January 30, 2010

ஆர். கே. நாராயணனும் நானும் -- கடுகு

  முதலில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆர். கே. நாராயணனை நான் சந்தித்தது இல்லை. நான் அவருடைய பெரிய விசிறி. அவருடைய நாவல்களும் கதைக் கட்டுரைகளும் என் மீது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சலர் ஆஃப் ஆர்ட்ஸ் நாவலைப் .படித்ததும்
அவரது கதாபாத்திரம் போன்று நானும் ஒரு துறவியாக ஆகவேண்டும் என்ற ஒரு பித்து என்னைப் பிடித்துக் கொண்டது. காவிநிறக் கதர் துணி வாங்கி சட்டைகள் தைத்துக் கொண்டு அவற்றையே அணிய ஆரம்பித்தேன்.
 இங்கிலீஷ் டீச்சர் படித்ததும் எனக்கும் ஈ. எஸ். பி. என்னும் ஆவி உலக தொடர்புகள் மேல் திடீர் ஆர்வத்தை உண்டாக்கின. சுமார் ஒரு வருடம் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். இரவு பகல் என்று பாராமல், சென்னைக் கிருஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த திரு. பி. டி. நரசிம்மன் என்பவருடன் சேர்ந்துகொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
  அந்த ஆவி உலக அனுபவங்களை பின்னால் ஒரு முழு நீள கட்டுரையாக எழுதுகிறேன். அந்த காலகட்டத்தில் ஆர். கே. நாராயணன் இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மேன் ஈட்டர் ஆஃப் மால்குடி, ஸ்வீட் வெண்டார் தொடர் கதைகளை எழுதி வந்தார். வீக்லியில் அவற்றைப் படிப்பதற்காக.  எங்கள் குடும்ப டாக்டரின் கன்ஸல்டிங் அறைக்கு வாரா வாரம் நான் செல்வேன். அவர் மேஜையில் வீக்லியை வைத்திருப்பார். நான் வாரம் தவறாமல் போய்ப் படித்துவிட்டு வருவேன். நான் வீக்லி படிக்க வருவதற்கு அவர் எந்த வித தடையும் சொல்லியதில்லை.(இந்தக் கட்டுரையை எழுதும் இச் சமயத்தில் டாக்டர் வரதராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) என் பிற்கால வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நான் நன்கு அமைத்துக்கொள்ள அவரும் சில கற்களை எனக்குத் தந்துள்ளார்

January 28, 2010

அன்புள்ள டில்லி-7

ரீல் இல்லை; ரியல் தான்!
வாராவாரம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள், பேட்டிகள் எழுத வேண்டும் என்ற உத்வேகத்துடன் நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். டில்லிக்குச் சென்ற சில மாதங்கள் கழித்துப் பத்திரிகையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். குமுதம் பத்திரிகை எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. என் கட்டுரைகள் இல்லாத இதழே இல்லை என்று சொல்லும் அளவுக்கு.  சில சமயம் 3,4  கட்டுரைகள் கூட வந்துள்ளன. பத்திகையில் பெயர் வருவதனால் மிக்க மன நிறைவும், வாராவாரம் வரும் செக்குகளால் ஓரளவு பர்ஸ் நிறைவும் எற்பட்டது.  எழுதுவதற்கு மிகுந்த ஊக்கம் அளித்தவள்  என் மனைவிதான். அவள், ‘வீட்டுக்கவலைகளை எல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள். உண்மையிலேயே அவள் எல்லாவற்றையும் நிர்வகித்து வந்தாள். பேனாவையும் பேப்பரையும் எடுத்தால் போதும். வீட்டில் ரேடியோகூட போடமாட்டாள். அப்போது நான் இருந்தது உண்மையிலேயே ஒரு குட்டி போர்ஷன். ஒன்றே கால் அறை. அந்தக் கால் அறையில் சமையல்;. இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்த அரை அறையில் என்னை சந்திக்க வந்தவர்களை எண்ணிப் பார்க்கும்போது!  சாவி, நடிகர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் சுஜாதா, பலரால் எளிதில் சந்திக்கவே முடியாத நிதி அமைச்சக (பட்ஜெட்)செயலர், பல பாராளுமன்ற உறுப்பினர்கள்.
அப்புறம்.... சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. இன்று இந்தியாவின் நம்பர்-1 கம்பெனியாக இருக்கும் நிறுவனத்தின் அன்றைய முதன்மை அதிகாரி. (கம்பெனியின் பெயரைச் சொன்னால், “போய்யா, ரீலுக்கும் அளவு உண்டு” என்பீர்கள். ஆகவே தவிர்க்கிறேன்.) இன்னும் பலர்.

