May 31, 2010

ஒரு மேதைக்கு அஞ்சலி - கடுகு

சில தினங்களுக்கு முன்பு ஒரு எழுத்தாளர் காலமானார். அவர் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். கதையோ நகைச்சுவையோ எழுதுபவர் அல்ல. அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் கணிதம் தொடர்பானவை. கணிதம் இவ்வளவு சுவையானதா என்று என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வியந்து ரசிக்கச் செய்தவர்.
அவர்: மார்ட்டின் கார்டனர்.
தனது 95-வது வயதில் சென்ற ஞாயிறு ( மே 22, 2010) அமெரிக்காவில் காலமானார்.
கார்டனர், 1956’ம் ஆண்டு “ சயண்டிஃபிக் அமெரிக்கன்’ என்ற பத்திரிகையில் 'மேதமேடிகல் ரிக்ரியேஷன்ஸ்' என்ற தலைப்பில் கணிதப் புதிர்களையும் கணிதம் தொடர்பான சுவையான தகவல்களையும் கட்டுரைகளக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து 25 வருஷங்கள் எழுதினார்.
          நான் டில்லி் போன பிறகுதான் சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில் பழைய இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் அரை அங்குல தூசியுடன் இருந்தன. எல்லாவற்றையும் படித்தேன். போட்டோ காபி வசதி இல்லாத கற்காலம் அது. ஆகவே எனக்குப் பிடித்தவற்றை நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டேன். அவருடை தீவிர ரசிகனானேன்.
  அவர் எழுதியவை  எல்லாம் புத்தகங்களாக வெளியாகி லட்சக்கணக்கில் விற்பனை ஆகி வருகின்றன.  அவரது பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன்

May 29, 2010

மந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு


சமீபத்தில் வீடியோயில் `யெஸ் பிரைம் மினிஸ்டர் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மத்திய மந்திரிக்கே ஒரு அதிகாரி `பேப்பே' சொன்ன கதை அது.
  என் நண்பர் ஒருவருக்குப் பதவி உயர்வு அளித்து திடீரென்று டில்லியிலிருந்து கொச்சிக்கு மாற்றி விட்டார்கள். குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படும் என்றும், வேறு சில காரணங்களையும் சொல்லி, டில்லியிலேயே தன்னை `போஸ்ட்' செய்யும்படி கேட்டுக் கொண்டார். `முடியாது' என்று சொல்லி விட்டார்கள்.
இவர் சிறந்த சமூகநலத் தொண்டர். ஆகவே பலர் இவர் டில்லியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பி, பலவித சிபாரிசுகளைக் கொண்டு வந்தார்கள். பலனில்லை. மாறாக, உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய அதிகாரியின் பிடிவாதம் அதிகரித்தது. ஒருநாள் திடீர் உத்தரவு போட்டார். ``இன்று மாலையிலிருந்து உங்கள் பெயர் எங்கள் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டது.''
அதாவது அவர் புதிய இடத்தில் போய் பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
 இந்தச் சமயத்தில் எனக்குத் தெரிந்த  ஒரு  பாராளுமன்ற உறுப்பினரை  அணுகி, உதவி கோரினேன்.
அவர் என்னை அழைத்துக் கொண்டு (நான் அவர் பி.ஏ.வாம்!) மந்திரியைப் பார்த்தார். மொழிப் பிரச்னையாதலால் நான்தான் `மொழி பெயர்த்தேன்' -இதுதான் சாக்கு என்று என் நண்பரைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி, அவர் கட்டாயம் டில்லியிலேயே இருந்தால்தான் நான் (அதாவது எம்.பி.) அடுத்த தடவை தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற ரீதியில் வலுவாகச் சிபாரிசு செய்தேன்.

நோபல் பரிசு - மொத்த வகுப்பிற்கும்! - கடுகு

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகரைப் பற்றிய விரிவான  ஒரு புத்தகத்தின் தலைப்பு :  உண்மை மற்றும் எளிமை  (TRUTH AND SIMPLICITY). அவரது வாழ்க்கை எவ்வளவ எளிமையானது மற்றும் உண்மையானது என்பதை விளக்க  ஒரு சிறிய தகவலைத் தருகிறேன். ( இந்த தகவல் இருந்த பக்கங்களை போட்டோகாபி பண்ணி வைத்திருந்தேன், அதை தேடி எடுத்துப் போட முடியவில்லை.)

