September 25, 2014

நெகிழ்ந்து போனேன் -2.

அவர்  என் உறவினர். ஆனால் அவர் ஓய்வு பெற்று சென்னைக்கு  வந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன்.அவர் கல கல ஆசாமி. என் எழுத்திற்கு ரசிகர். நகைச்சுவைப் பிரியர்.   அவ்வப்போது நீலாங்கரை வந்து  என்னை சந்தித்து அரட்டை அடிப்பார்.

அவர் பிள்ளை, பெண்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றனர். அதனால் காடாறு மாதம்; நாடாறு மாதம் என்று இருந்தார்.

இப்படி இரண்டு, மூன்று வருஷங்கள் பழகி  இருப்போம்.

அவர் திடீரென்று நோய்வாய்ப் பட்டார். மருத்துவரைப் பார்க்க  அடையாறு வருவார். அப்போது சில சமயம் நீலாங்கரைக்கு வந்து  என்னுடன் அரட்டை அடித்து விட்டுப் போவார்.

“நோயினால் வலி ஏற்படும்போது உங்கள் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன். அந்த சமயத்தில் வலி தெரியாது”என்பார்.  என் மேல் உள்ள அன்பால் அப்படிச் சொல்கிறார் என்று  அதை எடுத்துக் கொள்வேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்த சமயம், அவருடைய  நோய் உக்கிரம் அடைந்ததன் காரணமாக அவர் காலமானார்.

எனக்கு உடனே  செய்தி வந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு என் ஆறுதலை தெரிவிப்பதற்கு அவருடைய மகனுக்குப் போன் செய்தேன், (வெளிநாட்டில் உலகப் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன்.)

அவனிடம் “ உங்கப்பா காலமானது மிகவும் துயரத்தைக் கொடுத்தது. உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை....” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே--
அவன் இடைமறித்து....
“ இல்லை....உங்கள் ஆறுதல் எங்கள் துயரத்தைச் சிறிதளவு குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை... நானே உங்களுக்குப் போன் செய்து ஒரு தகவலைச் சொல்ல நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவைத் தகனம் செய்த பிறகு சாம்பலை எங்கு கரைக்கலாம், அந்த இடமா, இந்த இடமா  என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நீலாங்கரை பீச் என்று தீர்மானித்தோம். அப்பாவிற்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்குப் போய் உரையாடுவதுதான். ஆகவே உங்கள் வீடு இருக்கும் நீலாங்கரைக் கடலில் சாம்பலைக் கரைத்து விட்டு வந்தோம். உங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போன மாதிரி அவருடை ஆத்மாவிற்கு மன நிறைவு ஏற்படும் என்று நாங்கள் எண்ணினோம்” என்றான்.

அப்படி அவன்  துக்கத்துடன் சொன்னபோது அவன் அழவில்லை.
என் கண்கள் கலங்கின.
இப்போது இதை எழுதும்போதும்!


சிறு குறிப்பு-1: சென்ற பதிவில் போடுவதற்குத் திட்டமிட்டிருந்தேன். தனிப் பதிவாகப் போடுவதுதான்  அவருக்கு நான் செய்யக்கூடிய அஞ்சலி என்று கருதி, தனியாக வெளியிடுகிறேன்.
சிறு குறிப்பு-2: இந்தப் பதிவை அவரது மகனின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

6 comments:

  1. உங்களின் எழுத்து ஒரு அருமருந்து என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம் பி.எஸ்.ஆர் சார். எங்களுக்குச் சிறிதுமில்லை. அவருக்குச் சிறப்பான அஞ்சலி செய்திருக்கீங்க... படிக்கையிலேயே மனம் நெகிழ்ந்தது.

    ReplyDelete
  2. Whenever I come to this blog, I read your articles regularly; but I do not offer my comments as I am not so fluent to convert my thoughts into absolute words like you. But it is true that we enjoy your articles while reading especially your hilarious ways of writing.

    ReplyDelete
  3. படித்ததும் நானும் நெகிழ்ந்தேன்!

    ReplyDelete
  4. திரு கணேஷ், திரு மோகன், திரு தளிர்--
    மிக்க நன்றி.
    -கடுகு

    ReplyDelete
  5. Really very touching.Your relative was attached your writings and humorus way that you describe.May his soul rest in peace.

    ReplyDelete
  6. நெகிழ வைத்தது உங்கள் பதிவு.....

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!