May 20, 2010

’நகைச்சுவை எழுதுவது எப்படி. -- கடுகு

முன் குறிப்பு:
எழுதுவது எப்படி என்று ஒரு பெரிய புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் பல வருஷங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 400-க்கும் அதிகமான பக்கங்கள் நகைச்சுவை எழுத்தாளர் மகரம் அதன் தொகுப்பாளர். ’நகைச்சுவை எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதை இங்கு தருகிறேன். ’நகைச்சுவைக்கு நீ என்ன அதாரிட்டியா? உன்னை எழுதும்படி யார் சொன்னது என்று யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக இந்த முன்னுரை! !)

************************* 
இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சத விகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சத விகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து, ரசித்து, முயன்று தனது திறமையை அதிகரித்துக் கொள்ளமுடியும். இப்படி நான் எழுதிவிட்டதால் கட்டுரையைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள்! உங்களுக்கு இயற்கையாக அந்தத் திறமை இல்லை என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.
     நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு, நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் இருக்காது, இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டுரையில் வரும் கதா பாத்திரங்கள்,அவர்களின் குண பேதங்கள், பெயர்கள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டுமொத்தமாக் நகைச்சுவை உணர்வை மனதில் எழுப்ப இவை உதவும்
பெரும்பாலான நகைச்சுவை கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் வீட்டில் அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாக அவர்களால்; ஒருபடி அதிகமாக ரசிக்க முடியும்.

“காங்கோ நாட்டில் லூஷிம்போவில் கிஷிமுஷிக்கா என்பவன்...” என்று நகைச்சுவைக் கதையை ஆரம்பித்தால் தோல்விதான். இந்தக் கதையில் சொல்ல வந்த கருத்தை,” திருவல்லிக்கேணியில் சில பல பெருச்சாளிகள், எலிகள், சில ஆயிரம் கொசுக்கள் வாழும் சந்து வீட்டில், பல வருடங்களாக இருந்துவரும் மிஸ்டர் பூங்காவனம்...” என்று ஆரம்பித்துப் பாருங்கள். படிப்பவருக்கு கதையில் ஒரு அன்னியோன்னியம் ஏற்படும்.

இங்கு ஒரு விஷயம். நகைச்சுவைக் கதை, கட்டுரைகளில் கததா பாத்திரங்களின் பெயர்களும் முக்கியம். கிருஷ்ணமூர்த்தி, இளம்கார்வண்ணன், அருள்மொழி, சுப்பிரமணியன் என்றெல்லாம் பெயர் வைக்காதீர்கள். பெயர்களும் ஒரு நகைச்சுவை உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் வைக்கப்படவேண்டும்.

எழுதுவது மிகவும் எளிது. ஆனால் எழுதத் தொடங்குவதற்கு முன்பு நிறைய மனதில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறையை யோசனை செய்து மனதிலேயே கதையை உருவாக்குகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

பலருக்கு இன்று எழுதும் ஆர்வம் இருக்கிறது. (ஆர்வத்தையே திறமை என்று சிலர் தாங்களாகவே கருதிக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி ஏமாற்றமடைகிறார்கள்,)

ஆகவே நகைச்சுவை எழுதுமுன், நிறைய யோசியுங்கள். நிறையப் படியுங்கள். படிக்கப் படிக்கத்தான் சிந்தனை விரிவடையும். கற்பனை வளம் பெறும். மூளைக்கு உரம் கூடும்.

ஒரு நகைச்சுவை கதையைப் படித்து முடித்த பிறகு ஒன்றிரண்டு நாள் கழித்து அதே கதையை நீங்கள் திரும்ப எழுத முயற்சி செய்து பாருங்கள். கதையை எழுதி விடுவீர்கள். ஆனால் அதில் நகைச்சுவை முழுதுமாக இடம் பெற்றிருக்காது.

கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையை விட்ட அதிகம் என்று சொல்லலாம் - முக்கியமானது நடை. கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், உரையாடல்களை சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் எல்லாமே முக்கியமானவை.