     1940களில் டாக்டர் சந்திரசேகர் (அமெரிக்காவில் அவரைச் சந்திரா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.) சிகாகோ சர்வகலாசாலையில் பகுதி நேரப் பணி ஆற்றி வந்தார். அவர் `வில்லியம்ஸ் பே' என்று ஊரில் இருந்த வான் ஆராய்ச்சி மையமான பெர்க்கிஸ் ஆப்சர்வடேரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இருப்பினும் சுமார் 100 மைல் தள்ளியிருந்த சர்வகலாசாலைக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குப் பாடங்களைப் போதித்து வந்தார். ஒரே ஒரு வகுப்பிற்காக நூறு மைல் காரில் வந்து பாடம் சொல்லித் தருவதை தவிர்க்கக் கூடிய வேலையாக அவர் கருதவில்லை. இதற்காக செலவழியும் நேரம், சக்தி ஆகியவை பற்றிக் கவலைப்படாமல்
சர்வகலாசாலைக்குப் போய் வந்தார்.
   அவரது அக்கறை மற்றும் ஈடுபாடு காரணமாக 1957ல் ஒரு வியப்புக்குரிய விஷயம் நடந்தது. அவரது வகுப்பில் இருந்த எல்லாருக்கும் பௌதிகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது! பரிசு பெற்றவர்கள் லீ மற்றும் சென்ஜிங் யாங்  (  T.D.LEE, C.N.YANG)! ஆமாம். அவர் வகுப்பில் இரண்டே மாணவர்கள்தான். இருந்தார்கள். இந்த இரண்டு பேருக்காக நூறு மைல் காரில் வந்து பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார் சந்திரா. தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் தனது இரண்டு மாணவர்கள் பரிசு பெற்றது பற்றி அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
ஸீங் டா யீ மற்றும் சென் ஜிங் யாங் ஆகியவர்களுக்கு 1957ல் நோபல் பரிசு கிடைத்தது என்றால், அவர்களுடைய ஆசிரியரான சந்திராவிற்கு 26 வருடம் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது!
ஆக, அந்த மொத்த கிளாஸுக்கும் ஆசிரியர், மாணவர் உட்பட எல்லாருக்கும் நோபல் பரிசு கிடைத்து விட்டது. சமீபத்தில் `நாசா' ஒரு சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பிய போது அதன் ராக்கெட்டிற்கு `சந்திரா' என்று பெயர் வைத்தது.
 ( இவரது அம்மாவின் சகோதரர்தான் சி.வி. ராமன்!)

சந்திராவைப் பற்றி இந்தத்  தகவலைப் படித்ததும் நோபல் பரிசுகள் பற்றி இன்டர்நெட்டில் துழாவிய போது மேலும் சில சுவையான விஷயங்கள் தட்டுப்பட்டன.

May 26, 2010

நடேசன் - கேரக்டர்

மதுராந்தகத்தில் ஏராளமான நஞ்சை புஞ்சை நிலங்களுக்கும், ஊரில் ஏழெட்டு வீடுகளுக்கும், வாழை, வெற்றிலைத் தோட்டங்களுக்கும் அதிபரான நடேசன் சுயமாகச் சம்பாதித்தது ஒன்றுமில்லை. எல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தது. நடேசனின் `ஆட்சிக் காலத்தில்' இந்த பரம்பரைச் சொத்துகள் சிறிது குறைந்தனவே தவிர கூடவில்லை.
தோப்பிற்கோ, களத்துமேட்டிற்கோ நடேசன் போவது அபூர்வம். அவரைச் சந்திக்க வேண்டுமானால் செங்கற்பட்டு கோர்ட்டுத் தாழ்வாரங்களில்தான் பார்க்கலாம்! அந்த கோர்ட் பியூனுக்கு அடுத்தபடி அதிக `சர்வீஸ்' போட்டவர் அவர்தான்! முப்பது வருஷங்களாக கோர்ட் வராந்தாக்களில் உலாத்திவரும் நடேசனுக்கு கோர்ட்டில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சுவரும் பரிச்சயமானவை. வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது கோர்ட்டிற்கு வராவிட்டால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். வரப்பு வழக்கு, சொத்து வழக்கு, குத்தகை கேஸ், வீட்டு வாடகை பாக்கிக வழக்கு, தோப்பு காண்ட்ராக்ட் வழக்கு, வட்டி பாக்கி வழக்கு என்று ஏதாவது வழக்கு நடந்துகொண்டே இருக்கும்!
நடேசனால் லாபமடைந்தவர்களில் கோர்ட் ஊழியர்கள் நீங்கலாக முக்ககியமானவர், `வாய்தா' வரதராஜன். இவர் ஒரு வக்கீல். வாய்தா எக்ஸ்பர்ட். நடேசனுக்கு எதிராக கேஸ் போடுபவர்களை, வாய்தாக்கள் வாங்கியே படாத பாடு படுத்துவார். வரதராஜனின் வீட்டிற்கு `நடேச நிலையம்' என்று பெயர் வைத்தாலும் தகும். எல்லாம் நடேசனின் பணம்தான்!

கொத்தலர் குழலி --கோளறு பதிகம்

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு

விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக

குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்

நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

நன்றி: நன்றி: koodal1.blogspot.com/

May 23, 2010

கமலாவும் பேரமும் - கடுகு


இன்று சுயமுன்னேற்றக் கட்டுரைகளும் புத்தகங்களும் கணக்கு வழக்கு இல்லாமல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. `யு கேன் வின்' பாணி புத்தகங்களைப் பலர் எழுதுகிறார்கள். (இப்படி எழுதுபவர்களில் பலர் ஜெயிக்க முடியாமல் தோல்வியுற்றவர்கள் என்பது வேறு விஷயம்!)

