ஞாயிற்றுக்கிழமை. என் வீட்டு டி. வி. அறையில் மஹாபாரத குருக்ஷேத்திரம் நடந்து கொண்டிருந்தது.
டி. வி. யில் இல்லை, டி. வி அறையில்!
தொச்சு, தன் பரிவாரங்களுடன் வந்திருந்தான். அவை வியூகம் அமைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. (ஒவ்வொன்றும் உள்ளே தள்ளிய டஜன் இட்லிகள் பின் எப்படி ஜீரணமாகுமாம்?)
தொச்சு வீட்டில் டி.வி. ரிப்பேராம். அதை சாக்காக வைத்துக் கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் என் வீட்டிற்கு வரத் துவங்கினான். டி.வி. யில் காலை 9 லிருந்து 10 வரை ஒளிப்பரப்புவதால், அரை மணி முன்னதாக வந்து ("லைட்டாக டிபன் இருந்தால் போதும், அக்கா''), அரை மணி நேரம் பின்னதாகப் போய் ("ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாப்பிட மாட்டேன் என்றால் விடமாட்டேன் என்கிறாயே அக்கா!'') கொண்டிருந்தார்கள்.
இதனால் எனக்குப் பலரின் மீது கோபம் கோபமாக வந்தது. வியாஸரில் ஆரம்பித்து டெலிவிஷன் கண்டுபிடித்தவர், பி. ஆர். சோப்ரா என்று பலரை சபித்தேன். சீரியல் சீக்கிரமே முடிய வேண்டுமே என்று பல தெய்வங்களை வேண்டிக் கொண்டேன். அது மட்டுமல்ல ராமாயணம் முடிந்த பிறகு உத்தர ராமாயணம் வந்த மாதிரி, இதற்கும் ஒரு உத்தர பாரதம் வந்து விடக் கூடாது என்றும் வேண்டிக்கொண்டேன்.
"ஏண்டா.... சனியன்களே.... இப்படி கத்தறீங்க....! எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஒழிஞ்சு தொலையுங்கோ.... அத்திம்பேர் கதை எழுதறாரே.... இப்படி தொந்திரவு பண்ணினா கற்பனை எப்படி ஓடும்! ..அடியே, அங்கச்சி! உன் பிள்ளைங்களை அடக்கேன்'' என்று தொச்சு கத்தினான். ''ஏன் உங்க பசங்க தானே? நீங்க தான் அடக்குங்களேன்? என் மேலே ஏன் பாயறீங்க....''
"நான் நாய்டி, அதனால தான் பாயறேன். வாயைப் பாரு........ உன்னை என் தலைல கட்டினாங்களே, அவங்களைத் தான் சொல்லணும். .பசங்களையா பெத்திருக்கே? பேய்.... பூதம்.... பிசாசு....என்று இருக்குதுங்க.''
மகாபாரத யுத்தத்தில் ஒரு கிளைக் கதைபோல் இந்த வாக்குவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அங்கச்சி "ஓ' என்று அழ ஆரம்பித்தாள். "இப்படித் தான் அவர் எப்பவும் திட்டித் தீர்க்கறார்'' என்று கேவலுக்கிடையே சொல்ல --
என் மாமியார், "ஏண்டா தொச்சு அவளைத் திட்டறே....? அங்கச்சி நீ உள்ளே போம்மா.... ஏய். பசங்களா சத்தம் போடாமே சண்டை போடுங்கடா.... சேச்சே .... சண்டை, சத்தம் எதுவும் வேண்டாம், மொட்டை மாடிக்குப் போய் விளையாடுங்கடா.'' என்று சொல்லி அனுப்பினாள், அப்படி சொல்லிக் கொண்டே அவள், தொச்சுவின் பிரஜைகளுக்கு கைமுறுக்கோ, சீடையோ கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம் பல்லாவரம் குவாரி மாதிரி கடகட கொடகொடவென்று வானரங்களின் வாய் மிக்ஸியாகி சீடையை அரைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.
அச்சமயம் தொச்சு தோளில் துண்டைக் கோபமாக போட்டபடியே வந்து என் பக்கத்தில் அமர்ந்தான்.
நான் கல்லுளிமங்கன். ஆகவே அவன் கோபத்தைக் கண்டு கொள்ளவில்லை. அது ஒரு பாவ்லா கோபம் என்று எனக்குத் தெரியும்.
இரண்டு நிமிடம் கழித்து, என் அருமை கமலா இரண்டு டம்ளர் காபியுடன் வந்தாள்.
"ஏண்டா தொச்சு .... உனக்குத் தான் பிளட் பிரஷர் ஆச்சே .... ஏன் வீணா கோவிச்சுகறே? ... இந்தா அரை முழுங்கு காபி .... '' என்று காபி கொடுத்தாள். எனக்கும் ஒரு டம்ளர் கொடுத்தாள். (புல்லுக்கும் அங்கே கொஞ்சம் பொசிந்தது.)
தொச்சுவுக்கு பிளட் பிரஷர் என்று எனக்கு அப்போது தான் தெரியும். ஆகவே உபசாரத்திற்கு ''என்ன தொச்சு.... உனக்கு பிளட் பிரஷர் என்று எங்கிட்டே சொல்லவே இல்லையே ..'' என்ற ஆரம்பித்தேன். என்னை மேலே பேசவிடாமல் கமலா, "ஆமா, இதைப் போய் டாம் டாம் அடித்துச் சொல்லணுமா? தொச்சு ஒரு கஷ்டத்தையும் வெளியே சொல்லவே மாட்டான்.'' என்றாள்
தொச்சுவுக்கு என் மனைவி கமலாவும் என் மாமியாரும் இதுவரை கொடுத்த சர்டிபிகேட்களை அடுக்கி வைத்திருந்தால் கின்னஸ் புத்தகத்தில் அது இடம் பெற்றிருக்கும்.
