July 14, 2010

புள்ளிகள்: ப்ரூக் ஷீல்ட்

ஒரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஹாலிவுட் நடிகை ப்ரூக் ஷீல்ட்  தன் கணவருடன் வந்திருந்தார்.  ப்ளூ லகூன் என்ற படத்தின்   கதாநாயகி அவர்.   இந்தியாவிற்கு வருவதற்குச்  சிலமாதங்களுக்கு முன்பு தான் ரெவ்லான் என்ற பிரபல அழகு சாதன நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராகப் ப்ரூக் ஷீல்ட். ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தார்..
    பத்திரிகை நிருபர்களின் கூட்டம் வழக்கமான ஹாலில் இல்லாமல் விக்யான் பவன் லௌஞ்சிலேயே நடந்தது. வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து பேசுவது போல் நிருபர் கூட்டம் பந்தா இல்லாமல் நடந்தது.. ப்ரூக் ஷீல்ட்டின் கணவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பல நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். சவ சவ கேள்விகள் தான். சிரத்தை இல்லாமல் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த  ப்ரூக் ஷீல்ட்டின் கணவரின் கை விரல்களைப் பார்த்தேன். அவர் எல்லா விரல்களிலும் நெயில் பாலிஷ் போட்டிருந்தார். உடனே ப்ரூக் ஷீல்டின் விரல்களைப் பார்த்தேன் எந்த விரலிலும் நெயில் பாலிஷ் இல்லை.. ஏன் லிப்ஸ்டிக் கூட அவர் போட்டுக் கொள்ளவில்லை.
   உடனே அவரிடம் ஒரு கேள்விக் கேட்டேன். "ஆமாம், நீங்கள் ரெவ்லான் கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடர்.. நீங்கள்  நெயில் பாலிஷோ, லிப்ஸ்டிக்கோ எதுவும் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்..ஆனால் உங்கள் கணவர் எல்லா விரல்களிலும் நெயில் பாலிஷ் பூசிக்கொண்டிருக்கிறாரே!” என்றேன்.
ப்ரூக் ஷீல்ட்சிரித்தபடியே  தன் கணவரின் தோளில் லேசாகக் குத்தி, “விளையாட்டுப் பிள்ளை! ”என்றார் . ( நாட்டி பாய் என்று சொன்னதாக நினைவு!) எல்லாரும்  சிரித்து விட்டர்கள்.
கூட்டம் முடிந்ததும் பிரபல சினிமா நிருபர் அமிதா மல்லிக் என்னிடம் வந்து “தேங்கஸ்.. நாளைக்கு ஸ்டேஸ்மென் பத்திரிகையில் இந்தப் பேட்டியை  உங்களுடைய கேள்வியுடன்தான் ஆரம்பிக்கப் போகிறேன்” என்றார்!  அப்படியே எழுதினார்!

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!