February 20, 2010

அம்புஜம் அம்மாள் - கடுகு

மதுராந்தகத்தில்,ஏழெட்டுக்  குடும்பத்தினருக்கு,  பால் "ஊற்றும்" பால்கார அம்புஜம்மாள், உறவினரைவிட நெருங்கினவர்.
சிறிது தடித்த சரீரம். அதை விட தடித்த சாரீரம்.  ஒரு ரூபாய் அளவு குங்குமப் பொட்டு. அறுபதை தாண்டியவள் என்று  சொல்ல முடியாத அளவு சுறுசுறுப்பு
           "என்ன அம்புஜம்... நேற்று பால் ஒரே தபாலா இருந்துதே... இப்படிக் குழாய்த் தண்ணியைக் காசாக்கினால் வருஷத்துக்கு இரண்டு டில்லி எருமை வாங்கிடுவே" என்று யாராவது சொல்லிவிட்டால் போதும். அவ்வளவு தான்--- பிலு பிலு என்று பிடித்துக்கொண்டு விடுவாள்.
           "இதோ பாரு பத்மா... நான் பார்த்துப் பொறந்தவ நீ... இன்னா பேச்சு பேசறே. உன் அம்மா கூட இந்த முப்பது வருஷத்திலே இப்படிக் கேட்டதில்லை.  நேத்து பொறந்த பொண்ணு... பாலு தண்ணியா இருந்தா வுட்டுடேன்.... சைக்கிள் பால் கொண்டாந்து கொடுக்கறாங்களே வாங்கிக்கோ... பால் பவுடரையும் மைதா மாவையும் கரைச்சு ’திக்'காக ஊத்து வாங்க... என்னமோ பரம்பரையா வந்த தொழிலுன்னு தான் இதைச் செய்யறேன். எனக்கு ஆறு பிள்ளைங்க, சம்பாதிச்சுப் போடறாங்க. அவங்க கூட ”ஏன் மாட்டை கட்டிக்கிட்டு அழுவறே” அப்பிடின்னு என்கிட்டே சொல்றாங்க.... பணம், காசுக்கு ஆசைப்பட்ட காலம் மலையேறிப்போச்சு... இது ஒரு பொழுது போக்கு எனக்கு. அவ்வளவுதான். என் மருமவப் பொண்ணுங்க எல்லா வேலையையும் பார்த்துக்கிடுதுங்க... எனக்கும் கிழவனுக்கும் ஏதாவது வேலை வேண்டாமா?... இன்னொரு தபா தண்ணி கிண்ணின்னு பேசாதே, கொயந்தே" என்பாள். பேச்சில் எப்போதும் வாஞ்சை ஓரளவு இருக்கும். உண்மையில் அம்புஜம்மாளுக்கு பால் வியாபாரம் ஒரு பொழுது போக்குதான். பிள்ளைகளின் வருவாயே போதுமானது.
"ஆச்சு... எனக்கு அறுபத்து மூணு ஆச்சு வயசு... உன் பாட்டியும் நானும் ஒண்ணா "தாச்சி' விளையாடி இருக்கோம். நல்லது கெட்டது என்றால் உங்க வூட்டில நான் இல்லாம ஒண்ணும் நடக்காது. நாள், கிழமை என்றால் எனக்குத்தான் முதல் வெற்றிலைப் பாக்கு. கல்யாணம் என்றால் ஒரு வாரம் வூட்டோடு இருக்கச் சொல்லிவிடுவாங்க. ”ஒரு சாமானை ஒருத்தர் எடுத்துக்கிட்டுப் போகாதபடி நீதான் அம்புஜம் அக்கறையாப் பாத்துப்பே” என்று உன் பாட்டி சொல்லும். ஏன் சாவறப்போ கூட நான் தான் கடைசிக் கடைசியாக  நாலு ஸ்பூன் பாலை அதன் வாயில ஊத்தினேன். என் கையைப் புடிச்சிக்கினே மூச்சை வுட்டுது.... அதுன் கையாலே எவ்வளவோ வாங்கித் தின்னுருக்கேன்....'' என்று  சொல்லியபடி, இறந்து போன தன் பழைய தோழியை எண்ணி நிஜமாகவே கண்ணீர் விடுவாள்.
            இப்படித்தான் அம்புஜம்மாளுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உறவு, ஒட்டுதல், பந்தம் உண்டு. அதனால் தான் அவளுக்கு புத்தி தெரிந்த நாளிலிருந்து இதே வீடுகளுக்குப் பால் கொடுத்து வருகிறாள்.
              பொங்கலன்று சூரியனுக்குப் படைத்து விட்டு நிறைய பழம், கரும்பு மஞ்சள் ஆகியவைகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய்க் கொடுப்பாள். இந்த வகையில் இருநூறு முன்னூறு கூட செலவழிப்பாள்!
தொழிலால் பால்கார அம்மாள்; மனதால் செல்வச் சீமாட்டி!

7 comments:

  1. A welcome change from usual humorous characterisation. There is a personal touch in this. I thought of our konar and his family when I was young and living at Srirangam. We also had a dhobi (Kannan will collect the clothes in the morning for washing at Kollidam and return in the evening) with whom I and all my siblings had a friendly relationship. And then regular 'Kiraikkaari', Mavadu seller et al. Only thing I cannot write so engrossingly like you but cherish those memories!

    ReplyDelete
  2. Yes kadugu sir.. People like Ambujam amma, Postman, Servent maid... They always have a bond with family, if we treat them as a family member..eventhough I moved out of my home town about 10 yrs ago, still I remember those people.. so touching..

    ReplyDelete
  3. Thank you Mr Ramudu.
    Please await the " servant maid" character soon. Humor is like a mirror: it shows the exact refection of everything but slightly from a humorous angle. A sense of humor is just common sense, dancing.
    There is more logic in humor than in anything else. Because, you see, humor is truth.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!