புத்தகங்கள் படிப்பது, கட்டுரைகள், பேட்டிகள் எழுதுவது, ஆபீசுக்கு போவது இடைவேளையில் பிரிட்டிஷ், அமெரிக்க லைப்ரரிகளுக்கு போகவேண்டியது- இது தான் என் அன்றாட வேலை. என் மனவிக்குத்  தினதந்தி நிருபர் வேலை கிடைத்ததால், வீட்டு வேலையுடன் அந்த வேலையையும் அவள் கவனித்துக் கொண்டாள்.
ராணுவ தளபதிக்குக் கடிதம்
நானும் சுறுசுறுப்பாக வாராவாரம் எதாவது கட்டுரை எழுதி அனுப்பிக்
கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு பத்திரிகையில் ஒரு சின்ன செய்தி கண்ணில் பட்டது. மத்தியப் பிரதேசத்தில் தமிழர்கள் நிறைந்த ராணுவ பட்டாலியனில் ராணுவத் தளபதி தமிழில் பேசினார் என்று இருந்தது. ராணுவத் தளபதி வங்காளக்காரர் அவர் தமிழில் பேசினாரா? ஆகா, சுவையான கட்டுரைக்கு விஷயம் கிடைத்து விட்டது!  தளபதியைச் சந்தித்து விவரங்களைக் கேட்க  எண்ணினேன்.
எப்படி அவரைப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே ஒரு இன்லண்ட் லெட்டரில் அவர் பெயருக்கே ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டேன். அப்படி எழுதக்கூடாது என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் விவரம் தெரியாத இளைஞன். (இப்போது விவரம் தெரியாத முதியவன்!)

கமலாவும் காபியும்


காப்பி போடுவது ஒரு கலை என்றால், போட்ட காப்பியை ரசித்துக் குடிப்பது மற்றொரு கலை. இந்த இரண்டு கலைகளிலும் கமலாவின் (அதாவது என் அருமை மனைவி கமலாவின்!) தேர்ச்சி அபாரமானது.
    நாலு நாள் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பாள். பழைய புடவைகளைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் வாங்காமல் ஒரு மாதம் முழுவதும் கூட இருப்பாள். தொடர்ந்தாற்போல் பதினைந்து நிமிடங்கள் என்னைத் திட்டாமல் கூட இருப்பாள்; ஆனால் காப்பி சாப்பிடாமல் அவளால் இருக்க முடியாது!
    அவள் போடும் காப்பியும் பிரமாதமாக இருக்கும்.டிகிரி காப்பி டிப்ளமா காப்பி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்; கள்ளிச் சொட்டு காப்பி என்பார்களே அது எல்லாம். கமலாவின் காப்பி என்ற இமயமலைக்கு முன், வெறும் பரங்கிமலை.
    இப்படிக் காப்பி ரசிகை திலகமாகவும், காப்பி டிகாக் ஷன் பேரரசியாகவும் திகழ்ந்த கமலாவைத் திடீர் என்று ஆண்டவன் சோதனை செய்தான்.
    அவ்வப்போது வயிற்றில் எரிச்சலாக இருக்கிறது என்று டாக்டரிடம் போனாள் ஒரு நாள். (வயிற்றில் எரிச்சல் வேறு; வயிற்றெரிச்சல் வேறு.) டாக்டர் பரிசோதித்து விட்டு, மறக்காமல் ஃபீஸ் வாங்கிக் கொண்ட பிறகு, "ஹைபர் ஆசிட் தொல்லை... காரம், காப்பி எல்லாம் கூடாது'' என்றார்.

January 27, 2010

பட்டு மாமி -- கடுகு

" எங்கேடா உன்னை ஆளையே காணோம்? டில்லிக்குப் போய் விட்டால் பெரிய மனுஷன் என்று எண்ணமோ? மாமியை வந்து பார்க்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டதா? நேற்று வரைக்கும் இந்தச் சாக்கடையில் கோலி விளையாடின சோம்பேறி தானேடா நீ....?'' சரமாரியாகப் பொரிந்துத் தள்ளுபவள் பட்டு மாமி என்னும் பட்டம்மாள்!
பட்டு மாமி மனதில் கல்மிஷம் எதுவும் இல்லாமல்தான் வசை பாடுவாள். எல்லாரையும்  இப்படி பேசுவது அல்லது ஏசுவது என்பது அவள் வழக்கம். இப்படி அவள் திட்டுவதைக் கண்டு யாரும் கோபப்படமாட்டார்கள்.
பட்டு மாமி ஒரு தனிக்கட்டை. ஊரில் நன்றாக வாழ்ந்தவள்தான். பார்க்கப் போனால் இப்போதும் அவளுக்கு ஒரு குறையும் கிடையாது. மூன்று பிள்ளைகள். டில்லி, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஒருத்தன் கூட தாயாருக்குச் சல்லிக் காசு அனுப்புவதில்லை.

January 21, 2010

கமலாவும் ஓசியும் --கடுகு

என் அருமை மனைவி கமலாவிற்கு ஓசி என்றால் உயிர். எல்லாருக்கும் ஓசி மோகம் உண்டு என்றாலும் கமலாவின் அளவிற்கு "ஓசிப்பிரியா' யாரும் இருக்க முடியாது.
    காய்கறி கடைக்குப் போனால், பல சமயம் அவள் விலை கொடுத்து வாங்கும் காய்கறியை விட ஓசியில் வாங்கும் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய் அதிகமாக இருக்கும்.இது எப்படி சாத்தியம் என்று உதட்டைப் பிதுக்காதீர்கள்!
  
