July 04, 2010

பித்துக்குளி முருகதாஸும் நானும்

ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக் கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு,  உச்சரிப்பு சுத்தம், அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின் சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.

பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக் கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.

பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன். டில்லிக்கு பல சமயம் அவர் வந்திருக்கிறர். ( ஏன், யூ.என். ஐ. கேன்டீனுக்குக்கூட வந்திருக்கிறார்.)
*              *                 *
தமிழுக்கும், இசைக்கும், ஆன்மீகத்திற்கும் இவர் ஆற்றிய பணி மகத்தானது.. ஆனால் சங்கீத அகாடமிக்கு இப்படி ஒருவர் இருப்பதாகக் கூடத் தெரியவே இல்லை. இவரது   79-வது வயதில் தான் இவருக்கு விருது கொடுத்தது!. அதற்கு முன்பு அரசு என்ன செய்தது தெரியுமா. இவர் பக்தி நிகழ்ச்சிகள் நடத்த தென் ஆப்பிரிக்கா சென்றார். அந்த காரணத்துக்காக ரேடியோவில் அவருக்கு வாய்ப்புகளைத் தரவில்லை.
அதுமட்டுமா? ஒரு காலத்தில் ரேடியோவில் ஹார்மோனியம் வாசிப்பதற்குத் தடை..(இந்த   ஹார்மோனியத்  தடை பைத்தியகாரத்தனமானது “ என்று சுப்புடு எவ்வளவோ  எழுதியும் பலனில்லை.)   பித்துக்குளிக்கு வாய்ப்பே தராததிற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் அவருக்கு  ஒரு அணு அளவும் நஷ்டமில்லை..

