November 25, 2010

ஆவியும் நானும் -கடுகு

செங்கற்பட்டு நகரத்திற்கே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது.  எதன் மேல்? ஆவி ஜோசியத்தின் மீது! வீட்டுக்கு வீடு மீடியம், பிளான்சட் ஆவி ஜோதிடம் என்று. ,(அந்த ஆவிகள் சொன்ன ஜோசியம் எல்லாம் பேத்தல் என்பது வெளிப்பட்டுவிட சில மாதங்களாவது ஆகும் என்பதால் யாருக்கு சந்தேகமே வரவில்லை,)  ஆவி ஜோதிடப்பித்து பலரைப் பிடித்துக்கொண்டது. அவரவர் தங்கள் வீட்டு ஆவி ரொம்ப கெட்டிக்கார ஆவி; எதிர்காலத்தை நூறுக்கு நூறு சரியாகச் சொல்லும் என்று தங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணியைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்கள்.
ஆமாம், எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது.  ஆவி உலகின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது ஆர்.கே.நாராயணன் எழுதிய `தி இங்கிலீஷ் டீச்சர்' நாவல் என்றும் சொல்வேன். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அந்த நாவலை எழுதினார் என்று கூறுவார்கள். இறந்து போன தன் மனைவியுடன் மீடியம் மூலமாகத் தொடர்பு கொள்வதாக
அந்த நாவலில்எழுதி இருந்தார்.
ஆர்.கே.நாராயணனுக்கு ஈ.எஸ்.பி. மீது நம்பிக்கை இருந்ததால் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு ஏற்பட்டது. வேலையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்த எனக்கு இந்த பித்து பிடித்ததும் ஆச்சரியமல்ல. ஒரு ’நல்ல’ ஆவியிடம் ஜோதிடம் கேட்ட போது  - அடுத்த வருடம் உனக்கு வேலை கிடைக்கும், ராய்ப்பூரில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை என்று சொல்லிற்று.. ராய்ப்பூரில் வேலைக்கு ஆர்டர் வரும் வரையில் (!) ஆவிகளுடன் பொழுதைப் போக்க நினைத்தேன்.
 ( குறிப்பு: இன்று வரை கார் கம்பனி வேலையும் கிடைக்கவில்லை; ராய்ப்பூரை நான் பார்க்கவு மில்லை!)

இந்த சமயத்தில் கிருஸ்துவக் கல்லூரி ஆசிரியருக்கும் இதில் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சற்று ஆழமாக இந்த ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அவர் எங்கள் தெருவிலேயே இருந்ததால் அவருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆகவே என்னிடம்”வா.. நான் ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன், எனக்கு நீ உதவியாக இரு. என்றார்.
அவர் . மிகவும் கெட்டிக்காரர். மிகவும் எளிமையானவர். பார்த்தாலே அவர் மீது மதிப்பு ஏற்படும். தாம்பரத்திலுள்ள கிருஸ்துவக் கல்லூரியில் லெக்சரராக இருந்தார். (பின்னால் இவர் பல பெரிய ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து, கரக்பூர் சென்று, நேஷனல் புரொபசர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று அங்கும் பல சிகரங்களைத் தொட்டார் என்று கேள்வி.)