அடுத்து, நகைச்சுவை கதையோ, கட்டுரையோ தனித்து நிற்கும் வகையில் எழுதப்படவேண்டும். அதாவது யாருடைய நடையையோ கதையையோ குண விசேஷத்தையோ மனதில் வைத்துக்கோண்டு அதைக் கேலி செய்யும் பாணியில் , ’சடையர்’, பாரடி’ போன்று எழுதுவதை ஆரம்ப எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் எதை மனதில் வைத்துக்கொண்டு எழுதி இருக்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆகவே அவர்கள் ரசிப்பு முழுமையாக இருக்காது,

உதாரணமாக, சோ சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். ஆனால் அவர் சில வருஷங்களுக்கு முன்பு எழுதிய அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளை இப்போது படியுங்கள். சிலவற்றை முன்பு ரசித்த அளவு இப்போது ரசிக்க முடியாது. காரணம் அன்றைய அரசியல் நிலைமை அப்படியே நம் நினைவில இருக்காதே.!

தேவன் எழுதிய ‘ராஜத்தின் மனோரதம்’ போன்றவைகளைப் படியுங்கள். கல்கி எழுதிய ‘ஏட்டிக்குப் போட்டி’ முதலிய கட்டுரைகளைப் படியுங்கள்/ நாற்பது ஐம்பது வருஷத்திற்கு முன்பு எழுதப்பட்டவையாக இருப்பினும் இன்றும் ஜீவனுடனும் நகைச்சுவை சிறப்புடனும் அவை உள்ளன.

அதற்காகச் சடையர் போன்றவைகளை எழுத முயற்சிக்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆரம்ப எழுத்தாளர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டால் ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும்.. பின்னால் ஒரு தொகுப்பாக வெளியிட்டாலும் வெற்றிகரமாக அமைவதும் கடினம்.

நகைச்சுவை எழுதும்போது சிலேடைகளை பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைக் கூறமுடியும்.அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

அதீதமும் நகைச்சுவை முக்கிய அம்சம்.. இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தவனைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது என்று சிறுவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம். ஆனால் நம் எல்லாருடைய நகைச்சுவை உணர்வும் இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. மற்றவன், சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படுவதை, பைத்தியக்கார முயற்சியில் ஈடுபட்டு நஷ்டப்படுவதை அல்லது கஷ்டப்படுவதை, வம்பில் மாட்டிக்கொண்டு அசடு வழிவதை - இப்படி பலவற்றை நகைச்சுவையாக ரசித்து மகிழ்கிறோம். ஆகவே கதை எழுதும்போது அப்படிப்பட்ட கேரக்டரை உருவாக்குங்கள். வாசகர் அசடு வழிகிற மாதிரி எழுதிவிட்டால், உங்கள் கதையை யாரும் சீந்த மாட்டார்கள்! இதனால்தான் நான் பல நகைச்சுவை கட்டுரைகளில் ‘என் அருமை மனைவி’ கமலாவையும் என்னையும் கதாபாத்திரங்களகக் கொண்டு வந்துள்ளேன். கமலா என்னைத் திடிட்டினால் படிப்பவருக்கு சந்தோஷம்.( கமலா என்னைதானே திட்டுகிறாள். அவரை இல்லையே! வாசகருடைய மனைவி அவரைத் திட்டவில்லையே! கமலாவின் அபத்தமான யோசனைகளை ரசிக்கிறார்கள். அவருடைய மனைவி இதைவிட அபத்தமான யோனையை நிஜமாகவே சொல்பவளாக இருக்கலாம். இருந்தாலும் வாசகர் அதைச் சௌகரியமாக மறந்து விட்டு கமலாவின் அபத்தங்களைப் படித்து புன்னகை புரிவார்!

