May 10, 2015

ஒரு வரி - ஒரு ரூபாய்

ஒரு வரி பதில் 
1960 களில், டில்லியில் தபால் துறை அலுவலகத்தில் சர்வதேச  பார்சல் மெயில் அக்கவுண்டிங்க் செக் ஷனில்  நான் பணி புரிந்து கொண்டிருந்தேன்!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்தவேண்டும்.அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். )  இந்த வரவு செலவு கணக்குகள் சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். ( இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

இந்த கணக்கு முறை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு வர வேண்டிய தொகைக்கு 'பில்’ அனுப்ப வேண்டும்.  அதே மாதிரி   நமக்கு வர வேண்டிய தொகைக்கு நாம்  'பில்’ அனுப்ப வேண்டும்.
 ஆனால் இங்கிலாந்தைப் பொருத்தவரை இரண்டையும் நாமே செய்யவேண்டும். அதாவது நம்முடைய கணக்கை  நாம் அனுப்புவதுடன், இங்கிலாந்து அனுப்ப வேண்டிய கணக்கையும் நாமே தயார் பண்ணி அனுப்ப வேண்டும், அதை அவர்கள் சரிபார்த்து கையெழுத்துப் போட்டு அனுப்புவார்கள்!  ( அதாவது அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நம் தலையில் எந்த தலைமுறையிலேயோ கட்டி விட்டிருந்தார்கள்.!.. சுதந்திரத்திற்கு வந்து இருபது ஆண்டு கழித்தும் வாயை மூடிக்கொண்டு, கையைக் கட்டிகொண்டு, பவ்யமாக அடிமைபோல்  இந்த வேலையை செய்து கொண்டிருந்தோம்.) 

1970-களில் இங்கிலாந்து- இந்தியா கணக்கை '‘செக்’ பண்ணும் வேலை எனக்குத் தரப்பட்டது. ‘வேறு  எந்த நாட்டுக்கும்  தராத சலுகை இங்கிலாந்திற்கு மட்டும் எதற்குக் கொடுக்கவேண்டும் என்று ஏன் யாரும் கேட்கவில்லை. இதை ஏன் நாமே கேட்கக்கூடாது  என்று எண்ணி,  பிரிட்டன் தரப்பு கணக்கை இனி பிரிட்டனே  தயாரித்து அனுப்பும்படி தெரிவித்து விடலாம் என்று ஒரு ஒரு குறிப்பை எழுதி, என் மேலதிகாரிக்கு அனுப்பினேன்.
அந்த ஃபைல் 15 நாள் கழித்து  எனக்குத் திரும்பி வந்தது.
 “ அப்படி எழுதுவதற்கு முன்பு, இந்தியா- இங்கிலாந்து பார்சல் அக்கவுன்ட் ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் என்ன ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்; அதனால் ஒப்பந்த ஃபைலை இணைத்து அனுப்பவும்” என்று எழுதி இருந்தார்.
ஒப்பந்தமாவது தீப்பந்தமாவது. நூறு வருஷத்திற்கு முன்பு, தபால் துறை ஆரம்பித்தபோது பிரிட்டன் எஜமானர்களாக இருந்தார்கள். ஒரு உத்தரவு போட்டு, வேலையை நம் தலையில் கட்டிவிட்டார்கள்.
” ஒப்பந்தம் எதுவும் இல்லை. இந்த நடைமுறை காலம் காலமாக Time immemorial!) நடந்து வருகிறது” என்று எழுதி அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து ஃபைல் திரும்பி வந்தது - “ அக்கவுண்ட் நடைமுறையை நாம் தன்னிச்சையாக் மாறி அமைக்க முடியாது. லண்டன் ஹை கமிஷனுக்கு எழுதி அவர்களின் கருத்தைக் கேட்கலாம்” என்ற குறிப்புடன்!
அவர் சொன்னபடியே ஒரு கடிதம் எழுதி அவருடைய கையெழுத்திற்கு அனுப்பினேன். அதில் நாலு தடவை திருத்தங்கள் செய்து விட்டு கையெழுத்திட்டார். இதற்குக் கிட்டத்தட்ட 15 நாட்கள் பிடித்தது. சில வாரங்கள் கழித்து  நமது ஹை கமிஷனிலிருந்து பதில் வந்தது.  “இந்த விஷயத்தில் ஹை கமிஷன் எதுவும் கூறவோ செய்யவோ  இயலாது.  அயல் நாடுகளுடன் உறவு பாதிக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது.  வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைக் கேட்கவும் ” என்று எழுதி இருந்தார்கள்.
அதன்படியே ஃபைல் வெளி விவகாரத்துறைக்கு அனுப்பப்பட்டது. ‘என்னடா இவன் சள்ளை பிடித்த ஆசாமியாக இருக்கிறனே” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டே  டைரக்டர் ஃபைலில் கையெழுத்துப் போட்டார்.

