ஒரு கணம் என்
கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா, நிஜமா என்று புரியவில்லை. நிதர்சனமா,
பிரமையா என்று தெரியவில்லை!
தொச்சு.. என்
அருமை கமலாவின் அருமைத் தம்பி தொச்சு என் முன்னே கட்டுக்கட்டாய் ரூபாய் கட்டுகளை வைக்கிறான்.
"அத்திம்பேரே, இந்தாங்க பணம் என்கிறான்.
என்ன அதிசயம்?
தொச்சு கை நீட்டி கொடுத்ததாக வரலாறே கிடையாது. வாங்கி வாங்கி சிவந்த கை அவனுடையது.
அப்படிப்பட்டக் கறவை திலகம் எனக்கு - ஏமாந்த சோணகிரி சங்கத்தின் தலைவரான எனக்கு - பணத்தைக்
கொடுக்கிறான்!
கமலா, பற்களுக்கு
இடையில் முகமாகத் திகழ்கிறாள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த என் மாமியார், ஒலிம்பிக்கில்
தானே மெடல் வாங்கி வந்ததைப்போல் முகம் மலர்கிறார்!
`என்னப்பா
இது' எங்கேயாவது லாட்டரி அடிச்சியா?'' என்று கேட்டேன்.
`காலத்துக்கும்
தொச்சு உங்க கிட்டேயிருந்து பணம் வாங்கிக் கொண்டெ இருப்பான்னு நெனைச்சிங்களா!'' என்றான்
உற்சாகமாக!
`அதில்லைடா...
கொள்ளை அடிச்சுண்டு வந்தேயா, பிக்பாக்கெட் பண்ணிண்டு வந்தேயான்னு கேட்க மறந்துட்டார். ஒரு தத்துப் பித்து கதை எழுதி ரூபாய் சம்பாதிச்சா
அது பெரிசு! மத்தவங்க நாயா அலைஞ்சு பேயா திரிஞ்சு சம்பாதிச்சா, அது கள்ள நோட்டு, பிக்பாக்கெட்
பணம்!'' தொச்சுவின் உடன் பிறந்த சகோதரியின் பாகற்காய் + எட்டிக்காய் ஜூஸ் வார்த்தைகள்!
"கமலா,
நான் தொச்சுவைக் கேட்கறேன்; அவன் சொல்றான். நீ என்ன, நடுவில்?'' என்றேன்.
`பழங்காநத்தத்திலே
நாம மனை வாங்கினோமே, ஞாபகமிருக்கா? அது பழங்காநத்தம் இல்லை. குப்பையெல்லாம் கொட்டிய
பழங்கா நாத்தம்னு கூட நீங்களே சொல்வீங்களே!''
"அதுக்கு
என்ன வந்தது?அதுல போட்ட பணத்திற்கு எப்போதோ எள்ளு போட்டாச்சே!''
"நீங்க போடுவீங்க,...ஆனால் அவனுக்கு
மனசே சரியில்லை. நம்மால அத்திம்பேருக்கு நஷ்டமாயிடுத்தேன்னு வருத்தம்... வருத்தம்''.
"கமலா...சட்டுனு
விஷயத்துக்கு வா. அந்த பிளாட்டை யார் தலையிலேயாவது கட்டிட்டானா?''
"கட்டறதா...
பக்கத்திலே ஒரு இண்டஸ்ட்ரி வர்றது. அவங்களுக்குப் போகறதுக்கு வழி நம்ப பிளாட்தான்.
நல்ல விலை கொடுத்தான். நாம எப்பவோ பாதி பாதி பணத்தைப் போட்டு பத்தாயிரத்துக்கு வாங்கினோம்.
இப்போ எண்பதாயிரத்திற்குப் போயிருக்கு... உங்க பங்கு நாற்பதுதான் இது'' என்றான்
தொச்சு.
"பரவாயில்லைப்பா...பிளாட்
வாங்கி வித்தால் நல்ல லாபம் வரும்போல இருக்கே! ஆமாம்,.பாதி பாதி பணம் போட்டோம்னு
சொன்னியே. உன் பங்கு 5000 ரூபாயை என் கிட்ட கடனாக வாங்கிண்டே இல்லயா? இதுவரை
அந்த பணத்தைத் தரலையே?''