February 03, 2010

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி?

யார் இவர்? வழக்கம் போல்,  நமது பத்திரிகைகள் (தினமணி நீங்கலாக) இந்தத் தமிழரைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.  இவர் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன் - ஜ. ரா.சு)  சொந்த சகோதரர். டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை பற்றி பிரபல எழுத்தாளர்  குமுதம் ரா.கி. ரங்கராஜன்.  அண்ணா நகர் டைம்ஸில்  எழுதியுள்ளார். அதை இங்கு தருகிறேன். .அண்ணா நகர் டைம்ஸிற்கு நன்றி          -- கடுகு
=======================
சென்ற ஜனவரி இருபத்தாறாம் தேதி நான் சொல்லவொண்ணா சந்தோஷத்தில் இருந்தேன்.
‘குடியரசு தினத்தன்று சந்தோஷமாக இல்லாமல் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டா இருப்பீர்கள்?’ என்று கேட்காதீர்கள். என் சந்தோஷத்துக்குக் காரணம் குடியரசு தினம் மட்டுமல்ல; என் மதிப்புக்குரிய பிரியமான நண்பர் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு அன்று பத்மஸ்ரீ விருது வழக்கப்பட்டிருந்தது.
  பேப்பரில் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்று நீளமாகப் போட்டிருந்தாலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அவர் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ‘குன்றத்தூர் டாக்டர்’தான். இந்நேரம்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவைப் பேரரசு ஜ. ரா. சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசாமியின் தமையனார் என்பது. புரசைவாக்கம் வெள்ளாளத் தெரு, 116ம் எண் வீட்டின் முன்பக்கத்து அறையில் சகோதரர்கள் இருவரும் வசித்து வந்தார்கள். இரண்டு பேருமேபிரம்மசாரிகள். ஆனால் ஒண்டிக்கட்டைகள் அல்ல.
ஏதோவொரு மாபெரும் குடும்பம் அங்கே குடியிருப்பது போல இளைஞர்களின் அட்டகாசமும் இரைச்சலும் அட்டூழியமும் அமர்க்களப்படுகிற அறை அது. இன்னார்தான் வருவார். இன்னார்தான் போவார் என்ற விவஸ்தை கிடையாது. நிரந்தர அறைவாசியாக ஒருத்தர் இருந்தார். என்னவோ ஒரு ராவ். இவர் ஒருவர்தான் எங்கள் அமர்க்களங்களில் ஈடுபடாதவர். சீரியஸான பேர்வழி. விருட் விருட்டென்று சுந்தரேசனும் புனிதனும் நானும் எழுதுவதைப் பார்த்துவிட்டு ‘பூ! கதை எழுதுவதென்றால் இவ்வளவுதானா! நான் என்னமோ பெரிசாய் நினைத்திருந்தேன்!’ என்று வாய் விட்டே ஒரு நாள் சொன்னார்.
சம்பாத்தியம் இல்லாமலேயே சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எங்களுக்கு வழிகாட்டியவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. எங்களுக்காவது சம்பளம் என்று இரண்டு காசு கிடைத்தது. அவருக்கு எதுவும் கிடையாது. கீழ்ப்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் (இன்றைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி) இங்கிலீஷ் வைத்தியம் சித்த வைத்தியம் என்ற இரண்டும் இணைந்தஇன்டக்ரேட்டட் படிப்பைப் படித்து வந்தார். ஐந்தாம் ஜார்ஜ், ஏழாம் ஹென்றி என்று இருப்பது போல இவர்தான் முதலாம் பாக்கியம் ராமசாமி. இப்போது இருப்பவர் இரண்டாம் பாக்கியம் ராமசாமி. கதை எழுதுவதில்லையே தவிர டாக்டரின் பேச்சிலே ஹாஸ்யம் வெள்ளமாய்க் கொட்டும். ஒரு முறை ராகி எங்கே பயிராகி ஜவ்வரிசி எப்படித் தயாராகிறது என்பதை நேரில் பார்த்து விட்டு வந்து இவர் விவரித்ததை நான் சொன்னால் நாலு மாதங்களுக்கு உங்களுக்கு சாப்பாடு வேண்டியிருக்காது.
