January 07, 2015

”என் கதை பெரிய கதை” --ஹேமாவின் அம்மா..

திரையுலகில் ஹேமமாலினி காலெடுத்து வைத்த சமயம், தினமணிக் கதிருக்காகப் போட்டோ எடுக்க  டில்லி கரோல்பாக்கில் இருந்தஅவரது வீட்டிற்குப்   போய், சந்தித்த விவரங்களை என்னுடைய ‘அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதி இருந்தேன். சுட்டி: ஹேமா
பல வருஷங்கள் கழிந்த பிறகு அவரது அம்மா திருமதி ஜெயா சக்ரவர்த்தி அவர்களைப் பேட்டி கண்டு  ஒரு கட்டுரை எழுதினேன். அதை இங்கு தருகிறேன்.

இந்திப் பட உலகில் ‘அம்மா’ என்றால் ஹேமமாலினியின் அம்மாவான என்னைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். நான் வெறும் ஹேமாவின் அம்மா மட்டுமல்ல, நான் ஜெயா சக்ரவர்த்தியும்கூட. பலருடைய ஆதரவினாலும் என்னுடைய விடாத முயற்சியினாலும்தான் ஹேமா இன்று ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கிறாள். ஏதோ அவள் சினிமா ஸ்டாராக ஆகிவிட்டாள். அதன் பின்பு சாதாரணமாகப் பலர் உறவு கொண்டாடுவது போலவோ, ஜம்பம் அடித்துக் கொள்வது போலவோ நான் இப்படிக் கூறவில்லை.
ஹேமா என்றைக்குப் பிறந்தாளோ அன்றைக்கே அவளை ஒரு கலையரசியாகச் செய்ய வேண்டுமென்று நான் முடிவெடுத்து விட்டேன். இன்று அவள் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறாள் என்றால் அதைக் கண்டு நான் நியாயமான முறையில் அடக்கத்துடன் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

என் கதை பெரிய கதை.
நாங்கள் ஒரு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் தகப்பனாரும் மற்றவர்களும் நன்றாகப் படித்தவர்கள். என் தாத்தாவிற்கு மகா மகோபாத்யாய பட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொடுத்துக் கெளரவித்து இருந்தது. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவர்.

நாமக்கல்லில் நாங்கள் இருந்தபோது வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று லட்சுமி ஸ்தோத்திரம் சொல்வேன். ‘வஸுந்தரா முதாராங்கம் ஹரிணீம் ஹேமமாலினீம்’ என்று அதில் வரும். ஆகவே என் மகளுக்கு ஹேமமாலினி என்று பெயர் வைத்தேன். சினிமாவில் நுழைந்தபோது இதை மாற்றலாம் என்றார்கள். நான் ஒத்துக் கொள்ளவில்லை.

டில்லியில் நாங்கள் சுமார் முப்பது வருஷங்கள் வாழ்ந்தோம். இப்போது பம்பாய் வாசம். சென்னை, டில்லி, பம்பாய் ஆகிய மூன்ற நகரங்களும் என் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

எனக்கு சங்கீதம், நடனம், சித்திரம் ஆகியவைகளில் என்றுமே ஈடுபாடு உண்டு. என்னால் இயன்றவரை பல புத்தகங்களைப் படித்து என் அறிவை விருத்தி செய்து கொண்டேன்.

டில்லியில் இருந்தபோது நான் இந்தி மொழியில் ஆர்வம் கொண்டு ஒவ்வொரு பரீட்சையாக எழுதித் தேறினேன். பஞ்சாப் சர்வகலாசாலையின் மிக உயர்ந்த படிப்பான ‘பிரபாகர்’ (எம்.ஏ.விற்குச் சமம்) பட்டமும் பெற்றேன். பலருக்கு ஹிந்தி ஆசிரியையாகவும் ஆனேன்.

எனக்குப் பலவிதங்களில் உதவி செய்தவர் ராஜலட்சுமி ராகவன். டில்லியில் இருந்து கொண்டு இந்தி மொழியைப் பரப்ப, அவர் செய்த தொண்டுகள் ஏராளம். பெற்ற பாராட்டுகளும் அளவிலாதவை. இவர் என்மேல் அக்கறை எடுத்து் கொண்டதுடன் ஹேமாவின் மேல் அன்பு கொண்டிருந்தார். இல்லாவிடில்   நடனம் கற்றுக் கொண்டிருந்த ஹேமாவின் நடன நிகழ்ச்சியை முதன் முதலில் ஏற்படுத்தி அவளுக்கு ஊக்கம் அளித்திருப்பாரா?