   `யு கேன் வின்' மாதிரி `யு கேன் கெய்ன்' (YOU CAN GAIN) என்று யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அந்த மாதிரி புத்தகத்தை எழுதக் கூடிய தகுதி படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது என் அருமை மனைவி கமலாதான்.
        ஆய கலைகளில் 65-வது கலையாகவே பேரக் கலையை உருவாக்கி, பயின்று, செயல்படுத்தி லாபமடைந்திருந்தார் கமலா! அந்தக் கலையை விளக்கமாக நான் எழுதினால் 'இன்டெலக்சுவல் பிராபர்ட்டி ரைட்'டின் கீழ் என் மீது கமலா நடவடிக்கை எடுக்கக்கூடும்  என்பதால் ஒரு சின்ன  கிளிப்பிங்கைத் தருகிறேன்.
* * *

காட்சி: டில்லி சரோஜினி மார்க்கெட். நடைபாதை புடவைக் கடை
கதா பாத்திரங்கள்: அருமை மனைவி கமலா, அவரது ஐயோ பாவம் கணவர்,  புடவைக் கடைக்காரர்
***
``என்னப்பா பாபுலால், எப்படி இருக்கே? உன் கடையைத் தேடவே அரை மணி ஆச்சு...''
``என் பேர் பாபுலால் இல்லை. பாண்டே...''
``ஆமாம்... பாண்டே! `பா'வில் ஆரம்பிக்கும் என்று ஞாபகம்.  முன்னே உன் கிட்ட நைலக்ஸ் புடவை வாங்கினேன். அந்த மாதிரி புடவை வேணும்னு கேட்கறாங்க...''
``நைலக்ஸ் புடவை நான் வியாபாரம் பண்றதில்லை மாய்ஜி! பெங்கால் காட்டன்...''
``மறந்து போய்ட்டேன். உன்கிட்டே காட்டன். மூலைக் கடையில் நைலக்ஸ் வாங்கி இருக்கேன். மாற்றிச் சொல்லி விட்டேன். சரி,  எப்படி புடவை? வழக்கமாக வாங்கறவ  நான். விலை பார்த்துச் சொல்லு...''
``ஒரே விலை சொல்லட்டுமா?''``சொல்லு. பேரம் பேசி உன் டயமும், என் டயமும் எதுக்கு வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை. நான் எப்பவும் இந்த கம்பத்துக் கிட்ட இருக்கற கடையிலதான் வாங்கி இருக்கிறேன்...'' ``மாய்ஜி!   இந்தக் கம்பம் போன வாரம்தான் வெச்சாங்க. நீங்க வேற எங்கேயாவது...''

நாரணன் விளையாட்டு

நாரணன் விளையாட்டு எல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதை செய்தான் அறிந்து வான்மீகி என்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந்தூர் உவச்சன்
காரணி கொடையான் கம்பன் தமிழினாற் கவிதை செய்தான்.
                                                              (இராமாவதாரப் பாயிரம்.)

(உவச்சன்  =மணியோசை.
உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றில் பூசை புரியும் வகுப்பினராதலால், அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலும் தொழிலாம்.

May 20, 2010

’நகைச்சுவை எழுதுவது எப்படி. -- கடுகு

முன் குறிப்பு:
எழுதுவது எப்படி என்று ஒரு பெரிய புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் பல வருஷங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 400-க்கும் அதிகமான பக்கங்கள் நகைச்சுவை எழுத்தாளர் மகரம் அதன் தொகுப்பாளர். ’நகைச்சுவை எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதை இங்கு தருகிறேன். ’நகைச்சுவைக்கு நீ என்ன அதாரிட்டியா? உன்னை எழுதும்படி யார் சொன்னது என்று யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக இந்த முன்னுரை! !)

************************* 
இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சத விகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சத விகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து, ரசித்து, முயன்று தனது திறமையை அதிகரித்துக் கொள்ளமுடியும். இப்படி நான் எழுதிவிட்டதால் கட்டுரையைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள்! உங்களுக்கு இயற்கையாக அந்தத் திறமை இல்லை என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.

அம்பி - கேரக்டர்

வேலங்கோடு வெற்றி அம்மன் திரைப்படக் கம்பெனியின் தயாரிப்பு  மானேஜரான அம்பியின் உண்மைப் பெயர் அவருக்கே ஞாபகமில்லை. அவரது திருமணப் பத்திரிகையில் கூட  தியாகராஜன் என்னும் `அம்பி' என்று மாற்றி அச்சடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தமிழ்ப் பட உலகில் முப்பது வருஷங்களாக இருக்கும் ("இருக்கும் என்று சொல்லாதீர்கள் அண்ணா. குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் என்று சொல்லுங்க'') அம்பிக்கு இண்டஸ்ட்ரியில் தெரியாத நட்சத்திரங்களோ, டெக்னீஷியன்களோ, தயாரிப்பாளர்களோ கிடையாது, படே படே ஸ்டார்களைகூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். நீ, வா, போ என்றுதான் பேசுவார் உரிமையுடன். அவர் சர்வீசில் எத்தனையோ கம்பெனிகளைப் பார்த்துவிட்டார். பள்ளங்கள் கோபுரங்களாகியிருக்கின்றன. கோபுரங்கள் மறைந்து போயிருக்கின்றன!

