February 24, 2010

அன்புள்ள டில்லி - 11

எழுத்தாளர் தி. ஜானகிராமன் எவ்வளவுக்கெவ்வளவு திறமை வாய்ந்த  எழுத்தாளரோ அவ்வளவு எளிமை மிக்கவர். அலட்டல் இல்லாதவர். 'இலக்கியப் பத்திரிகைகள் அவரைச் சொந்தம் கொண்டாடினாலும், அந்த ஒரு சின்ன வட்டத்திற்குள் அகப்பட்டுக்  கொள்ளவில்லை.
அவர் டில்லியில் ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றி வந்தார். அவரது அலுவலகமும் என் ஆபீசும் எதிர் எதிர் கட்டடம். யு.என்.ஐ. கான்டீனில் இடைவேளைகளில் அவருடன் எத்தனையோ முறை அளவளாவியுள்ளேன். அவர் எல்லா  பத்திரிகைகளையும் விடாமல் படிப்பவர் அல்ல. ஆனால் படிப்பவைகளை ரசித்துப் படிப்பார்.
ஒரு சமயம் "மோனா"விற்கு  மாத நாவல் ஒன்றை எழுதித் தரும்படி "சாவி' கேட்டிருந்தார். நாவலை வாங்கி அனுப்புவது என் பொறுப்பாக இருந்தது. நான் தினமும் அவரைச் சந்தித்து 10,15 பக்கங்கள் என்று வாங்கி விமான மூலம் அனுப்பி வந்தேன்.
"சார், உங்கள் நாவல் எத்தனை பக்கம் வரும்?'' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை அளித்தது மட்டுமல்ல, ஒரு அரிய பாடத்தையும் போதித்தது.
"நான் கதாபாத்திரங்களை நன்கு தீர்மானித்து விடுவேன். அதன் பிறகு, கதை என் கையில் இல்லை. பாத்திரங்கள் கையில் உள்ளது. ஆகவே கதையை எத்தனை பக்கங்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.
 ( ஒரு இடைச் செறுகல். பின்னால் நான் ஒரு நாவல் எழுதும்போது அவர் சொன்னபடி கேரகடர்களைத் துல்லியமாக  மனதில் உருவாக்கிக் கொண்டேன். அடுத்து கதையை 16  அத்தியாயங்கள் என்று  நிர்ணயித்து, அந்தந்த அத்தியாயத்தின் கதையை ஒன்றிரண்டு வரிகளில் எழுதினேன். தி.ஜா, சொன்னதை பின்பற்றி எழுதினேன். இரண்டே நாளில் 60 பக்க நாவலை எழுதினேன். அந்த  நாவல் பற்றி இன்னும் பல விவரங்கள் உள்ளன. பின்னால் பார்க்கலாம்.)
 \           சரி, தி ஜா.வின்  நாவலுக்கு வருவோம். ஒரு 29’ம் தேதி கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார். முதல் தேதிக்குள் புத்தகத்தை அச்சடித்து நாலைந்து பிரதிகளை விமான மூலம் ஆசிரியர் சாவி  எனக்கு அனுப்ப, அவற்றை தி.ஜா.விடம் கொடுத்தேன். "அட, ரொம்ப வேகமான் வேலையாக இருக்கிறதே. பாவம், உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன்'' என்றார்.
பதிலுக்கு நான் அவரை சிரமப்படுத்திய விஷயத்தைச் சொல்லுகிறேன்.