என்னுடைய இந்தி மொழித் திறமை காரணமாகப் பல இந்திக் கவியரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். ராஜன்பாபு, நேருஜி, இந்திரா காந்தி போன்றோரைச் சந்திக்கவும் இது எனக்கு வாய்ப்பளித்தது.

டில்லியில் ‘கிருஹ கல்யாண கேந்திரா’ என்ற அமைப்பு உள்ளது. பெண்கள் நல மன்றம் அது. அதில் நான் பணியாற்றிய‌துடன் ஹேமாவும் அதில் சேர்ந்து ‌நடனம் கற்றுக் கொடுத்தாள். ஏதோ அப்போது அவளுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுத்தாள். மாதம் சுமார் நூறு ரூபாய் சம்பாதிக்கவும் செய்தாள்.

கணவரின் உத்தியோக மாற்றம் காரணமாக நாங்கள் சென்னைக்கு வந்தோம். அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. ஹேமாவிற்குக் கெளரி அம்மாள், சுவாமிநாதப் பிள்ளை, கிட்டப்பா பிள்ளை போன்றவர்களிடம் நடனம் கற்க முடிந்தது. நண்பர் அனந்தசாமி, ஹேமாவை சினிமாவில் நடிக்க வைக்க ஆர்வம் கொண்டு ராஜ்கபூரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை’ படத்தில் பத்மினி போட்ட டிரஸ்ஸை ஹேமாவிற்குப் போட்டு மேக் அப் டெஸ்ட் செய்தார்கள். அவள் வெற்றியும் பெற்றாள். ஆண்டவனுடைய கருணையினால் ஹேமா நல்ல நாட்டியக் கலைஞராகவும் சினிமா நடிகையாகவும் திகழ்கிறாள்.

இவள் சினிமாவில் நடிக்கப் போகிறாள் என்றதும் எங்கள் உறவினர் பலர் என்னைக் குறைவாகப் பேசினார்கள். சினிமா உலகத்தில் எத்தனையோ இருக்கிறது. ஆனால் எல்லாம் நாம் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது. இந்திப் படத் தயாரிப்பாளர்கள் பலரை எனக்குத் தெரியும். என்னிடம் சந்திக்காதவர்களே கிடையாது. யாரும் கண்ணியக் குறைவாகப் பேசியதோ நடந்து கொண்டதோ கிடையாது. தன் நடிப்பில்கூட ஹேமா எத்தனையோ வரையறைகளை வைத்துக் கொண்டுதான்இருக்கிறாள்.

இடையில் பத்திரிகைகள் கண்டபடி எழுதின. இனிமேல் பத்திரிகைக் காரர்களைச் சந்திக்கவே வேண்டாம் என்று இருந்தோம். இதுதான் சாக்கு என்று சில தரக்குறைவான பத்திரிகைகள் தங்கள் பாணியில் எழுதத் துவங்கின. இப்போது பத்திரிகையின் போக்கும் மாறிவிட்டது.

ஹேமாவை முன்னுக்குக் கொண்டுவர நான் பல தியாகங்களைச் செய்திருக்கிறேன். என் நகைகளை விற்று நடனச் செலவுகளுக்கும் குழுவின் சம்பளத்திற்கும் கொடுத்து இருக்கிறேன். ஒரு விதத்தில் பார்த்தால் இவையெல்லாம் தியாகமே இல்லை. அவள் மேல் உள்ள பாசத்தாலும், கலையின் மேல் உள்ள ஆர்வத்தாலும் நான் செலவுகள் செய்தேன். அதனால் எனக்கு அளவிலாத மனநிறைவு கிடைத்தபோது, அதைத் தியாகம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அதன் காரணமாகத்தான் இன்று எனக்குப் பணத்தின் மேல் மோகம் ஏற்படவில்லை. மற்றவர்களுக்காகச் செலவு செய்வதில் பெரும் மகிழ்வு ஏற்படும் போது எனக்கென்று பணம் சேர்த்துக் கொள்ளும் எண்ணமே ஏற்படவில்லை.

