February 19, 2010

அன்புள்ள டில்லி-- 10

ஒரு நாள் விடிகாலைப் பொழுது. டெலிபோன் மணி அடித்தது. சென்னையிலிருந்து டைரக்டர் பாலசந்தர்தான் பேசினார்.
"ஹலோ, ஒரு சந்தோஷமான சமாசாரம். நம்ப படம் 'வறுமையின் நிறம் சிவப்பி'ற்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்திருக்கிறது. இப்போதுதான் பேப்பரைப் பார்த்தேன். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள முதன்முதலில் உங்களுக்குத்தான் போன் பண்ணுகிறேன். படம் டில்லியில் தயாரிக்கப்பட்ட போது நீங்கள் செய்த உதவிகளை...'' (என் தற்பெருமையைத் தவிர்க்க மீதி வார்த்தைகளை இங்கு தரவில்லை!)
இதே ’நம்ப’ படம் ’வறுமையின் நிறம் சிவப்பு' பின்னால் பெரிய துயரத்தையும் தரப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.
இதை இந்தியில் எடுக்க மறுபடியும் கே.பி., கமல் அண்ட் கோ டில்லி வந்தனர். டில்லியில் சில நாள் படம் எடுத்து விட்டு சிம்லா போய்த் திரும்பினார்கள். பாலசந்தர், கமல் முதலானோர் விமானத்தில் வந்து, சென்னைக்கு சென்று விட்டனர். படப்பிடிப்புக் குழுவினர் பஸ்ஸில் டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  இமாசல் பிரதேஷில்ஒரு பெரிய பள்ளத்தில்  பஸ்  விழ, எட்டு பேர் அனாமதேய மலைப் பாதையில் இறந்து போனார்கள். செய்தி அறிந்ததும் பாலசந்தர் மறுநாளே டில்லிக்கு பறந்து வந்து சண்டிகாருக்குச் சென்றார். காயமடைந்தவர்கள் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.  சென்னைக்குப் பயணம் செல்லக் கூடிய நிலையில் உள்ளவர்கள் எல்லாரையும் டீலக்ஸ் பஸ் ஒன்றில் ஏற்றி  டில்லிக்கு அனுப்பினார். இவர் விமானத்தில் டில்லிக்கு வந்தார். 
எல்லோருக்கும் விமான டிக்கட்
டில்லியிருந்து செய்ய வேண்டிய எற்பாடுகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்து, தமிழ்நாடு ஹவுஸிற்கு அழைத்துப் போனேன். "சார், யூனிட் எல்லோருக்கும் விமான் டிக்கட் வாங்க வேண்டும். யூனிட் மொத்த பேரையும் விமானத்தில் அழைத்துப் போகப் போகிறேன்'' என்றார்.
இறந்து போனவர்களின் உறவினர்களை விமானத்தில் அழைத்து வந்திருந்தார். இந்த வகையிலும் ட்ரங்க் கால், ஓட்டல் செலவு, டாக்ஸி செலவு என்று பல ஆயிரங்கள் செலவாகி இருந்தது.
"எல்லோரையும் விமானத்தில் அழைத்துக் கொண்டு போனால் செலவு பல ஆயிரம் ஆகுமே!'' என்று கேட்டேன்.
"தெரியும். தயாரிப்பாளர் தலையில் இந்தச் செலவைக் கட்டப் போவதில்லை. நானே 25000 ரூபாய் திரட்டி எடுத்து வந்திருக்கிறேன். சந்தோஷமான சமயத்திலும் சரி, சங்கடமான சமயத்திலும் சரி, அவரவர் தங்கள் குடும்பத்தினருடன் இருக்கத்தான் விரும்புவார்கள். நம்ப மாட்டீர்கள். சண்டிகர் போனதும், "எல்லாரும் விமானம் மூலம் சென்னைக்குப் போகிறோம்' என்று நான் அறிவித்ததும், பாதிப் பேருக்குக் காயங்களின் வலி மறைந்துவிட்டது. எத்தனை முகமலர்ச்சி'' என்றார்
.மறுநாள் காலை விமானத்திற்கு டிக்கெட்டுகள் வாங்கினோம். ஸ்ட்ரெட்சர் எற்பாடு செய்தோம். உதவி டைரக்டர் அமீர்ஜான் உட்கார முடியாத நிலையில் இருந்ததால், அவருக்காக மூன்று டிக்கெட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அப்போது தான் இவருக்காக மூன்று சீட்களை விமானத்திலிருந்து கழட்டி எடுத்து இடம் கொடுப்பார்களாம். முன் இரவு எட்டு மணிக்குள் சண்டிகரிலிருந்து பஸ் வந்து விடும் என்று எண்ணியிருந்தோம். பஸ் வரவில்லை. சண்டிகருக்குப் போன் செய்தோம். பஸ் கிளம்பத் தாமதமாகி விட்டதாகவும், காலை நான்கு மணிக்குள் வரும் என்றார்கள். பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டே இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்து விட்டு அவரவர் அறைக்குச் சென்று படுத்தோம்.