தி.ஜா. ஒரு சமயம் அலுவலக வேலையாக மேற்கு ஜெர்மனி போனார். போகுமுன்பு என்னிடம் சொன்னார். என் எழுத்தாள நண்பருக்காக ஒரு விசேஷ மருந்தை ஜெர்மனியிலிருந்து வாங்கி வருமாறு அவரிடம் கேட்டுகொண்டேன்.
பத்து நாளைககுப் பிறகு அவர் ஜெர்மனியிலிருந்து திரும்பினார். திரும்பி வந்த தினமே எனக்குப் போன் செய்தார். "நீங்கள் கேட்ட மருந்தை வாங்கி வந்திருக்கிறேன். எனக்கு உடம்பு சரியாக இல்லை. நான் ஆபீசுக்கு லீவு போட்டிருக்கிறேன். யு.என்.ஐ. கேன்டீனுக்கம் வர முடியாது. ஆகவே என் வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ள் முடியுமா?'' என்று கேட்டார்.
போனேன். மருந்தைக் கொடுத்து விட்டுச் சொன்னார்.
"ஜெர்மனியில் இறங்கிய தினமே, அன்றைக்கே எனக்கு உடம்புக்கு வந்து விட்டது. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டேன். அவர்கள் டிஸ்சார்ஜ் பண்ணியவுடன் அன்றே நேராக டில்லிக்குத் திரும்பி விட்டேன்.  எங்கும் போகவில்லை. ஆபீஸ் வேலை எதையும் பார்க்கவில்லை'' என்றார்.
உடல் நலமில்லாமல் ஜெர்மனி ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வந்தாலும், எப்படியோ மறக்காமல் மருந்தை வாங்கி வந்திருக்கிறார்!  அவர் அசாதாரண எழுத்தாளர் மட்டுமல்ல: அசாதாரண மனிதரும் கூட!
                 வேறு ஒரு சமயம், இவரைக் "கணையாழி"யின் கௌரவ ஆசிரியராக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். (இவர் விளம்பரத்தைப் பார்க்கவில்லை.)  அதில் இவர் பெயரை "தி.ஜ.ர.' என்று போட்டிருந்தார்கள்.  ( தி, ஜ, ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்,.அவர் தி.ஜ. ர:  இவர்  தி,ஜா, ) இப்படித்   போடப்பட்டிருப்பதை அவரிடம் சொன்னேன்.
”தி.ஜ. ரங்கநாதனைத்தானே தி.ஜ.ர. என்று சொல்வார்கள். என் பெயரை நான் சுருக்கி எழுதுவதே இல்லையே. பரவாயில்லை.'' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார்! எத்தனைப் பெருந்தன்மை!
தி. ஜானகிராமனின் எழுத்தில் உள்ள கனமும் அழுத்தமும் அபாரமானவை. இன்று சில இளம் எழுத்தாளர்களிடம் அவரது பாதிப்பு இருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.
*                      *                         *             
"நான்தான் லால்'
டில்லியில் உள்ள சங்கீத சபாக்கள் வருஷத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகளை நடத்தும். அதற்கு மேல் நடத்தக் கட்டுப்படி ஆகாது.
இந்த சபா நிகழ்ச்சிகளிலும் ஜுகல் பந்தி போன்ற நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்பவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். ஒரு சமயம் மாதம் இரண்டு தடவைகூட வந்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டு நான் ப்த்திரிகையில் எழுதியிருந்தேன். "டில்லிக்கு லால் என்றால் ஒரு ஈடுபாடு உண்டு போலும். ஜவஹர்-லால், குல்ஜாரி-லால், லால்-பகதூர் ஆகியவர்கள் மாதிரி லால்-குடியும் டில்லியில் ஆட்சி புரிகிறார் இசை ரசிகர்களை'' என்று எழுதியிருந்தேன்.
சில நாள் கழித்து ஒரு காலை நேரத்தில் எனக்குப் போன் வந்தது. என் மனைவி கமலா போனை எடுத்தாள். மறுமுனையிலிருந்த குரல், "ஹலோ, நான் லால் பேசறேன்' என்று சொன்னது குரல்.கமலாவிற்குப் புரியவில்லை. "நீங்க யாரு? யார் வேண்டும்?'' என்று கேட்டாள்.
"நான் லால்குடி ஜெயராமன் பேசுகிறேன். அவருடன் பேச வேண்டும்'' என்றார்.
