November 17, 2015


 பித்துக்குளி முருகதாஸ் இன்று காலமானார். அற்புதமான பாடகர். குரல் வளம் மட்டுமல்ல; ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும் விரல் வளமும் கொண்ட இசைக் கலைஞர்.
முன்பு எழுதிய பதிவை மீள்பதிவாகப் போடுகிறேன்’

பித்துக்குளி முருகதாஸும் நானும்

ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக் கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு,  உச்சரிப்பு சுத்தம், அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின் சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.
பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக் கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.

பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன். டில்லிக்கு பல சமயம் அவர் வந்திருக்கிறர். ( ஏன், யூ.என். ஐ. கேன்டீனுக்குக்கூட வந்திருக்கிறார்.)

October 07, 2015

அதே பாடல்: அதே ராகம்!

அதே பாடல்: அதே ராகம்!
ஆமாம். முதுகு வலி போய்விட்டது. இப்போது கண்களில் பிரச்னை.  ஆகவே. மேலும்  SICK LEAVE  தேவைப்படுகிறது. விரைவில்  SICK-கிற்கு விடை கொடுத்துவிட்டு ‘CHIC- என: வருவேன்.
-- கடுகு

August 19, 2015

கிணறு வெட்ட....

 முன் குறிப்பு: துப்பறியும் கதை எழுதினால் விரைவில் மிகப் பிரபலம் ஆகிவிடலாம் எனும் ஆசையினால் நான் சில துப்பறியும் கதைகள் எழுதினேன். அவற்றிலிருந்து ஒன்று. 
குற்றவாளியை கண்டு பிடிப்பது உங்கள் வேலை. எல்லா க்ளூவும் கதையிலும் படத்திலும் இருக்கும். ஐந்து தினங்களுக்குப் பிறகு விடையைப் போடுகிறேன்.
=================================
                 அந்த படுக்கை அறையின் எந்த சுவரைத் தட்டினாலும் பணம், பணம் என்ற எதிரொலி கேட்கும்.
    அவ்வளவு செல்வச் செழிப்பு.


    மகாபலிபுர சிற்பக் கோயில்களுக்கு நடுவே ஒரு நவநாகரிகக் கட்டடம் எழுப்பினாற்போல் அந்த சின்ன கிராமத்தின் ஏழைக் குடிசைகளின் சூழ்நிலையில், பரிதாபமான ஓட்டு வீடுகளுக்கு மத்தியில் பளபளவென்று இருக்கும் அவ்வீட்டின் சொந்தக்காரர் மாரப்ப பூபதி, தன் படுக்கை அறையில் தன் ஆசை மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்.
    அவருக்கு நரைத்தது மீசை, தலை முடி எல்லாம். நரைக்காதது ஆசை!
    அவருக்கு வயது அறுபத்திரண்டு.
    சர்வாலங்கார பூஷிதையாய் அவர் மேல் சாய்ந்து கொஞ்சிக் கொண்டிருப்பவள் அவரது இரண்டாம் மனைவி சித்ராங்கி. அவர்களின் காதல் போஸில் இருந்த கவர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஜெயராஜே திணறிப் போவார், அந்த மாதிரி ஓவியம் வரைய!
                         *                                  *                                *
சித்ராங்கிக்கு வயது இருபத்திரண்டு. வாரிசு இல்லாத லட்சாதிபதியான பூபதி, "புத்' என்னும் நரகத்தில் விழாதிருக்க ஒரு புத்திர சந்தானம் பெற்றுத் தர சித்ராங்கியை மணம் புரிந்தார்.
    தானே அந்த வாரிசாக ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு சித்ராங்கிக்கு.