சரி, விட்ட இடத்திலிருந்து வருகிறேன். ஒரு மீடியம் எங்களுக்கு அகப்பட்டான். சின்னப் பையன் தான். அவன் சரியான மீடியமா என்று பல சோதனைகளைச் செய்தோம். அவ்ற்றில் அவன் தேறினான்.
ஒரு பலகையில் பார்டர் மாதிரி  எல்லா ஆங்கில எழுத்துக்களையும்எழுதினோம். நடுவே ஒரு சின்ன கேரம் காயினை வைத்து அதைத் தொடச் சொன்னோம். நிசப்தமாக இருந்தோம். திடீரென்று அந்தப் பையன் காயை நகர்த்த ஆரம்பித்தான். குட்மார்னிங் என்றோம். அவன் g.o.o.d. m.o.r.n.i.n.g. என்று ஒவ்வொரு எழுத்தாகக் காட்டினான்,
”உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை வரலாறு என்ன? நாங்கள் ஜோசியம் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆவி உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டோம்.
”அப்படியா?... செய்கிறேன்.....”
“முதலில் உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரிய வேண்டுமே...” என்றோம்.
மீடியம் மளமளவென்று எழுத்துக்களின் மேல் கேரம் காயினை இங்கும் அங்கும் வேகமாய்  நகர்த்த , முடிந்த அளவு அவைகளைக் குறித்துக் கொண்டு வந்தேன்.
”என் பெயர் பாபுலால் .. நான் பெங்களூரில் பிஸினஸ் செய்து வந்தேன். ஒரு கார் விபத்தில் நான் இறந்து போனேன் ..”. என்று ஆரம்பித்தது.  நிறைய விஷயங்களைச் சொல்லியது  அந்த ஆவி . பக்கம் பக்கமாக பல விஷயங்களை மீடியம் சொல்ல நான் எழுதினேன்.  பத்து இருபது நாட்களில் சுமார் 50, 100 பக்கங்களுக்கு மேல் எழுதியிருப்பேன். 
பிறகு ஒரு நாள் மீடியம்,  கேள்விகளுக்கு பதில்களை தான் எழுதியே காட்டுவதாகச் சொல்லவே, பேப்பர் பேனாவைக் கொடுத்தோம் நம்பமாட்டீர்கள். என்ன  வேகமாக பதில்களை மீடியம் பையன் எழுதினான் தெரியுமா?
பெரும்பாலும் நாங்கள் இரவு நேரங்களில் தான் ஆராய்ச்சியை நடத்துவோம்.
மீடியம் மேஜையில் ஒரு பெரிய செம்பில் தண்ணீர் வைக்கவேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால், தண்ணீர், பேப்பர், பேனா மற்றும் ஒரு 15 வாட் விளக்குடன் உரையாடலைத் துவங்குவோம்.
ஒரு நாள், பாபுலாலை புரொபசர் கேட்டார்: ”என் பேராசிரியர் கிப்பிள்(?) அவர்களுடன் நான் பேச விரும்புகிறேன்.அவரை அழைத்து வர முடியுமா?  என்று கேட்டார்.
அவரைப் பற்றி முழு விவரங்கள் கொடுங்கள். முயற்சி செய்கிறேன்.” என்று ஆவி கூறியது.
சில நாட்கள் கழித்து பாபுலால் ” நீங்கள் சொன்னவரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவர் வருகிற வாரம் வர ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றார். (தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டுச் சொன்னார்.)
 தன் பேராசிரியருடன் பேச சில கேள்விகளை புரொபசர் தயார் செய்து வைத்திருந்தார். குறித்தபடி பாபுலால் ஆவி ’கிப்பிள்’ அவர்களை அழைத்து வந்தது. சில கேள்விகளுக்குப் பிறகு அவரிடம் ஜெர்மன் மொழியில் ஒரு கேள்வி கேட்டார். (கிப்பிள் ஜெர்மன்காரர். சோதித்துப் பார்ப்பதற்காக ஜெர்மன் மொழியில்.கேட்டார்.) நம்பமாட்டீர்கள். ஜெர்மன் மொழியில் மீடியம் எழுதிக் காண்பித்தது. அவர் ஆவி உலகில் மூன்று, நான்கு நிலையில் இருப்பதாகச் சொன்னது

எங்கள் ஆராய்ச்சி சற்று மும்முரத்துடன் தொடர்ந்தது. புரொபசருக்கு ஒரு நாள் சந்தேகம் வந்தது. பாபுலாலைக் கேட்டார்.
``நீங்கள் மீடியம் மூலமாக எங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறீர்கள். மீடியத்தின் உடலுக்குள் சென்று அவரை இயக்குகிறீர்களா? அப்படி என்றால் அவருடைய உடலுக்குள் செல்வதை நாங்கள் புகைப்படம் எடுக்கலாமா?'' என்று கேட்டார்.
``யோசித்துச் சொல்கிறேன்'' என்று சொன்னார் பாபுலால்.

அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு அவர் சொன்னார். ``நீங்கள் என்னை- அதாவது என் ஆவியைப் புகைப்படம் எடுக்க விரும்புவதாகச் சொன்னீர்கள். வருகிற வாரம் புதன் கிழமை(?) வைத்துக் கொள்ளலாம். அன்று இரவு  புகைப்பட ஸ்டுடியோவில் உள்ளது மாதிரி விளக்குகளை அமைத்து, இரவு 1 மணிக்கு மீடியத்தை உட்காரச் செய்து உரையாடலைத் துவங்குங்கள். நான் சொல்லும் போது படத்தை எடுங்கள்'' என்றார்.
எங்களிடம் ஒரு பாக்ஸ் காமிராதான் இருந்தது. ஃபிளாஷ் என்ற வார்த்தையே கேள்விப்படாத காலம். உள்ளூர் போட்டோ ஸ்டூடியோக்காரரரிடம் போய்  பெரிய 500 வாட்ஸ் விளக்குகளை இரண்டு மூன்று தரும்படி கேட்டார். புரொபசர். அவர் மீது மிக்க மதிப்பு வைத்திருப்பவராதலால் ஸ்டூடியோக்காரர் விளக்குகளைத் தந்தார். புதன்கிழமை இரவு விளக்குகளை அமைத்தோம். மீடியமும் வந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் பாபுலாலும் வந்தார். வழக்கமான சில விசாரணைகள். கேள்விகள் என்று சில நிமிஷங்கள் கழிந்தன. “ சரி. இப்போது படம் எடுங்கள்” என்றார் பாபுலால்.  எட்டு படங்கள் எடுத்தேன்.  ”படங்கள் நன்றாக வரும் மூன்றாவது படத்தில் மீடியத்தின் வலது கையில் வெள்ள நிறப் புகை மாதிரி தெரியும். அது நான்தான்” என்றர். பிறகு விடை பெற்றார்,
மறுநாள் பிலிம் ரோலைக் கழுவிப் பார்த்தோம். பாபுலால் சொன்னபடியே ஒரே ஒரு படத்தில் ஆவி மாதிரி ஒரு உருவம் தெரிந்தது. ஸ்டூடியோக்காரர்“ பிரிண்டில் தவறு எதுவும் இல்லை. நெகடிவ்வில் அப்படித்தான் இருக்கிறது: என்று சொன்னார்,
(இதை நம்பாதவர்கள் தயவு செய்து படிப்பதை நிறுத்திவிடலாம்)
அதன் பிறகு பல நாள் எங்கள் ஆவி உலக ஆராய்ச்சி தொடர்ந்தது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு மீடியத்தின் போக்கில் வித்தியாசம் தென்பட்டது.  சில கேள்விகளுக்கு வந்த பதில்கள் சரியாகவே இல்லை. மீடியம் எழுதிய ஆங்கில வாக்கியங்களில் தவறுகள் இருந்தன, பாபுலாலின் ஆங்கிலம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.  மீடியத்தின் வீட்டில் தயக்கம் மற்றும் எதிப்பு  வர ஆரம்பித்தது. ஆராய்ச்சியை இந்த மீடியம் மூலமாக இனி தொடர்வது பயனற்றது என்று முடிவெடுத்தோம். அத்துடன் ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்டோம்.
  அதன் பிறகு நாங்கள் வெவ்வேறு திசையில் சென்று விட்டோம். தொடர்பும் விட்டுப் போய்விட்டது.
 *                *                  *
தினமணி கதிரில் நான் எழுத ஆரம்பித்ததும் வாரா வாரம் ஏதாவது எழுத வேண்டும் என்ற வெறி பிடித்துக் கொண்டது. அப்போது பீட்டர் ஹர்க்காஸ் என்ற பிரபல மீடியத்தின் வரலாறைப் படித்தேன். பீட்டர் ஹர்க்காஸ் வரலாறை மொழிபெயர்த்துக் கதிருக்கு அனுப்பினேன். அது ஏழெட்டு பக்க கட்டுரையாக வெளிவந்தது.
(பின்னால்  எப்போதாவது பீட்டர் ஹர்க்காஸ் வரலாறை ஒரு பதிவாகப் போடுகிறேன்.)
இந்த சமயத்தில் டில்லியில் ஒரு பெண்மணி (நம்ப ஊர் மாமி!) மீடியமாக உள்ளது தெரிந்தது. கதிரில் மீடியம் பதில்கள் என்ற பகுதியை ஆரம்பித்து வாசகர்களின் கேள்விகளுக்கு அந்த மீடியம் மாமி தந்த பதில்களை எழுதின விவரங்களை எல்லாம் `அன்புள்ள டில்லி' என்ற என் தொடர் பதிவில் எழுதியதை உங்களில் சிலர் படித்திருக்கக் கூடும்.
அதன் பிறகு `மீடியம் பாண்டியன்' என்ற தொடர் கதையை எழுதினேன். அது குங்குமத்தில் வெளியாயிற்று. இது ஈ.எஸ்.பி.யைப் பின்னணியாகக் கொண்ட நாவல்.
இடையே ஒரு தரம் ஆவி அமுதாவை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தேன். அங்கு அவர் ஆவிகளுடன் பேசி பதில்களைச் சொன்னார். அவரிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை.
இதற்குப் பல வருஷங்களுக்குப் பிறகு அமெரிக்கா சென்று சில மாதங்கள் தங்கி இருந்தபோது பீட்டர் ஹர்க்காஸ் (PETER HURKOS) ) வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்க நினைத்தேன். அப்போது அவரைப் பற்றிய ஒரு தகவல் எனக்குக் கிடைத்தது. பீட்டர் ஹர்க்காஸ் இந்த சக்தி இருந்த காரணத்தால் டென்மார்க்கிலிருந்து அமெரிக்காவிற்கு பல வருடங்களூக்கு முன்பே வந்து குடியேறி விட்டார் என்று தெரிந்தது.  அது மட்டுமல்ல, அவர் 1988-ல் காலமாகி விட்டார் என்பதையும் அவர் மூன்று சுய சரிதங்கள் எழுதியுள்ளார் என்பதையும்  அறிந்தேன்.   அவரது மனைவி நிர்வகிக்கும் பீட்டர் ஹர்க்காஸ் பவுண்டேஷனின் வலைத் தளத்தில் அவர் செய்த சாதனைகளையும் , பெற்ற நற்சாட்சிகளையும் போட்டிருக்கிறார்கள்.