கமலா ஒரே கடையில் எல்லா காய்கறிகளையும் வாங்கிவிட மாட்டாள். ஒரே காய்கறியையும் மொத்தமாக ஒரே கடையில் வாங்கிவிட மாட்டாள். உதாரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்க வேண்டுமென்றால் இரண்டு அரை கிலோவாக இரண்டு கடைகளில் வாங்குவாள். இரண்டு இடத்திலும் ஓசிக் கருவேப்பிலை!
 அப்புறம், ஒரே கடையில் இரண்டு காய்கறிகளையும் வாங்க மாட்டாள். கத்தரிக்காய் கடையில் வெண்டைக்காயும் இருக்கும். அதை வாங்க

வேண்டுமென்றால் என்னைப் போய் வாங்கி வரச் சொல்வாள்.
அங்கே நான் வெண்டைக்காயுடன் ஓசியில் கறிவேப்பிலயும் வாங்க வேண்டும்!
   இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டுக்கு நாங்கள் போகும் போது, அறிமுகமில்லாத இரண்டு பேர் போல் போவோம். தனியாக பை. தனியாகப் பணம்!  (சில சமயம் தற்செயலாக ஒரே கடையில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால், என்னை பார்த்து “ என்ன சௌக்கியமா? பாத்து நாளச்சு.” என்பாள் கூலாக!. ஒரு சமயம் “மாமி எப்படி இருக்கா?”என்று கேட்டாளே பார்க்கலாம்!.)     இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், ஓசி கறிவேப்பிலை கொடுக்கும் கடையில் வெண்டைக்காய் முற்றிப் போய் ஆணி மாதிரி இருக்கும். அல்லது மற்ற கடையை விட ஒரு ஐம்பது பைசா அதிகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் அங்குதான் வாங்க வேண்டும் என்பாள் !     

January 20, 2010

அன்புள்ள டில்லி - 6

ஹேமமாலினிக்கு டைரக் ஷன்
ராஜ்கபூரின் படத்தில்ஹேமமாலினி  நடிக்க ஆரம்பித்திருந்த சமயம் ஹேமமாலினி டில்லி வாழ் மதராஸிப் பெண்மணி என்பதால் அவரைப் பற்றி எழுத நினைத்தேன்.  போட்டோ கட்டுரை எழுத , அவரை சந்திக்க ஏதாவது சந்தர்ப்பம் வர்ரதா என்று காத்திருந்தேன்  கரோல்பாக்கில்  அவர் வீடு இருந்ததால் அங்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தேன். அந்த சமயம் டில்லியில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்த ஹேமா வந்திருந்தார்.
அவருடைய அம்மாவிடம் பேசினேன். மறு நாள் மாலை வரச் சொன்னார். அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்
      கரோல்பாக்கில் ஒரு சின்ன போர்ஷனில்,கயிற்றுக் கட்டில், தட்டுமுட்டுச்  சாமான்கள் நிறைந்த  அறையில் சந்தித்தேன். பொங்கல் சம்பந்தமாகப் புகைப்படத் தொகுப்பு ஒன்றுக்காகப் படங்கள் எடுக்க விரும்புவதாகச் சொன்னேன்.
ஹேமாவின் அம்மா, "அதற்கென்ன எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரி டிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.
"கிராமத்துப் பெண்மணியாக டிரஸ் பண்ணுங்கள். கட்டம் போட்ட புடவை, சற்று கணுக்காலுக்கு மேலே வரும்படி கொசுவம் வைத்துக் கட்டுங்கள்'' என்றேன்.
"ஓ! கட்டம் போட்ட புடவையா?'' என்று கேட்டு விட்டு ஒரு நிமிஷம் தயங்கினார். "சரி ஒரு மணி நேரத்தில் டிரஸ், மேக்கப் எல்லாம் தயார்
பண்ணுகிறேன்'' என்றார் ஹேமாவின் அம்மா.
நானும், "காமிராவிற்கு பிலிம் வாங்கிக் கொண்டு அரைமணியில் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
பிலிம் வாங்கிக் கொண்டு போன போது ஹேமாவை ஒரு அசல் கிராமத்துக் குடியானவப் பெண்ணாக அலங்கரித்து இருந்தார் அம்மா. இதற்கென்று புதிதாக ஒரு புடவை வாங்கியிருந்தார். ஹேமா பின்னால் பிரபல ஸ்டாராக உருவானார் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று அவரது தாயாரின் கவனிப்பு.. பாருங்களேன், நான் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளனாக இருந்தும், அக்கறையுடன் படம் எடுக்க உதவி புரிந்தார். ஹேமா அவர்களும் மெல்லிய புன்னகை புரிந்தபடியே, பல்வேறு நடன‘போஸ்’ களை  மிகவும் அழகாகக் கொடுத்தார்