    "சித்ராங்கி... கண்ணே... பயாஸ்கோப்லே என்னென்னமா டயலாக் பேசறாங்க. அது மாதிரி பேசேன். கொஞ்சேன்."
"போங்க. .. அவங்க தோட்டம் துறவுலே கூட வெட்கமில்லாமல் ஓடியாடிப் பாடறாங்க... நாம அப்படி எல்லாம் செய்ய முடியுமா?"
   " நீ சொல்றதும் வாஸ்தவம்தான். இந்தக் காலை வெச்சுகிட்டு நான் ஓடறதா?" என்றார்  பூபதி. அவரது வலது காலின் முழங்காலுக்குக் கீழே மரத்தால் செய்யப்பட்ட கால்தான் இருந்தது.
    "அய்யோ... அத்தான். அதை மனசிலே வெச்சு நான் சொல்லலை.
   " சித்ராங்கி, அந்த விஷயத்தை விடு. உனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கப் போறேன். எப்போ தெரியுமா?”- குறும்பாகக் கண் சிமிட்டினார்.
   ”சின்ன பூபதி குவாகுவான்னு குரல் கொடுத்ததும்தானே? இந்தாங்க பாதாம் பருப்பு, பால்.”
   ”எனக்கெதுக்குடி அதெல்லாம். உன்னையே கடிச்சு சாப்பிடப் போறேன்” என்று சொல்லிக்கொண்டே வெறியுடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
                                   *                                              *
    ”சித்ராங்கி நாள் ஆகிக்கிட்டே போறது. சீக்கிரமா ஏதாவது செய்தால் தான் ஆச்சு. இருக்கிறதைப் பார்த்தால் அந்தக் கிழவன் மண்டையைப் போட மாட்டான் போல இருக்கு.
 ”ஆமாம். தெனக்கும் குளந்தை குளந்தைன்னு சொல்லுது. தூக்க மாத்திரை போட்டுக் கொடுத்துப்புடறேன் பாலிலே.”
   சித்ராங்கி, தன் காதலன் அம்பிகாபதியுடன் ஆற்று மதகினருகில் பேசிக் கொண்டிருந்தாள்.
   ”சரி, கிழவன் கணக்கைத் தீர்த்தால் தான் சொத்து பத்தெல்லாம் வரும். நீ என்ன சொல்றே?”
    ”வெஷம் கொண்டா ராவிக்குப் பாலில் கலந்து கொடுத்துடறேன். உயில் என் மேலே எழுதியாயிட்டது.”
  ”சீ! வெஷம் கிஷமெல்லாம் கொடுத்தால் உன் கழுத்துக்குக் கயிறு வந்துரும். நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன். கிழவனுக்கு ராத்திரியில் தூக்கத்திலே நடக்கிற வியாதி உண்டுன்னு சொன்னியே, அது டாக்டருக்குத் தெரியுமா?”
    ”தெரியும். போன வாரம் டவுன் டாக்டர்கிட்டே போய் சொன்னார். அவர் கூட ஏதோ மாத்திரை கொடுத்தாரு. ஆனால் அதே சமயம் இந்த வியாதிக்கு மருந்து கிடையாதுன்னும் சொன்னாரு.”
   ”போவட்டும். என் பிளான் இதுதான். ராத்திரி தூக்க மாத்திரை கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துடு. கிழம் பொணம் மாதிரி தூங்கிப்புடும். அப்படியே குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வூட்டுக்குப் பின்னாலே இருக்கிற மொட்டைக் கிணத்திலே போட்டுருவோம். ’தூக்கத்தில் நடந்து போயிருக்காரு. இருட்டிலே கிணத்திலே விழுந்துட்டார்’னு, சொல்லிப்புடுவம்.”
   ”என் மேலே சந்தேகம் வந்தால்?”
    ”அதெப்படி வரும். நீ காலைல எழுந்திருக்கிறே. அவரைத் தேடறே. கெணத்தடி போற வழியில் தரையில் அவர் காலடி தெரியுது. நேரே கெணத்துக்குப் போய் பாக்கறே. உள்ளே ஆளு செத்துக் கிடக்கான். நீ குய்யோ, முறையோன்னு கத்தறே. அழுவறே. கூட்டத்தைக் கூட்டிப்பிடறே.”
   ”உம்.. சரி.. அளுவறேன், என்ன செய்யறது சொத்து வருதே.
    ” அப்புறம் ஒரு விஷயம். கிணத்தடியில் ஒரு பக்கமாக கொஞ்ச இடத்திலே தண்ணியைக் கொட்டி ஈரமாக்கி வெச்சுடு. கிழவன் காலடிங்க மாதிரி நாலைஞ்சை ஈர மண்ணில் அமுக்கிடலாம்.”
   ”அந்த ஆளுக்கு ஒரு கால்தானே?”
    ”சித்ராங்கி  அவ்றோட மரக்காலின் அளவு எடுத்துக் கொடு. அதுமாதிரி ஒண்ணு செஞ்சு அதையும் நம்ப பாதத்தையும் மாத்தி மாத்தி வெச்சு மண்ணிலே பதிச்சுட்டால், கிழவன் நடந்து போய் விழுந்துட்டான்னு ஸ்திரமாயிடும். நிறைய இடத்தை ஈரமாக்கிடாதே. அப்புறம் நம்ப காலடி விழுந்துடும்.
   ”சரி... அப்படியே செஞ்சுறலாம்... சீச்சி... விடு இப்படியா இழுத்துப் பிடிக்கிறது. மூச்சுத் திணறது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறேன்.”

                        *                                        *
    சித்ராங்கி கிட்டத்தட்ட சந்திரமதியைத் தோற்கடிக்கும் வகையில் பயங்கரமாக ஒப்பாரி வைத்து, தலையைக் கலைத்துக் கொண்டு, மூக்கைச் சிந்திக் கண்ணைக் கசக்கி,மார்பில் (லேசாக) அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
 ”யாரும் கெணத்தடிக்குப் போவாதீங்க. இன்ஸ்பெக்டர் வந்து அல்லாத்தையும் பாக்கட்டும். இந்த மாதிரி கேஸுகளில் எதையும் யாரும் தொடப்படாது. ”கர்ணம் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் துப்பறியும் கதைகள் படித்திருப்பவர்.
    மாரப்ப பூபதியின் ஈர, உயிரற்ற உடல் கிணற்றுக்கு வெளியே கிடத்தப்பட்டு இருந்தது. வாரிசு இல்லாமலேயே இறைவன் திருவடியை அடைந்து விட்டிருந்தார்.
    இன்ஸ்பெக்டர் சிவா வந்திறங்கினார். அந்த சமயம்.
    விசாரித்தார்.
    வீட்டை ஆராய்ந்தார்.
    காலடித் தடயங்கள் கிணற்றை நோக்கிச் செல்வதைப் பார்த்தார்.
 ”பாவம். இப்படிப்பட்ட வியாதிக்காரங்களை ராத்திரியில், சாதாரணமாக கட்டி வெப்பாங்க... அனாவசியமா செத்துப்...”
    முடிக்கவில்லை.
    ஏதோ யக்ஷிணி கூறிற்று.
    ”சித்ராங்கி, உங்க கணவர் தற்செயலாகக் கிணற்றில் விழுந்து சாகலை. யாரோ கொன்னுட்டிருக்காங்க... இது நிச்சயம்! ”என்றார் சிவா.
    அவர் எப்படிக் கண்டுபிடித்தார்?

விடை: ஐந்து நாளைக்குப் பிறகு போடப்படும்!

July 20, 2015

மன்னிக்கவும்.. .மன்னிக்கவும்... மன்னிக்கவும்...