சீதாப் பாட்டியின் வசவுகளை அப்புசாமி வாங்கிக் கட்டிக்கொள்வதையும், அவர் ‘அரைபிளேடி’டம் அகப்பபட்டுக் கொள்வதையும் ரசிப்பதற்குக் காரணம் ’வாழைப்பழ தோல்’ மனப்பான்மைதான்! இந்த மனப்பானமையைப் புரிந்துகொண்டு கதையை அமையுங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சசி என்பவர் எழுதிய நகைச்சுவை கதைகளைப் படித்து இருப்பீர்கள். ஒரு பக்கக் கதையாகத்தான் இருக்கும். கடைசி பாராவில் திடீர் திருப்பம் இருக்கும். அதுவே கதைக்கு உயிராகவும் நகைச்சுவை பரிமாணமாகவும் அமையும். இந்த மாதிரி கதைகள் மிகவும் நீளமாக அமைந்துவிடக் கூடாது. கதையின் முடிவில்தான் ஜீவன் இருப்பதால் முடிவு வரை வாசகர் படிக்கும் வகையில் எழுதப்படவேண்டும் வளர்த்திகொண்டேபோனால் பாதியில் படிப்பதை நிறுத்திவிடுவார். நகைச்சுவை வரப்போகிறது வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் படித்துக் கொண்டே போவார்?   ரப்பர் பேண்டை ஓரளவுதான் இழுக்கலாம். அதிகமாக இழுத்தால் அறுந்துவிடும். அது இந்த மாதிரிக் கதைகளுக்கும் பொருந்தும்.

“ஹஹ்ஹ்ஹா’ என்று சிரிப்பு எற்படுதுவதுதான் நகைச்சுவை கதை என்று கருதாதீர்கள். அந்த மாதிரி முயற்சிகளும் வெற்றி பெறுவது கடினம். படிக்கும் வாசகார்கள் மனதில் லேசான நகைச்சுவை உணர்வைத் தோற்றுவிக்க வேண்டும்.

ஆர். கே. நாரயணனின் புத்தகங்களைப் படியுங்கள். கதைக்கு சுருதி கூட்டுவதுபோல் நகைச்சுவை சேர்ந்து இருப்பதைக் கவனியுங்கள். தனியாக ஜோக்குகள் இருக்காது. கோணங்கிதனங்கள், அபத்தங்கள் இருக்காது, இருந்தாலும் கதை நெடுக சேனல் மியூசிக்கைப்போல மெலிதான நகைச்சுவை ஆரம்ப முதல் நெடுக இருந்து கொண்டே இருக்கும். இது அவருக்கெனக் கை வந்த கலை. அவரது நடையே அவருக்கு வரப்பிரசாதம்.

ஓவியர் தாணுவின் கோடுகள் எப்படி ஒரு நகைச்சுவை உணர்வை தோற்றுவிக்கின்றன என்பதைக் கவனித்திருப்பீர்கள். அவர் சீரியசாகப் போட்டாலும் நகைச்சுவை பாணியில் போட்டமாதிரிதான் இருக்கும். (ஆகவேதான் அவர் சீரியஸாகப் போடுவதில்லை.) இந்த மாதிரிதான், எழுத்து நடையிலும் நகைச்சுவை அமையவேண்டும் மேலும் சரளமாக இருக்கவேண்டும். இது நகைச்சுவை கதை என்பது ஆரம்ப வரிகளிலேயே வாசகர் மனதில் பதிந்து விடவேண்டும். இதனால் ஒரு லாபம் உண்டு, இந்த எண்ணத்துடன் படிக்கப்போகும்போது எல்லாமே அவர்களுக்கு நகைச்சுவையாகத் தோன்றும். இது ஒரு விதமான ‘பிரெயின் வாஷிங்’தான்!

நகைச்சுவை கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம்.

எப்படி இருப்பினும் அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும் ( இந்த இடத்தில் கொஞ்சம் சுய பெருமை: கேரக்டர் என்ற தலைப்பில் சுமார் 50 பேனா சித்திரங்களை, ஆசிரியர் ‘சாவி’யைப் பின்பற்றி எழுதினேன். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை கட்டுரைகளாகவே அமைந்து பராட்டு பெற்றன. இந்த கேரக்டர்களோடு இன்னும் சில கதா பாத்திரங்களைச் சேர்த்து நாவல் கூட எழுதலாம்.


இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு நகைச்சுவை எழுதுவது நம்மால் ஆகாத காரியம் என்று எண்ணிவிடாதீர்கள். எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை உசுப்பி எழுப்பி, சில்லறை விதிகளை தெரிந்தோ தெரியாமலேயோ பின்பற்றி எழுதுங்கள். வெற்றி பெறுவீர்கள்.