அதே சமயம், அவரைப் பற்றி எதிர்மறையான பல தகவல்கள் `கூகுளில்' உள்ளதைப் பார்த்தேன். அதனால் அத்துடன்  நிறுத்திக் கொண்டேன். நல்ல காலம்,  இல்லாவிட்டால் என்னை (ஈ.எஸ்.பி.) (EXTRA SENSORY PERCEPTION) பைத்தியம் மீண்டும் பிடித்து ஆட்ட ஆரம்பித்து இருக்கும். அதன் விளைவாக உங்களையும் நான் பைத்தியமாக்கி  இருக்கக் கூடும்.

நான் மட்டுமல்ல, நீங்களும் பிழைத்தீர்கள்!

5 comments:

 1. //இதை நம்பாதவர்கள் தயவு செய்து படிப்பதை நிறுத்திவிடலாம்)//

  //சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு மீடியத்தின் போக்கில் வித்தியாசம் தென்பட்டது. சில கேள்விகளூக்கு வந்த பதில்கள் சரியாவே இல்லை. மீடியம் எழுதிய ஆங்கில வாக்கியங்களில் தவறுகள் இருந்தன, பாபுலாலின் ஆங்கிலம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.//

  கடுகு அவர்களே !! எதனால் இந்த மாற்றம் ? ஆவிகளுக்கு கோபதாபங்கள் உண்டா?

  ReplyDelete
 2. //கடுகு அவர்களே !! எதனால் இந்த மாற்றம் ? ஆவிகளுக்கு கோபதாபங்கள் உண்டா//

  சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை என்று
  கோபித்துக் கொண்டிருக்கலாம்.