தாமதத்தைத் தவிர்க்க  முடியவில்லை.
கண்ணிற்கு லேசர் சிகிச்சை நடக்க இருக்கிறது.
ஆகவே மேலும் சில நாள் தாமதம் ஆகும்.
அன்புடன்
கடுகு

June 27, 2015

உங்கள் கனிவான கவனத்திற்கு

வணக்கம்.
அடுத்த பதிவு 15 நாள் கழித்து வரும்.  JET LAG காரணம். இந்தியா திரும்பிவிட்டேன்.
-கடுகு

 பின்னூட்டம்:  நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு வெளுத்துக் கட்டுங்கள்.

நேயர்கள் சர்பாக நானே ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்! என் பிளாக்கின் முதல் நேயர் நான்தானே!
 

June 05, 2015

சர்மாஜி and the art of getting motor cycle driving Licence!

அந்த காலத்தில்- அதாவது, அறுபதுகளில் ஒரு ஸ்கூட்டர் வாங்குவது மிக கஷ்டமான காரியம். புக் பண்ணி விட்டு பல வருடங்கள் தவமிருக்க வேண்டும். அதன் பலனாக  ஸ்கூட்டர் வாங்கி விட்டால் அடுத்த பிரச்னை  டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது. ஆர்.டி. அலுவலகத்தில்சார், மணி என்ன?” என்று கேட்டால் கூட 'மணி’ கொடுத்தால் தான் பதில் கிடைக்கும்!
  போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தினால் ஒரு செகண்ட் ஹாண்ட் ஸ்கூட்டர்  கிடைத்தது. LEARNERS LICENCE -ம் ஒரு மணி கியூவில் நின்று வாங்கிவிட்டேன்.
 ஒரு மாதம் ஆன பிறகு, பக்கா டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டு (அதாவது கவலைப் பட்டுக் கொண்டு) இருந்தேன்.
என் நண்பர் சர்மாஜியிடம் பேச்சுவாக்கில் என் பிரச்னையைச் சொன்னேன். ”மாமாஜி… எனக்கு ஹிந்தியும் தெரியாது.. லஞ்சம் கொடுக்கவும் தெரியாது” என்றேன்.
    ”அங்கிள்.. நோ..பிராப்ளம். இது பெரிய காரியமா?.. நான் குர்காவ் R T O ஆபீசில் வாங்கித் தருகிறேன். என் வீடு குர்காவில்தான் இருக்கிறது. பத்து நாளைக்கு முன்பு போயிருந்தேன். புதுசாக ஒரு ஆபீசர் – இளைஞர். ரொம்ப சூட்டிகையான ஆசாமி - இருக்கிறார்.. லஞ்சம் என்ற  பேச்சுக்கே இடமில்லை. நான் உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார்.  (குர்காவ் - டில்லி தூரம் கிட்டதட்ட 25 கிலோமீட்டர்.)
(சர்மா எல்லாருக்கும் மாமாஜி. அவருடைய கைங்கரியத்தால் எல்லாருக்கும் நான் ‘அங்கிள்” ஆன கதையை ஒரு பதிவாகப் பின்னால் போடுகிறேன்!)
“ சரி.. சர்மாஜி.. டில்லியில் இருப்பவருக்கு குர்காவில் இருக்கும் ஆபீசில் லைசென்ஸ் கொடுப்பார்களா?” என்று கேட்டேன்.
“என் வீட்டின் முதல் மாடியில் குடி இருக்கிறீர்கள் நீங்கள் என்பதை மறந்து விட்டீர்களா?” என்று கண்ணைச் சிமிட்டினார்! புரிந்து கொண்டேன்.

May 10, 2015

ஒரு வரி - ஒரு ரூபாய்

ஒரு வரி பதில் 
1960 களில், டில்லியில் தபால் துறை அலுவலகத்தில் சர்வதேச  பார்சல் மெயில் அக்கவுண்டிங்க் செக் ஷனில்  நான் பணி புரிந்து கொண்டிருந்தேன்!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்தவேண்டும்.அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். )  இந்த வரவு செலவு கணக்குகள் சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். ( இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

இந்த கணக்கு முறை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு வர வேண்டிய தொகைக்கு 'பில்’ அனுப்ப வேண்டும்.  அதே மாதிரி   நமக்கு வர வேண்டிய தொகைக்கு நாம்  'பில்’ அனுப்ப வேண்டும்.
 ஆனால் இங்கிலாந்தைப் பொருத்தவரை இரண்டையும் நாமே செய்யவேண்டும். அதாவது நம்முடைய கணக்கை  நாம் அனுப்புவதுடன், இங்கிலாந்து அனுப்ப வேண்டிய கணக்கையும் நாமே தயார் பண்ணி அனுப்ப வேண்டும், அதை அவர்கள் சரிபார்த்து கையெழுத்துப் போட்டு அனுப்புவார்கள்!  ( அதாவது அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நம் தலையில் எந்த தலைமுறையிலேயோ கட்டி விட்டிருந்தார்கள்.!.. சுதந்திரத்திற்கு வந்து இருபது ஆண்டு கழித்தும் வாயை மூடிக்கொண்டு, கையைக் கட்டிகொண்டு, பவ்யமாக அடிமைபோல்  இந்த வேலையை செய்து கொண்டிருந்தோம்.) 