அதோ வருகிறார், அம்பி!
மேல்பட்டன் போடாத ஸ்லாக், பாண்ட். ஹவாய் சப்பல், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி அமெரிக்கன் கிராப். நெற்றியில் குங்ககுமப் பொட்டு. முகத்தில் மூன்று நாள் வளர்ச்சி புகையிலைக் கறையேறிய பல்வரிசை, கையில் பெரிய டைரி அதைவிட பெரிய டைரி அளவு காகிதங்கள் திணிக்கப்பட்ட சட்டைப்பை.
"என்ன அம்பி. ஆளையே காணோம்?''

May 17, 2010

நூல் வியாபார கணக்கில் சிக்கல்!

ஆங்கிலத்தில் ஒரு மொழி விளையாட்டு உண்டு. அதற்கு TOM SWIFTY   என்று பெயர். உதாரணமாக:
•"I only have diamonds, clubs and spades," said Tom heartlessly."
•"I'm waiting to see the doctor," said Tom patiently"
•"I have no idea," said Tom thoughtlessly.

இதே மாதிரி தமிழில் எழுதி அனுப்புமாறு, தினமணி கதிரில் முன்பு ஒரு போட்டி வைத்தேன். அப்போது வந்த சில வாக்கியங்கள்.
 (கடைசியில் ஒரு சின்ன ஆச்சரியம் இருக்கிறது!)
---------------------
*  நிதி அமைச்சர் .மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தியை ஒரு வரி  விடாமல் படித்துக் காட்டினான்.

* ஒரு ரூபாய்க்கு ஒரு டஜன் கீரைக் கட்டுகள் கொடுக்கும்படி எவ்வளவு வற்புறுத்தியும் கீரைக்காரி சிறிதும் மசிந்து கொடுக்கவில்லை.

* ``நீங்க யாருங்க?'' என்றான் லிப்ட் ஆபரேட்டர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே.

* ``செருப்பு வியாபாரம் நன்கு நடக்கிறது'' என்றான்.

* ``மீதியை சில்லரை நாணயங்களாகவே கொடுத்து விடுங்களேன்'' என்று கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

* ``தினம் எத்தனை குண்டூசி ஐயா எடுத்துக் கொண்டு போகிறீர்?'' என்று குத்தலாகக் கேட்டார்.

* ``பட்டுப்புடவை வேண்டும்'' என்றாள் நைசாக. ``புடவை வேண்டாம். நகை வாங்கிக் கொள்'' என்றேன் புன்னகையோடு.

* அந்தக் கசாப்புக் கடைக்காரன் எலும்பும் தோலுமாக இருந்தான்.

* ``எவரெஸ்டின் உயரம் 29,0298 அடிகள்'' என்று கூறியதைக் கேட்ட சிறுவன் மலைத்தான்.

* டாக்டர் ஆகிவிட்டோம் என்ற கர்வம் அவனிடம் மருந்துக்குக் கூட இல்லை.

May 15, 2010

- கடுகு

பத்திரிகைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: `... என்னைக் கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது?'
ஒரு அரசியல்வாதியின் பேச்சையோ, நடவடிக்கையையோ விமர்சிக்க எந்த மாதிரி அருகதை இருக்க வேண்டும் என்பதை மட்டும் இதுவரை யாரும் விளக்கியதில்லை.
இதே மாதிரி சினிமா டைரக்டர்கள், ``என் படத்தின் கிளைமாக்ஸைப் பற்றிக் குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கிறது?'' என்று கேட்பார்கள். அதுவே விமர்சித்தவர் ஒரு டைரக்டராக இருந்தால், ``.... அந்தப் படத்தில் என்ன கிழித்தாய்? எந்த முகம் இருக்கிறது, என்ன அருகதை இருக்கிறது என் படத்தை விமர்சிக்க?'' என்று கேட்பார்கள்.
சரி, விமர்சித்தவன் யாரோ ஒரு குப்பனோ சுப்பனோ என்று வைத்துக் கொள்வோம். ``என் படத்தைப் பற்றி இவ்வளவு வாய் கிழியப் பேசுகிறாயே... நீ ஒரு படத்தை டைரக்ட் பண்ணிக் காட்டேன். அதற்குப் பவிஷு இல்லை. பேச வந்துட்டீங்க!'' என்று மூக்கு சிவக்க கேட்பார்கள்.
அதாவது ஒரு படத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் ஒரு திரைப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போகிறோம். ``என்னய்யா, போண்டாவில் உப்பு இல்லையே?'' என்று கேட்டால், ``என் ஹோட்டல் போண்டாவை விமர்சிக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது? இருபது லட்ச ரூபாய் முதலீடு செய்து ஹோட்டல் நடத்த உன்னால் முடியுமா? இல்லை, உனக்குத் தான் போண்டா போடத் தெரியுமா? இதற்கு வக்கு இல்லாத நீ என்னை விமர்சிக்க உனக்கு அருகதை ஏது?'' என்று பதிலுக்கு ஹோட்டல்கார் சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவ அபத்தம் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் `அருகதை உண்டா?' என்று கேட்பது.

May 14, 2010

நான்முகன் ஆதியாய

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
            வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
         மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
               நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
               அரசாள்வர் ஆணை நமதே.

தேனமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய                  சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்

விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கு
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்
மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த
ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.