"ஓ... லால்குடி சாரா? நமஸ்காரம்.  நமஸ்காரம் அவர் பாத்ரூ... இல்லை... இல்லை இதோ கூப்பிடுகிறேன்'' என்றாள் கமலா.
லால்குடியுடன் நான் பேசினேன்.  அவர் ” சார், உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் விசிறி. உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.  உங்களுக்கு எப்போது   சௌகரியப்படும்?'' என்று கேட்டார்..
எனக்குத் தலைகால் புரியவில்லை. உலகமே என் எழுத்தைப் பாராட்டிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். அட, உண்மையாகவே என் எழுத்திற்கு ஒரு விசிறி கிடைத்து விட்டார்.! ”நீங்கள் என்னை சந்திக்க வருகிறேன் என்று சொன்னதே எனக்கு பெரிது விருது. நிச்சயம் என் வீட்டிற்கு நீங்கள்ல் வரவேண்டும். அதற்கு முன் நான் உங்களைப் பார்ப்பதுதான் முறை. சார். நீங்கள் உலகப் பிரசித்தி பெற்ற வயலின் கலைஞர் நான் ஒரு.. ” என்று ஆன் சொல்லிகொண்டிருக்கும்போதே...
“ சார்.. என் விரலில் ஒரு வித்தை இருக்கிறது. அதே மாதிரி உங்கள் விரலிலும் விததை இருக்கிறது. என்னமாய்................. (மேலே அவர் சொன்னவைகளை தவிர்க்கிறேன்).. ஆமாம், உங்களை ஒன்று கேட்கவேண்டும்.  நீங்களும் லாலகுடியா?” என்று கேட்டார்.
“ இல்லை சார்... ஏன் கேட்கிறீர்கள்?”
“ இல்லை. இந்த வாரம் தினமணி கதிரில் “ டாக்டர் தர்மராஜன்” என்று ஒரு கேரக்டரை எழுதியிருக்கிறீர்கள். நூறு சத விகிதம், அவர் எங்க ஊர் டாக்டரேதான். அவரை மனதில் வைத்துக்கொண்டுதான், உங்கள் கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதனால் தான் ’ நீங்களும் லாலகுடியா?’ என்று கேட்டேன்” என்று சொன்னார்.
”அப்படியா?. என் ஊர் செங்கல்பட்டு.  டாக்டர் தர்மராஜன் ஒரு கற்பனைதான்.” என்றேன்.
“ எங்க ஊர் டாக்டரைப் பார்த்து அப்படியே விவரித்து  இருக்கிறீர்கள்.என்றுதான்  நினைத்தேன்..பிரமாதம்.” என்று பாராட்டினார்.
ஒரு கற்பனை கேரகடர் ஒரு நிஜ நட்பிற்கு வித்திட்டது.
அதன் பிறகு கரோல்பாக் சென்று அவரை நான் சந்தித்தேன். அவரும் என் வீட்டிற்கு வந்திருந்தார். உலகப் பிரபல கலைஞர் என்பதை விட என் விசிறி என்ற காரணத்தால், என் அருமை மனைவி கமலா தடபுடலாக விருந்து செய்தாள். அதன் பிறகு லால்குடி எப்போது டில்லி வந்தாலும் முதல் தீர்த்தம் மாதிரி முதல் போன் எனக்குத்தான்.
அவர் இசையில் மேதை; நான் இசையைப் பொறுத்தவரை பேதை (இது தவிர வேறு சில துறைகளிலும் அப்படித்தான் என்று இங்கு கமலா கமெண்ட் அடிப்பதைக் கண்டு கொள்ளாதீர்கள். இப்படி சமயா சந்தர்ப்பம் தெரியாமல் உண்மையைத் தொபுகடீரென்று போட்டு உடைப்பாள்!)  இருந்தும் அவர் மிகவும் எளிமையுடன் பழகினார்.  நிறையக் கடிதங்கள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.
             ஒரு சமயம் பலமுரளி கிருஷ்ணாவும் வீணை பாலசந்தரும் , பாலமுரளி கண்டுபிடித்த ஒரு புதிய ராகத்தைப் பற்றி அறிக்கைப் போர் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் எந்த மாதிரியெல்லாம் அறிக்கைகள் வரும்  என்று ஒருகேலிக் கட்டுரையை எழுதி குங்குமத்திற்கு அனுப்பி இருந்தேன். ஒரு நாள் காலை லால்குடி போன் பண்ணினார். “இப்ப தான் வீணை பாலசந்தர்  போனில் சொன்னார்.  குங்மத்தில் வந்திருக்கும்  உங்கள் கட்டுரையை  ரொம்பவும் பாராட்டினார். வரிக்கு வரி விழுந்து விழுந்து சிரித்தாராம்... நான இன்னும் பார்க்கவில்லை... ....”
 ( இந்த கட்டுரையைக் கண்டுபிடித்து வெளியிடப்பார்க்கிறேன்)

