லிப்ஸ்டிக் முதல் ராட்சஸ டீசல் இஞ்சின்வரை ஏகப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் பெரிய பம்பாய்க் கம்பெனியின் டில்லிப் பிரதிநிதி திருவாளர் ஜெயம். சீஃப் ரெஸிடன்ட் எக்ஸிக்யூட்டிவ்' என்ற அட்டகாசமான பெயராக இருந்தாலும் அவர் செய்வது, சர்க்கார் அலுவலகத்தில் அவரது கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களை வேகமாக நகர்த்தி வெற்றிகரமான முடிவிற்கு கொண்டுவரும் லியாசன் அதிகாரி வேலைதான். மகாராணி பாக் என்ற இடத்தில் ஒரு பெரிய மாளிகை. ஆபீஸ் கம் கெஸ்ட் ஹவுஸ். மூன்று கார்கள். நான்கு டெலிபோன்கள். டெலக்ஸ். உதவி மானேஜர், டைப்பிஸ்ட் என்று ஏழெட்டு பேர். பம்பரத்திற்கு மறு பெயர் ஜெயம் என்று சொல்லும்படி எப்போதும் படு பிஸி. டெலிபோனில் யார் யாரையோ `பிடித்து'ப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு டெலிபோன் அலறும். "யார்... அடடே! வர்மாஜி, குட்மார்னிங்... கார் தானே? அப்பவே அனுப்பிட்டேனே.. இரண்டு நாள் என்ன, மூணுநாள் கூட வெச்சுகிட்டு அனுப்புங்க. நான் எங்கே ஸார் கலியாணத்திற்கு வருகிறது. சரி, கட்டாயம் இரண்டு நிமிஷம் தலையைக் காட்டுவேன். ஓ.கே.....''
