எனக்குச் சரியாகத் தூக்கம் வரவில்லை. எல்லாரையும் பத்திரமாக ஏற்றி அனுப்புவது என் பொறுப்பு என்று நானே எண்ணிக் கொண்டிருந்ததே காரணம்.
இரவு ஒரு மணி இருக்கும். அறையை விட்டு வெளியே வந்து பஸ் வருகிறதா
என்று பார்க்க தமிழ்நாடு ஹவுஸின் வாயிற்பக்கம் வந்தேன், . அங்கு கேட்டருகில் முண்டாசு கட்டிக் கொண்டு ஒருவர் (வாட்ச்மேன்?) நின்று கொண்டிருந்தார். "க்யா அபி தக் பஸ் ஆயி நஹி?'' என்று இந்தியில் கேட்டேன்.
"ஆமாம் சார், பஸ் வரவில்லை. நானும் பஸ் வருவதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்'' என்றது முண்டாசுக் குரல். அட, பாலசந்தர்தான்! அப்புறம் அங்கேயே நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அறைக்குத் திரும்பினோம். மறுபடியும் காலை  மூன்று மணிக்கு வந்தால் அப்போதும் பாலசந்தர் அங்கு இருந்தார். "என்ன, நீங்கள் தூங்கவில்லையா?'' என்று கேட்டேன்.. "இல்லை, இப்போதுதான் நானும் வந்தேன்'' என்றார்.
பஸ் விடிகாலை வந்தது. பல தொல்லைகளைச் சமாளித்து விமானத்தில் அனைவரையும் ஏற்றி அனுப்பினோம்.
சங்கம் நிறைந்த டில்லி
டில்லியில் தமிழர்கள் எத்தனை சங்கங்களை உருவாக்கியுள்ளனர் என்பதைப் பட்டியல் போட்டுப் பார்க்க முடியாது. (அண்ணா முதலமைச்சரானதும் டில்லி வந்தபோது முதன் முறையாக எல்லா சங்கங்களும் சேர்ந்து ஒரு வரவேற்பு கொடுத்தபோது, இருபத்து மூன்று சங்கங்கள் இருப்பதாகத் தெரிய வந்தது. அது 1967-ல். இப்போது அந்த இருபத்து மூன்று, குறைந்த பட்சம் நாற்பத்து மூன்றாவது ஆகியிருக்கும்.)
இப்படிப் பல சங்கங்கள் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் எற்பட வேண்டும் என்று பலர் விரும்புவதுதான். (இந்தக் குற்றசாட்டு எனக்கும் பொருந்தும். நானும் எழெட்டு சங்கங்களில் தலையை அல்லது மூக்கை நுழைத்து இருக்கிறேன்.) இப்படிப் பட்ட சங்கங்களில் ஒன்று அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்.
இது, "டில்லி எழுத்தாளர் சங்கமா?' அல்லது 'தமிழ் எழுத்தாளர் சங்கம், டில்லியா?' என்பது பற்றி ஒரு சமயம் ஒரு மணி நேரம் காராசாரமாக விவாதம் நடந்தது. "தமிழ் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் இதில் உறுப்பினராகலாம். அவர்கள் நமது சங்கத்தின் சென்னைக் கிளையை அமைக்கலாம்'' என்பது போன்ற கற்பனை விஷயங்களில் பலத்த மோதல் நடந்தது.
அன்றைய கூட்டத்திற்குப் பிறகு சுமார் ஒரு வருஷம் எந்தக் கூட்டமும் நடக்கவில்லை. பின்னார் சுமாராக உயிர் பெற்றபோது பழைய சண்டை மறந்து போய் விட்டது. (நிர்வாகிகளும் மாறிப் போய்விட்டார்கள்.),
இந்தப் பிணக்குகள், விவாதங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு உயர்ந்து நின்ற எழுத்தாளர் திரு. தி. ஜானகிராமன் அவர்கள். அவருக்கு அகில இந்திய ரேடியோவில் பணி. ஏன் அலுவலகம்  அவரது அலுவ்லகத்திற்கு நேர் எதிர் கட்டடம். அவரைச் சற்றுத் தூரத்திலிருந்தும் சில சமயம் சற்று நெருங்கியும் பார்த்துப் பழக சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவரைப் பற்றி... (தொடரும்)

5 comments:

  1. Intresting sir..
    Why dont you write your life history?

    ReplyDelete
  2. With just Rs. 25000.00, how many air-tickets from Delhi to Madras could be purchased?

    Apart from all this, you have clearly depicted the human-kindness of Mr Balachandar, and ofcourse, yourself. Such great persons!

    ReplyDelete
  3. Yes you should write it....Please start immediately.

    ReplyDelete
  4. Regarding air tickets: Please remember that this was in 1980.

    -Kadugu

    ReplyDelete
  5. மனித நேயம் மிக்க இயக்குனர்தான்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!