சித்த வைத்தியத்தில் பட்டம் பெற்று, ஜில்லா டாக்டராக நியமனம் கிடைத்து, புறநகர் என்று அழைக்கப்படும் குன்றத்தூரில் பணியாற்றப் போய்விட்டார் கிருஷ்ணமூர்த்தி. ஜலகண்டபுரத்தில் பெரிய பெரிய தென்னந்தோப்புகளும் வீடுகளும் சொந்தமாக ஒரு பள்ளிக் கூடமும் இருந்த போதிலும், அந்த ஊர் வருமானம் அந்த ஊருக்கே சரியாகிக் கொண்டிருந்ததால் கிருஷ்ணமூர்த்தி
யின் டாக்டர் படிப்புக்குப் பெரிதும் உதவி செய்தவர் சுந்தரேசன்தான். தமையனைக் காத்த தம்பி. இருவருக்கும் உள்ள அன்னியோனியத்தைப் பார்ப்பவர்கள் கண் வைத்து விடுவார்கள்.டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் ‘ஆஸ்பத்திரி’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஒரு தடவை குன்றத்தூருக்கு சென்றேன். எந்த நிமிடத்திலும் இடிந்து விழக் கூடியதாக ஒரு பழையவீட்டில், அரை இருட்டில் சிலருக்கு மருந்துகளைக் கொடுத்துக்
கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைப்பதுகுதிரைக் கொம்பு. சென்னைக்கு வந்து, தன் சொந்த செலவில் ஊசி மருந்துகளையும் மாத்திரைகளையும் தைலங்களையும்வாங்கிக் கொண்டு திரும்புவது வழக்கம். ஏழைகளிடம் அவர் வாங்காதது காசு. வாங்கியது நல்ல பெயர். மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலம் அது. குடித்திருப்பதாக சந்தேகப் படுகிறவர்களை இவரிடம் இழுத்து வந்து சர்ட்டிபிகேட் தரச் சொல்லி போலீசார் கேட்பார்கள். பயந்து கொண்டே எழுதிக் கொடுப்பார். மறு நாள் அந்த ஆளைச்
சேர்ந்தவர்கள் கூட்டமாக வந்து ‘அதெப்படி நீ சர்டிபிகேட் கொடுக்கலாம்?’ என்று சண்டைக்கு வருவார்கள். கஷ்டமோ நஷ்டமோ குன்றத்தூரை விட்டு நகர்வதில்லைஎன்று தீர்மானமாக இருந்தார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
இன்ட்டக்ரேட்டட் மருத்துவத் துறையில் அத்தாரிட்டி என்றுபெயர் பெற்று, டெல்லி முதல் கன்யாகுமரி வரை பல மாநாடு களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, ஸொரியாஸிஸ் நோய்க்கானமருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி, வலது கை தருவது இடது கைக்குத் தெரியாமால் ஏராளமான நல்ல காரியங்களை செய்து, இன்று பத்மஸ்ரீ விருதுக்கு முற்றிலும்
தகுதியுள்ளவராகிவிட்டார்.என் குடும்பத்தில் யாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனாலும் உடனே யோசனை கேட்பது இவரிடம்தான். ஃபோனில் மருந்து சொல்வதோடு அடுத்த நாள் கூரியரில் அதை அனுப்பியும்
வைப்பார். ஒரு தடவை நான் கடுமையான ஆஸ்துமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த போது, என்னை மாடியிலிருந்து நாற்காலியோடு தூக்கிக் கீழே கொண்டு வந்து, தன்காரிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போய் சேர்ப்பித்தார்.
நான் எழுதிய கதைகளில் மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம்எது வந்தாலும் அது அவர் தந்த குறிப்பாகத்தான் இருக்கும்.கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையை வைத்து நான் எழுதியநாவலில், அந்த நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வைத்தியத் தகவல்களைத் தந்ததோடு, புத்தகங்களையும் தந்தார். ‘படகு வீடு’ என்ற நாவலில் கதாநாயகனான சாமியார் துப்பாக்கியால் சுடப்பட்டசமயம் எந்த மருத்துவ சாதனமும் இல்லாமல் கையைக் கீறித் தோட்டாவை வெளியே எடுக்கிறாள் கதாநாயகி. அதை எப்படி செய்வது என்பது பற்றி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொன்னதை அப்படியே எழுதினேன்.
பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஓர் ஆல விருட்சம். அவர்குடும்பத்தில் ஏழு பேர் டாக்டர்களாக இருக்கிறார்கள். வாழ்க,