வெளி விவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து சில வாரங்கள் கழித்துப் பதில் வந்தது. “ இது  நடைமுறை பற்றிய சாதாரண விஷயம். லண்டன் தபால் துறைக்கு நீங்களே எழுதுங்கள்” என்று கைகழுவி விட்டார்கள்.
லண்டன் தபால் துறைக்கு  ஒரு நீண்ட கடிதம் தயார் பண்ணினேன். அதில் பல மாற்றங்களைச் செய்து  (95% தேவையற்றத் தகவல்களைச் சேர்த்து) 15 நாட்களுக்குப் பிறகு லண்டனுக்கு அனுப்பிவிட்டு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டேன்.
சுமார் 15 தினங்களுக்குப் பிறகு லண்டனிலிருந்து ஒரு கால் பக்கக் கடிதம் வந்தது. அதில் ஒரே ஒரு வரிதான்  எழுதப்பட்டிருந்தது; “வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து எங்கள் தரப்பு கணக்கு எங்களால் தயாரிக்கப்படும்!”

ஒரு ரூபாய்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி, கிருஸ்துமஸ். பொங்கல் என்று பண்டிகை அட்வான்ஸ் என்று தரப்படுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு பண்டிகைக்குத் தான் பெறமுடியும்.

பொங்கல்   தான் வருடத்தின் முதலில் வரும் பண்டிகை.அதனால் கிட்டத் தட்ட 90 சதவிகித ஊழியர்கள், மத வித்தியாசம் பார்க்காமல் அடவான்ஸிற்கு விண்ணப்பிப்பார்கள். 60களில் அட்வான்ஸ் தொகை 75 ரூபாயாக இருந்தது.  (ப்பூ.. இது ஒரு  தொகையா என்று கேட்காதீர்கள். சென்னை- டில்லி ரயில் டிக்கட் 30 ரூபாயாக இருந்த காலகட்டம்!)  இந்த தொகையை நாலு தவணையாக - ரூ19, ரூ.19, ரூ 19 , ரூ18 என்று - சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்.
நான் டில்லிக்குப் போன சில வாரங்களிலேயே புது வருடம் வந்ததால் பொங்கல் அட்வான்ஸிற்கு நான் விண்ணப்பித்துப் பெற்றேன். அடுத்த மூன்று மாதங்கள் ரூ.19 வீதம் பிடித்தம் செய்தவர்கள், நாலாவது மாதமும் ரு.18க்குப் பதிலாக ரூ 19 பிடித்து விட்டார்கள். எனக்கு மட்டுமல்ல, அந்தச் சம்பளப் பட்டியைத் தயாரித்த பிரகஸ்பதி எல்லாருக்கும் ரூ 19 பிடித்தம் செய்து விட்டார்.
என் செக் ஷனில் பலருக்கும் இதே மாதிரி ஒரு ரூபாய் அதிகம்  பிடித்தம் செய்யப்பட்டிருந்தது . 
சர்மா என்ற என் நண்பர் என்னிடம் வந்து “ வாங்க.. அக்கவுண்ட்ஸ் செக் ஷனில் போய் கேட்கலாம். ஒரு ரூபாய் சும்மாவா வருகிறது? யார் சாப்பிட்ட பாடு?” என்றார். ( இந்த சர்மா சரியான ஜகஜ்ஜாலப் பேர்வழி . சர்மாவின் கில்லாடித்தனங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்!) 
அவருடன் போனேன். குறிப்பிட்ட கிளார்க்கிடம் போய் கேட்டார். தன் சொந்த பணத்தைக் கொடுப்பவர்போல்  அலட்டிக் கொள்பவர் அந்த கிளார்க். 
“ஒரு ரூபாய்தானே. விட்டு விட்டு போவியா...” என்கிற மாதிரி பஞ்சாபியில் சொன்னார்.
உடனே சர்மா. “ உன்  கையைவிட்டு ஒரு ரூபாய் கொடுத்துவிடு. நான் போயிடறேன்”   என்றார்.
“ ஏன்? ஏன் நான் கொடுக்கணும்?”
“18 ரூபாய்க்குப்பதில் 19 ரூபாய் பிடிச்சது நீதானே. அதிகமா பிடிச்சதை ரீஃபண்ட் பண்ணு.. அல்லது  கையைவிட்டு கொடு.  ஒரு ரூபாய்தானே!” என்று சர்மா சொன்னார்
தயாராக எழுதிக் கொண்டிருந்த கடிதத்தை  சர்மா கொடுத்தார். என்னையும் கொடுக்கச் சொன்னார். 
ஒரு வாரம் கழித்து ஒரு ரூபாய்க்கு சாங்க்‌ஷன் கடிதம் வந்தது! ( அது ஆடிட் காபி, ஃபைல் காபி என்று 2,3 காபிகள் அச்சடிக்கப்பட்டிருக்கும்!) காஷியரிடம் போய் பணம் வாங்கிக் கொண்டோம்
(அட்வான்ஸ் தொகை ரூ.75 என்று நிர்ணயித்த அதிகாரி 75-க்குப் பதிலாக 76 அல்லது 80 என்று,   நாலால் மீதம் இல்லாமல் சரியாக வகுக்கக்கூடிய தொகையை  வைத்திருக்கலாமே! )