தியாகு -- கடுகு

எந்தப் போரில் வென்றாலும், தியாகுவைச் சொற்போரில் மட்டும் ஜெயிக்க முடியாது. அடிப்படையோ தர்க்கரீதியோ இல்லாமல்கூட அவன் வாதம் செய்வான்.  இவனுடன் வாதம் செய்வதைவிடத் தோல்வியை ஒப்புக் கொள்வதே நல்லது என்று தோன்றி விடும். எந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னாலும் அதற்கு நேர் எதிரிடையாகச் சொன்னால்தான் அவனுக்குத் திருப்தி.  எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடிக்காமல் இருக்க மாட்டான்!
நல்ல பளபளப்பான சிவப்பு. ஷேவ் பண்ணிய அடையாளமே இல்லாத மழுமழுப்பான கன்னம்,  இழைய இழைய வாரி விடப்பட்டிருக்கும் கிராப்பு. பளிச்சென்ற வெள்ளை ஸ்லாக் சட்டை. பார்ப்பதற்கு 25 வயது இளைஞனைப் போல் காட்சி அளிக்கும் இந்த நக்கீரன் எப்படிப்பட்ட மனைவியைத் தேர்ந்தெடுத்தான் தெரியுமா?  இவனைவிட ஐந்து வயது மூத்தவள் மாதிரி இருக்கும், ஒரு கறுப்பான, குண்டு சரீரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டான்! வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் பலர் இம்மாதிரிதான் செய்து விடுகிறார்கள்.

January 14, 2010

’இது’ ---ஜிங்குடு எழுதிய ஆராய்ச்சி உரை


தமிழிலேயே ஒப்பற்ற வார்த்தை ’இது’ என்பதுதான். அந்த காலத்தில் ஆயிரம் முகம் ராம் குமார் என்று ஒரு நடிகர் இருந்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய திறமை இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டார். அதே போல் "இது"  என்ற வார்த்தை ஒரு ஆயிரம் முகம் ராம் குமார். அது இடத்திற்குத் தகுந்தாற்போல் அர்த்தத்தை மாற்றிகொள்ளும்.
 *                       *                  *
உதாரணத்திற்கு "இது" மொழியில் ஒரு சொற்பொழிவைத் தருகிறேன்,படியுங்கள்.
இதில் வரும் எல்லா "இது"விற்கும் சரியான அர்த்தத்தை உங்களை அறியாமலேயே சரியாகப் புரிந்து கொள்வீர்கள்!
*                  *                          *                  *
பெரியோர்களே! தாய்மார்களே! இன்று நடைபெறும் மாபெரும் இந்த "இது" வில் என்னை நீங்கள் அன்புடன் "இது" செய்வது எனக்கு உண்மையிலேயே "இது" வாக இருக்கிறது.
ஒரு சிலர் இப்படி எல்லாம்’இது’ங்க வேண்டுமா? என்று கேட்டார்கள்  ’இது’ங்குகிறவர்கள் ’இது’ங்கட்டும். அதனால் நமக்கு ஒரு "இது"வும் இல்லை. என்னைப் போன்ற இளஞர்களுக்கு நீங்கள் ’இது’ங்கும் "இது" .ஒரு பெரிய "இது" மாதிரி.நான் மேன்மேலும் என் "இது"வில் சிறந்து ’இது’ங்க உதவும் என்று கூறி என்னுடைய "இது"வை இத்துடன் ’இது’ங்கிக் கொள்கிறேன். வணக்கம்!

குஷ்வந்த் சிங்கும் நானும்

முன் குறிப்பு - 1
.தலைப்பைப் பார்த்ததும் ‘ சரிதான்.. விட்டால், ஷேக்ஸ்பியரும் நானும், தொல்காப்பியரும் நானும் என்றெல்லாம்  இந்த  ஆள் சரடு திரிப்பார் போலிருக்கிறதே என்று சிலர் நக்கல் அடிக்கக் கூடும். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் அபிமான வாசகர்கள் 10,00,000 பேர் -- (ஊப்ஸ்...ஐந்து பூஜ்யங்கள் அதிகமாக டைப் ஆகிவிட்டது. நான் அகிம்சாவாதி என்கிற காரணத்தால் அவற்றை  ’அடிக்க’  மனசு வரவில்லை.! அப்படியே இருந்து விட்டு போகட்டும்!) அப்படி கூறமாட்டார்கள்
முன் குறிப்பு -2
இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் விசிறி நான். அதில் ஆர். கே. நாராயண் தொடர் கதைகள் எழுதி வந்ததும்  முக்கிய காரணம். வீக்லிக்கு 70’களில் குஷ்வந்த் சிங் ஆசிரியர் ஆனார். பல மாற்றங்களைச் செய்து சர்க்குலேஷனை உயர்த்தினார்.  ஒவ்வொரு வாரமும் “ஆசிரியர் பக்கம்” எழுதுவார். பல சமயம் அதில் கிளு கிளு செய்திகளும் இருக்கும்  (ILL-LUST-RATED WEEKLY!). யாராவது பிரமுகர் காலமாகி விட்டிருந்தால் இரங்கல் கட்டுரையும் அவர் எழுதுவார். அப்படி எழுதும்போது குறிப்பிட்ட பிரமுகருடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி, கிட்டத்தட்ட  ஒரு ஜம்பக் கட்டுரையாக எழுதிவிடுவார்..அதாவது   இப்போது நான் எழுதும் “....நானும்” வரிசை கட்டுரைகளைப் போல என்று வைத்து கொள்ளுங்களேன்!
அவரைக் கேலி செய்ய நினத்து ஒரு கட்டுரையை எழுதினேன். தாகூர், மெரிலின் மன்றோ, கார்ல் மார்க்ஸ் ஆகியவர்கள் காலமான சமயம் வீக்லியும் இருந்து, அதன் ஆசிரியராக குஷ்வந்த் சிங்கும் இருந்திருந்தால் ‘ஆசிரியர் பக்கத்தி’ல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு கட்டுரைய் அவர் பாணியில் எழுதி  அனுப்பினேன்.  மறு வாரமே அதை ’ஆசிரியர் பக்கத்தில் சிறு குறிப்புடன் வெளியிட்டு விட்டார் .
குஷ்வந்த் சிங்கின் குறிப்பு” என்னை யார் கேலி பண்ணினாலும் திட்டினாலும் நான் ஒரு பொழுதும் ஆட்சேபித்ததில்லை. ’அவர் தெரியும்’, ’இவர் தெரியும்’ என்று அல்டாப்பாகப் பேசுபவன் என்று தான்  என்னைப் பற்றி பல வாசகர்கள் கருதுகிறார்கள். புது டில்லி வாசகர் -----------------ஒரு நையாண்டிக் கட்டுரை அனுப்பியுள்ளார். அதை இங்கு தருகிறேன்.
(அந்தக்  கட்டுரை ஆங்கிலத்தில் தொடர்கிறது.)