நன்றி: koodal1.blogspot.com/

May 12, 2010

ராவ்பகதூர் ராமேசம் - கேரக்டர்

பளபளவென்று வழுக்கை. பின்புறம் சீப்பை வளைத்து ஒட்ட வைத்தாற்  போல் (நரைத்த) முடி. நல்ல சிவப்பு. கணுக்காலுக்கு மேல் நிற்கும் பட்டை ஜரிகை வேஷ்டி,  தும்பைப் பூப்போன்ற மல் ஜிப்பா. விசிறி மடிப்பு அங்கவஸ்திரம், வெள்ளிப் பூண் கைத்தடி. இதுதான் ராவ்பகதூர் ராமேசம். மணி என்ன ஆகிறது? நாலரையா? அப்படியானால், ராமேசம் பீச்சிற்குக் கிளம்ப நேரமாக் விட்டது! "டிரைவர், ஐயாவிற்கு நேரமாகிறதே. வண்டி எடுக்கவில்லை?'' என்று திருமதி ராமேசம் கேட்பாள்.
வண்டி வந்ததும் ராமேசம் ஏறி உட்கார, சமையல்காரர் ஒரு ஃப்ளாஸ்க் தண்ணீரைக் கொண்டு வந்து காரில் வைப்பார். சரியாக ஏழு மணிக்கு ராமேசம் திரும்பி வந்துவிடுவார். பீச்சில் ஒரே இடத்தில் அவரது ஒரே நண்பரான மாத்ருபூதத்துடன் கடந்த 16 வருஷங்களாக உட்கார்ந்து, உலக விஷயங்களை அலசிவிட்டு வருவார். தினமும் என்னதான் பேசுவார்கள்?
         இதோ ஒரு சாம்பிள்; "மாத்ருபூதம், இந்த தாட்சரின் கவர்மென்டில் மிஸ்டர் ஹீத்தைப் போடாதது தப்பு, லங்காஷைர் பகுதிகளில் ஹீத்திற்கு சப்போர்ட் இருக்குது. நார்த் ஹாம்ப்டன், ஏவன்மௌத் பக்கத்தில் இவளுக்கு சாலிட்டாக இருக்குது சப்போர்ட். இதைப் பார்த்தால் நைன்டூன் தர்ட்டியில் பொப்பிலி ராஜா செய்ததைப் பாராட்டணும்....
கம்பூச்சியா விவகாரம் சின்ன பூச்சியாக இருந்து இப்போ வளர்ந்துட்டுது.. என்னைக் கேட்டால் காம்பிளிகேஷன்ஸ் ஜாஸ்தியாகத் தான் போகும். வீணாக நம் மண்டையை உடைச்சிண்டு என்ன லாபம்?...பாரேன், இந்த பாலமுரளியும் பாலசந்தரும் பாலகர்கள் மாதிரி சண்டை போட்டார்களே, என்ன  ஆச்சு...? கடைசியிலே அகாடமிகாரர்கள் கவர்மென்ட் அறிக்கை மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க... நேற்று ரேடியோவிலே டைகர் கச்சேரியைக் கேட்டியா? என் டாட்டர்-இன்-லாவிடம் டேப் பண்ணச் சொன்னேன். டைகருக்கு அப்புறம் தோடி பாட, ஆளைத் தேடி கண்டுபிடிக்கணும்....

May 08, 2010

ராஜாஜி -- கடுகு

ராஜாஜியும் நானும் என்று தலைப்புப் போட ஆசைதான். ஆனால் அது எனக்கே அடுக்காது. எப்போது கல்கியின் பக்தனாக ஆனேனோ, அப்போதே நான் ராஜாஜி பக்தன்; எம்.எஸ். பக்தன்;. பாரதியார் பக்தன்; தமிழ் இசையின் பக்தன்... இத்யாதி.
ஐம்பதுகளில் ராஜாஜி அடிக்கடி சென்னை லட்சுமிபுரம் யங்மென்ஸ் அசோசியேஷனில் பேசுவார். அவருக்கு மட்டும் ஒரு நாற்காலி இருக்கும். மற்ற எல்லோரும் தரை மகாராஜாக்கள் தான். பி.ஸி.ஜி. தடுப்பூசிக்கு எதிராக அவர் நிகழ்த்திய உரைகள் அபாரம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்!                   
          செங்கற்பட்டுக்காரனாக இருந்தாலும் ராஜாஜி எங்கு பேசினாலும் அங்குதான் இருப்பேன். பாட்டுக் கச்சேரி கேட்பது போல் ரசிப்பேன்.
         இந்த சமயம் செங்கற்பட்டில் நாங்கள் சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். கல்கியின் அரவணைப்பு எங்களுக்குக் கிடைத்தது.
         செங்கற்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ராஜாஜி அப்போது முதல்வர். `கல்கி' மூலமாக அவருடைய சம்மதத்தைப் பெற்றோம்.
     அந்தக் காலத்தில் எந்த பொதுக் கூட்டத்திலும் ஒரு வரவேற்புப் பத்திரம் படிக்கப்படும். உள்ளூர் பள்ளியின் தமிழ் வித்துவான் எழுதிக் கொடுப்பதை அச்சடித்துக் கண்ணாடி போட்டு, மேடையில் படித்து விட்டுக் கொடுப்போம். அது என்னவோ சேவா சங்கத்தின் தலைவருக்கு என் மீது தனிப் பாசம் இருந்தது. ஆகவே வாழ்த்துப் பத்திரத்தை படிக்கும் பணியை எனக்குக் கொடுத்தார்.
      ராஜாஜியின் அருகில் நின்று கொண்டு, அப்படியே வளைந்து நெளிந்து பவ்யமாகப் படித்தேன். கரடுமுரடான தமிழ்.  இருந்தாலும் நிறுத்தி நிதானமாகப் படித்தேன். இன்னும் சில நிமிடங்கள் ராஜாஜியின் அருகிலேயே நிற்க முடியுமே!
        படித்துக் கொடுத்தேன். ராஜாஜி வாங்கிக் கொண்டார்.
      அதன்பின் பலர் பேசிய பிறகு, ராஜாஜி தன் உரையைத் துவக்கினார். ஐம்பது வருஷங்கள் ஆகிவிட்டாலும் அவரது உரையின்  முதல் சில வரிகள் அப்படியே நினைவில் உள்ளன.
         ``இந்தக் காலத்தில் வரவேற்புப் பத்திரங்கள் எழுதுவதை ஒரு கலையாக செய்து விட்டார்கள் என்றால் இப்போது அதை வாசித்துக் கொடுப்பதையும் ஒரு கலையாக ஆக்கி விட்டார்கள்'' என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தபடியே பேசத் துவங்கினார். (அவர் என்னைப் பார்த்தார் என்பது என் கற்பனையாகக் கூட இருக்கும்!)
       அதன் பிறகு இன்னொரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. வாய்ப்பா அது! யாருக்குமே கிடைக்காத அரிய பரிசு என்றுதான் சொல்வேன்.