டில்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அவரது நிகழ்ச்சிகள் எங்காவது இருக்கிறதா எண்று பேப்பரைப் பார்ப்பேன். சில வருஷங்கள் கழித்து அவரது டெலிபோன் எண்ணைக் கேட்டு வாங்கி கொண்டேன். முருகாவின் வீட்டுக்கே போன் செய்து கேட்டதும் உண்டு. (பித்துக்குளி அவர்களை எல்லாரும் முருகா என்றுதான் குறிப்பிடுவார்கள்; அழைப்பார்கள்.. ஆகவே நானும் அப்படியே குறிப்பிட விரும்புகிறேன்.)
*           *      *
முருகா தனது 60-வது வயதில் தேவி சரோஜாவைத் திருமணம் செய்து கொண்டார். அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு அவர் ரிஷிகேசம் முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு டில்லிக்கு வந்தார். சங்கர மடத்தில்கச்சேரி. டேப் ரிகார்டருடன் நாங்கள் போயிருந்தோம். கச்சேரியின் இடையில் அவர்  தான் திருமணம் செய்து கொண்டதைப் பற்றி சற்று விரிவாகப் பேசினார். அதுவும் ரிகார்ட் ஆகி இருந்தது. வீட்டுக்கு வந்து  அதைக் கட்டுரையாக எழுதினேன். அதில் முடிவில் ஒரு பாடலைச் சொல்லியிருந்தார். அது சரியாக ரிகார்ட் ஆகவில்லை. மறுநாளே அவர் சென்னைக்கு சென்று விட்டதால். கட்டுரையைத் தபாலில் அவருக்கு அனுப்பினேன்.  பாடல் வரிகளைப் பூர்த்தி செய்து தரும்படியும், கட்டுரையை .வெளியிட  அனுமதியையும்  கேட்டிருந்தேன். அவரிடமிருந்து இரண்டு தினங்கள் கழித்து சம்மதம் வந்தது. கட்டுரை குங்குமத்தில் பிரசுரமாயிற்று. (குங்குமத்தில் வெளியான கட்டுரையைத் தனிப் பதிவாகப் போடுகிறேன்.)
*          *                     *
டில்லியிலிருந்து சென்னைக்குத் தாற்கலிகமாக- 84-ல்  திரும்பி வந்தபோது ஒரு நவராத்திரி சமயம், அவரது இசை நிகழ்ச்சிகள் எங்கு நடக்க இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள  அவருக்குப் போன் செய்தேன்
  ”நவராத்திரியின் போது ஒரு கச்சேரியும் செய்யப் போவதில்லை. ஒன்பது நாளும் குங்குமப் பூஜை செய்யப் போகிறேன். பூஜை முடிந்ததும் சிறிது நேரம் பாடுவேன்..” என்றார்.
“ முருகா... என் மனைவியும் நானும் பூஜையில் கலந்து  கொள்ள வரலாமா? “ என்று கேட்டேன்.
“ வாருங்கள்... சரியாக ஆறு மணிக்கு ஆரம்பித்து விடுவேன்...” என்று சொல்லிவிட்டு, “ சூளைமேட்டில் ஒரு வீட்டில் பூஜை நடக்கும்” என்று சொன்னார். வீட்டு முகவரியையும் தந்தார்.
என் மனைவியும் நானும் ஒன்பது நாளும் பூஜைக்குப் போனோம். பூஜையில் கலந்து கொண்டவர்கள்: மொத்தம் ஆறு பேர்கள்தான். அந்த வீட்டில் இருந்த கணவன்,மனைவி. முருகா. தபேலாக்காரர் மற்றும் நாங்கள் இரண்டு பேர். அவ்வளவுதான். இடையில் ஒன்றிரண்டு பேர் வந்தார்கள்..(அவரது சகோதரியும் வந்திருந்தார். அவருடன் எங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. முருகாவின் எளிய வாழ்க்கையைப் பற்றி சற்று அறிந்துகொண்டோம்)
 சுமார் ஒரு மணி நேர குங்கும அர்ச்சனைக்குப் பிறகு ஹர்மோனியத்துடன் பாடினார். அறையில்  நாங்கள் நாலு பேர் தான். ஆனால் முருகாவோ நாலாயிரம் பேர் உள்ள கூட்டத்தில் எப்படி பாடுவாரோ அப்படி மெய்மறந்து பாடினார். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியும்! அது மட்டுமல்ல அந்த ஒன்பது நாளும் அவர் பாடியதை அவர் அனுமதியுடன் ரிகார்ட் பண்ணினேன். விஜயதசமியன்று அவரது மைலாப்பூர் வி.எம். தெரு வீட்டில் பெரிய அளவில் பூஜையும் பஜனையும் நடந்தது. மகாப் பிரசாதமும் வழங்கப்பட்டது. அதற்கும் போயிருந்தோம்.

(தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஒரு குறிப்பை இங்கு எழுத விரும்புகிறேன்.
நவராத்திரி பூஜையின் போது கடைசி மூன்று தினங்கள், பஜனை துவங்குகிற சமயம் ஒரு இளைஞன் பூஜைக்கு வந்தான்.. பதினைந்து பதினாறு வயது இருக்கும். முருகாவுடன் அவனும் மெலிதாகப் பாடினான். வேல் விருத்தம், தேவேந்திர சங்க வகுப்பு பாடல்களில் விறுவிறுப்பான நடையும், வேகமும். இசையும், சந்தங்களும் அபாரமாக இருக்கும் “ ’தரணியில் அரணிய முரண் இரணியன்”  என்று முருகா எடுத்தவுடன் இளைஞனும் சற்று உரத்த குரலில் கூடவே ஈடுபாட்டுடன் பாடினான். அதைக் கேட்டு மெய்மறந்தேன். “ சே! நாம் இதை எல்லாம், மனப்பாடம் செய்யாமல் இருக்கிறோமே’ என்று மனதிற்குள் என்னையே நொந்து கொண்டேன்.)
**       **           **
மூன்றாண்டுகளுக்கு முன்பு எஸ். ஒய். கிருஷ்ணஸ்வாமி ஐ. ஸி. எஸ். அவர்கள் குடும்ப டிரஸ்ட் நிகழ்ச்சியில் அற்புதமாக 3 மணி நேரத்திற்கு மேல் பாடினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 50 களில் புகழ்பெற்று விளங்கிய அமெச்சூர் நடிகர் டாக்டர் ராமமூர்த்தியின் குடும்பத்தினர் ‘தத்வலோகா’வில் நடத்திய நிகழ்ச்சியில் பாடினார். சற்று தள்ளாமை காணப்பட்டது. ஆனால் மேடை ஏறியதும், ஐம்பதுகளில் நான் பார்த்த அதே முருகா; அதே உற்சாகம்.

