July 04, 2010

ஏன் திருமணம் செய்து கொண்டேன்? --பித்துக்குளி முருகதாஸ்

ஏன் திருமணம் செய்து கொண்டேன்?  -
குங்குமம் இதழில் வந்த பழைய கட்டுரை - பேட்டி: கடுகு

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டபித்துக்குளி முருகதாஸ் அவர்கள் டில்லி, ஹரித்வார் முதலிய இடங்களுக்குத் தமது மனைவியுடன்  யாத்திரை செய்தார். கையில் விலை உயர்ந்த காமிராவைக் கொண்டு வந்து தானே படங்கள் எடுத்தார்.
        அதே காவிச் சாட்டை, காவித் தலைத் துணி (தாடி மறுபடியும்) ஆகியவை களுடன்தான் இருந்தார்.

டில்லியில் முருகதாஸ் அவர்கள் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடத்தினார். திருமதி. தேவி முருகதாஸ் அவர்கள் பக்திப் பாடல்களை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டே பாடினார். அவரது முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. இடையே முருகதாஸ் அவர்கள் தன் திருமண விஷயத்தைப் பற்றி விளக்கினார். டேப் செய்யப்பட்ட உரையைக் கீழே தருகிறேன்:
*         *                 *                  *
``உங்களுக்கெல்லாம் தெரியும். பித்துக்குளி முருகதாஸ் அறுபது வயதுக்கு மேலே ரிஷி பாரம்பரியத்தின் ஒரு தத்துவத்தைப் பின்பற்றி திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அந்த மனைவியோடு ரிஷிகேசம் சென்று வந்தான். பிரம்மச்சரியன்  இவன். சின்ன வயசிலேயே பிரம்மச்சாரியாக இருந்தாலும்- நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பது அது ஒரு கடினமான சாதனை.
அதை  1941ம் வருஷம் மே மாதம் 11ம் தேதி அன்றைக்கு சிவானந்த ஆசிரமத்தில் எடுத்துக் கொண்டான். அறுபது வயது வரை எத்தனை விதமான சாதனைகள் செய்யணுமோ செய்தான். லௌகிகமான திருஷ்டி உடையவர்களைப் பற்றி இவனுக்குக் கவலை கிடையாது. லௌகிகமான திருஷ்டி மரத்துப் போன பிற்பாடு உலக ரீதியாக திருமணம் செய்து கொண்டான்.

மனைவியாக ஒரு நல்ல பெண் வாய்த்து விட்டால் மனநிறைவோடு கடமையைச் செய்வான். அந்த ஒரு உயர்ந்த எதிர்நோக்கை வைத்துக் கொண்டு, தேவி ரொம்ப நாளாக அவன் மனத்திலே ஏற்பாடு பண்ணி வைத்து இவனை காட்டிக் கொடுத்தாள். அப்படிப்பட்ட தேவி கொடுத்த மனைவியைக் கொண்டிருக்கிறான். அந்த மனைவி நின்று உங்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்துவாள்.

அவளுக்கு எல்லாரையும் ஆசீர்வாதம் பண்ணுகிற சக்தி இருந்தாலும் நீங்கள் எல்லாரும் இல்லறம் நடத்தி அதை நல்லறமாக நடத்திய பெரிய தாயினங்கள், தகப்பன்மார்கள் இருப்பீர்கள். நீங்கள் இந்தக் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுங்கள். அறிவினாலேயோ, ஆற்றலினாலேயோ நாங்கள் நிச்சயமாகச் சொல்லுவோம், உங்களை விடச் சிறந்தவர்கள். ஆனாலும் பார்வையிலும், பழக்க வழக்கத்திலும் நாங்கள் குழந்தைகள் (மனைவியைப் பார்த்து: ”எழுந்து நில்லு குழந்தை”). தேவி எல்லாருக்கும் சௌமங்கல்யத்தைக் கொடுக்கட்டும். எல்லாருக்கும் சாந்தத்தைக் கொடுக்கட்டும்.

இந்த நாட்டிலே ஒழுங்கான நேர்மையான பணிவோடு கூடி எவன் இல்லறம் நடத்துகிறானோ அவன்தான் இல்லறத்தவன். சந்நியாசி போல வேஷம் போட்டிருந்தாலும் பெரிய ஜிதேந்திரியன் மாதிரி நடவடிக்கை, பாவனைகள் சுற்றுப்புறத்தில் வைத்திருந்தாலும் மனம் கெட்டு விட்டால் போச்சு. அந்த மனம் களங்கமில்லாமல் இல்லறம் நடத்தக் கூடியவர்கள் பெரியவர்கள்- சிறந்தவர்கள்.

உடலும் உடல் உயிரு நிலை பெறுதல் பொருளென உலகம்
ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு  நாடுவதும் மணனாலு சீரடி ”
என்று அருணகிரி கூறுகிறார்.

இப்பேர்ப்பட்ட நல்லறத்தை எல்லாரும் நடத்த வேண்டும். அந்த இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதற்கு வாழ்க்கையை தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். தெய்வீகத்தை வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்.

3 comments:

 1. இல்லறம் எனும் நல்லறத்தை இவர் தேர்ந்து எடுத்ததினால்தான் இவருக்கு அவப்பெயர் அவ்வளவாக நேரவில்லை.

  ReplyDelete
 2. இல்லறமல்லது‍ நல்லறம் அன்று‍
  ஜெ. பாபு

  ReplyDelete
 3. படிக்கும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :