முன் குறிப்பு:
1) எழுத்துருக்கள் என்றால் FONTS என்று பொருள்!
2) இந்தக் கட்டுரை புத்தாண்டு ஸ்பெஷல் என்பதால் வழக்கத்தை விடக் கூடுதலாக போர் அடிக்கக் கூடும்!
கணினியில் எழுத்துகளை அச்சடிக்கத் தேவையானவை: எழுத்துருக்கள். அதாவது ஃபாண்ட்ஸ் ( FONTS). இந்த எழுத்துருக்களை உருவாக்குவது ஒரு வித்தை. நிறைய நகாசு வேலை செய்தால் அழகாக அமையும். எனக்கு ஃபாண்ட்ஸ் மேல் மிகுந்த மோகம் உண்டு. . இவைகளை உருவாக்கும் முறைகளை நானாகவே விழுந்து எழுந்து கற்றுக் கொண்டு நிறைய எழுத்துருக்களை உருவாக்கி இருக்கிறேன். இத்தனைக்கும் நான் கணினி படிப்பு எதுவும் படித்தவனல்ல!
துவக்கம்.
சிறு வய்து முதலே (” ஆரம்பிச்சுட்டார்யா என்று யாரோ சொல்வது என் காதில் விழவில்லை!”) சித்திர எழுத்துகள். CALLIGRAPHY, ஆகியவகளில் ஆர்வம் உண்டு. பத்திரிகைகளில் வரும் கதைத் தலைப்புகளைப் பார்த்து எழுத முயற்சிப்பேன். பேசும் படம் என்ற பத்திரிகையில் பி.எஸ்.ஆர் (!) என்று ஒரு ஆர்டிஸ்ட் மிக அழகாக லெட்டரிங்க் செய்வார். ஓவியர் மணியம் எழுதும் தலைப்புகளும் மிகப் பிரமாதமாக இருக்கும். பொன்னியின் செல்வன், அமரதாரா, பாலும் பாவையும் தொடர்களுக்கு அவர்தான் தலைப்புகள் எழுதியவர்.
கல்லூரியில் என் பக்கத்து சீட்காரனான ஜி. ராமகிருஷ்ணாவின் மாமா தான் பிரபல விளம்பர டிசைனர் ஜி.எச்.ராவ். அந்த காலத்தில் இவர் டிசைன் செய்யாத தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு. லெட்டரிங்க் அபாரமாக இருக்கும். ராமகிருஷ்ணா என்னைப் பல தடவை ராவின் அரண்மனைக்கார ஸ்டூடியோவிற்கு அழைத்து போயிருக்கிறான். அங்கு லெட்டரிங்க் வித்தையை ஓரளவு புரிந்து கொண்டேன்.
இந்த சமயம் :ஸ்பீட்பால் நிப்ஸ் என்று அமெரிக்க கம்பனி, லெட்டரிங்க் புத்தகத்தை வெளியிட்டது. சென்னை இருளப்பன் தெருவில் ஒரு வீட்டில் இருந்த ஸ்டேஷனரி கடையில் மட்டும்தான் கிடைக்கும் என்று கண்டுபிடித்து
அங்கு போனேன். விலை முழுதாக ஐந்து ரூபாய் என்றார்கள். மயக்கமே வந்து விட்டது. கல்கி இரண்டணா விற்ற காலகட்டம்.( என்பது நினைவு). ஒரு மாதிரி கஷ்டப்பட்டு
வாங்கினேன். அதில் பல வித லெட்டரிங்க் நிப்புகளை உபயோகித்து எழுதும் முறைகளை விளக்கி இருந்தார்கள். நிப்புகள் சைனா பஜாரில் இருந்த ’நாதன் அண்ட் கோ’வில் கிடைக்கும் என்று அறிந்து அங்கு போய்க் கேட்டேன்.28 நிப்புகள் கொண்ட பெட்டி 14 ரூபாய் என்றார்கள். இரண்டு மூன்று மாதங்களில் எட்டு நிப்புகள் வாங்கிவிட்டேன். 60 வருஷங்கள் ஆகின்றன். இன்னும் 2,3 நிப்புகள் உள்ளன. அந்த நிப்புகளை உபயோகித்து சித்திர எழுத்துகளை ஓரளவு சுமாராக எழுதக் கற்றுக்கொண்டேன்.
சில வருஷங்கள் கழித்து டில்லிக்கு மாற்றலாகிப் போனேன். அங்கே ஆபீஸ் ரிஜிஸ்டர்களின் பெயர்களை ஸ்பீட்பால் நிப்பால் (ஓரளவு) அழகாக எழுதி ஒட்ட ஆரம்பித்தேன். எதற்கோ ஒரு ரிஜஸ்டர் ஒரு உயர் அதிகாரிக்குச் சென்றபோது அவர் என் லெட்டரிங்கைப் பார்த்து. ’யார் எழுதியது?’ என்று கேட்டு, என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் ஒரு துர்க்கா பூஜை கமிட்டியின் தலைவர். பூஜை விழாவைப் பற்றி நலைந்து போஸ்டர் எழுதித் தரச் சொன்னார். எழுதித் தந்தேன்.
சில மாதங்கள் கழித்து அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.
“தபால் தலைகளை டிசைன் பண்ண ஒருத்தரை நியமிக்கப் போகிறோம். நீங்கள் அப்ளை பண்ணுங்கள்” என்றார். (தேர்வுக் கமிட்டியில் அவர் ஒரு உறுப்பினர்.) மனு செய்தேன். ஆனல் எனக்கு வேலை கிடைக்கவில்லை! மற்றொரு உயர் அதிகாரியின் பெண் கலியாணத்தைப் போட்டோ எடுத்தவரை நியமித்து விட்டார்கள்!
தபால் தலை டிசைனராக ஆக வேண்டும் அன்று என் தலையில் பிரமன் லெட்டரிங்க் பண்ணவில்லை போலும்!
பல வருடங்கள் அரசு வேலையில் இருந்துவிட்டு ஒரு நாள் வேலையை உதறிவிட்டு, ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நான் கற்றுக் கொண்டவை ஏராளம். (அவற்றையெல்லாம் பின்னால் பிட்டு பிட்டுக் கொடுக்கிறேன்). அந்த விளம்பரக் கம்பனியில் பல லெட்டரிங்க் ஓவியர்கள் இருந்தார்கள். அற்புதமான கலைஞர்கள். அபாரத் திறமைசாலிகள். திரு வரதன், திரு ஏகாம்பரம் என்று இரண்டு மேதைகள் லெட்டரிங்க் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். விரல்களின் லாகவம் என்னை வியக்கச் செய்தன.. மறுபடியும் என்னை லெட்டரிங்க் பைத்தியம் பிடித்துக்கொண்டது
(சரி. இந்த கதையெல்லாம் எதற்கு? ஃபான்ட்ஸ் பற்றி ஆரம்பித்துவிட்டு ஆட்டோக்காரர் மாதிரி எங்கெங்கோ போய்க் கொண்டே இருக்கிறாயே என்று நீங்கள் கேட்பதற்குமுன் என் மனசாட்சியே கேட்டுவிட்டது!)
கணினி வந்த பிறகு ஆயிரக்கணக்கான விதங்களில் ஸ்பீட்பால் நிப் மாதிரி பிரஷ்களை ஃபோட்டோஷாப்பில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. நிறைய எழுதி பழகினேன்.
இந்த சமயம் 1992-ல் இந்திய அரசின் அங்கமான புனே கம்ப்யூட்டர் சென்டர் (சிடேக்) ஆறு எழுத்துருக்களுடன்..(பாரதி, கம்பன், இளங்கோ, கபிலன் முதலியன.) தமிழ் மென்பொருளை உருவாக்கியது. டில்லியில் பயிலரங்கம் நடத்தியது ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்குச் சென்றேன். எல்லாருக்கும் இலவசமாக ஹிந்தி மென்பொருளைக் கொடுத்தார்கள். ”ஹிந்திக்குப் பதில் எனக்கு தமிழ் மென்பொருள் கொடுங்கள்” என்று கேட்டேன்..” ’தமிழ் மென்பொருள் விலைக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்’ என்று அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார் புனே கம்ப்யூட்டர் சென்டர் அதிகாரி.
ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு டில்லி டிரேட் ஃபேர் (TRADE FAIR) வந்தது. அதில் ‘சிடேக்: ஸ்டால் வைத்திருந்தது. தமிழ் மென்பொருளை வாங்கிவிடுவது என்ற தீர்மானத்துடன் போனேன். என் மனைவியும் வந்திருந்தாள். சிடேக் ஸ்டாலில் அந்த அதிகாரி இருந்தார்.
என்னை மீண்டும் அறிமுகப்படுத்திகொண்டு ( பிரபல எழுத்தாளர் என்பது போன்ற ரீல்கள்!) ”தமிழ் மென்பொருளை கொஞ்சம் தள்ளுபடியில் தர முடியுமா”என்று கேட்டேன். என் மனைவி கமலா. “பாவம். இவருக்கு தமிழ் ஃபாண்ட்ஸ் மேல் ரொம்ப ஆர்வம். ‘விலை 2500 ரூபாய் அதிகமாக இருக்கிறதே’ என்று யோசிக்கிறார்”என்றாள். விட்டால் “ தாயில்லாப் பிள்ளை” என்று சென்டிமெண்ட்டால் கூடவளைத்திருப்பாள்!
அவர் சட்டென்று “சரி. என்ன விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
“‘வித் மை காம்ப்ளிமெண்ட்ஸ்’ என்று சொல்லிக் கொடுங்கள். வாங்கி கொள்கிறேன்” என்றேன்.
அவர் சிரித்தபடியே ”சரி. 500 ரூபாய் கொடுங்கள். என் பசங்க (‘மை பாய்ஸ்’) ஐந்து வருஷம் கஷ்டப்பபட்டு உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா?”- என்று கேட்டு அவர் என்னை சென்டிமெண்ட்டால் கவிழ்த்து விட்டார்!
சிடேக்கின் தமிழ் மென்பொருளை முதலாவதாக வாங்கியவன் நான்தான்!.
முதன் முதலில் கணினியின் திரையில் தமிழ் எழுத்துகள் மலர்வதை பார்த்தபோது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழ் எழுத்துருக்களை உருவாக்க வேண்டும் எனும் ஆர்வம் என்னைப் பிடித்துக் கொண்டது.
* * * * *
அதற்கு ஃபான்டோகிராஃபர் என்ற மென்பொருள் தேவைப்பட்டது.. கரோல்பாக்கில் ஒருவரிடம் இருப்பது தற்செயலாகத் தெரிந்தது. அதை உபயோகிக்கும் முறை தனக்குத் தெரியாது என்று சொன்னார், அதைக் கடன் வாங்கி வந்தேன். சுமார் பத்து நாள் போராடி ஒரு எழுத்துருவை உருவாக்கினேன். சுமாராக வந்தது. திருப்தி இல்லை. அந்த மென்பொருளுக்கான விளக்கப் புத்தகம் - போட்டோ காபி செய்யப்பட்டது - 600 ரூபாய்க்கு கிடைத்தது. அதன் பிறகு 3,4 மாதம் உழைத்து ஃபான்ட்ஸ்கள் பலவற்றைச் சிறப்பாக உருவாக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டேன்,
ட்ரூ டைப் ஃபாண்ட்ஸ் ஸ்பெசிஃபிசேஷன் எனறு மைக்ரோசாஃப்ட்டின் 400 பக்க இலவச டாக்குமெண்ட்டைக் கஷ்டப்பட்டுப் படித்தேன். 90 சத விகிதம் புரியவில்லை!
இந்த சமயத்தில் ஆனந்த விகடனில் பல புதிய ஹெட்லைன் எழுத்துருக்கள் உபயோகிக்க ஆரம்பித்திருப்பதைப் பார்த்தேன்.. அவற்றில் பல குறைபாடுகள் இருந்தன. எழுத்துகளின் மேற்புள்ளிகள் பல சமயம் எழுத்துகளை விட்டு வெளியே போயிருந்தன. சாய்வு எழுத்துகளில் அடுத்த எழுத்தின் மேலேயே புள்ளிகள் போய்விட்டன.
விடுமுறையில் சென்னைக்கு வந்த போது, “எழுத்துகளை புதிதாக உருவாக்கித் தருகிறேன். நான் கேரண்டி.” என்று விகடனுக்குக் கடிதம் எழுதினேன். ( “என்ன தன்னம்பிக்கை!”)