இசையைத் தவிர பல நூறு விஷயங்களை நாங்கள் பேசுவோம். நான் எழுதிய எல்லா  கட்டுரைகளையும் அவர் படித்திருக்கிறார்.  நகைச்சுவை (முக்கியமாக சிலேடை) விஷயங்களை வாரி விடுவார் லால்குடி.
      இன்னொரு விரல் வித்தைக்காரர் ஓவியர் கோபுலு. அவரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  கோபுலுவைப் பற்றி பின்னால் ”கோபுலுவும் நானும்” என்று தலைப்பில் விரிவாக எழுதுகிறேன். ( தொடரும்)

5 comments:

  1. ராஜ சுப்ரமணியன்February 24, 2010 at 10:43 AM

    மிக நன்றாக இருக்கிறது. தி.ஜா.வின் விசிறிகளில் நானும் ஒருவன். “அசாதாரணமான மனிதன்” ரொம்பவே சரி.

    லால்குடியை (ஊர் அல்ல) பற்றி இப்போதுதான் விரிவாக படிக்கிறேன். இவரும் இன்னொரு “அசாதாரணமான மனிதர்தான்”

    நன்றிகள் பல.

    ReplyDelete
  2. Indha maathiri yaar pandhi parimaaruvaargal? Lalgudi, Gopulu, S.Balachandar, Saavi - yeththanai yeththanai paerai vasiyam seithirukkiradhu ungal ezhuththu! Oru Isai maedhaiyidam, Isai patri illaamal natpudan pazhaga ungalukku koduththu vaiththirukkiradhu. Oru vishayaththil Lalgudiyum Naanum onru padugirom - ungal çharactergaLai padiththadhum, yengal vaazhkkaiyil kurikkitta yaraavadhu gnyapagam varugirrargal! Vaazhga, Valarga ungal pangalippu! - R. Jagannathan

    ReplyDelete
  3. Mama,
    Fantastic no words spell bound . You have lived a enviable life

    ReplyDelete
  4. தி.ஜானகிராமனின் தீவிர ரசிகன் நான்..கோதாவரிகுண்டு என்ற கதையை மறக்கவே முடியாது...சாப்பாடு போடு 40 ரூபாய் ,மிஸ்டர் டேஷ்..டேஷ்..டெஷ்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..இவரது கதைகளைப் படித்ததும் மனம் வியப்பில் விரியும்..சில சமயம் கறையும்..கோதாவரிகுண்டு படித்தபின் ஒரு வாரம் அதில் வந்த ராயர் மாமியின் கேரக்டரின் நினைவே துறத்தியது..சமீபத்தில் ஜெயா டீவியில் அவரது கதையை போட்டார்கள்..சாப்படு போட்டு 40 ரூபாய் கதை தான்.. ம்ஹூம்..சுமார தான்..கதையில் வந்த தாக்கம் பார்க்கும் போது வரவில்லை...

    ReplyDelete
  5. Very interesting Sir; you are fortunate to have such great personalities as 'friends'!
    Glad to be able to visit your blog!
    Jayanthi.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!