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  மீடியம் கேள்வி பதில் தினமணி கதிரில் வந்தது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. இடையில் அது சில காலம் நிறுத்தப்பட்டு, அப்புறம் அவங்க சொந்த விஷயத்தில் ஒரு முறை மீடியத்தின் உதவியை நாடி, அது சக்ஸஸ் ஆக வந்தால், தொடரலாம் என்று முடிவு செய்து, மீண்டும் இந்தப் பகுதி வெளிவந்தது. மீடியத்திடம் கேள்வி கேட்பதற்காக வந்த கூப்பன் கிடைக்கிறதே சிரமமாக இருக்கும். தினமணி கதிர் வாங்கும் வீடுகளில் கூப்பன் கலெக்ட் செய்தவர்களும் உண்டு.

  ஸ்டவ் ஜோசியம் என்று பிரபலமாக இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான். ஸ்டவ் என்றால் ஸ்டவ் கிடையாது. அதன் மேல் வைக்கிறதுக்காக,(உயரமான, கனமான, பானைகள், பாத்திரங்கள், வைக்க வசதியாக, கிட்டத்தட்ட முக்காலியை நினைவுபடுத்தும் ஒரு வடிவம்)உள்ள ஸ்டாண்ட். தரையில் அரிசிமாவைப் பரத்தி, அதன் மேல், இந்த ஸ்டவ் ஸ்டாண்ட் நகர்ந்து நகர்ந்து எழுதி, பதில் சொல்லுமாம்!

  ஆனந்த விகடனில், ஐயப்பனோடு ஐம்பது நாள் என்ற பக்திப் பயண தொடர் கட்டுரையை திரு கோபு அவர்கள் எழுதியிருந்தார். (உங்களுக்கு இவரைத் தெரியுமா?) அவரே தர்மஸ்தலா யாத்திரை(தர்மலோக யாத்திரை என்ற பெயர்னு நினைக்கிறேன்) என்ற கட்டுரை எழுதி, அது புத்தகமாக வெளிவந்தது. அதில் ப்ளாஞ்செட் நாயுடு என்று ஒரு நண்பர் வருவார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா மற்றும் அதன் அருகில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றதைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அது.

  பக்தி கட்டுரை என்றாலும் கொஞ்சம் நகைச்சுவை கலந்து மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். அதில் இன்னும் நினைத்து நினைத்து சிரிக்கிற விஷயம் - கட்டுரை ஆசிரியர் ரொம்ப பக்தியுடன் எல்லாத் தகவல்களையும் ப்ளாஞ்செட் நாயுடுவிடம் சொல்லிக் கொண்டே வருவார், அவரும் கொஞ்சம் கூட கண்ணை இமைக்காமல், தலையைக் கூட அசைக்காமல், கேட்டுக் கொண்டிருப்பார். கடைசியில் பார்த்தால், நாயுடு சொல்வார், “ எனக்கு கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் வித்தை தெரியும், நீங்க பேச ஆரம்பித்ததுமே அந்த மாதிரி தூங்கிட்டேன், எப்படியும் நீங்க என்கிட்ட சொன்ன நல்ல விஷயங்களையெல்லம் பத்திரிக்கையில் தொடராக எழுதும்போது, திரும்பவும் சொல்வீங்க இல்லையா, அப்ப படிச்சுக்கறேன்” என்று!!

  உங்களுக்கு ஆவி விஷயங்களிலும் ப்ளாஞ்செட்டிலும் இண்ட்ரெஸ்ட் இல்லாமல் போனது ரொம்ப நல்லது. ஏன்னா, அது இல்லங்களில் நெகடிவ் அலைகளை உண்டு பண்ணக் கூடும் என்று சொல்வாங்க.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 4. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு, தினமணி கதிரில் ‘மீடியம் பதில்கள்” என் மேற்பார்வையில் தான் வந்தன.(’அன்புள்ள டில்லியி’ல் எழுதி இருக்கிறேன்.)
  கோபு: எனக்கு பரிச்சயம் இல்லை.

  ReplyDelete
 5. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  ”அன்புள்ள டில்லி” படித்திருக்கிறேன். அதையும் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கணும். விட்டுப் போய் விட்டது.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!