெற்றிருந்ததால் இதிலும் சுலபமாக ஸ்வெட்டர் பின்னி விடலாம் என்று கருதி மெஷினை வாங்கி வரச் சொன்னேன். சும்மா ட்ரையலுக்காக.
    இழைப்புளியை முன்னும் பின்னும் ஓட்டுவது போல் சுமார் 200 கம்பிகளைக் கொண்ட "படுக்கை"யின் மேல் ஒரு அமைப்பை ஓட்ட வேண்டும். நூலைப் பல இடங்களில் மாட்டி எடுத்துக் கொண்டு போக வேண்டும்.  ஆரம்பம்தான் சிறிது கஷ்டமே தவிர ஆரம்பித்து விட்டால் ஐந்து செகண்டில் ஒரு வரியை "நிட்' பண்ணி விடலாம். சர் என்று சும்மா ஒரு தேய்ப்பு. நிட் ஆகி இருக்கும். அதாவது மெஷினை சரியாக ஆளப் பழகி இருந்தால், அந்த 79-காரி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தேய்த்து, கண் முன்னேயே இருபது முப்பது வரியைப் போட்டுக் காண்பித்தாள்.
   அவள் போன பிறகு என் மனைவியின் மேற்பார்வையுடன் நான் முதலிலிருந்து நூலைக் கோத்து நிட் பண்ண முயற்சித்தேன்.கிட்டத்தட்ட நூறு ஊசி முனைகளில் நூலை மாட்ட வேண்டும். அதுவும் மெஷினே மாட்டிவிடும் முதல் தேய்ப்பில்.நான் தேய்த்தபோது, அது கணித மேதை மாதிரி கரெக்டாக நாலு விட்டு நாலு ஊசிகளில் மட்டும்தான் கணக்காக கோத்து இருந்தது.
    "நூலை இவ்வளவு டைட்டாகப் பிடித்து இழுத்துக் கொண்டால் ஊசியில் எப்படி மாட்டிக்கும்? லூஸு விடுங்க... ஹூம். உங்களைப் போல் ஒரு அசடை நான் கல்யாணம்...'' (மன்னிக்கவும். இதன் பிறகு கமலா கூறிய வாசகங்களை எழுதினால் வருத்தம் ஏற்படும். முக்கியமாக என் அம்மாவிற்கு. பெத்த மனசு பாருங்கள்.)
    மெஷினுடன் வந்த புத்தகத்தில் "நூலை லூஸாக விட்டால் ஊசிகளில் மாட்டாமல் போய்விடும்' என்று எழுதியிருந்ததைக் கமலாவிடம் சொன்னேன். "புஸ்தகத்தில் எழுதி விட்டால் வேதமா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. இதெல்லாம் கைப் பழக்கத்தால் வர வேண்டும். என்கிட்டே கொடுங்கள்'' என்று மெஷினைப் பிடுங்கிக் கொண்டு நிட் செய்ய ஆரம்பித்தாள். முதல் வரியில் எனக்காவது நாலு விட்டு நாலு மாட்டியிருந்தது. அவள் போட்ட போது இஷ்டப்பட்ட விதம் மாட்டிக் கொண்டும் மாட்டிக் கொள்ளாமலும் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்து விட்டேன். அவளுக்குக் கோபம் வந்தது. கோபித்துக் கொண்டாள்!
    புஸ்தகத்தைப் படித்து,  ஒரு மாதிரியாக மூன்று மணி நேர முயற்சிக்குப் பிறகு பத்து வரிகளைப் போட்டு விட்டேன். நூலை ஒரே சீராக விடாததால் ஒரு வரி கழுத்தை நெறிக்கிற மாதிரி இறுக்கியும், மற்றொரு வரி தொளதொளவாகவும் அமைந்திருந்தன.
    "பழக்கத்திலே சரியாயிடும். மேலே போடுங்க'' என்று மனைவி உற்சாகப்படுத்தினாள். (மூன்று மணி நேரம் விடாது திட்டியதால் அவளுக்கே என் மேல் பரிதாபம் ஏற்பட்டு விட்டது.)
    "பிராக்டிஸ் தானே' என்று பழைய உல்லன் நூலை அவள் கொடுத்திருந்ததால், இழைகள் அவ்வப்போது பிரிந்து, பாதி நூல் ஊசியிலும் பாதி வெளியிலுமாகப் போய்விட்டது. சில சில இடங்களில் இதை கவனிக்காமல் நான் மெஷினை ஓட்டிக் கொண்டே போகவே, டர்க்கி டவலில் வரும் நூல்களைப் போல ஆனால் பெரிய பெரிய அளவு வளையங்கள் ஆங்காங்கே உண்டாகியிருந்தன.
    "கமலா, புது நூல் கொடு. சரியாக வரும். பழைய நூலில் முடிச்சுகள் வேறு தகராறு பண்றது'' என்று சொன்னேன்.
    "உங்களுக்குப் பழைய நூலைக் கொடுத்ததே பெரிசு... எல்லாம் வேஸ்ட்தான் பண்ணப் போறீங்க'' என்றாள். (1962’ல் வாங்கிய ஸ்வெட்டர். அதைப் பிரித்து பிளவுஸ், அதைப் பிரித்து கிளவுஸ், அதைப் பிரித்து ஸ்கார்ப் என்று பல தடவை பிரித்துப் பிரித்துப் போட்டு, உயிரை இழந்திருந்த நூலைக் கொடுக்க இத்தனை பிசுக்காரம்!)
    பழைய நூலை வைத்துக் கொண்டே "வண்டி"யை ஓட்டிக் கொண்டு போனேன். ஸ்கார்ப் போடுவது திட்டம். சுமார் ஒரு முழ நீளத்திற்கு மேல் வந்து விட்டது. "கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுகிறேன் பார். கரெக்டாக வரும்' என்று சொல்லி அல்டாப்பாக ஓட்டினேன். கடக் கடக் என்று யாரோ சீடை சாப்பிட்டார்கள். சீடை சாப்பிட்டது யாருமல்ல மெஷின்தான். நூலில் உள்ள முடிச்சு ஊசி முனையில் மாட்டிக் கொண்டு சடசடவென்று ஊசி முனைகளை உடைத்து விட்டன..
    கமலா மிகவும் சாந்தமாக என்னைப் பார்த்தாள். சில சமயம் இப்படிப் பார்ப்பதை விடத் திட்டி விடுவதே மேல் என்று என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
    பேசாமல் ஸிங்கர் ஷாப்பிற்குச் சென்று (ஒரு ஊசியின் விலை ரூ.5.80 காசு என்று நினைக்கிறேன்) ஊசிகளை வாங்கி வந்தேன்.
    அதன் பிறகு எந்தவித பேராபத்தும் இல்லாமல் ஒரு ஸ்கார்ப் போட்டு முடித்தேன். முண்டும் முடிச்சுமாகப் பல நூல் லூப்புகள் இருந்தாலும் நான் போட்ட ஸ்கார்ப். ஓரங்கள் ஒரே நேர்க் கோடாக இல்லை. அலைபாய்ந்து கொண்டிருந்தது.
    "கமலா, இதுதான் நியூவேவ்' என்று பெருமையாகக் கூறி ஸ்கார்ப்பை முண்டாசாகக் கட்டிக் கொள்வதற்காகத் தலையைச் சுற்றி இழுத்துக் கட்டினேன். அதாவது கட்ட முயன்றேன். என்ன ஆயிற்று தெரியுமா? இரண்டு கையிலும் பாதிப் பாதி ஸ்கார்ப். நடுவில் தொப்புள் கொடி மாதிரி ஒரு நூல்! ஏதோ ஒரு முடிச்சு அவிழ, போட்ட வரிகள் சர்ரென்று பிரிந்து போய் ஸ்கார்ப் இரண்டாக ஆகிவிட்டது. டூ இன் ஒன்!
    அதைப் பார்த்த என் மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். அந்த நல்ல ’மூடை’  உபயோகித்துக் கொண்டு "மெஷின் நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல, அவளும் ஒத்துக் கொண்டாள்!

