April 11, 2010

கனகாம்பரம் - கடுகு

திருவாளர் கனகாம்பரம் அவர்களைச் சுருக்கமாக வர்ணிக்க வேண்டுமானால் `இலக்கியக் காதலன்' என்று சொல்லலாம். நிறைய இலக்கியங்களைப் படிப்பதுடன் எழுத்தாளர்களுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டால் நல்ல எழுத்தாளனாக உருவாகலாம் என்பது அவரது எண்ணம். இது மட்டும் அல்ல; கல்கத்தா வரும் எழுத்தாளர்களுக்குப் பல விதங்களில் உதவி செய்வார். ஹெளரா ஸ்டேஷனில் வரவேற்பார். அவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவார். பாலிகஞ்ச், சௌத் இந்தியா கிளப்பில் பொங்கல், வடை சாப்பிடச் செய்வார். அவர்கள் கேட்கும் பொருள்களை - இரண்டு அலுமினிய வாணலி, நான்கு ரஸகுல்லா டின்கள், இரண்டு பெங்கால் காட்டன் புடவை - வாங்கித் தருவார்.
  இப்படி எல்லாம் உதவி செய்து அவர்களை நன்றிக் கடன்படச் செய்துவிடுவார். அவர்களும் நன்றிக் கடனைத் தீர்க்க, கனகாம்பரத்தின் ஆராய்ச்சிக் கட்டுரையை ஒரு துணுக்கு அளவுக்குச் சுருக்கித் தங்கள் பத்திரிகையில் வெளியிடுவார்கள்!  கனகாம்பரம் டல்ஹெளசியில் ஒரு அச்சகத்தில் புரூஃப்ரீடர். (இதுவும் எழுத்துத்துறை சம்பந்தப்பட்டது என்று அதில் பணிபுரிகிறாரோ!)
வரும் சம்பளம் ரூம் வாடகை, மெஸ் செலவு, பத்திரிகைகள். புத்தகங்கள் வாங்கும் செலவு என்று சரியாகிவிடும்.  கேள்விப்படாத பத்திரிகைகள் எல்லாம் வாங்கிப் படிப்பார். இலக்கிய இதழ் என்று அட்டையில் அச்சடித்து இருந்தால் போதும், அந்தப் பத்திரிகையின் வாசகராகி விடுவார். அந்த இலக்கியப் பத்திரிகைகளில் வரும் அர்த்தமற்ற வாக்கியங்களைப் படித்து ரசிப்பார். ("இந்த உத்வேகத்தின் எழுச்சியின் பரிணாம ஆழத்தில் உள்ள யதார்த்த வேகத்தில் தளை மீறிய பிரதிபலிப்பாக எழும் பாசிடிவிஸமே இடை நிலவரத்தின் கருத்தாகும்!'') கனகாம்பரத்தின் கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். அது மில்டனின் `பாரடைஸ் லாஸ்'டாக இருக்கலாம் அல்லது மறைமலை அடிகள் வரலாறாக இருக்கலாம்.
 கல்கத்தாவில் நடைபெறும் எந்த இலக்கியக் கூட்டத்திலும் முதல் வரிசையில் பழுப்பேறிய ஜிப்பா வேட்டியுமாக, ஜில்பா தலைமுடியுடன், சோடாபுட்டி கண்ணாடியுமாக உட்கார்ந்திருக்கும் நபர் நிச்சயம் கனகாம்பரமாகத்தான் இருக்க முடியும். பத்திரிகை ஜோக்குகளில் எழுத்தாளரை ஜிப்பா, ஜில்பா ஆசாமியாக யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் போட்டாலும் போட்டார்; கனகாம்பரம் அதன்படியே தன்னை மாற்றிக்கொண்டு எழுத்தாளராகி விட்டார்!ஹெளரா தமிழர் மன்றம், பாரதி தமிழ்ச் சங்கம், கல்கத்தா வள்ளுவர் மன்றம் போன்ற சங்கங்களில் நடக்கும் இலக்கிய சர்ச்சைகளுக்கும், இலக்கியச் சிந்தனைகளுக்கும் கனகாம்பரம் தவறாமல் போவார். இந்த மாதிரி கூட்டங்களுக்கு அதிகம் பேர் வராவிட்டாலும் பேசுபவர்கள் சிரமப்பட்டுத் தயாரித்துக் கொண்டு வரும் உரைகளை ஆர்வமுடன் படிப்பார்கள் பலருக்குக் கொட்டாவி வரும், ஆனால் திரு கனகாம்பரம் ஆர்வமாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு இருப்பார். இவரும் பல சமயம் கருத்துரைகளை ஆற்றியுள்ளார். "ஈசாப் கதைகளிலிருந்து புதுமைப்பித்தன் கதைகள் வரை'', "ஹோமர், டான்டே, எழுத்தாளர் ஏகாம்பரம் -- ஒரு ஒப்பு நோக்கு'' - இப்படிப் பல தலைப்புகளில் நீண்ட கட்டுரைகளை அவர் படித்திருக்கிறார்.
"சார், நேற்று மீட்டிங்கிற்கு வரவில்லையே? என்னுடைய சொற்பொழிவை அற்புதமான கருத்துரை என்று எல்லாரும் பாராட்டினார்கள் ! பரவாயில்லை, என் உரை இதோ இருக்கிறது; படித்துவிட்டுக் கொடுங்கள். ஒரு புதுக் கோணத்திலிருந்து எழுதியிருக்கிறேன். திரு. வி. க.  நடை மாதிரி அமைந்திருக்க்றது என்று கூடச் சிலர் சொன்னார்கள். எனக்கென்னவோ இது உ.வே. சாமிநாதய்யர் நடை, ஆராய்ச்சி முறை மாதிரி தோன்றுகிறது. இந்தாருங்கள், நாளைக்கு வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்'' என்று டிராமில் அகப்படும் ஆசாமியின் தலையில், கட்டுரையைக் கட்டிவிடுவார்! அடுத்த நாள் அவர் வீட்டிற்கு போய் தன் கட்டுரையைப் பற்றி விளக்கமும் விமரிசனமும் தருவார்.
 கல்கத்தாவிற்கு விஜயம் செய்யும் தமிழ் பத்திரிகை ஆசிரியர்  சென்னைக்குப் கிளம்பும்போது,,கனகாம்பரம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு "கனகாம்பரம், நம்ப பத்திரிகைக்கு ஏதாவது எழுதி அனுப்புங்களேன்'' என்று , ரயில் கிளம்பும் சமயத்தில் சொல்வார், . ஆசிரியர் சென்னை வந்தடையுமுன்பு அவர் பெயருக்கு ஒரு கட்டுரையை கனகாம்பரம் தபாலில் அனுப்பி விடுவார். . இரண்டு நாள் கழித்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுவார். ''ஏழாம் பக்கத்திற்குப் பதிலாக இத்துடன் அனுப்பியிருக்கும் மேட்டரைச் சேர்த்துக் கொள்ளவும். 14'ம் பக்கத்தில் `புதிய தத்துவமாக உருவாகிறது' என்பதை நீக்கி விடுங்கள். ”அடுத்த இதழில் கனகாம்பரத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகிறது” என்ற அறிவிப்பைப் போடுங்கள்  என்றெல்லாம் அதில்  எழுதுவார். கூடவே தன் புகைப்படத்தையும் அனுப்புவார். தாட்சண்யத்திற்காக கட்டுரை சுருக்கப்பட்டு, மாந்தரீக மோதிர விளம்பரங்களுக்கு இடையே கட்டுரை பிரசுரிக்கப்படும். பல சமயம் திருப்பி அனுப்பப்படும்.
"இவர் போடாவிட்டால் பரவாயில்லை. அப்படியே `சிந்தனைச் சுடர்' பத்திரிகைக்கு அனுப்பிவிடுகிறேன், அவர்கள் போடாவிட்டால்  `அறிவுப் பொறி' அல்லது `இலக்கியப் பெட்டகம்' இருக்கவே இருக்கிறது.'' என்பார்.
ஒரு கட்டுரை எழுதிவிட்டார் என்றால் அது ஏதாவது ஒரு பத்திரிகையில் வெளியானால் ஒழிய அடுத்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கமாட்டார். ஆகவே பல சமயங்களில் கட்டுரைகளுக்கு இடையே இடைவெளி இரண்டு, மூன்று வருடங்கள் கூட ஆகிவிடும். அடிக்கடியா கல்கத்தாவிற்குத் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் வருகிறார்கள்!