1970-களில் இங்கிலாந்து- இந்தியா கணக்கை '‘செக்’ பண்ணும் வேலை எனக்குத் தரப்பட்டது. ‘வேறு  எந்த நாட்டுக்கும்  தராத சலுகை இங்கிலாந்திற்கு மட்டும் எதற்குக் கொடுக்கவேண்டும் என்று ஏன் யாரும் கேட்கவில்லை. இதை ஏன் நாமே கேட்கக்கூடாது  என்று எண்ணி,  பிரிட்டன் தரப்பு கணக்கை இனி பிரிட்டனே  தயாரித்து அனுப்பும்படி தெரிவித்து விடலாம் என்று ஒரு ஒரு குறிப்பை எழுதி, என் மேலதிகாரிக்கு அனுப்பினேன்.
அந்த ஃபைல் 15 நாள் கழித்து  எனக்குத் திரும்பி வந்தது.

April 30, 2015

கோபுலு


ஓவியமேதை கோபுலு காலமானார்.

 அருமையான, எளிமையான மனிதர். 

அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது  மா பெரும் பேறு. 

அவருக்கு  என் கண்ணீர் அஞ்சலி.


  -கடுகு

----------------------------------------------------------------------------------------------

April 27, 2015

ஸ்டார் டிவி. ஒழிக


என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. "மாப்பிள்ளை. இந்தாங்கோ கொஞ்சமா ஹார்லிக்ஸ் கலந்துண்டு வந்திருக்கேன் . மூளையைக் கசக்கிக்கொண்டு எழுதறதுக்குச் சக்தி வேண்டாமா?' என்று சொல்லி என் மாமியார் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸை என் முன் வைத்தாள்.
இதுவரை  என்னைப் பார்த்து நேரடியாகப் பேசி அறியாத (ஏன் ஏசியும் அறியாத, அதாவது நேரடியாக ஏசி அறியாத!) என் அருமை மாமியார்,. 1. மாப்பிள்ளை என்று கூப்பிட்டார், 2. ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார், 3. என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்தார்.!! 

எத்தனை அதிசயங்களைப் படைத்தாய், இறைவா! இப்படி அதிசயங்களால் திக்குமுக்காடிப் போய் விட்டதால் தொச்சுவும் அவன் நால்வகைப் படைகளும் என் வீட்டுக்கு வந்து முகாமிட்டு இட்லி, தோசை சம்ஹாரம் செய்து கொண்டிருப்பதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை!
அந்த சமயம் என் மூளைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. என் மாமியார் மாறியதன் மர்மம் விளங்கியது. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொச்சு வந்து விட்டுப் போனதிலிருந்து ஏற்பட்ட மாற்றம்! இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது?

என் அருமை மனைவி கமலாவும் அவளுடைய அருமை அம்மாவும், அதாவது என் மாமியாரும் மாவடு வாங்கப் போயிருந்தார்கள். மாவடு வாங்கப் போய் இவர்கள் மாங்காய் பார்டர் போட்ட புடவையை வாங்கி வந்துவிடப் போகிறார்களே (சாதாரணமாக அவள் அப்படிச் செய்வது வழக்கம்!) என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். தனிமையும் கவலையும் சேர்ந்து ரொம்ப போரடிக்கவே டிவியைப் போட்டேன். இதைவிட டி.வி. அதிகமாக போர் அடிக்காது என்ற அல்ப ஆசையுடன்!

April 15, 2015

நாலு விஷயம்:.எட்டணா-1, எட்டணா- 2, பெயர் விநோதம்- 1, பெயர் விநோதம்--2

சென்னை:  எட்டணா  விஷயம் -1
இது சுமார் 60 வருஷத்திற்கு முந்தைய கதை. ஐம்பதுகளில்நான் சென்னை  ஜி.பி.ஓ-வில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்குள்ள பல டிபார்ட்மெண்டுகளில், வி.பி. கிளெய்ம்ஸ் என்பதும்  ஒன்று. [அது என்னமோ அந்த டிபார்ட்மெண்டே சுமார் பத்து பதினைந்து பெண் ஊழியர்கள் கொண்ட அல்லி ராஜ்யம் தான்  என்பது தொடர்பில்லாத [(சுவாரசியமான!) குட்டித் தகவல்!]
அந்த காலத்தில் ஏராளமான வி.பி.பி லெட்டர்கள், பார்சல்கள். புத்தகப் பாக்கெட்டுகள், நாட்டு மருந்துகள் இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்கா. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் போகும்.  அங்கு பார்சல்கள் டெலிவரி ஆகும்போது , பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை வசூல் செய்து நமக்கு அனுப்புவார்கள். சில சமயம்  எட்டணா, ஒரு ரூபாய் குறைவாக அனுப்பி இருப்பார்கள். . உடனே  வி.பி. கிளெய்ம்ஸ், ஜி.பி.ஓவிலிருந்து கடிதம் போகும்.  "இன்ன பார்சலுக்கு எட்டணா குறைவாக அனுப்பியிருக்கிறீர்கள். அந்தத் தொகையை அனுப்பவும்” என்று  கார்பன் பேப்பரை வைத்து, மூன்று காபி  எழுதி, அந்த நாட்டிற்கும், நம் ஆடிட் ஆபீசிற்கும் அனுப்பி வைக்கப்படும். பதில் உடனே வராது. நினைவூட்டல் கடிதம் எழுதி அனுப்பப்படும்.

”சிங்கப்பூர் டாலர், ரூபாய் ஆகியவைகளின் மதிப்புகள் ஏற்ற இறக்கத்தின் காரணமாக தொகையில்  வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று பதில்  நிதானமாக வரும்! ஆனால் அதற்குள் சில சமயம் ஆடிட் அலுவலகத்திலிருந்து    ஆட்சேபனைக் கடிதம் வரும்,  எட்டணா விஷயம்; வசூலிக்க எட்டு ரூபாய் செலவானது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.
அதுவும் வராத பணத்திற்கு இத்தனை செலவு. (சில வருஷங்களுக்குப் பிறகு. ஐந்து  ரூபாய் வரை வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை என்று உத்தரவு போட்டுவிட்டார்களாம்!

