January 19, 2015

சிறந்ததில் சிறந்தது

BEST OF THE BEST  OF THE CENTURY


சமீபத்தில் ஒருபுத்தக  விற்பனைத் திருவிழாவிற்குப் போய் வந்தேன். அமெரிக்காவில்   நியூ ஜெர்ஸி மாநிலத்தில்  MONTCLAIR  என்ற இடத்தில்ஆறு மாதத்திற்கு ஒரு தரம்  American Association of University Women (AAUW) நடத்தும்  பிரம்மாண்டமான பழைய புத்தக BOOK SALE.    முதல் நாள் முதல் மூன்று மணி நேரம் மட்டும் 15 டாலர் நுழைவுக் கட்டணம். அதன் பிறகு 7 நாள் நடைபெறும் இந்த விற்பனை விழாவிற்கு அனுமதி இலவசம். பயங்கரக் குளிரைப் பொருட்படுத்தாமல். நான் முதல் நாளே போனேன். பெரிய கியூ இருந்தது. 100 பேர் இருக்கும்.  சக்கரம் வைத்த லக்கேஜ் பெட்டிகளுடன் பலர் வந்திருந்தார்கள். நான் கியுவில் போய் நின்று கொண்டேன், “ என்ன இவ்வளவு பெரிய கியூவாக இருக்கிறதே?”  என்று எனக்கு முன்னே நின்று கொண்டிருந்தவரிடம் சொன்னேன். அவர் “ இது என்ன பெரிய கியூ?” என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “அங்கே சேல் ஆரம்பமாவதற்கு 3 மணி முன்பே, காலை 6 மணிக்கே 700 - 750 பேர் வந்து விடுவார்கள்.. மூணு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்” என்றார்.
இந்த ’புக் சேலி’ல் நான் 10-12 புத்தகங்கள் வாங்கினேன். கடைசி நாள்   BAG SALE.  ஒரு பெரிய பை புத்தகங்கள் 5 டாலர்தான். அன்றும் போய்  10 டாலர் செலவில் இரண்டு பை புத்தகங்கள் - 62  - வாங்கி வந்தேன். அதில் வாங்கிய ஒரு  776 பக்க குண்டு புத்தகத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அதற்குத் தான் இந்த ‘சுருக்கமான’ முன்னுரை.
அந்தப் புத்தகம்: 1915-ல்  துவங்கி  ஆண்டு தோறும் வெளி வந்த எண்பத்தைந்து  வருடாந்திர சிறந்த சிறுகதைகள் தொகுப்புகளிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட கதைத் தொகுப்பு!
THE BEST AMERICAN SHORT STORIES OF THE CENTURY
 - EDITOR:JOHN UPDIKE.    CO. EDITOR: KATRINA KENISON. .

ஒரு கதைத்தொகுப்புப் புத்தகத்தின் கதை.
( பல வியப்பூட்டும் தகவல்கள் அடங்கிய இந்தக் கதை நீளமானது. அதைச்  சற்று சுருக்கித் தருகிறேன். )  

எட்வர்ட் ஓ’பிரியனுக்கு வயது இருபத்து மூன்றுதான். அதற்குள் அவர் எழுதிய கதைகள், நாடகங்கள் பிரசுரமாகிவிட்டன. எட்வர்ட் தான் THE BEST AMERICAN SHORT STORIES  முதல் தொகுப்பை 1915’ம் ஆண்டு தொகுத்தவர். இப்படி ஒரு தொகுப்பை வெளியிடலாம் என்று  பதிப்பகத்திற்கு யோசனை கூறியதும் அவர்தான். “ அமெரிக்க சிறுகதைகளின் எதிர்காலத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.  இந்த நம்பிக்கை  பதிப்பகத்திற்கும் இருப்பதால்,   இந்தத் தொகுப்பு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக   வெளிவரும்” என்று தன் முன்னுரையில் எழுதினார்.

