July 07, 2010

கோளறு பதிகம்-3: மதிநுதல்

பாடல் - 3
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
      மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
      கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியாரவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு

வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சிணாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து

மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்

நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்

கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்

அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் 

நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

2 comments:

  1. Miga miga arputham!!!!!!!!

    KOthamalli

    ReplyDelete
  2. VEERARAHAN said: முருகா பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு பக்திக்கும் இசைக்கும் சேவை செய்து
    நாம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!