 அட்லான்டா USA: இருமல் மிட்டாய்:  எட்டணா  விஷயம் -2
பல வருடங்களுக்கு முன்பு அட்லாண்டா நகரில் ஐந்து மாதம் தங்கி இருந்தோம். கோகா கோலா,  CNN  ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அங்குதான் உள்ளது. ஒரு நாள், என் மகளுக்கு அறிமுகமான பேராசிரியர் “ என்னிடம் சிம்பொனி நிகழ்ச்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் இருக்கின்றன. நீங்கள் உபயோகித்துக்கொள்ளுங்கள்: என்று சொல்லி, கொடுத்தார். (டிக்கட் விலை 35 டாலர்!)

என் மகள் “ அம்மாவும் நீங்களும் போய் வாருங்கள். இந்த  நாட்டில்   இசை நிகழ்ச்சிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனூப்பினாள்.
அந்த டிக்கட்டுகளில் ஒரு முக்கிய குறிப்பு இருந்தது: ட்ரஸ்  கோட் (  DRESS CODE) கோட், சூட், டை, ஷூவுடன்தான் வரவேண்டும். மேற்படி  ஆடை அலங்காரங்களைப்   (டிக்கட் மாதிரி, அவைகளும் ஓசிதான்!) போட்டுகொண்டு நிகழ்ச்சிக்குப் போனோம்.
அரங்கிற்குள் நுழையும்  வாயிலில் ஒரு உயரமான ஸ்டூலின் மீது அலங்காரமான பெரிய  கிண்ணத்தில்  நிறைய மிட்டாயை வைத்திருந்தார்கள். எனக்கு முன்னே போனவர் இரண்டு, மூன்று மிட்டாய்களை எடுத்துக் கொண்டதைப் பார்த்தேன். நானும் அது மாதிரி இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டேன். உள்ளே போய் உட்கார்ந்தோம்.
வந்திருந்தவர்களில் எண்பது பங்கு பேர் 60, 70 வயதானவர்களாக இருந்தார்கள்.
சீட்டில் உட்கார்ந்தவுடன், எல்லாரும் கோவில் பிரசாதம் மாதிரி அதை வாயில்  போட்டுக் கொள்வதைப் பார்த்தேன். நானும் மிட்டாயின் மேல் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை நீக்கி விட்டு, மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டேன்.
மெந்தால் போன்ற ஜலதோஷ, இருமல் மாத்திரை.  அதுவும் ஸ்ட்ராங் ரகம்! ஏன் இதை கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

திரை விலகியது. நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கில் நிசப்தம். இசை அருவியாகப் பொழிந்தது.  இடையில் 3,4 தடவை  எல்லாரும் ஒரு நிமிஷம் கைதட்டினார்கள்.
மற்றபடி அரங்கில் நிசப்தம். ஒருத்தர் கூட  இருமவில்லை!
அப்போதுதான் புரிந்தது, இலவச மிட்டாய் வினியோகத்தின் மர்மம்!
(டிசம்பர் சீசனில்  நம் ஊர் சபாக்காரர்கள்   இதைக் கடைப்பிடிக்கலாமே என்று அதிகப்பிரசங்கித் தனமாக எதுவும் நான் சொல்லப் போவதில்லை!)

டில்லி:   பெயர் விநோதம் -1
ஒரு சமயம் -- ஒரு சமயம் என்ன, 50 வருஷத்திற்கு முன்பு !-  டில்லி டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக ஒரு  வித்தியாசமான பெயர் கண்ணில் பட்டது. இப்படி ஒரு வித்தியாசமான,  யாருமே வைத்துக் கொள்ளாத பெயரை  வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி, அவரையே பேட்டி கண்டு, குமுதத்தில் எழுதலாம் என்று எண்ணினேன், அவர், கல்காஜி என்ற பகுதியில் இருந்த டில்லி  SMALL SCALE INDUSTRIES-ல் ஒரு முக்கிய அதிகாரி. அவருக்குப் போன் செய்யலாமா கூடாதா என்று தயக்கம்  ஏற்பட்டது.  கேலி செய்கிறேன் என்று நினைத்து, அவர் கோபித்துக் கொள்வாரோ என்று லேசான பயமும் ஏற்பட்டது.

April 07, 2015

அன்புடையீர்!

அடுத்த பதிவு சற்று தாமாதமாக வரும்.

மன்னிக்கவும். ஒரு வாரத்திற்குள்
போடப் பார்க்கிறேன்.