ஹார்வர்ட் பல்கலையில் படித்த எட்வர்டின் யோசனையின் விளைவாக  வருடம் தவறாமல் அதாவது வரிசையாக 85 தொகுப்புகள் வந்துள்ளன. அவை சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியின் வரலாறாகத் திகழ்கின்றன.
இன்று நாம் உள்ள உலகம் இந்த 85 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது, அமெரிக்க சிறுகதைகளுக்கு என்று ஒரு பாணி அமைந்துள்ளது. பல சிறுகதை எழுத்தாளர்கள்  தோன்றியுள்ளனர்.
ஒவ்வொரு சிறுகதை எழுத்தாளனும் ஏதோ ஒரு விஷயத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகிறான்.

“ஒவ்வொரு ஆண்டு தொகுப்பிற்காக நிறைய சிறுகதைகளைப் படித்துப் பார்க்கும் பணிக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன்” என்று 1920 ஆண்டின் தொகுப்பில் எட்வர்ட் எழுதியுள்ளார்.
அடுத்த இருபது ஆண்டுகள் பல எழுத்தாளர்களின் பெயர்கள் பிரபலமடைந்தது.  DOROTHY PARKER, SCOTT FITZGERALD, WILLIAM FAULKNER, JOHN STEINBECK, RING LARDNER  போன்றவர்கள்.
John Updike
1923ம் ஆண்டில், தானே அமைத்துக் கொண்ட ஒரு விதியை எட்வர்ட் தளர்த்தினார். அது வரை, பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளைத்தான் தேர்வுக்கு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த  விதியை தளர்த்தினார். தளர்த்தியதற்குக் காரணம் என்ன?  ஸ்விட்சர்லாந்தில் ஒரு இளம் எழுத்தாளன் அவரைக் கதையுடன் சந்தித்ததுதான்.

அந்த இளைஞனின் கதைகள் எதுவும் எந்த பத்திரிகையிலும்  பிரசுரமாகவில்லை. இருந்தாலும் அவன் மனம் தளராமல் கதைகளை எழுதி, பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.  எட்வர்ட்டிடம் அந்த இளைஞன் தன் சோக அனுபவம் ஒன்றைச் சொன்னான்.
அவன் எழுதிய கதைகள் எல்லாம் ஒரு  பெட்டியில் வைத்திருந்தானாம். அந்தப் பெட்டி எப்படியோ துரதிர்ஷ்டவசமாகக் காணாமல் போய்விட்டதாம். அதனால் மனம் உடைந்து போன அவன் எழுதுவதையே நிறுத்தி விடலாம் என்று எண்ணினாம்.
எட்வர்ட் அவனிடம் “ சரி. உன்  கைவசம் உள்ள கதைகளில் இரண்டு கதைகளைக் கொடுத்துவிட்டுப் போ... படித்துப் பார்க்கிறேன்” என்றார் எட்வர்ட் அவன் இரண்டு கதைகளைக் கொடுத்துவிட்டுப் போனான்.
எட்வர்ட் அவற்றைப் படித்துப் பார்த்தார். ‘மை ஓல்ட் மேன்’ என்ற கதை அவருக்குப் பிடித்திருந்தது. அதை அந்த வருடத் தொகுப்பில் சேர்த்துவிட்டார்.
அது மட்டுமல்ல அந்த வருடப் புத்தகத்தை அந்த 24 வயது  இளம் எழுத்தாளனின் பெயருக்கே சமர்ப்பணமும்  செய்து விட்டார்!
‘டொராண்டோ ஸ்டார்’ என்ற பத்திரிகையில் நிருபராக இருந்த அந்த இளைஞனின் பெயர் : எர்னஸ்ட் ஹெமிங்வே!
( ஒரு சின்னக் குறிப்பு. இப்படித் துவங்கியது ஹெமிங்க்வே எனும் பிரபல எழுத்தாளரின் ஆரம்பம்! ஹெமிங்க்வே பற்றிய பல சுவையான தகவல்களை ஒரு தனிப் பதிவாகப் போட, எழுதி  வைத்துள்ளேன். பின்னால் போடுகிறேன்!)