பின்குறிப்பு” எஸ். ஏ.பி அவர்களின் மனைவியார்  இந்தக் கட்டுரைப் பாராட்டினார் என்று பின்னால் எனக்குச் சொன்னார்கள்.

10 comments:

  1. நல்ல பிரயர்த்தனம் .அதுசரி உங்களுக்கு முறுக்கு சுத்த தெரியுமா?

    ReplyDelete
  2. பேஷ் பேஷ், ரொம்ப நன்னாருக்கு. தொடரட்டும் உஙகள் சிரிப்பூட்டும் பணி!

    எஸ். வி. ராகவன்

    ReplyDelete
  3. <<< padma said...நல்ல பிரயத்தனம் .அதுசரி உங்களுக்கு முறுக்கு சுத்த தெரியுமா?>>>
    50 பர்சண்ட் தெரியும். ’முருக்கு சுற்ற’ என்பதில்
    பாதியை (முறுக்கு) எடுத்து விடுங்கள். எனக்குச் “சுற்ற’த் தெரியும். ஊர் சுற்ற, காதுலே பூ சுற்ற தெரியும்!

    ReplyDelete
  4. Sir,
    Please reveal that comment by MAMI....If you don't reveal only your mother will be happy ..but if you reveal that then we all will be happy...Special thanks to MAMI!!!!

    Kothamalli

    ReplyDelete
  5. Kothamalli அவர்களுக்கு,”Please reveal that comment by MAMI” என்று எழுதி இருக்கிறீர்கள்” ஆஹா. உங்களுக்கு GENERAL KNOWLEDGE மீது இவ்வளவு ஈடுபாடுஇருக்கிறது என்பது எனக்குத் தெரியாது...மாமி சொன்ன பொன்மொழிகள் இலவசமாக கிடைக்காது!

    ReplyDelete
  6. Sir,
    I have been reading your bolg only to improve my GK !!!!!! (Once again you have given a super HIT reply!!!!)

    Kothamalli

    ReplyDelete
  7. comment veraya innum siriche mudikkale.

    ReplyDelete
  8. அன்பு தமிழ் உறவே!
    வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
    வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.


    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete
  9. புதுவை வேலு அவர்களுக்கு,
    உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
    திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களுக்கும் என் நன்றி.- கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!