முருகா நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

(குங்குமத்தில் வெளியான கட்டுரைத் தனிப் பதிவாக வரும்.)

9 comments:

 1. முருகாவைப்பற்றி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி..
  அவர் குரல் வளத்தை என்ன சொல்ல ..
  athuvum ஓம் ஓம் என்றோலிகுது
  என்ற பாட்டில் அவர் தொடும் high pitch அசாத்தியமானது.
  ஊத்துக்காடு பாடல்களை அவரை விட யாரும் உணர்ந்து பாட இயலாது
  ஆடாது அசங்காது வா கண்ணா என்றால் கண்ணன் வந்து விடுவான்
  அவர் லலிதா பரமேஸ்வரியின் மேல் உள்ள பக்தி அலாதி..
  அவர்களாலே தான் நாங்கள் எல்லாம் லலிதா சகஸ்ரநாமம் சொல்லத் துவங்கினோம்
  எங்கள் சிறு வயதில் எங்களோடு குழந்தைகளை போலவே விளையாடுவார்..
  நான் சென்ற முறை சென்னையில் வரை பார்த்த போது எங்க ஒரு பாட்டு பாடு என முருகா உங்கள் எதிரிலா என்ன தயங்கி,அவர்களுடைய சாரதே சரணம் பாடினேன். ..என் பாடலையும் குறை சொல்லாது மகிழ்ந்து கேட்டு வாழ்த்தினார்.தேவி அக்காவும் மிகவும் பிரியமானவர்கள் .அவர்கள் திருமண வரவேற்பு மறக்கவே இயலாது.
  அன்பிற்கு மறு பெயர் முருகா ..
  நிறைய எழுத தோணுகிறது.அதுவே ஒரு இடுகையை போல ஆகிவிடும்.
  நன்றி கடுகு சார்

  ReplyDelete
 2. மிக்க நன்றி - கடுகு

  ReplyDelete
 3. பத்மா அவர்களுக்கு: ஒரு நீண்ட பின்னூட்டமாக கட்டுரையை அனுப்புங்கள்.அதை எடுத்து பதிவாகப் போட்டு விடுகிறேன். என் பிளாக்கில் இடை இடையே ஒரு நல்ல கட்டுரை வந்தால் தப்பில்லை.

  ReplyDelete
 4. பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் கம்பீர நாதம் இன்னும் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. அவரது ‘ பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா’ முக்கியமாக. - ஜகன்னாதன்

  ReplyDelete
 5. ஆடாது அசங்காது என் மனத்தை ஆட்டி அசக்கியப் பாடல். என்ன ஒரு குரல் வளம். என் போன்ற சங்கீத சூனிய ஞானங்களையும் கவரும். என் கண்ணில் ஆனந்த பாஷ்பம் பொழியும் ஒவ்வொரு முறையும்.

  ReplyDelete
 6. Fantastic article after a long time....as usual super HIT !!!!! (Thaalippu pramatham)


  Kothamalli

  ReplyDelete
 7. Respected Sir,
  Excellent read. Is there any reason for the title "Pithukuli"? If you know the reason, please can you post it?
  While this request is not related to the post, do you have any personal experience with the greatest violinist Kunnakudi? If so, please can you share those experiences also?
  Thanks,
  Appalachari

  ReplyDelete
 8. I have no contacts with Sri Kunnakkudi.
  Reg Pithukuli: Please await another article from a reader.

  ReplyDelete
 9. அவர் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
  -டில்லி பல்லி

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!