எட்வார்ட் ஒவ்வொரு வார இறுதியிலும்  அந்த வாரம் வெளியான எல்லா பத்திரிகைகளையும் வைத்துக் கொண்டு சிறுகதைகளைப் படிக்க ஆரம்பிப்பார். மாடியில் அவர் அறைக்குப் போய்விடுவார். சாப்பிடுவதற்கு மட்டும் கீழே   இறங்கி வருவாராம்.
வருடத்தில் சுமார் 8000 கதைகளைப் படித்திருப்பார். அவைகளை மதிப்பிடத் தனித்தனியாகப் பட்டியலிட்டு வைப்பார்.


1918’ம் ஆண்டின்  “YEAR BOOK OF AMERICAN SHORT STORIES"  தொகுப்பில் அவர்  விரிவான குறிப்புகள் எழுதியுள்ளார். அந்த  300 பக்க புத்தகத்தில் அவர் எழுதிய குறிப்புகள்  எடுத்துக் கொண்ட  பக்கங்கள் மட்டும் 108!
எல்லா சிறுகதைகளைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் துல்லியமாக நிறைய விவரங்களையும், மதிப்பீடுகளையும், பட்டியல்களுடன் கொடுப்பது அவரது செயல்பாடு. அமெரிக்கச் சிறுகதை உலகம் அவருக்கு அத்துப்படி.
இன்றும் நாங்கள் அவரது செயல்முறையைப் பின்பற்றித் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறோம்.
இன்று பத்திரிகை உலகம் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டது.  நான் கிட்டதட்ட 300 பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டி, வருஷம் பூராவும் படித்து வருகிறேன். இருந்தும் சில பத்திரிகைகள் - கல்லூரி மலர்கள், இலக்கியப் பத்திரிகைகள், சிற்றிதழ்கள் என்று - பல விடுபட்டுப் போய் விடுகின்றன. எட்வர்ட் அலசி ஆராய்ந்து   தனக்கென்று ஒரு வழிமுறையை அமைத்துக் கொண்டார். தான் கடைபிடிக்கும் வழிமுறையின் மீது அவருக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. அவரது பாணி  நம்மைப் பெருமைப் படச்செய்கிறது.

உலகப் போர் மூண்டபோது, எட்வர்ட் இங்கிலாந்தில் இருந்தார்.அவர் பாதுகாப்பைத்தேடி அமெரிக்கா வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்ல. துரதிர்ஷ்டம், 1941’ம் ஆண்டு பிப்ரவரி 24’ம் தேதி யுத்த விமானங்கள் வீசிய  குண்டினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.அப்போது அவருக்கு வயது 51.
அந்த கால கட்டத்தில் “ஸ்டோரி’ என்ற பத்திரிகையை  FOLEY என்பவரும்  அவரது கணவர்   WHIT BURNETT  உடன்  நடத்திக் கொண்டிருந்தார்கள்.
எட்வர்டிடம் ஒரு சமயம் ஃபாலி, “ எட்வர்ட்... உங்கள் காலத்திற்கு அப்புறம் இந்த தொகுப்புப் பணியை யார் மேற்கொள்வார்கள்?” என்று கேட்டார். எட்வர்ட் அவரிடம்” நீங்கள் தான்!” என்று சொன்னார். விளையாட்டாகவோ, ஸீரியஸாகவோ அவர் சொன்னது பின்னால் உண்மையாகி விட்டது.
இந்த தொகுப்புகளை வெளியிட்டு வந்த பதிப்பகமான  HOUGHTON MIFFLIN , ’ஸ்டோரி’ பத்திரிகைத் தம்பதிகளுக்கு அழைப்பு விடுத்தது. பர்னட்டுக்கு அதில் விருப்பமில்லை; ஆனால் அவரது மனைவி ஃபாலி அந்த பணியை செய்வதற்குச்  சம்மதித்தார். (இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் விவாக ரத்தும் செய்து கொண்டார்கள்!) 
  