May 06, 2010

டயரியும் நானும் - கடுகு

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. (`அதுவரைக்கும் நாங்கள் பிழைத்தோம்' என்று நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது!) அதற்கு பல முக்கியக் காரணங்கள். முதலாவது சோம்பேறித் தனம். இரண்டாவது நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும். அந்த விஷயத்தை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி பாடாய்ப் படுத்தும். மூன்றாவது: என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது.
அது என்ன கறுப்புப் பணத்திற்கும் டைரிக்கும் சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்காவிட்டாலும் கேட்பதாகப் பாவித்துப் பதில் சொல்கிறேன்!
வருமான வரி அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு சென்றார்கள் என்றால் செய்திகளில் முதலில் வருவது: ``ரெய்டின் போது கணக்கில் காட்டாத பல லேவாதேவி (யார் அந்த `தேவி?!' அசின் மாதிரி இருப்பரா” அல்லது தமன்னா மாதிரி இருப்பாரா? )  விவரங்கள் குறிக்கப்பட்டிருந்த டைரியைக் கைப்பற்றினார்கள்.''
அந்த ஆசாமி எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் டயரி எழுதியிருப்பான்! அப்படித்தான் செய்திகள் வரும்!
இப்படிப்பட்ட செய்திகளை நிறையப் படித்ததன் விளைவாக டயரி = கறுப்புப் பணம் என்று என் மனதில் பதிந்து விட்டது.
இதை எல்லாவற்றையும் விட வேறொரு காரணமும் இருந்தது. சுமார் நூறு வருடங்கள் கழித்து என் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என் டயரியைப் படிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். படிக்கப் படிக்க என்னைப் பற்றிய மதிப்பு அவனுக்குக் குறைந்து கொண்டே போகும்.
உதாரணமாக ``தீபாவளி போனஸ், பிராவிடண்ட் பண்டில் கடன் ,இரண்டையும் சேர்த்து ஒரு 20,000 ரூபாயில் கலர் டிவி இன்று வாங்கினேன்'' என்று எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு அவன் என்ன நினைப்பான் தெரியுமா? ``ஹும் பிசாத்து.. 20,000 ரூபாய்... நாலு ஃப்ரண்ட்ஸுடன் நாம் ஸெவன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் டின்னர் சாப்பிடுவதற்கு ஆகிற செலவு கூட இல்லை. பெரிய டிவி வாங்கிட்டாராம்... ஜம்பமாக டயரியில் எழுதியிருக்கிறார்'' என்று நினைப்பான்.

May 04, 2010

ஸ்வர ஃபாண்ட் என்பது என்ன”

எழுத்துருக்களும்  நானும் என்ற ஒரு பதிவில் திருப்புகழ் ஸ்வரப் புத்தகம் அச்சடிப்பதற்காக விசேஷ ஸ்வர எழுத்துரு செய்து கொடுத்ததாக எழுதி இருந்தேன். அது என்ன என்று சிலர் கேட்டிருந்தனர்.
 ஸ்வர எழுத்துரு என்று எதுவுமே கிடையாது. இது நானே வைத்த பெயர்.
நமது  கர்நாடக சங்கீத ஸ்வரப்புத்தகங்களில் வழக்கமாக நாம் உபயோகிக்காத - அல்லது தமிழிலேயே இல்லாத எழுத்துருக்கள் இருப்பதைப் பார்த்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு சில எழுத்துக்களை இங்குள்ள படத்தில் பாருங்கள்.