குஷ்வந்த் சிங்- தொடர்ச்சி

குஷ்வந்த் சிங்கும் நானும் என்ற முதல் பகுதியைப் படித்து விட்டு இந்தப் பகுதியைப் படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

THE EDITOR"S PAGE
The obit on the poet (Tagore) reads as follows:
It was a rainy Sunday morning when I had the opportunity to meet the Nobel Prize winner. Tagore was at a seaside resort in Switzerland, the charming landlocked country of Europe. I was just returning after a two-month holiday-cum-research tour of Polynesia, Hawaii and Las Vegas. I was working on a novel for my publishers Tom, Dick and Harry. This novel was also to be published in America by Funk, Wag and Kneel Inc. New York.

"I had earlier phoned Tagore for an appointment. 'Sunday, 7.30. Will it suit you?' he asked in a clear voice. 'Oh, anything will suit me except my suits stitched in India,' I said. There was a hearty laughter at the other end of the phone. Surely, Tagore was man with a high sense of humor!
"When I went on the appointed day, I was slightly late -- to be exact, by about 8 hours. Tagore received me at the porch and offered me Nimbu-de-juice, a delicious drink (certainly I did not expect the poet to offer Scotch). For the next forty minutes we discussed the current literary trends. I was then vaguely planning a novel, later to be titled 'A Train to Pakistan' (published by Hind Pocket Books or Orient Paperbacks or Pearl Publications. I don't exactly remember the name of the publisher, which is not quite material. The book is priced at Rs.4 ,which is quite material).
"Tagore asked me what I was doing. 'Nothing of importance,' I said. 'Oh, you Sardarjis are modest to a fault. With your remarkable talent, whatever you do will be important and will certainly make a great impact on the minds of intellectuals. Now, since we are alone, I can tell you this. Your writings are quite outstanding and you are sure to be awarded Nobel Prize."
"Tagore was a great soul with a great heart. He is gone. I only wish that his statement comes true."

அன்புள்ள டில்லி - 5


கண்டேன் சாந்தி தேவியை
எம்.பி.யும் நானும் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பளபளவென்று இருந்த ஸ்கூட்டரைப் பார்க்கப் பார்க்க, முகம் தெரியாத ஒருவர் மேல் எனக்குப் பொறாமை எற்பட்டது. அவர்தானே இந்த ஸ்கூட்டரை அனுபவிக்கப் போகிறார்!
வீட்டிற்குள் போனதும் எம்.பி. என்ன செய்தார் தெரியுமா? ஸ்கூட்டர் சாவிகளை எடுத்து, "இந்தாங்க சாவி. வண்டி உங்களுக்குத்தான்'' என்றார். இதைக் கேட்டதும் எனக்குப் புல்லரித்தது. கண்கள் குளமாயின. (சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)
"கறுப்பில்' அதிக விலை போகும் ஸ்கூட்டரை, தன் பணத்தைப் போட்டு வாங்கிக் கொடுத்தவர் திரு. தெய்வீகன்.
கிருஷ்ணன் செய்தது என்ன?
என் நண்பர் பி.என். கிருஷ்ணன் என்பவரிடமும் புது ஸ்கூட்டர் அலாட்மென்ட் வந்தால் கொடுக்க முடியுமா என்று ஒரு சமயம் கேட்டிருந்தேன். அவர் ஸ்கூட்டருக்காக புக் பண்ணியிருந்தார் ஆனால் நகர நெரிசலில் போவது  நம்ம்மால் ஆகாது, நான் ஸ்கூட்டரை வாங்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார்.

கமலாவும் கத்திரிக்காய்க் கூட்டும்.

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று தினமும் என்னைக் கேட்டு எனக்கு இஷ்டமான சமையலை செய்வது தான். அதே சமயம் அது அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அமைந்துவிடும். இது எப்படி என்று கேட்கிறீர்களா?
     நேற்று காலை நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். கமலாவின் ’நோ-ஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும!
       ”ஏன்னா, உங்களைத்தானே, இன்றைக்கு என்ன சமையல் செய்யட்டும். வீட்டில் கத்திரிக்காய்தான் இருக்கிறது. கூட்டு செய்யட்டுமா?" என்று  கேட்டாள்.