ஃபாலியின் பொறுப்பில் உருவான முதல் தொகுப்பு 1942-ல்  வெளியானது. ’ஸ்டோரி’ பத்திரிகை அனுபவமும் புகழும் அவருக்குக் கைகொடுத்தன. சிறுபத்திரிகைகளில் வந்த கதைகளையும்  கவனமாகப் படித்துத்  தேர்ந்தெடுத்தார். பல புது எழுத்தாளர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அவர்களில் சிலர்: SAUL BELLOW, PHILIP ROTH, VLADIMAR NABAKOV,RAY BRADBURY, JOHN UPDIKE, JAMES AGEE. ( அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரைவில்   பிரபலமடைந்த  JOHN UPDIKE தான் இந்த நூற்றாண்டு தொகுப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார்!)

அடுத்த முப்பது வருஷங்களுக்குமேல் அர்ப்பணிப்புடன் தொகுப்புகளை உருவாக்கியவர்  ஃபாலி. ஒவ்வொரு வருடமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்தார்.  ஒவ்வொரு தொகுப்பிற்கும் அவர் அபாரமான முன்னுரையும் எழுதினார். பராட்டப்படவேண்டிய கதைகளையும், எழுத்தாளர்களையும் மனதாரப் பாராட்டி இருக்கிறார்.  அதே சமயம் பல பத்திரிகை ஆசிரியர்களையும் கதைகளையும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.  தரமற்ற கதைகளை  வாசகர்கள் தலைமேல் கட்டுவதைக் கண்டித்திருக்கிறார்!

வாழ்க்கையையே சிறுகதைகள் படிப்பதற்காக அர்ப்பணித்தவர் ஃபாலி. வயது ஆக ஆக அவரது பார்வை, கோணம், மதிப்பீடு யாவும் ஏனோ குறுகிக் கொண்டே போனது. எழுபதாவது வயதைத் தொட்ட பிறகு, காலத்தை ஒட்டி தன் மதிப்பீடுகளை அவர் மாற்றிக்கொள்ளாததால், அவர் பொறுப்பில் வந்த தொகுப்புகள் ஒரளவு ஜீவனையும் பொலிவையும் இழக்கத் துவங்கின.


அவர் தனது கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்தார். உடல் நலிவுற்றபோதிலும் கதைகளைப் படிப்பதையோ, தன் நினைவுக் குறிப்புகளை எழுதுவதையோ நிறுத்தவில்லை. 1977’ம் ஆண்டு  அவர் தனது 80-வது வயதில் காலமானார். சுமார் ஐம்பது ஆண்டுகள் அமெரிக்க இலக்கியத்திற்கு அவர் இடைவிடாது செய்த பணி சிறப்பு மிக்கது.

தனது 62 வருட புத்தகப் பிரசுர வரலாற்றில் HOUGHTON   சிறுகதை தொகுப்பிற்கு இரண்டாவது தடவை ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. 