-கடுகு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

March 18, 2015

எழுத நினைத்தால் எழுதலாம்


மாங்கு, மாங்கு என்று முந்நூறு பக்கத்தில் மாத நாவலுக்கு ஒரு கொலைக் கதையை எழுதி முடித்து விட்டேன். தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ பெரிதாக ஏப்பம் விடும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுதான். வயிற்றில் அடையாக இருக்கும்! அதனால்தான் ஏப்பம் சைரன் மாதிரி ஒலிக்கிறது.
தலைப்புக்குத் தவித்துக் கொண்டிருந்த அவஸ்தையில் தொச்சுவைக் கண்டதும் எரிச்சல்தான் வந்தது.
“தொச்சு... முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என்றால் அப்புறம் பேசலாம். இந்த நாவல் வேலை அவசரமா முடிக்கணும்'' என்றேன்.
“அத்திம்பேரே... ஸாரி... உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு வரலை. திடீரென்று ஒரு ஐடியா வந்தது. சொல்லிவிட்டுப் போகலாமே என்று வந்தேன்.''
“ஐடியா தேவையாக இருக்கிற போது உனக்குச் சொல்லி அனுப்பறேன். அப்படியே ஐடியாவில் ஊறின பரம்பரை... தொச்சு...  கொஞ்சம் என்னைச் சும்மா விடு'' என்றேன்.
"பரம்பரை' என்று நான் சொன்ன வார்த்தையைக் கேட்டுக் கமலா, “எங்க பரம்பரை ஒண்ணும் உங்க பரம்பரைக்குத் தாழ்ந்து போகவில்லை. உங்க பரம்பரை அழகு தெரியாதாக்கும்...'' என்று ஆரம்பித்தாள்.
“கமலா... எதுக்கு இப்படி நாக்குல நரம்பில்லாமல் பேசறே? அவரானால் மண்டையைக் கசக்கிக் கதை எழுதறார். உனக்குக் கதை எழுதத் தெரியுமா? இல்லை, உன் தம்பிக்குத்தான் கதை எழுதத் தெரியுமா...? கதை எழுதத் தெரிஞ்சவாளுக்கு இல்லாத ஐடியாவா உன் தம்பிக்கு வரப் போறது...?'' என்று என் மாமியார் என்னை மட்டம் தட்டும் அர்த்தத்தில் பேச, அருமைப் பெண்ணிற்கு எடுத்துக் கொடுத்தாற்போல் ஆகியது.

March 05, 2015

வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் குறும்(புப்) பாக்களும்

In a complex court settlement our parent company gets
custody of us on weekends!


--அமெரிக்காவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப் புரட்டினால் எல்லாம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட் நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்தித்தாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கிய போதுதான் தெரிந்தது,

Marry me, Judith with the
understanding, of course that
past performance is not
a guarantee of future results.




புத்தகத்தின் தலைப்பு: THE WALL STREET JOURNAL  BOOK OF WIT -EDITED BY CHARLES PRESTON.   வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் 'உப்பும் மிளகும்' என்ற பத்தியில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள், ஒருவரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. 225 பக்கங்கள்.  பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.

(ஒரு  முக்கிய குறிப்பு:  இந்தப்  பதிவில் உள்ள
ஆங்கில பாகத்தை ஒரு  PDF file ஆகத் தயாரித்து உள்ளேன். தேவைப்படுபவர்கள் தெரிவித்தால் ஈ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.)

FACTS OF LIFE
Marriage is a great teacher. And much what it teaches you don't need know unless you get married. - Robert  Fuoss
Write on
The permanence of the marriage pact
Depends on how couples plan it;
With some the vows are written on sand,
While others take them for granite. - George O. Ludcke
Wifely Logic
The toothpaste he forgets to cap:
For neatness he cares not a rap,
At night I listen to him snore;
At parties often  he's  a bore.
But what care I what faults has he
As long as he puts up with me. -- Lea Zwettler
Wistful shrinking
Darling you are always right!
I'm the one who isn't bright.
Wall Street expert, you can tell
When to buy and when to sell,
You bet colds and double chins
Eating proteins, vitamins
Luggage, toasters, wrist watch, car --
You know where the bargains are,
When I spurn your good advice
Later I must pay the price.
Though my love for you is strong,
Sweetheart, can't you one be wrong? -Edith Ogutsch 
Ballot Boxed
My wife and I, on equal terms,
Live happily together.
It is my decision what to do;
She just determines whether.
-Robert W. Campbel

February 23, 2015

ஐயோ, வேண்டாம் புகழ்!


 எக்கச்சக்கமாக விலையேறி இருக்கிறதே என்று கூட லட்சியம் பண்ணாமல் யாரோ அரை கிலோ மிளகாய்ப் பொடியை (குண்டூர் ரகம்) அவர் கண்களில் அப்பியது போல இருந்தது. எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு! அவருடைய கண் எரிச்சலுக்குக் காரணம் கஞ்சன்-க்டிவிடிஸோ அல்லது வள்ளல் க்டிவிடிஸோ அல்ல. அவருக்கு எதிரே இருந்த பேப்பரில் வந்திருந்த ஒரு சின்னச் செய்தி.
 
  "பிரபல எழுத்தாளர் "மைதா"வின் புதிய நாவல் வெளியீட்டு விழா, ஓட்டல் கீதா கார்டனில் நடைபெற்றது. மாண்புமிகு. உயர்திரு, மேதகு, வணக்கத்துக்குரிய, தவத்திரு என்று பல புள்ளிகள் "மைதா"வின் எழுத்து வன்மையை வன்மையாகப் புகழ்ந்து பாடியிருந்தார்கள் --- தம்புரா சுருதிகூட இல்லாமல்!

இதைப்
படிக்கப் படிக்க, அவருக்குப் படிப்படியாக எரிச்சல் அதிகமாகியது!
  மயிலாப்பூர் தாமோதரன் என்னும் "மைதா' சிறந்த எழுத்தாளர். நான்கு வருஷத்துக்கு முன் இவருடைய முதல் கதை பிரசுரமாயிற்று. ஆனால் பத்து வருஷமாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஏகாம்பரத்தை விட, அவருக்குப் பிரபலம் ஏற்பட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் மைதாவின் கதைகளுக்கு வரவேற்பு.
  ஏகாம்பரம் தம்முடைய எட்டுக் கதைகள் திரும்பி வந்தால் கூட வருத்தப்பட மாட்டார். ஆனால் "மைதா"வின் கதை ஒரு பத்திரிகையில் வந்து விட்டால் அவ்வளவுதான். மிதந்து கொண்டிருக்கும் கப்பலையும் கவிழ்த்து விட்டு, கன்னத்தில் கையுடன் உட்கார்ந்து விடுவார்.