January 13, 2010

அஞ்சாம் பிளாக் மாமி -- கடுகு

டில்லி கரோல்பக்கில் உள்ள தமிழ் குடும்பங்களில்  என்னென்ன நடக்கின்றன? யார் வீட்டுப் பையன் எந்த காலேஜில் படிக்கிறான்;  எந்த பெண்ணுக்குக் கல்யாணம் அல்லது பூச்சூட்டல், யார் வீட்டு மாமி புதிதாக நவரத்ன மாலை வாங்கிக் கொண்டாள்; எந்த வீட்டு "மாமா'விற்கு ஆபீசில் இன்க்ரிமென்ட் கிடைத்தது என்பது போன்ற தகவல்கள் மட்டுமின்றி வேறு "கிசுகிசு' செய்திகளும்,  ("ராஜலக்ஷ்மியின் பெரிய பெண் காந்தா இருக்கிறாளே, அதுதான் பாங்கில் வேலை பார்க் கிறதே, அந்தப் பெண் ஏதோ பஞ்சாபிப் பையனுடன் சுற்றிக்கொண்டிருக் கிறதாம்?'') மற்றும் மார்க்கெட் விவரங்கள் போன்ற தகவல்கள் - ஆகியவை களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?  "அஞ்சாம் பிளாக்' மாமி அமிர்தத்தைக் கேட்டால் போதும்!
பார்க்கப் போனால், நீங்கள் கேட்கக் கூட வேண்டாம்; அந்த மாமியிடம்."என்ன செüக்கியமா?' என்றாலே போதும்.  அவ்வளவுதான்.  "ரேடியோ கரோல்பாக், செய்திகள் அமிர்தம்' என்று சொல்லாத குறையாக ஆரம்பித்து விடுவாள்! 
"சௌக்கியத்திற்கு என்னடி குறைச்சல், லலிதா? மிஸஸ் ராமனின் பெண் பிரசவத்திற்கு பிறந்தகம் போகிறாள்.  அவளுக்குப் பாகற்காய் பிட்லை என்றால் மசக்கை.  மாமி கையால் பண்ணிக் கொடுக்கலாம் என்று பாகற்காய் வாங்க வந்தேன்.  நேற்று கால் கிலோ எட்டணா விற்றான்.  இன்றைக்கு அறுபது பைசா என்கிறான் முருகன்.  "ஏண்டா முருகா! யாருக்குடா சேர்த்து வைக்கப் போறே, இவ்வளவு லாபம் பண்ணி? உன் ஒரே பெண்ணையும் கட்டிக் கொடுத்துட்டே' என்று அவன் மனசில படறாப்போலே கேட்டுட்டேன்!

January 11, 2010

கேரக்டர்: ராம சேஷு - கடுகு

டில்லியில் உள்ள பெரிய மனிதர்களில் தமிழர்கள் வீட்டுக் கலியாணங்கள் பருப்பில்லாமல் கூட நடந்து விடும் --ஆனால் ராமசேஷன் இல்லாமல் நடக்காது.  கலியாண மாப்பிள்ளையை விட முக்கியமான ஆசாமியாகக்  காட்சியளிப்பார் ராமசேஷன்.ஐம்பது வருடங்களாக டில்லியிலிருப்பவர் ராமசேஷன். பத்தாவது வயதில் சித்தி அடித்ததால் டில்லிக்கு ஓடிவந்துவிட்ட சேஷு, யாரோ ஒரு பெரிய மனிதரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். எடுபிடி ஆள், சைக்கிள் பியூன், சமையல்காரன், மெட்ராசுக்குத் தனியாகப் போகும் பெரிய மனிதரின் மாமிக்கு எஸ்கார்ட்; கான்வென்டில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டுபோய் விடுவது, கரோல்பாக் சென்று காப்பிப் பொடி அரைத்து வருவது -- -- இப்படி பல காரியங்கள் செய்தார்.
இன்று பெரிய மனிதர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் ராம சேஷுவின் தோளில் குழந்தையாகச் சவாரி செய்தவர்கள் தான். ஆகவே ராமசேஷனுக்கு எல்லார் வீட்டிலும் சமையலறைவரை செல்லும் உரிமை உண்டு
"விமலா, எங்கே உன் அகத்துக்காரர்? டூரா? சரியாப் போச்சு, காலேஜில் படிக்கச்சே "சிம்லா டூர் போகணும்'னு அப்படி பிடிவாதம் பிடிச்சவனம்மா உன் ஹஸ்பெண்டு. உங்க மாமனார், "அதெல்லாம் முடியாதுடா, வருகிற மாசம் பரீட்சை, படிடா பாடத்தை' என்றார். அப்புறம் எங்கிட்ட வந்தான். "சேஷு, அப்பாகிட்டே நீ சொல்லு' என்று கெஞ்சினான். நான் சொன்னப்புறம் தான் இவனுக்கு பர்மிஷன் கிடைச்சுது. இப்போ என்னடா என்றால் டூரே பொழப்பாப் போய்டுத்து.. என்ன டிபன் பண்ணியிருக்கே? மலபார் அடையா? ஒண்ணே ஒண்ணு கொடு, காப்பி வேண்டாம், டீயே போடு'' -- இப்படி உரிமையுடன் கேட்டுச் சாப்பிடுவார்.