9 comments:

 1. கனகாம்பரம் பேரே நல்லா இருக்கு

  ReplyDelete
 2. புத்தாண்டு வாழ்த்துக்கள் .சீக்கிரம் திரும்பி வாங்க .

  ReplyDelete
 3. பாவம் அவர் காலத்தில் பதிவு வசதிகள் இல்லை. இல்லைனா என்னை மாதிரி பதிவர் ஆகி யார் தயவும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பிரசுரித்துக் கொண்டே இருந்திருப்பார்.

  http://www.virutcham.com

  ReplyDelete
 4. Kanagambaram = kadugu
  Kolkatta = Delhi
  South India Club = UNI canteen
  அலுமினிய வாணலி /ரஸகுல்லா டின்கள், பெங்கால் காட்டன் புடவை = Moda, Nutan Stove

  Yenna, sariyaa?! - R. J.

  ReplyDelete
 5. <<< Jagannathan said...Kanagambaram = kadugu
  Kolkatta = Delhi
  South India Club = UNI canteen
  >>>>'

  Wrong. I do not have a jilpa!!!!
  I have recd many writers and editors. Never offered any MS.
  I was writing in Kumudam which was India's largest circulated periodical among all the languages. It's circulation in 1965 was about 4 lakhs per week! :)

  ReplyDelete
 6. MS (messenger service?). No hard feelings. I have been reading Kumudam and other Tamil weeklies for a long time and I have enjoyed your pieces immensely. This blogsite provides us a continuous and copious supply of your பஞ்சாமிர்தம். Thank you. - R. J.

  ReplyDelete
 7. <<<>>>>
  Oho.. Did u not notice the smiley at the end of my comments. Hard feelings and Smileys do not go together like Jilpa and baldness!!!!!
  I amke funpfof people adn ishoudl be face 'return-service'! :):):)

  ReplyDelete
 8. :) :) :) ..... :) - ஜெகன்னாதன்.

  ReplyDelete
 9. கடுகு அவர்களுக்கு நன்றி. நான் இப்பொழுது நன்கு டைப் செய்கிறேன்.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!