“வந்து சந்திக்க முடியுமா?” என்று பதில் வந்தது.. போனேன். போன பிறகு தான் தெரிந்தது அந்த ஃபா ன்ட்ஸை நேரடியாக அச்சடிக்க முடியாது. ஸ்க்ரீனில் எல்லா எழுத்துகளும் தெரியும். ஒவ்வொரு எழுத்தாகத் தேடி எடுத்து கோர்க்க வேண்டும். அரை நிமிஷத்தில் அடிக்கக்கூடிய மேட்டரை இப்படி கம்போஸ் செய்ய 10, 15 நிமிஷம் ஆகிவிடும்.. மேலும் பல எழுத்துகள் அதில் இல்லவே இல்லை. எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை: அவர்கள் 50, 55 ஆயிரம் கொடுத்து வாங்கிய பேஜ்மேக்கர் இந்த எழுத்துருக்களை ஏற்றுக் கொள்ளவில்லை!. அவர்களிடமிருந்த எழுத்துருக்களை சற்று பெரிய அளவில் அச்சடித்து வாங்கிக் கொண்டேன். கிட்டத் தட்ட எழுபது எண்பது பக்கங்கள். விடுபட்ட ஐம்பது அறுபது எழுத்துக்களை நானே கணினியில் வரைந்து கொண்டேன். பிறகு ஒவ்வொரு ஃபான்டாக உருவாக்கினேன் அவை பேஜ்மேக்கர் ஏற்கும் விதத்திலும் செய்தேன். மூன்று ஃபாண்ட்ஸ்களை (வாசன், மதன், குஷ்பு!) துல்லியமாகத் தயாரித்து கொடுத்தேன். அவை நன்றாக இருந்ததுடன் பேஜ்மேக்கரிலும் வே;லை செய்தன. விகடன் டி.டி.பி. டிபார்ட்மென்டில் இருந்தவர்கள் எல்லோரும் என்னைக் கட்டிப்பிடிக்காத குறைதான்.“ஐயோ பிரமாதமாக வேலை செய்கிறது சார். ஸூப்பர்” என்று சொல்லிக் கை குலுக்கினார்கள். “உங்களை ஜாயின்ட் எம். டி. பார்க்கவேண்டுமென்று சொன்னார்” என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.. அவரும் பாராட்டினார். மற்ற ஃபான்ட்ஸ்களையும் விரைவில் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு விடை பெற்றேன்.
சில நாட்கள் கழித்து விகடனிலிருந்து ஒரு பெரிய தொகைக்கு செக் வந்தது. தொகை எவ்வளவு என்று சொன்னால் திருஷ்டி பட்டுவிடும். அதற்குப் பிறகு மேலும் ஆறு ஃபான்ட்ஸ்களை செய்து கொடுத்தேன். அதற்கும் செக் வந்தது. சில வாரங்கள் கழித்து, பத்து ஃபாண்ட்ஸ்களை செய்து “ இவை என்னுடைய அன்பளிப்பு. பணம் அனுப்பாதீர்கள்” என்று சொல்லிக் கொடுத்தேன். நான் செய்த ஃபான்ட்ஸ் சிலவற்றை இங்குள்ள படத்தில் காணலாம்.) .
இவ்வளவு பணம் செலவு செய்து விகடன் வாங்கிய ஃபான்ட்ஸ்கள் சில மாதங்களிலேயே அங்கிங்கெனாதபடி தமிழ் நாடு பூரா பரவி விட்டது
என் எழுத்துருக்களில் ஒரு ரகசிய அடையாளம் வைத்திருக்கிறேன். இதை நான் சொல்லிக்கொள்ளலாமே தவிர வேறெதுவும் என்னால் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட எழுத்தில் இருந்த சின்ன குறையை சரி செய்வதற்கு மறந்து போய்விட்டது.. என் கண்ணில் மட்டும் படக்கூடிய குறையுடன்தான் அதைப் பலர் இன்று உபயோகப்படுத்துகிறார்கள். கல்கி இதழுக்கும் ஆறுஃபான்ட்ஸ் செய்து தந்தேன். மதிப்பிற்குரிய கோபுலு லெட்டரிங்க் பண்ணித் தந்தார். கோபுலு என்ற ஃபான்டையும் செய்தேன்.