அப்போது ஒரு யோசனையை ஒருவர் தெரிவித்தார்.  ஒரே தொகுப்பாசிரியர் தொடர்ந்து பணியாற்றுவதைவிட, ஒவ்வொரு ஆண்டும் ஒரு  எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாம்; சில புதிய கருத்துகள், வித்தியாசமான கதைகள் வெளியாகக்கூடும்.  ஒவ்வொரு ஆண்டு தொகுப்பிலும் மாறுதல்களும் இருக்கும்’ என்ற அவர் யோசனையை பதிப்பகம் ஏற்றுக்கொண்டது.
ஃபாலி தனது முதல் தொகுப்பில், சிறுகதைகளைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்:  A good story  is a story which is not too long and which gives the reader the feeling he has undergone a memorable experience."
அவருக்குப் பின்னால் வந்த இருபது தொகுப்புகளின் ஆசிரியர்கள். சிறுகதைகளைப் பற்றி பல்வேறு தீர்மானமான கருத்துகளையும், கதாபாத்திரங்களின் அமைப்பு, எழுத்து நடை போன்றவற்றிற்கும் ஆழமிக்க பல கருத்துகளையும் தந்துள்ளனர். இதன் காரணமாக இந்தத் தொகுப்புகள் சிறப்பு மிக்கதாய் அமைந்துள்ளன.
தொகுப்பாசிரியர்களின் ஏராளமான அனுபவங்கள், அணுகுமுறைகள், கதைகளைச் சீர்தூக்கும் வழிமுறைகள் ஆகிய காரணங்களால், ஒரே தொகுப்பாசிரியர் தொடர்ந்து செய்ததைவிட இவை மேம்பட்டதாக அமைந்தன.
1983’ வருடத்தில் தொகுப்பாசிரியராக இருந்த  ANNE TAYLOR எழுதியுள்ள கருத்தைப் பாருங்கள்: ”ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர், தன்னுடைய சிறந்த கருத்துகளை ‘முக்கியமான’ நாவல் எழுதும்போது உபயோகித்துக் கொள்ளலாம் என்று சேமித்து வைத்துக் கொள்ளமாட்டார். சிறுகதைதானே என்று அவற்றை உபயோகிக்காமல் இருக்க மாட்டார்.”
பத்து வருடங்களுக்குப் பிறகு இதே கருத்தை   லூயிஸ் எட்ரிச் கூறியது” பல மிகச் சிறந்த சிறுகதைகளுக்குள் முழு நாவலே இருக்கும். அவற்றில் பல விஷயங்கள் நெருக்கித் திணிக்கப்பட்டு இருக்கக்கூடும். ஒவ்வொரு வரியிலும் ஒரு ஆழ்ந்த உட்பார்வையோ தெளிந்த உணர்ச்சிகளின் திரட்சியோ இருக்கும். அவைகளை எளிதாய் பல பக்கங்களுக்கு விரித்துப் பரப்பிவிட முடியும்.
1988-க்குப் பிறகு இக்கதைகளைத் தேர்ந்தெடுத்தவர்கள், கதைகளைத தங்கள் பார்வைக்கு அனுப்புமுன் எழுதியவர்களின் பெயர்களை  கறுப்பு  மை பூசி மறைத்துவிட்டு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்கள். இதன் காரணமாக, பல பிரபல எழுத்தாளர்களின் கதைகளுடன், புதிய எழுத்தாளர்களின் கதைகளும் தொகுப்பில் இடம் பெற்றன.
1990’ம் ஆண்டு இந்த தொகுப்பாசிரியர் பணியை நான் ஏற்றுக் கொண்டபோது, எனக்கு முன் இப்பணியைச் செய்த மூன்று பேர்களுடை ய தீவிர அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் நான் நன்கு அறிந்திருந்தேன். அந்த ஜாம்பவான்கள் பணியாற்றிய  இடத்தில் பொறுப்பேற்றது என் தகுதிக்கு மீறியதாக எனக்குத் தோன்றியது.

 RAVENEL  என்ற எழுத்தாளர் சொன்ன அறிவுரையை  நான்  என்றும் மறந்ததில்லை. அவர் சொல்லியது:“ எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படி. யார் எழுதியது என்பதையோ அல்லது அந்த குறிப்பிட்ட எழுத்தாளர் பற்றி உன் முந்தைய அபிப்பிராயம் என்ன என்பதையோ கவனத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது”

 ஒரு வருடத்தில் சுமார் 3000 கதைகளைப் படித்திருப்பேன். அவற்றிலிருந்து சுமார் 120 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவ்வாண்டின் சிறப்பு  ஆசிரியரிடம் தருவேன்.அவர் படித்த பிறகு அவரும் நானும் கதைகளைப் பற்றி கருத்துப் பரிமாறிக் கொள்வோம். அதன் அடிப்படையில் கதைகளைத் தேர்ந்தெடுப்போம். அதன் காரணமாக எனக்கு மட்டும் பிடித்த கதைத்   தொகுப்பாக அது இருக்காது. இது எனக்கு  மிக்க மன நிறைவைத் தந்த முறை என்பேன்.
இந்த தொகுப்பின் முதல் முதல் வெளியான 1915 வருடப் புத்தகத்தில் எட்வர்ட் ஓ’ப்ரையன் கூறியது: “ஒரு மிகச்சிறந்த கதை வெளியாகும் ஆண்டு அடிக்கடி  வருவதல்ல.” சில சமயம் நல்ல கதைகள் எங்கள் பார்வைக்கு வராமலே போய்விடும்.  வேறு சில சமயம் மிகவும் பாராட்டு பெற்ற கதை சில வருடங்களிலேயே மதிப்பிழந்து விடுவதும் உண்டு.   கால வேகத்திலும் மாற்றத்திலும் அதன் சிறப்பு தொய்வடைந்து போவதைப் பார்த்திருக்கிறேன்.”

