July 18, 2010

கோளறு பதிகம் -6: செப்பிள

பாடல் -6
செப்பிள முலைநன் மங்கை ஒருபாகம் ஆக
      விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்த் என்
      உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
      வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான பெண்மை கொண்ட மங்கையான உமையன்னை தன்னில் ஒரு பாகமாக ஆக

விடையேறு செல்வன் அடைவார் - ரிஷபத்தில் ஏறுகின்ற,  செல்வனாம் சிவபெருமான்  அடைபவர்கள் 

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இள மதியமும் கங்கையும்  (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து  நின்றதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம்  போன்ற எந்த நோயும்

வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை  (அவை வராமல் இருக்கும்: அல்லது    வந்தாலும் வாட்டாமல்   நல்லவையாய் இருக்கும்)

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!