சில மெய் எழுத்துகளின் கீழே புள்ளி இருக்கும். ரி நி ரீ போன்ற சில எழுத்துகளின் மேல் கொக்கியுடன் ஒரு புள்ளியும் இருக்கும். இப்படி இரண்டு உயிரெழுத்துகளை ஒரே மெய்யெழுத்தின் மீது கணினியில் அச்சடிக்க முடியாது ஆகவே  ஒரு உயிரெழுத்தை மட்டும் மெய்யெழுத்தின் மேல் டைப் செய்து பேப்பரில் பிரிண்ட் எடுத்து விட்டு பிறகு ஒரு ஆர்டிஸ்ட்டு பேனாவினால் புள்ளியோ, கோடோ. கொக்கியோ போட்டுக் கொடுப்பார். இப்படிப் போடப் படுபவை ஒரே சீராக இருக்காது. ஆகவே இம்மாதிரி எழுத்துகளை
எழுத்துருவிலேயே சேர்த்து நேரிடையாக டைப் செய்ய வகை செய்தேன். அப்படி நான் உருவாக்கிய முருகா எழுத்துருவைத்தான்  (TM-MURUGA.TTF) படத்தில் காட்டியுள்ளேன். ஏதோ கர்நாடக ஸங்கீதத்திற்கு நான் செய்த சிறிய பணி,
பின் குறிப்பு.  - ஸ்வர புத்தகங்கள் அச்சடிப்பவர்களுக்கு இந்த எழுத்துரு தேவை எனில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். எழுத்துரு இலவசம். 

May 01, 2010

லிஃப்கோ சர்மா

லிஃப்கோ புத்தக கம்பெனியின் ஸ்தாபகர் சர்மா தீவிர வைஷ்ணவர். லிட்டில் ஃப்ளவ்ர் கமபெனி ( லிஃப்கோ) துவக்கிய போது அவரது  பள்ளி முதல்வர் ஃபாதர் வெர்ஜரிடம் போய், அவரது ஆசிகளைக் கேட்டார். வெர்ஜர் தந்த பெயர்தான் லிஃப்கோ!

தினமணி கதிரில் அவரைப் பற்றி எழுதுவதற்காக அவரைப் பார்க்கச் சென்றேன். ( ஜூன் 1969). அவரைப் பேட்டி கண்டு ஒரு கட்டுரையை எழுதினேன். அது தினமணி கதிரில் வெளியாயிற்று
.
பிறகு சில வருஷ்ங்கள் கழித்து திரு சர்மா காலமானார். அவர்  காலமான சில நாட்கள் கழித்து லிஃப்கோவிலிருந்து எனக்கு ஒரு கவர் வந்தது. பிரித்துப் பார்த்தேன். ஒரு கடிதமும் செக்கும் இருந்தன. சர்மாவின் புதலவர் திரு வரதன் எழுதி இருந்தார்: “ எங்கள் தந்தையார் காலமாவதற்கு முன்பு ஒரு விரிவான உயிலை எழுதியிருந்தார். அதில் அவருக்கு உதவிய பலரைப் பற்றி நனறியுடன் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய தொகையை அனுப்பும்படி எழுதியிருந்தார். . அதன்படி உங்களுக்கு இத்துடன் ஒரு செக் அனுப்புகிறேன்.”

என் பெயருக்கு முன்னால் ஒரு வரிசை எண் இருந்தது. 157 என்பது என் நினைவு. செக தொகை: ரூ.5. ( மிக குறைந்த  தொகை என்று உதட்டைப் பிதுக்காதீர்கள். எழுபதுகளில் 5 ரூபாய்க்கு ஒரு டாலர்!)

உயிலில் பெயர்களைக் குறிப்பிட்டதுடன் பணமும் ஒதுக்கி வைத்த லிஃப்கோ சர்மா அசாதாரண மனிதர்தான்!