11 comments:

 1. பத்து பைசா மிச்சம் பிடிக்க பத்து ரூபாய் செலவு செய்வோம். அதுதான் கவர்ட்மென்ட் ரூல்ஸ்.

  ReplyDelete
 2. அரசு அலுவலகம் என்றாலே இப்படி விநோதங்கள் அதிகம்தான்! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 3. 'நம்ம ஊரில்தான் எப்படி எப்படி சால்ஜாப்பு, தேவையில்லாத வேலைகள் செய்யலாம் என்று கண்டுபிடிப்பார்கள். இதைத்தான் 'அரசின் சிவப்பு நாடா' முறை என்று கூறினார்கள்.

  உங்கள் மாதிரி ஆட்கள் நிறைய அரசு வேலையில் இருந்தால், தேவையில்லாத பணியிடங்கள் ஏற்படாது.

  ReplyDelete
 4. இரு தகவல்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.

  ReplyDelete
 5. இரு அனுபவங்கள் -இரண்டும் சுவாரஸ்யமாயிருந்தன.

  ReplyDelete
 6. சர்மாவின் கில்லாடித்தனங்களைப் பற்றி எழுதுங்களேன்?

  ReplyDelete
 7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  ‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். அது போல, லண்டன் தபால் இலாகாவையே மிரள வைத்திருக்கிறீர்கள்.

  தங்கள் மேலதிகாரியைப் போல, ஜூனியர்களின் கருத்துக்கு ம்திப்புக் கொடுப்பபவர்கள் மிகவும் அரிது.

  ’அரசாங்கத்துக்கு போன பணமும், கடலில் கரைத்த பெருங்காயமும் ஒன்று’ என்பார்கள்.

  வைக்கோல்போரில் தொலைத்த ஊசியைத் தேடி எடுத்த சர்மா திறமைசாலிதான்.

  சர்மாவின் சிறப்புக்களையும் சாதனைகளையும்(!) எழுதுங்கள், படிக்கக் காத்திருக்கிறோம்.

  நன்றி.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 8. ஒரு ருபாய் அனுபவம் மிக அருமை .நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசை எதற்காக விடவேண்டும் .யாருகாவது தெரிந்து கொடுத்தால் சந்தோசமாக இருக்கும்.நீங்கள் உங்கள் ஒரு ருபாய் வாங்கிகொண்டது
  ரொம்ப சந்தோசம். அந்த காலத்தில் பணத்திற்கு மதிப்பு இருந்தது .இன்று பணத்திற்கும் மதிப்பு இல்லை மனிதனுக்கும் மதிப்பு இல்லை.
  கே.ராகவன்
  பெங்களுரு

  ReplyDelete
 9. சுவையான அனுபவம்தான்! நானும் சர்மா புத்தகத்திற்குக் காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 10. தலைமுறையாக வரும் தலைவலியை தீர்த்த தனி ஒருவர்

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!