இந்தச் சமயம், ஒரு உண்மையைக் கூறவேண்டும். இன்று தமிழ்நாட்டில் நகைச்சுவைக் கதை,  கட்டுரை எழுதுபவர்கள் அபூர்வமாகிவிட்டார்கள். ( அதனால்தான் இந்த கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது வேறு விஷயம்.) ஆகவே நகைச்சுவை துறையில் புகுந்தால் -- அதிகம் போட்டியில்லாத இந்த துறையில் புகுந்தால் - விரைவில் பிரபலம் அடையவும் வாய்ப்பு உண்டு.

நகைச்சுவை எழுதுவது பெரிய அசுர வித்தை அல்ல.  ஆனால் நகைச்சுவை எழுதுவது எப்படி என்று எழுதுவது சாதாரணமான விஷயமில்லை. அதற்கு இந்த கட்டுரையே சாட்சி. ஆர்வத்துடன் முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுவீர்கள்!

15 comments:

  1. நல்ல கட்டுரை சார்.
    //ஆர்வத்தையே திறமை என்று சிலர் தாங்களாகவே கருதிக்கொண்டு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி ஏமாற்றமடைகிறார்கள்//
    மேலே சொன்னவற்றை மிகவும் ரசித்தேன். தமிழின் நகைச்சுவை எழுத்து ஜாம்பவான்களான கல்கி, தேவன், சுஜாதா, ஜ.ரா.சு.,சாவி, ரா.கி.ர., ஆகியோரின் எழுத்துகளில் இருந்து மருந்து போல சில மேற்கோள்கள் கொடுத்திருந்தால்....இன்னும் மெருகு கூடி இருக்கும்.

    ReplyDelete
  2. உண்மைதான். முப்பது வருஷத்திற்கு முன்பு எனக்குத் தோன்றவில்லை.-கடுகு

    ReplyDelete
  3. இந்த புத்தகத்தை தேடி நானும், திரு சுஜாதா தேசிகனும் அலையாத இடம் இல்லை. தற்போது எங்கும் கிடைக்கவில்லை. உங்களிடம் இருக்கிறதா. எனக்கு பாகம் 4 & 5 தேவை. இருந்தால் ஒரு காப்பி செய்து கொண்டு தருகிறேன்.
    நன்றி
    நடராஜன்

    ReplyDelete
  4. மாலி நடராஜன் said...
    இந்த புத்தகத்தை -------. தற்போது எங்கும் கிடைக்கவில்லை. எனக்கு பாகம் 4 & 5 தேவை. இருந்தால் ஒரு காப்பி செய்து கொண்டு தருகிறேன்...>>>
    என்னிடம் இல்லை. மகரம் அவர்களின் பிள்ளையிடமே இல்லையாம்..மகரம் அவர்கள்
    குமுதம் லைப்ரரிக்குக் கட்டாயம் காபி கொடுத்து இருப்பார். அங்கு இருக்கலாம்.

    ReplyDelete
  5. கட்டுரையில் நகைச்சுவையை தேட வைத்து விட்டீர்களே! என்னைப் பொருத்தவரை, இதெல்லாம் தானே வர(ம்)வேண்டும்!புத்தகத்தில் படித்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா! - ஜகன்னாதன்.

    ReplyDelete
  6. << Jagannathan said...
    கட்டுரையில் நகைச்சுவையை தேட வைத்து விட்டீர்களே!>>>>
    நகைச்சுவையை பற்றி சீரியஸ் கட்டுரை. இப்படிதான் இருக்கும்
    வேறு வழியில்லை.

    ReplyDelete
  7. சார், கட்டுரை அபாரம்! ரா.கி.ரா-வின் எ.க.எ. போன்று எ.ந.க.எ. என்று நீங்கள் ஒரு புத்தகமே போடலாம்! நிற்க. மறைந்த மகரம் அவர்களும், அவரின் புதல்வர் மார்க்கபந்து அவர்களும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். மகரம் சொன்ன ஒரு தமாஷை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை போன்ற காந்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல எழுத்தாளர்களிடம் சிறுகதை கேட்டு ஒரு புத்தகமாகத் தொகுத்தார் மகரம். காந்தி கொள்கைகளுக்குப் பொருத்தமாக, மறைந்த எழுத்தாளர்கள் சிலர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த சிறுகதைகளையும் இந்தத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டார். புதிதாகக் கதை எழுதித் தந்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்.