 1950-களிலிருந்து ஒவ்வொரு ஆண்டு தொகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் கதை இடம் பெற்று வருகிறது. அந்த தனிச் சிறப்பைப் பெற்றவர்  JOHN UPDIKE.  ஆம், அவர்தான் இந்த ஆண்டு புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர்! 
மனமுவந்து இப்பணியை ஏற்றுக் கொண்ட அவர், அவருடைய கதையை தொகுப்பில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பதை என் முடிவுக்கு விட்டுவிட்டார். அதே சமயம், அவர் எழுதிய நீண்ட கதை நானாகத் தேர்ந்தெடுத்தபோது, அதைச் சேர்ப்பதற்குச் சம்மதிக்கவில்லை.

துல்லியமாகச் சீர்தூக்கிப் பார்க்கும் அவருடை செயல்பாட்டைக் கவனித்த எனக்கு, ஒவ்வொரு கதையையும்  அவர்  ஆழ்ந்த அக்கறையுடனும்  ஈடுபாட்டுடனும் படித்ததைக்  கவனத்திருக்கிறேன். ஒரு கதையை எடை போடும் போது , அதன் தரத்தை மட்டுமல்ல, அது பிரசுரமான காலகட்டத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டதையும் கவனித்திருக்கிறேன்.

இத்தனை நுணுக்கமாகவும் அர்ப்பணிப்போடும் பணிபுரியக்கூடிய எழுத்தாளரோ, விமர்சகரோ, தொகுப்பாசிரியரோ  JOHN UPDIKE-ஐப் போல் எவரும் இல்லை என்று கூறுவேன். எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகிய நம் அனைவருக்கும் அவர் ஒப்பற்ற பணி ஆற்றியுள்ளார்.

6 comments:

 1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  சமுதாய மாற்றங்களை பிரதிபலிப்பவை சிறுகதைகள், அதே சமயம், சமுதாயத்தை செம்மைப்படுத்துபவையும் அவைதான்.

  சிறுகதைத் தொகுப்பை, அதுவும் பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை ஒரே தொகுப்பில் படிக்கும்போது, வாசகனின் சிந்தனை தூண்டப்படுகிறது.

  ஒரு நூற்றாண்டு கால சிறுகதைத் தொகுப்பு வரலாற்றை, எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

  எப்பொழுதும் போல, எங்களின் நன்றிகள்.

  தினமும் இந்த ப்ளாக் வந்து படிக்கிறேன். லைவ் ட்ராஃபிக் ஃபீட் மூலம், பலரும் வருவதும், பழைய பதிவுகளை மீண்டும் படிப்பதும், அதைத் தொடர்ந்து போய், மீண்டும் நானும் அந்தப் பதிவுகளைப் படித்து, மகிழ்கிறேன்.

  எங்களைப் போன்ற வாசகர்களுக்காக, தினமும் எழுதுங்கள்.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 2. அன்புடையீர்,
  உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வாரா வாரம் போட ஆசைதான்.. பதிவுகளை எழுதும் பணியை என்னை இயக்கும் சக்தி செய்து விடுகிறது. கணினி நான் இயக்க வேண்டி இருப்பதால் தாமதம் தவிர்க்க முடியவில்லை. - கடுகு

  ReplyDelete
 3. அருமையான தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. What a post! I don't know if your efforts to seek books and keep notes is any less admirable than those annual compilers of short stories who used to read 2 to 3000 stories and select about a 100! I am ashamed that not aware of any author name you have listed in this post nor I have read many English stories. But I take it they should be as enjoyable and appreciable as great stories in Tamil. - R. J.

  ReplyDelete
 5. It is amazing to know from the first para, how much patronage is there for books in that country, in this age of ebooks and kindle.

  ReplyDelete
 6. Every Posting you are giving wonderful information .US is famous for books and library.You r interest of reading makes more amazing.Keep up the Wonderful work.Take care.Regards to family members.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!