July 18, 2010

கேரக்டர்: மாணிக்கம் -கடுகு

ஜவஹர்லால் நேருவின் வெயிஸ்ட் கோட் போல, சர்ச்சிலின் சுருட்டு போல, சார்லி சாப்ளினின் தொப்பியைப் போல, மேஸ்திரி மாணிக்கத்திற்கு ஒரு இமேஜை அளிப்பது அவர் கையில் இருக்கும் கொல்லுருதான்!
இவர் தங்க ஸ்பூனுடன் பிறக்கவில்லை. இரும்புக் கொல்லுருவுடன் பிறந்தவர்; அதைப் பற்றி மிகவும் பெருமையும் படுபவர். தன் தொழிலின் மேல், தன் கை வித்தையின் மேல் அபார மதிப்பு.
இத்தனைக்கும் வேலையில் அவர் மன்னன் அல்ல. அதில் உள்ள குறைபாடுகளைத்  தன் பேச்சினால் ஈடுகட்டிவிடுவார்!
நல்ல உயரம், `வி' கழுத்து பனியன் மாதிரியான சட்டை கட்டம் போட்ட வேட்டி. பெரிய முண்டாசு. பெரிய மீசை. கழுத்தில் தாயத்து. வாயில் புகையிலை. வலது கையில் கொல்லுரு. இடது கையில் ஒரு பித்தளை (சாப்பாட்டுத்) தூக்கு. பார்த்தவுடனேயே இவர் ஒரு கொல்லத்துக்காரர் என்பது தெரிந்து விடும்.!
"என்னப்பா மாணிக்கம். கிணற்றடியில் ஒரு சின்ன மேடை போடணும். சௌகரியப்பட்டபோது போடு'' என்று சொல்லி விடுங்கள் போதும்; ஆரம்பித்து விடுவார் மாணிக்கம்! "சாமி... இன்னும் ஆறு மாசத்துக்கு ஒழிவு கிடையாது. பொங்கலுக்குத் தொறந்துடணும்னு திட்டம் போட்டுட்டாங்க, பேஸ்மெண்டே வரலை சினிமா தியேட்டர்... மாணிக்கம், வேலை மளமளன்னு ஆவட்டும்'னு சொல்றாரு காண்ட்ராக்டர்.. அவசரப்பட்டா ஆவறதுக்கு எலெக்ட்ரீ வேலையா?...கடகால் போட்டால்,  பச்சைக் குழந்தையைப் பாத்துக்கற மாதிரி கவனிச்சுக்கிட்டு இருக்கணும்!

"இப்போ இஞ்சினீயர் படிப்புப் படிச்சுப்புட்டு இங்கிலீஸ்லே பேசிக்கிட்டே வர்றாங்களே, அவங்களை நம்ப கிட்ட அனுப்புங்க, கட்டட வேலையைப் பத்தி நாலு கேள்வி கேட்கறேன். திணறிப் போவாங்க, திணறி! வுடு...ஸார்.

  ”இந்தத் தொழில்லே படிப்பு எல்லாம் பைசாவுக்குப் பிரயோசனமில்லை. கொல்லுருவாலே தட்டிப்பாத்தே செங்கல் நல்லா சூளை போட்டிருக்குதா, சிமென்ட் செட் ஆயிடுச்சா, கலவை கரீக்டா இருக்குதான்னு சொல்லிவிடுவேன். அப்பப்போ மட்டப்பலகை வெச்சு எதுக்குப் பார்க்கணும்? இஞ்சி டேப் வெச்சு எதுக்கு அளக்கணும்? கண் பார்வையிலேயே தெரியவாண்டாமா? சொன்னா ஆச்சரியமாயிருக்கும். இப்ப மவுண்ட் ரோட்ல கட்டியிருக்கிறாங்களே ’எல்லேசி' கட்டடம். ஒரு `விரக்கடை' சாய்ஞ்சு இருக்குது. அப்படித்தான் கட்டியிருக்காங்க. இன்னா லெவல் பார்த்தாங்க? கடைசி மாடி தம்மாம் அளவு சாய்ஞ்சு இருக்கறது தெரியும். அல்லாம் படிச்சவங்க கட்டின கட்டடம். இந்த அழகில கீது!  இந்த மாணிக்கம் பொறந்தப்பவே, நம்பப் புள்ளை கல்லைக் கட்டிக்ககிட்டுத்தான் காலம் தள்ளப் போவுதுன்னு தெரிஞ்சோ என்னமோ இப்படி மாணிக்கம்னு பேர் வைச்சாங்க.  மாணிக்கக்கல் இல்லீங்க,  செங்கல்!....
    `என்ன சொல்லிககிட்டு இருந்தேன். ஆமாம். இந்த மாணிக்கத்தின் வேலை சுத்தமாக இருக்கும். பார்சாதி கோவில் தெரு முக்குலே வூடு இருக்குதே நான் கட்டினதுதான். குண்டு போட்டால் கூட அசையாது.... கட்டி எத்தினி வருஷம் ஆவுது தெரியுமா? அத்தைக் கட்டறப்போ ஜாம்பஜார் ஏது? பாதி மைதானமாகத்தான் இருந்திச்சு. மைலாப்பூர்லே, சினிமா ஆக்டு கொடுப்பாங்களே லலிதா, பத்மினி, அவங்க வூட்டை நான்தான் கட்டினேன். ஒண்ணுக்கு நாலு மணல். வூடு சும்மா கோட்டை மாதிரி இருக்குது... சாமி. .உன் கிட்டே பணத்தை வாங்கித் துன்னுப்புடலாம். வேலைலே நாணயம் இருக்கணும்.''
பாவம், மாணிக்கம்! நாலடி உயரத்திற்கு இவர் மேடை கட்டினால் அது அரை அடி சாய்ந்து இருக்கும். அதைச் சரி செய்ய வேறு ஒரு கொல்லத்துக்காரர் தேவைப்படுவார்! ஒருக்கால் முன் பிறவியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை மாணிக்கம் தான் கட்டியிருப்பாரோ?

5 comments:

  1. //இத்தனைக்கும் வேலையில் அவர் மன்னன் அல்ல. அதில் உள்ள குறைபாடுகளைத் தன் பேச்சினால் ஈடுகட்டிவிடுவார்//
    கொத்தனார் மட்டுமில்லை இன்றைக்கு‍ பலபேர் இப்படி, தன் வாயை மட்டுமே வைத்துத்தான் தன் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஜெ.பாபு
    கோவை-20
    பி.கு‍
    கொத்தனாருக்கு‍, கொல்லத்துக்காரர் என்ற பெயரும் இருப்பது‍ எனக்கு‍ புது‍ தகவல்

    ReplyDelete
  2. முகமூடிJuly 19, 2010 at 4:23 PM

    //இத்தனைக்கும் வேலையில் அவர் மன்னன் அல்ல. அதில் உள்ள குறைபாடுகளைத் தன் பேச்சினால் ஈடுகட்டிவிடுவார்//
    சுஜாதா பாணியில் சொன்னால் “ஜல்லி அடிப்பது”.

    ReplyDelete
  3. யதிராஜ சம்பத் குமார்July 19, 2010 at 9:43 PM

    தேவனின் "ராஜத்தின் மனோரதம்" நினைவிற்கு வந்து போனது.

    ReplyDelete
  4. நீங்கள் ஒரு குட்டி தேவன்

    ReplyDelete
  5. <<< Altruist said...நீங்கள் ஒரு குட்டி தேவன்>>>
    நீங்கள் எழுதியிருப்பது சந்தோஷம் தருகிறது: ஆனால் நம்ப மறுக்கிறது மனது

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!