    புத்தகம் தயாரானதும், மரியாதை நிமித்தமாக ஒரு பிரதியுடன் சென்று ராஜாஜியைச் சந்தித்தார் மகரம். ராஜாஜி புத்தகத்தை வாங்கி, முதல் சில பக்கங்களைப் புரட்டி, முதல் கதையை மட்டும் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார். "ஐயா! உங்கள் கதை வந்திருக்கிறதே... பார்க்கவில்லையா?" என்று மகரம் கேட்க, "என் கதையா? இதில் இல்லையே?" என்று சொல்லியிருக்கிறார் ராஜாஜி. அவருக்குத் தன் கதையைத்தான் முதல் கதையாக வெளியிட்டிருப்பார்கள் என்கிற எண்ணம்.

    மகரம் அந்தப் புத்தகத்தில் ஐந்தாவதாகவோ, ஆறாவதாகவோ வெளியாகியிருந்த ராஜாஜியின் கதைப் பக்கத்தைப் பிரித்துக் காண்பிக்க, "நடுவுல போட்டுட்டீங்களா என் கதையை?" என்று ஒருவித சலிப்புக் குரலில் கேட்டிருக்கிறார் ராஜாஜி.

    அதற்கு விளக்கம் சொல்ல நினைத்து, "ஐயா! மறைந்த எழுத்தாளர்கள் கதைகளையெல்லாம் முன்னால போட்டுட்டோம். அடுத்ததா நீங்கதான்..!" என்றாராம் மகரம்.

    ராஜாஜி குறுகுறுவெனப் பார்க்க, தான் சொன்னதில் உள்ள அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஏதோ சொல்லிச் சமாளித்ததாகச் சொன்னார் மகரம்.

    பின்னூட்டம் நீண்டுவிட்டதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. Raviprakash avarkaLukku mikka naNri. I welcomoe longer comments. They will add value to my insipid articles!!!

    ReplyDelete
  9. உங்கள் எழுத்தைப் பாராட்டுவதற்கு எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை.
    அதனால் என் வியப்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. <<< பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    உங்களுக்கு மிக்க நன்றி.
    ,

    ReplyDelete
  11. TLS Said: Comedy writing is not just like that of "rolling the Pappad" (Appalam Iduvadhu). Sense of humour and child mentality are necessary while observing the things heppening around us. While writing and reading of comedy stories/writings, we should not see the logic in it (as if we have no brains like many Indians - just for fun, ok!). Appreciating/reading/writing comedy itself is a special quality. Thank God, Tamils are having humour sense and taking every thing in lighter vein. T.L. Subramaniam, Sharjah, UAE.

    ReplyDelete
  12. To Mr TLS: It requuires good lot of sense of humour to write humour and a lot more to enjoy and appreciate humour.


    Give me a sense of humor, Lord,
    Give me the grace to see a joke,
    To get some humor out of life,
    And pass it on to other folk.

    I have kept this quotation printed in bold letters in my drawing room

    ReplyDelete
  13. நகைச்சுவையாக எழுதுவது எளிதல்ல என்பதை நன்கு அறிந்தவன் ...மிகுந்த புத்திசாலியாய் இருந்தால் தவிர ( உண்மயாகத்தான் சார்) நகைச்சுவையாய் எழுதுவது ஈஸியல்ல...உங்கள் மனைவி கார் ஓட்டும் வைபவத்தை வைத்து நீங்கள் எழுதியுருந்த கட்டுரை ...குபீர் என்ற சிரிப்பை வரவழைத்தது..உங்களால் இப்போதும் கூட ஒரு முழுநீள நகைச்சுவை நாடகம் எழுத முடியும்..அதை மொளளி டைரக்ட் செய்து நடிக்கவும் செய்தால் ...கட்டாயம்..வெற்றி பெரும்...!

    ReplyDelete
  14. நல்ல நகைச்சுவை என்பது ஹாஹா என்று சிரிப்பது மட்டுமில்லை. மெல்லிய புன்முறுவலே போதும் என நன்கு உணர்த்தியுள்ளீர்கள். நல்லதொரு பதிவு.நன்றி.

    ReplyDelete
  15. SIR,
    THANKS A LOT SIR .THIS POST GIVES ME CONFIDENCE TO WRITE A COMEDY STORY SIR.YOUR POST GIVES ME THE IDEA THAT SMILE IS ENOUGH FOR A STORY SIR.THANKS A LOT SIR.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!