February 11, 2015

முன்யோசனை- யோசனை -ஐடியா- உத்தி

1. அமிதாப்பச்சனுக்கு அடிபட்டபோது...

    சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு படப்பிடிப்பின் போது அமிதாப்பச்சனுக்கு அடிபட்டது நினைவிருக்கும்.
    அவரை பம்பாய் எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது. ஏர்போர்ட் வரை அவரை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல வேண்டும்.
    அந்தப் பாதை ஒரு  நோயாளியை எடுத்துச் செல்வதற்கு உகந்ததாக இருக்குமா    என்பதைக் கண்டறிய வேண்டும் என்று டைரக்டர் மன்மோஹன் தேசாய் தீர்மானித்து, ஒரு ஆம்புலன்ஸில் தானே படுத்துக் கொண்டு, விமான நிலையம் வரை ஓட்டச் சொன்னார்.
    இரண்டு, மூன்று பாதைகள் வழியாகச் சென்று திரும்பி, எந்த வழியில் அதிக மேடு பள்ளம் இல்லையோ அந்தப் பாதையில் அமிதாப்பச்சனை எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்.
    இப்படி அலுங்காமல் குலுங்காமல் எடுத்துச் சென்றதும், அமிதாப் உயிர் பிழைக்க ஒரு காரணமாக இருந்தது.
    இது தான் முன் யோசனை, திட்டமிடுதல்.

யோசி, யோசி.
    எதையும் யோசிக்காமல் செய்வது பல சமயம் இழப்புக்கு வழி வகுக்கும்.
    யோசி, யோசி.
    உலகப் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் கம்பெனியான ஐ.பி.எம்.மின் தாரக மந்திரமும் இதுதான். யோசித்தால் தானாகத் திட்டமிடுவீர்கள்
1950-ல் மர்லீன் டீட்ரிச் என்ற அமெரிக்க நடிகைக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
    அவர், விழா நிர்வாகிகளிடம் ஒரே ஒரு தகவல் கேட்டார்: "விழா மேடையில் படுதாக்களும், செட்களும் போடுவீர்களே அவை  எந்த வர்ணங்களில் அமைக்க இருக்கிறீர்கள்?''
    அவர்கள் தந்த விவரத்தைப் பின்பற்றி, விழாவன்று, தான் அணிய வேண்டிய உடைகளின் வண்ணங்களைத் தீர்மானித்தார். அதனால் பரிசு பெற மேடைக்கு வந்த போது அவருடைய உடைகள் , மேடைப் படுதா வர்ணங்களுக்கு இசைவாக அமைந்து, அனைவரையும் கவர்ந்தன.
    முன்பே யோசனையுடன் திட்டமிட்டதன் பலன் இது!

 ராஜாஜியின் ஐடியா

 ராஜாஜியைப் பற்றி ஒரு துணுக்கு உண்டு. விமானப் பயணம் செல்லும்போது சுயவிலாசமிட்ட கவர் ஒன்றை எடுத்துக் கொண்டு போவாராம். விமான நிலையத்தில் பயண இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக் கொள்வார். அந்த ரசீதை (பாலிஸி?) கவரில் போட்டு, தன் வீட்டுக்குப் போஸ்ட் செய்து விட்டு, விமானத்திற்குள் செல்வாராம்.

இது உண்மையோ, கற்பனையோ தெரியாது. முன் யோசனைக்கும் திட்டமிடுதலுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.
  நண்பரின் உத்தி 
என் நண்பர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். நாலைந்து மாதங்கள் தங்கிவிட்டு வர திட்டம். அமெரிக்க கிளம்புமுன் வீட்டின் அறைகளை, பீரோக்களை நன்றாகப் பூட்டினார்.

January 31, 2015

கதம்பம்....

 1.சில உண்மையான, அதே சமயம் நம்பமுடியாதத் தகவல்கள்

அ. மூக்கின் மேல் மூன்று விரல் 
     ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள், இன்னொரு குடும்பத்தின் இரண்டுசகோதரிகளை மணந்து கொள்வதுண்டு. இது சற்று அபூர்வமானது என்றாலும் பல குடும்பங்களில் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே குடும்பத்திலிருந்து மூன்று சகோதரர்கள், இன்னொரு குடும்பத்திலிருந்து மூன்று சகோதரிகளை மணந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டீர்கள். அப்படி மணந்து கொண்ட மூன்று ஜோடிகளில் ஒரு ஜோடியை எனக்குத் தெரியும். அவர்கள் என் சதாபிஷேக நிகழ்ச்சிக்கும் வந்து இருந்தார்கள்!

ஆ. பல வருஷங்களுக்கு முன்பு குமுதத்தில் வந்த துணுக்கு:
தூத்துக்குடியில் ஒரு தம்பதிக்கு 1963’ம் ஆண்டு மே 5.ம் தேதி  ஒரு குழந்தை பிறந்தது.
பிறகு இரண்டு வருடம் கழித்து, 1965 மே 5 தேதியன்று  இரண்டாவது குழந்தை பிறந்தது.
அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, 1967 மே 5 தேதியன்று  மூன்றாவது குழந்தை பிறந்தது!
குமுதத்தில் வந்த இந்தத் துணுக்கில் மேற்கொண்டு எந்த விவரமும் இல்லை! (சுமார் 50 வருஷத்திற்கு முன்பு படித்தது. ஊர் பெயர், தேதி இரண்டும் சரியாக நினவில் இல்லாததால் ஒப்புக்குப் போட்டுள்ளேன்.)
 