10 comments:

  1. Haiya ! Mr JR krishnamurthy, PadmaShri, is my very d.i.s.t.a.n.t relative !! I am so happy for Dr JRK. "SA MAHATMA SU-DURLABHAHA" (Gita Ch 7 Sloka 19)

    Thank you Raa Ki Sir and Kadugu Sir.

    ReplyDelete
  2. thank you kadugu sir.the article about DR.KRISHNA MOORTHY is inspiring and interesting.I hope that the present day doctors follow his ideals.

    ReplyDelete
  3. பகிர்தலுக்கு நன்றி.. உங்களுக்கும் ரா.கி.ர அவர்களுக்கும்.

    ReplyDelete
  4. Thanks to you and Shri Raa.Ki.Ra, for sharing this happiness with us. Though I was not aware of the Padma awardee and his noble contribution in the health sector, Raa.Ki.Ra. and Bhagyam Ramaswamy are widely knwn, respected and appreciated for their humorous and serious writings. It is nice that the people in power are aware of Shri JRK and have put up his name for inclusion in the awardee list. - R. Jagannathan

    ReplyDelete
  5. என் மதிப்புக்குரிய பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு ஓர் அண்ணா இருப்பதே இந்தப் பதிவைப் படித்தபின்புதான் எனக்குத் தெரிந்தது. போட்டோவில், அட, பாக்கியம் ராமசாமி போலவே இருக்கிறாரே! அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வடக்கே பத்ம விருதுகளின் முடைநாற்றம்.
    தெற்கே குன்றத்தூர் டாக்டருக்குக் கிடைத்த பத்மம் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.
    கடுகுக்கும் ரா.கி.ர.வுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. புதிய தகவல்கள் பல அளித்தமைக்கு நன்றி. நான் ஆர கே ஆரின் மற்றும் ஜ ரா சு அவர்களின் பரம ரசிகன். ஏழாம் வகுப்பு படித்த நாட்களிலேயே - அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை படித்துப் படித்துச் சிரித்துக் கொண்டிருப்பேன்.

    ReplyDelete
  8. முகமூடிFebruary 6, 2010 at 2:58 PM

    பலே!! பலே!! பிரமாதம். கடுகு சார், ரா.கி.ரா. அவர்களை புரசைவாக்கம் அனுபவங்களை மேலும் பல எழுத சொல்லுங்க; இல்ல அவர் தனி blog வைச்சிருக்காரா? அப்புறம் அந்த ஜவ்வரிசி மேட்டர் என்னனு கொஞ்சம் கேளுங்க; முழுசா தெரியாம மண்டைய கொடயுது.

    ReplyDelete
  9. திரு ரா.கி.ர அவர்கள் ஒவ்வொரு வாரமும் அண்ணா நகர் டைம்ஸில் 6,7 வருஷங்களாக எழுதி வருகிறார், அண்ணா நகர் டைம்ஸ் வெப்-சைட்டில் பாருங்கள்

    ReplyDelete
  10. சீதா பாட்டி பேசுகிற ஆங்கில வார்த்தைகளைக் கண்டு நான் வியந்து போனதுண்டு...என்ன நயமான நகைச்சுவை..இன்றைக்கு வடிவேலு, விவேக் நகைச்சுவைகளில் ஆபாசம் கலக்காமல் .. அழகான நகைச்சுவை எப்படி அமைப்பது என்று ஜா.ரா.சு. சாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!