கொடுப்பது ஆண்டவன், நாம் மட்டும் அனுபவிக்க அல்ல. ஏழை எளியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பலர் முன்னேற வாய்ப்புகள் அளிக்க வேண்டும் - இதுதான் என் வாழ்க்கைக் குறிக்கோள்.

ஹேமா எத்தனை இலவச நடன நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்திருக்கிறாள் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஆஷா பரேக் ஆஸ்பத்திரிக்காக நடனம் ஆடினாள் ஹேமா. எட்டு லட்சம் வசூல். சொந்தமாக ஐயாயிரம் கொடுத்தேன்.

பம்பாய் சண்முகானந்த சபையில் இசை பயிலுபவர்களுக்காக பத்தாயிரம், சென்னை நாரதகான சபை மண்டபத்துக்காக இருபதாயிரம், கண் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் இப்படிப் பல சங்கங்களுக்கு நன்கொடைகளைத் தாராளமாகக் கொடுத்து வருகிறேன். இம்மாதிரி ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்னையில் ‘கிஷோர்குமார் நைட்’ ஏற்பாடு செய்திருந்தேன். குறிப்பிட்ட தினம் இந்தியன் ஏர்லைன்ஸ் ஸ்டிரைக். கிஷோர் எப்படி வருவார்? பம்பாய்க்குப் போன் செய்து, ஒரு தனி விமானத்தை அவருக்கு ஏற்பாடு செய்தேன். இதற்காக நான் கொடுத்த சார்ஜ் இருபத்து ஐந்து ஆயிரம்.

எனக்கு இரண்டு பிள்ளைகள். பெரிய பையன் கண்ணன். ஸ்டேட் பாங்கில் இருக்கிறான். சின்னவன் ஜகந்நாதன். பம்பாயில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறான். என் கணவர்தான் எங்கள் வீட்டு நிதி அமைச்சர்.

என் பெருமைகளைப் பீற்றிக் கொள்ள இவைகளைக் கூறவில்லை. நான் ‘சுவாமி’ என்று ஒரு படம் எடுத்திருக்கிறேன். மூன்றே மாதத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒரு இளம் நடிகைக்குச் சான்ஸ் கொடுத்து இருக்கிறேன். பல பெண்களுக்கு எங்கள் செலவில் டான்ஸ் கற்றுக் கொள்ள உதவிகள் செய்கிறோம். ஏன், ஒரு பெண்ணுக்கு நடிப்புப் பள்ளியில் படிக்க பல ஆயிரம் ரூபாய்கள் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கிறோம்.

ஹேமாவிற்கு நம் பண்பாட்டிலும், பக்தியிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆகவேதான் நடனப் பள்ளி துவங்குமுன் அண்ணங்கராச்சாரியாரிடம் சென்று ஆசீர்வாதம் பெற்று வந்தாள். செம்பூர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குப் பத்தாயிரம் கொடுத்துள்ளேன்.

ஒரு கோவில், ஒரு நர்ஸிங்ஹோம், ஒரு கலைக்கூடம் ஆகியவைகளைக் கட்ட வேண்டும் என்ற பெரிய அவா இருக்கிறது.

(பல வருடங்களுக்கு முன் தினமணி கதிரில் நான் எழுதிய பேட்டிக் கட்டுரை)

1 comment:

 1. உங்கள் பதிவு மிகவும் அருமை .ஹேமமாலினி அவர்கள் அம்மாவின் அழகிய கட்டுரையும் ,அவர் மகளுகாக ,எடுத்துக்கொண்ட முயற்ச்சி ,தன்னம்பிக்கை அற்புதம். சாத்விக ஜம்பம் அடித்து கொள்வதில் தவறு இல்லை .இன்று ஹேமமாலினி கோடி கட்டி வாழ்வதற்கு கரணம் அவர் தாயாரின் லக்ஷ்மி ஸ்தோத்திரம் ,மற்றும் அவரின் விடா முயற்சி கரணம். அவர் தயார் இப்படி பதிவு செய்வதற்கு உங்களின் நேர் காணல்
  முக்கிய கரணம்.ஒவொரு பதிவிலும்ungal முத்திரை பளிச்சென்று தெரிகிறது.
  கே.ராகவன்
  பெங்களுரு
  இந்தியா

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!