2.கிளு கிளு அறிவிப்பு
விமானப் பயணத்தின் போது விமானம் கிளம்பியதும்,.  விமான பணிப்பெண் சில பாதுகாப்பு அறிவிப்புகளைச் செய்வதுடன் அவைகளைச் செய்தும் காண்பிப்பார்.   அமெரிக்காவில் உள்ள  SOUTH WEST AIRLINES  விமானத்தில்  அறிவிப்புகளை வித்தியாசமாகவும், நகைச்சுவையுடனும் ( சில சமயம் ‘ஏ’ ரகமாகவும் - ‘பெரிய ’A’  இல்லை, சின்ன ’a’ தான்!) செய்கிறார்கள்!
சில அறிவிப்புகள்!  

உங்கள் காதலரை விட்டுப் பிரிந்து போவதற்கு  ஐம்பது வழிகள் உள்ளன. ஆனால் இந்த விமானத்திலிருந்து வெளியே செல்ல ஆறு வழிகள் தான் உள்ளன....”
"This flight is non-smoking. However, if you really feel the need to have a cigarette while we are in flight, please do feel free to step outside on to the wing."

 "I hope you choose Southwest the next time you want to fly in an aluminum tube, at 500 miles per hour, 10,000 feet in the air." 
"Everyone, we have a rare treat today, a first time flyer at the age of 93!"  (applause)  "His co-pilot will be..." 
After a fairly difficult landing, "Sorry folks for the bumpy landing. It wasn't the pilot's fault and it wasn't the plane's fault. It was the asphalt." 
"There is, in fact, a smoking section on this airplane. It is located on the tip of the left wing, where we will be featuring the film 'Gone with the Wind'"

January 19, 2015

சிறந்ததில் சிறந்தது

BEST OF THE BEST  OF THE CENTURY


சமீபத்தில் ஒருபுத்தக  விற்பனைத் திருவிழாவிற்குப் போய் வந்தேன். அமெரிக்காவில்   நியூ ஜெர்ஸி மாநிலத்தில்  MONTCLAIR  என்ற இடத்தில்ஆறு மாதத்திற்கு ஒரு தரம்  American Association of University Women (AAUW) நடத்தும்  பிரம்மாண்டமான பழைய புத்தக BOOK SALE.    முதல் நாள் முதல் மூன்று மணி நேரம் மட்டும் 15 டாலர் நுழைவுக் கட்டணம். அதன் பிறகு 7 நாள் நடைபெறும் இந்த விற்பனை விழாவிற்கு அனுமதி இலவசம். பயங்கரக் குளிரைப் பொருட்படுத்தாமல். நான் முதல் நாளே போனேன். பெரிய கியூ இருந்தது. 100 பேர் இருக்கும்.  சக்கரம் வைத்த லக்கேஜ் பெட்டிகளுடன் பலர் வந்திருந்தார்கள். நான் கியுவில் போய் நின்று கொண்டேன், “ என்ன இவ்வளவு பெரிய கியூவாக இருக்கிறதே?”  என்று எனக்கு முன்னே நின்று கொண்டிருந்தவரிடம் சொன்னேன். அவர் “ இது என்ன பெரிய கியூ?” என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “அங்கே சேல் ஆரம்பமாவதற்கு 3 மணி முன்பே, காலை 6 மணிக்கே 700 - 750 பேர் வந்து விடுவார்கள்.. மூணு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்” என்றார்.
இந்த ’புக் சேலி’ல் நான் 10-12 புத்தகங்கள் வாங்கினேன். கடைசி நாள்   BAG SALE.  ஒரு பெரிய பை புத்தகங்கள் 5 டாலர்தான். அன்றும் போய்  10 டாலர் செலவில் இரண்டு பை புத்தகங்கள் - 62  - வாங்கி வந்தேன். அதில் வாங்கிய ஒரு  776 பக்க குண்டு புத்தகத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அதற்குத் தான் இந்த ‘சுருக்கமான’ முன்னுரை.
அந்தப் புத்தகம்: 1915-ல்  துவங்கி  ஆண்டு தோறும் வெளி வந்த எண்பத்தைந்து  வருடாந்திர சிறந்த சிறுகதைகள் தொகுப்புகளிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட கதைத் தொகுப்பு!
THE BEST AMERICAN SHORT STORIES OF THE CENTURY
 - EDITOR:JOHN UPDIKE.    CO. EDITOR: KATRINA KENISON. .

ஒரு கதைத்தொகுப்புப் புத்தகத்தின் கதை.
( பல வியப்பூட்டும் தகவல்கள் அடங்கிய இந்தக் கதை நீளமானது. அதைச்  சற்று சுருக்கித் தருகிறேன். )  

எட்வர்ட் ஓ’பிரியனுக்கு வயது இருபத்து மூன்றுதான். அதற்குள் அவர் எழுதிய கதைகள், நாடகங்கள் பிரசுரமாகிவிட்டன. எட்வர்ட் தான் THE BEST AMERICAN SHORT STORIES  முதல் தொகுப்பை 1915’ம் ஆண்டு தொகுத்தவர். இப்படி ஒரு தொகுப்பை வெளியிடலாம் என்று  பதிப்பகத்திற்கு யோசனை கூறியதும் அவர்தான். “ அமெரிக்க சிறுகதைகளின் எதிர்காலத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.  இந்த நம்பிக்கை  பதிப்பகத்திற்கும் இருப்பதால்,   இந்தத் தொகுப்பு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக   வெளிவரும்” என்று தன் முன்னுரையில் எழுதினார்.