அழகி
இதன் பிறகு 2002-ல் சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற கணினி நிபுணர் ஒரு தமிழ் மென்பொருளை உருவாக்க முனைந்தார். அவருக்கு தமிழ் ஃபாண்ட்ஸ் செய்து கொடுப்பவர்கள் கிடைக்கவில்லை. பலரை அணுகிப் பார்த்தார் .பலனில்லை. இந்த சமயம் அவருடைய மென்பொருளின் முயற்சியைப் பற்றி இன்டர்நெட்டில் பார்த்தேன். அவருக்கு ஃபான்ட்ஸ் தேவையாயிருப்பின் செய்து தருகிறேன் என்று எழுதினேன். (அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன்.) டிஸ்கி டைப் எழுத்துருக்கள் கிடைக்காமல் அவதிப்படுவதாக எழுதினார். அந்த சமயம் ஃபான்டோகிராஃபர் என்ற மென்போருளின் புதிய வர்ஷன் வெளி வந்தது. விஸ்வநாதனுக்கு உதவுகிறேன் என்று சாக்குச் சொல்லிவிட்டு அந்த மென்பொருளை பதினேழாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். பதினைந்து நாட்களில்ஒரு டி. டி. எஃப் .(TTF FONT) எழுத்துருவை, விஸ்வநாதன் சொன்னபடியெல்லாம் மாற்றி மாற்றி தயார் பண்ணினேன், சுமார் இருபது தடவைக்குப் பிறகு ஓ. கே. ஆனது. அழகி என்ற பெயரில் உருவாக்கிய அபாரமான மென்பொருளில் அதைச் சேர்த்து விஸ்வநாதன் விற்பனைக்கு விட்டார். (அழகி பற்றி மேலும் அறிய
www.azhagi.com தளத்திற்குச் செல்லவும்)
சென்ற வாரம் விஸ்வநாதன் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை எனக்கு மெயிலில் அனுப்பினார். அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் படிவங்களை பூர்த்தி
செய்யலாம் என்று அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது என்றும் தமிழில் இரண்டே இரண்டு ஃபான்ட்களை அங்கீகரித்து இருக்கிறார்கள் என்றும் எழுதி இருந்தார். அந்த இரண்டு ஃபாண்ட்களில். ஒன்று இந்திய அரசின் ’சிடேக்’ சென்டர் உருவாக்கிய வள்ளுவர் ஃபான்ட். இரண்டாவது: ’அழகி’யின் சாய் இந்திரா ஃபான்ட் என்றும் தெரிவித்தார். சாய் இந்திரா எழுத்துரு (SAIINDIRA.TTF ) நான் உருவாக்கியது என்பதை கர்வத்துடனும் பெருமிதத்துடனும் தெரிவிக்க விரும்புகிறேன்.
சுமார் 50 ஆண்டு காதலுக்குக் கிடைத்த வெற்றி!
டிஸ்கி ஃபாண்ட் தவிர யூனிகோட் எழுத்துருக்களையும் உருவாக்க முனைந்தேன் ( விண்டோஸில் உள்ள லதா ஒரு . யூனிகோட் எழுத்துரு ) வோல்ட் என்ற மென் பொருளை உபயோகித்துத் தான் யூனிகோட் எழுத்துருவை உருவாக்க முடியும். இந்த VOLT மென்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன், இன்டர்நெட்டில் பலர் என் சந்தேகங்களை விளக்கினார்கள். துபாயிலிருந்த உமர் என்பவர் எனக்கு மிகவும் ஊக்கமளித்து என் முதல் யூனிகோட் ஃபான்ட்டை (யூனி-வைகை) உருவாக்க உதவினார். (வருத்தத்திற்குரிய விஷயம் உமர் சமீபத்தில் நோய் வாய்ப்பட்டு காலமாகிவிட்டார்.) அவர் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கே பெரிய இழப்பு..
தஞ்சை சரஸ்வதி மஹாலுக்காக கி. மு. நான்காம் நூற்றாண்டு கல்வெட்டெழுத்துக்களையும், கி.வா. ஜ. அவர்களின் புதல்விக்காக திருப்புகழ் ஸ்வர-சாகித்தியப் புத்தகம் அச்சடிக்க ’முருகா’ என்ற விசேஷ ஸ்வர ஃபான்ட்டைச் செய்து தந்தேன்.
சமீபத்தில் சிவகாமி, குந்தவி, நந்தினி, வந்தியத்தேவன், புலிகேசி, ராஜராஜன் என்ற பல எழுத்துருக்களைச் சேர்த்து ஆனந்தி என்ற தமிழ் மென்பொருளை நானே உருவாக்கினேன்.இந்த மென்பொருளின் சிறப்பை பிறகு எப்போதாவது பார்க்கலாம்.
டிஸ்கி வகை எழுத்துருக்களில் காவேரி, தாமிரபரணி, பாலார், வைகை, பொன்னி பொருனை என்ற பல நதிகளின் பெயர்களில் உருவாக்கினேன். அனைத்தும் இலவசம்.
இவை யாவும் தமிழ்த் தாயின் பாதங்களில் நான் வைத்த மலர்கள்.
என் தயாரிப்புகள் அழகில்லாமல் இருக்கலாம்; மணமில்லாமல் இருக்கலாம். எனினும் அவைகள் மலர்களே!
நான் ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்படுவதைவிட எழுத்துக்களை உருவாக்கியவன் என்று சொல்லி ஒரு படி அதிகமாகவே பெருமைப்படலாம் என்று நினைக்கிறேன்.