May 17, 2010

நூல் வியாபார கணக்கில் சிக்கல்!

ஆங்கிலத்தில் ஒரு மொழி விளையாட்டு உண்டு. அதற்கு TOM SWIFTY   என்று பெயர். உதாரணமாக:
•"I only have diamonds, clubs and spades," said Tom heartlessly."
•"I'm waiting to see the doctor," said Tom patiently"
•"I have no idea," said Tom thoughtlessly.

இதே மாதிரி தமிழில் எழுதி அனுப்புமாறு, தினமணி கதிரில் முன்பு ஒரு போட்டி வைத்தேன். அப்போது வந்த சில வாக்கியங்கள்.
 (கடைசியில் ஒரு சின்ன ஆச்சரியம் இருக்கிறது!)
---------------------
*  நிதி அமைச்சர் .மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தியை ஒரு வரி  விடாமல் படித்துக் காட்டினான்.

* ஒரு ரூபாய்க்கு ஒரு டஜன் கீரைக் கட்டுகள் கொடுக்கும்படி எவ்வளவு வற்புறுத்தியும் கீரைக்காரி சிறிதும் மசிந்து கொடுக்கவில்லை.

* ``நீங்க யாருங்க?'' என்றான் லிப்ட் ஆபரேட்டர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே.

* ``செருப்பு வியாபாரம் நன்கு நடக்கிறது'' என்றான்.

* ``மீதியை சில்லரை நாணயங்களாகவே கொடுத்து விடுங்களேன்'' என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

* ``தினம் எத்தனை குண்டூசி ஐயா எடுத்துக் கொண்டு போகிறீர்?'' என்று குத்தலாகக் கேட்டார்.

* ``பட்டுப்புடவை வேண்டும்'' என்றாள் நைசாக. ``புடவை வேண்டாம். நகை வாங்கிக் கொள்'' என்றேன் புன்னகையோடு.

* அந்தக் கசாப்புக் கடைக்காரன் எலும்பும் தோலுமாக இருந்தான்.

* ``எவரெஸ்டின் உயரம் 29,0298 அடிகள்'' என்று கூறியதைக் கேட்ட சிறுவன் மலைத்தான்.

* டாக்டர் ஆகிவிட்டோம் என்ற கர்வம் அவனிடம் மருந்துக்குக் கூட இல்லை.

* கால்வலி என்று முழுப் பொய்யைச் சொல்லி அரை நாள் லீவு கேட்டான்.

* ``கண்ணாடி பீரோ வாங்கித் தந்ததும்தான் மாப்பிள்ளை முகம் பார்த்துப் பேசினார்'' என்றார் மாமனார்.

* ``காமராஜ் அவர்களைப் பார்க்கப் போகலாம் வருகிறாயா?'' என்று கேட்டதற்கு, ``ஆகட்டும் பார்க்கலாம்'' என்றான்.

* தையற்காரர் அவன் சொன்னது எதையும் சட்டை செய்யவில்லை.

* ``வெண்கலப் பாத்திரம் விலையில் இம்மியும் குறையாது'' என்றான் கணீரென்று.

* அவர் `பசை'யுள்ள ஆசாமியாதலால் உறவினர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றனர்.

* ``தொழில் டெவலப் ஆகிக் கொண்டு வருகிறது'' என்றார் புகைப்பட நிபுணர்.

* ``கிளிசரின் பாட்டில் திருட்டுப் போய் விட்டது'' என்று கண்ணீர் விட்டாள் சினிமா நடிகை.

* ``சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன்'' என்றான் உதட்டளவில்.

*  சிதம்பரம் போய் வந்ததை அவன் ரொம்ப ரகசியமாக வைத்திருக்கிறான்.

* அந்த நூல் வியாபாரம் சம்பந்தமான கணக்கு வழக்கில் சிக்கல் இருக்கிறது.

* சாணை பிடிப்பவன் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான்.

* பாங்குகளை தேசியமயமாக்கியதின் மூலம் இந்திரா காந்தியின் மீது, தேசாய் கோபத்தை வட்டியும், முதலுமாக காட்டினார்.

*``நாயனக்காரர் சொல்றது சரிதான் அண்ணே'' என்று ஒத்து ஊதினான்.

*``சாதம் சமைக்கும் போது தண்ணீரைக் கொஞ்சம் அதிகமாக விட்டு விட்டேன்'' என்று குழைந்தாள் புது மனைவி.

*``திருப்பதிக்குப் போனேன்'' என்றான் மொட்டையாக.

*``உங்களிடமிருந்து பணத்தை எப்படிக் கறக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்'' என்றான் பால்காரப் பாண்டியன்.

 *  குப்புசாமி, தன் அரிசி வியாபாரத்தைப் பற்றி நிறைய அளந்தார்.

*``தஞ்சாவூர் மாப்பிள்ளை பிடிக்கிறதா?'' என்று கேட்டவுடன் சாந்தா தலையை ஆட்டினாள்.

===========
பின் குறிப்பு: இந்த போட்டிக்கு சுஜாதா  எழுதியது:

சைக்கிள் சக்கரத்தில் விரல் மாட்டிக்கொண்டதும் அவன் ‘வீல்’ என்று கத்தினான்!

14 comments:

  1. நமஸ்காரங்கள்! நன்று!

    ReplyDelete
  2. கடுகை படித்தவுடன் வெடி சிரிப்பு வந்தது

    ReplyDelete
  3. எழுத்தாளர்களாக அங்கீகரிக்கப் படாத எத்தனையோ வாசகர்களுக்கும் நன்றாக எழுதவும், அதுவும் நகைசுவையாக எழுத, வருகிறது என்று தெரிகிறது. அதை ஊக்கி விட உங்களை மாதிரி ஆட்கள் வேண்டியிருக்கிறது. சுஜாதா எழுத கேட்கவா வேண்டும்! அவரும் இதில் கலந்து கொண்டார் என்பது மற்ற வாசகர்களுக்குப் பெருமை. - ஜகன்னாதன்

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு.

    நன்றி.

    -அரசு

    ReplyDelete
  5. Sir,if you could publish more of these ,oxymoronic sentences and paradoxes it would be really a great learning for us

    ReplyDelete
  6. கடிகாரம் வாங்கிய நேரமே சரியில்லை என அலுத்துக் கொண்டான்,மணி!

    ReplyDelete
  7. <<<< நேசன்..., said... >>>
    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. தேங்காயைத் துருவித் தாங்க என்று கேட்டுகிட்டே இருக்கேன், அதைச் செய்யாம அங்கே நீங்க கடுகு படிச்சி சிரிச்சுகிட்டே இருக்கீங்களே என்று வெடித்தாள் என் மனைவி.

    ReplyDelete
  9. ஆங்கிலத்தில் இருப்பதை படித்த போது நான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. போட்டியில் தமிழில் எழுதப் பட்ட வாக்கியங்களை படித்த போது தான் விஷயம் புரிந்தது. இப்படி எல்லாம் போட்டி பத்திரிக்கைகளில் வந்திரிக்கிறதா என்ன?


    http://www.virutcham.com

    ReplyDelete
  10. அருமை. இதை முகப்புத்தகத்தில் இட உங்கள் அனுமதி தேவை.

    நன்றி சார்.

    ReplyDelete
  11. <<< இதை முகப்புத்தகத்தில் இட உங்கள் அனுமதி தேவை.>>>

    அது என்ன ’முகப்புத்தகம்’?
    என் அனுமதி இல்லமலேயே போட்டுக் கொள்ளலாம்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!