January 06, 2010

கேரக்டர்: சாரு

மெல்லிய லக்னோ மல் ஜிப்பா, கருப்பு பாண்ட், ஜீனத் அமன் ஹேர் ஸ்டைல், கறுப்பு மூக்குக்கண்ணாடி ,’பிளாட்பாரம்'. என்று நாகரீக நங்கையர்களால் அழைக்கப்படும் உயரமான மிதியடி,

தோளிலிருந்து தொங்கும் "ஜம்பப் பை', முகத்தில் ஓர் அலட்சியம், தவறிப் போய் பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்கிற நினைப்பு,, அந்த நினைப்பினால் உண்டான ஆண்மைத்தனமான அட்டகாசப்பேச்சு,  இவைகள் ஓரளவுதான் சாருவைப் படம் பிடித்துக் காட்டும். காரணம் சாருவின் குணமோ, நடை உடை பாவனைகளோ வர்ணனைக்குள் அடங்காதவை -சாருவைப் போல!

"யாருக்கு எதுக்கு அடங்கி நடக்கணும்? சொஸைடியில் பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்பது தவறு மட்டுமல்ல, சரியான அசட்டுத் தனமும் கூட, வாட் டு யூ ஸே, ராஜா?'' என்று கேட்பாள் சாரு. ராஜா என்பது அவள் கணவன்!

அன்புள்ள டில்லி - 4

அருமையான அமைச்சர்
மறுநாள் பாதுகாப்பு துணை அமைச்சரின் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்தேன். மனுவைப் படித்துப் பார்த்தார். அடுத்த நிமிஷமே - ஆம்  அடுத் த நிமிஷமே-- "ஓ.கே. உங்கள் சகோதரரை ராணுவப்பணியிலிருந்து விடுவித்து விட உத்தரவு போடுகிறேன்.'' என்று சொன்னார்.  கை குலுக்கி எனக்கு விடை கொடுத்தார். அமைச்சர் உத்தரவு போட்டாலும் அதை செயல் படுத்த  அரசு அதிகாரிகள் எத்தனை முட்டுக்கட்டைகள் போடுவார்களோ என்று யோசித்துக் கொண்டே விடை பெற்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அடுத்த மூன்றாவது தினம் புனாவிற்கு ஒரு  ராணுவ உத்தரவு ஒயர்லெஸ்ஸில்  சென்றது: "அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கவும். ரிலீஸ் உத்தரவு பின்னால் வருகிறது.''
             ரிலீஸ் உத்தரவு கிடைத்து விட்ட செய்தியை என் சகோதரர் தெரிவித்ததும், நன்றி தெரிவிக்க திரு சவானைப் பார்க்கச் சென்றேன். நிறைய பழம்,  அவருடைய 3 வயது பேத்திக்கு பிஸ்கட் என்று வாங்கி கொண்டு போனேன்! ஆனால் அவர் ஒரு பழம் கூட வாங்கிக் கொள்ளவில்லை. "உங்கள் சகோதரருடைய கேஸ் லட்சத்தில் ஒன்று. இம்மாதிரியான உண்மையான, நியாயமான கோரிக்கையை எற்காவிட்டால் நான் மந்திரியாக இருக்க லாயக்கில்லாதவன். மேலும் நீங்கள் வாதித்த விதமும் என்னைக் கவர்ந்து விட்டது. பெஸ்ட் ஆப் லக்'' என்று சொன்னார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவது என்றால் சுலபமில்லை. பென்ஷன் பேப்பர்கள் பல இடங்களுக்குப் போய் வர மூன்று மாதமாவது ஆகும். என் சகோதரர் விஷயத்திலும் அப்படியே மூன்று மாதம் ஆயிற்று.  அதுவரை அவர் டியூட்டியில் இருந்ததாகக் கருதி முழுச் சம்பளமும் கொடுத்தார்கள்.
என் சகோதரர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தனது 45 வது வயதில் டாக்டர் ஆனார். அவரது வாழ்க்கை லட்சிய்ம் பூர்த்தி  ஆயிற்று. எல்லாம் அமைச்சர் டி.ஆர்.சவானின் உதவியால்!  மறக்க முடியாத மந்திரி டி.ஆர்.சவான்.