டேவிட் வெல்ஸ்

 என் மேஜையின் மீது மூன்று  புத்தகங்கள் உள்ளன. டேவிட் வெல்ஸ் ( DAVID WELLS)   எழுதியவை, மூன்று புத்தகங்களும் கணிதம் சம்பந்தமானவை. மூன்றும் அற்புதமான புத்தகங்கள்.முதல் புத்தகம் எண்களைப் பற்றியது. புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  எண்கள். 220 பக்கங்கள். அப்பப்பா, எத்தனை தகவல்கள். எல்லாம் சுவையானவை; மிகவும்  எளிமையானவை. கணக்கு என்று பயப்படாமல் படிக்கக்கூடியது.
இரண்டாவது புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதம். கிட்டதட்ட 250 புத்தகங்களிலிருந்து சிறிது பெரிதுமாகக் கணிதம் பற்றிய பல பகுதிகளைத்  தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.. அந்தப் புத்தகங்களின் பட்டியலும் உள்ளன. 310 பக்க  புத்தகததைப் படிக்கும்போது மனதிற்குள் : ஐயோ.. இன்னும் 200 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 150 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 100 பக்கம் தான் இருக்கிறதா, என்று மனது அடித்துக் கொள்ளும். எல்லாம்.அவ்வளவு சுவையான விஷயஙகள். 250 புத்தகங்களை  அவர் படித்திருக்கவேண்டும்.
மூன்றவது புத்தகம்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதப் புதிர்கள்,  375 பக்க புத்தகதில்  568 கணிதப் புதிர்கள் உள்ளன. ( சாம் லாயிட், மார்ட்டின் கார்ட்னர், எச்..ஈ,டூட்னி ஆகியவர்கள் எழுதிய புத்தகங்களில் உள்ள பல புதிர்கள் இதில் இருந்தாலும்  சுமார் 100 புதிய புதிர்களையும்  தந்துள்ளார்
வெல்ஸ் எழுதிய இன்னும் இரண்டு புத்தகங்களை வலைபோட்டுத்  தேடிக்கொண்டிருக்கிறேன்..
         இருங்கள். சுவையான தகவல் இனிமேல்தான் வரப் போகிறது. வெல்ஸ் பிரைமரி பள்ளி மற்றும்  செகண்டரி பள்ளியில் கணக்கு வாத்தியார்! ஆமாம். கணக்கு வாத்தியார்!.. நம்புங்கள்.
வெல்ஸ் கணிதப் பாடம் படிக்க கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். பரீட்சையில் தோல்வியுற்றார். அதற்குப் பிறகு அங்கே படிப்பைத்  தொடரவில்லை ( என்று நினைக்கிறேன்). கணக்கு வாத்தியாராகி விட்டார்!
இவரது புத்தகங்களை பிரசுரித்திருப்பது: பெங்குவின் நிறுவனம்!

பின்குறிப்பு:  பல அரிய கணிதத் தகவல்களும்.பாஸ்கரா, ஐன்ஸ்டீன். இயூலர், பால் எர்டோஸ், கலிலியோ,ஃபிப்பனொக்கி, ராமானுஜன்,  நியூட்டன்   போன்றவர்களைப் பற்றிய பல செய்திகள புத்தகங்களில் உள்ளன. அவைகளை. அவ்வப்போது போடப் பார்க்கிறேன். பயப்படாதீர்கள், அவை கணிதமாக இருக்காது. கதையாக இருக்கும்.

நாணா. - கேரக்டர்

சைலன்சர் இருந்தும், சைலன்சர் இல்லாத மோட்டார் சைக்கிளைவிட அதிகமாக படபட சப்தம் போடும் மூன்றரை ஹார்ஸ் பவர் மிலிடிரி மோட்டார் சைக்கிளில் அட்டகாசமாக, அண்ணாமலை மன்றத்தின் ஸ்டேஜின் வாசல் கதவு வரை வந்து வண்டியை ’ஜங்க்’ என்று நிறுத்துபவன்தான் நாராயணசாமி என்னும் நாணா.
நல்ல உயரம். நல்ல அகலம். ஆஜானுபாஹுவான ஆள். பூப் போட்ட ஸ்லாக், மேல் பட்டன் திறந்திருக்கும், கழுத்தில் தங்கச் செயின், இடது கையில் டிஜிட்டல் கடிகாரம்.  கழுத்தில் லாவகமாகச் சுற்றப்பட்டிருக்கும் கர்ச்சீஃப். இடது கையில் சாவிக்கொத்து.
நாணா இருக்குமிடத்தில் அட்டகாசமான சிரிப்பு இருக்கும். ஊர் வம்பு இருக்கும். சென்னையிலுள்ள அமெச்சூர் நாடக நடிகர்களைப் பற்றியும் குரூப்களைப் பற்றியும், அரட்டையும் கீழ்வெட்டும் இருக்கும். நகர சபாக்களைப் பற்றி  நுனி நாக்கு விமர்சனம் இருக்கும்.
நாற்பதைத் தாண்டிய நாணா ஒரு அமெச்சூர் நாடகக்குழுவின் சர்வாதிகாரி. இருந்தும் எல்லாரும் அவனை ’நாணா’, ’நீ’, ’வா’, என்று சர்வ உரிமையுடன் பேசுவார்கள். அவர்களுக்குத் தெரியும், நாணாவிடம் தாராளமாக உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று. சில சமயம் கோபம் வந்து நாணா கத்த ஆரம்பித்தால் எல்லோரும் கப்சிப் தான்.
நாணா, நாடகத்தில் நடிப்பதை நிறுத்தி பல வருஷங்களாகின்றன. இருந்தும் நாடகத்தின் மேல் தீராத மோகம்.
"என்னடா, பசங்களா.... மணி ஐந்தரை ஆச்சு. சரியா ஆறாவது மணிக்கு டிராமாவிற்குப் பெல் அடித்துவிடுவேன்... எவனாவது ரெடியாகவில்லை என்றால் அவன் இனிமேல் நம்ம குரூப் பக்கமே தலைவைத்துப் படுக்கவேண்டாம்.... யாரு தர்மலிங்கமா? மேக்கப் போட நீ வந்துட்டியா இன்னிக்கி... உங்கப்பா எங்கே? மனோஹர் டிராமாவிற்குப் போய்ட்டாரா? பத்து ரூபாய் அவங்க ஜாஸ்தி கொடுக்கிறாங்க அதனாலே இவர் ஓடிப் போய்ட்டாரு... சரி.... சரி.... பின்னால் பேசிக்கிறேன். நீ வேலையைக் கவனி.