தேவனும் நானும் -- கடுகு

துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம். மல்லாரி ராவ் கதைகள் போன்ற நகைச்சுவைக் கதைகளையும், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான்      சுதர்சனம், லக்ஷ்மி கடாக்ஷம் போன்ற அற்பதமான குடும்ப நாவல்களையும் எழுதி, கல்கிக்கு அடுத்தபடியாக தனது பெயரை எழுத்துலகில் இடம்பெறச்  செய்திருப்பவர் திரு. தேவன். என் அபிமான எழுத்தாளர்.
பள்ளிக்கூட வயதிலேயே பத்திரிகை ஆர்வமும், ஓரளவு எழுத்து ஆர்வமும் இருந்த எனக்கு, தேவன் ஒரு எழுத்துலக 'ரஜினி! என் வயது ஒத்த இளஞர்கள் விஜயா, வாஹினி, ஏ.வி.எம் ஸ்டூடியோ - வாசல்களிலும்,, கோடம்பாக்கம் ரயில்வே  கேட்டருகேவும் (இன்றைய ஃப்ளை ஓவர் இருக்கும் இடத்தில் இருந்த  கேட் மூடியிருக்கும்போது யாராவது நடிகர், நடிகைகளின் கார் வந்து நிற்காதா என்று வாயைப் பிளந்து) காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்,, தேவனைச் சந்திக்க வேண்டும் என்ற வெறி எனக்கு  ஏற்பட்டது. (பின்னால் நான் ஒரு பிரபல(?)  நகைச்சுவை எழுத்தாளனாக ஆனதற்கு இது ஒரு அறிகுறி என்று நான் எழுதினால் "போடா தற்குறி" என்று நீங்கள் தூற்றக்கூடும்.
ஐம்பதுகளில் ஒரு நாள், ’சென்னை அரண்மனைக்காரத் தெருவில் ஒரு நிகழ்ச்சியில் தேவன் பேசுகிறார்’ என்ற செய்தியை தினசரியில் பார்த்தேன். எப்படியாவது அந்த கூட்டத்திற்குச்  சென்னை செல்லவேண்டும் என்ற தீவிரம் பற்றிக்கொண்டது. நான் செங்கல்பட்டுவாசி.  சென்னைக்குப் போய் வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத  என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்று பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.

January 01, 2010

அன்புள்ள டில்லி --3


           அந்தப் பெண் எம்.பி. எங்களைக் காலி செய்யச் சொன்னது ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்  வேறு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண் எம்.பி.யின் வீட்டுக்கு வந்த பல பிரமுகர்களில் ஒருவர், ஒரு மகாராஷ்டிர மாநில எம்.பி.  தன்னுடைய தமிழ் மாஸ்டர்ஜி என்று என்னை செல்வி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அவருடன் நான் ஆங்கிலத்தில் உரையாடுவது உண்டு.. என்னுடைய ஆங்கிலப் புலமை அவரைக் கவர்ந்து விட்டது. ஆகவே ஒரு நாள், "எனக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர முடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மகாராஷ்டிராவில் ஒரு மிகப் பெரிய பிரமுகர். எதிர்க் கட்சியின் தலைவராக இருந்தவர், அசெம்பிளியில் பின்னால் காங்கிரஸிற்கு வந்தார். இவரது மாப்பிள்ளை சில வருடங்கள் கழித்து பம்பாய் முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர ஒத்துக் கொண்டேன். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடல், டிக்டேஷன் போன்று பாடங்கள். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் நிறையத் தவறுகள் ஏற்பட்டு விடும். அவருடைய வீக் பாயிண்டுகளைக் கண்டுபிடித்து அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என் மேல் அபார மதிப்பும் பிடிப்பும் எற்பட்டு விட்டது.

டெய்லி ரேட்
சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். "கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது'' என்றேன்.
"அடேடே, உங்களுக்கு பீஸ் கொடுக்கவே மறந்து விட்டேனே... முன்னேயே ஏன் கேட்கக் கூடாது?'' என்று சொல்லிக் கொண்டே தன் ப்ரீஃப் கேஸைத் திறந்தார். அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தார். சுமார் ஐந்து நிமிஷம் என் பொறுமையைச் சோதித்து விட்டுச் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஷாக் அடித்தது!

கேரக்டர்: மாரிமுத்து -- கடுகு

          கோடம்பாக்கம் ஒவர்பிரிட்ஜ் கைப்பிடி சுவரில் அமர்ந்திருக்கும் ஏழு ஆசாமிகளில் நடுநாயகமாக இருப்பவரைக் கவனியுங்கள். அவர் தான் சினிமா ரசிகர் மாரிமுத்து!

கண்ணைப் பறிக்கும் சிவப்பு சாட்டின் சட்டை, லுங்கி, பஞ்சாபி சப்பல், படியாத கிராப்பு, கழுத்தில் மைனர் செயின் (பித்தளை தான்),  வாயில் வெற்றிலைப் பாக்கு, பன்னீர் புகையிலை-- இதுதான் மாரிமுத்து..
அரண்மனைக்காரத் தெருவில் வாட்ச்மேன். ஆகவே பகலெல்லாம் ஐயா ப்ரீ!தூங்கி ரெஸ்ட் எடுப்பதைவிடப் பாலத்தின் மேல் உட்கார்ந்து காரில் போகும், வரும் சினிமா நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவர்களைப் பற்றி கிசுகிசு செய்திகளை உற்சாகமாக அரட்டை அடிப்பதும் தான் அவருக்கு பொழுது போக்கு, ஓய்வு எல்லாம்!
இடது கையில் பெரிய ரிஸ்ட்  வாட்ச் கட்டியிருக்கிறாரே, அது மூர் மார்க்கெட்டில் வாங்கியது. விலை முப்பது ரூபாய். பார்க்கப் பிரமாதமாக இருக்கும். அவ்வப்போது உதறினால் தான் ஓடும்! இதன் காரணமாக கையை அடிக்கடி உதறும் பழக்கமே வந்து விட்டது மாரிமுத்துவிற்கு!