"அப்பா அஞ்சு ரூபாய் கொடு'' என்று தொச்சு ஜூனியர் நம்பர்-5 (அல்லது 6) வந்து பணம் கேட்டது.
"எதுக்குடா பணம்? பணம் .... பணம்னு உங்கம்மா தான் உசிரை வாங்குகிறாள் என்றால் நீங்களுமா ....? தாயைப் போல பிள்ளை .... போடா, பணம் கிணம் கேட்டீங்க, இங்கே விழும் பிணம்.'' -- அவனையறியாமல் டி. ராஜேந்தர் பாணியில் சொன்னான்.
"இல்லேப்பா, மாடியில் நல்லா காத்து அடிக்குது. காத்தாடி விட்டால் சும்மா கும்முனு பறக்கும். ஒரு பாணா காத்தாடி, நூல் எல்லாம் வாங்கப் பணம் .... ஜில்லு தான் வாங்கிண்டு வரச்சொன்னான்.''
" ஜில்லு .... அவனைக் கொல்லு'' என்று (டி. ஆர். பாணியில்) இரைந்தான் தொச்சு, இரைந்ததோடு அறைந்தான் முதுகில் இரண்டு தடவை.
அவ்வளவு தான், அடுத்த கணம் அந்தப் பிரஜை பயங்கரமாக அழத் தொடங்கியது. அபாயச் சங்கு ஒலித்தால் எப்படி ஜனங்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடுவார்களோ அது மாதிரி அவனது கத்தலைக் கேட்டுக் கமலா, அங்கச்சி, மாமியார் எல்லாரும் ஓடி வந்தார்கள்.
"ஐயையோ .... இப்படியா குழந்தையை ராக்ஷஸனாட்டமா அறைவா...? உங்களுக்குப் பிடிக்கலைன்னா எங்க எல்லோரையும் ஏதாவது பாழுங்குளத்திலையோ கிணத்திலையோ தள்ளிவிட்டுப் பாறாங்கல்லைப் போடுங்கோ....'' என்று அங்கச்சி அழுதாள்.
இந்தச் சமயம் கமலா, என்னைப் பார்த்து "அவன் தான் அறைஞ்சான்னா நீங்க வேடிக்கையா பார்த்துண்டு இருப்பீங்க? அடிக்காதேடா குழந்தையை என்று சொன்னா என்ன உங்க வாய் முத்து உதிர்ந்துடுமா ....? எல்லாம் பரம்பரை குணமாச்சே'' என்று நங்கு நடித்தாள்.
நான் ஜேபியிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து அந்த ஜீவனிடம் கொடுத்து "இந்தாடா, குழந்தே, அழாதே. காத்தாடி வாங்கிக்கோ'' என்றேன்.
அவனுடைய அழுகை சட்டென்று பறந்தது. அவனும் பறந்து போனான். எல்லாம் சப்பென்று முடிந்து போய் விட்டதே, என்று, திட்ட வாய்ப்பில்லாத கமலா, "வாடீ அங்கச்சி, கைமுறுக்கு பண்ணலாம் .... நீ நன்னா சுத்தறே'' என்றாள். (அகப்பட்டதை தொச்சு சுருட்டுவான்; அவன் மனைவி கைமுறுக்கு மட்டுமல்ல, காதிலும் பூ சுற்றுவாள்.)
அவர்கள் போனதும் .... " தொச்சு உனக்கு பிளட் பிரஷர்'' என்று ஆரம்பித்து ஏதோ சொன்னேன் ....
என் வீட்டு மாடியிலே ஆயிரம் ரதங்கள், பத்தாயிரம் குதிரைகள், யானைகள், காலாட்படைகள் ஓடிக்கொண்டி ருப்பது போல் ஒரே சத்தம்! தொச்சுவின் நால்வகைப் படைகள் என் வீட்டு மாடியை துவம்சம் செய்து கொண்டிருந்தன.
திடீரென்று ஓர் அலறல். ஒரு கூக்குரல். "அம்மா, ஜில்லு மொட்டை மாடியிலிருந்து விழுந்துட்டான் .... தலையிலே ரத்தம்....'' என்று கத்தல் வர, தொச்சு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினான். அங்கச்சியும் ஓடினாள், மாமியாரும் ஓடினாள், என் மனைவியும் ஓடினாள். என்ன கண் கொள்ளாக் காட்சி!
மொட்டை மாடியிலிருந்து கீழே மல்லாந்து விழுந்து கிடந்தான், ஜில்லு. அடிபட்ட வேகத்தில் மயங்கிக் கிடந்தான். எனக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. பின் தலையில் அடிபட்டால் ஆபத்து என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் தலையிலேயே யாரோ சம்மட்டியால் அடித்தது போன்று மூளை குழம்பியது. அதன் காரணமாக அங்கச்சி ஓலமிட்டதையோ, அவளைப் பார்த்து தொச்சு கத்தினதையோ, காத்தாடி நூலைப் பங்கு போட்டுக் கொள்ள மற்ற வாரிசுகள் அடிபிடி சண்டை போட்டுக்கொண்டதையோ நான் உணரவில்லை.
* * *
""என்னடீ, கமலா என்ன சொல்றார், டாக்டர்?''
"தலையிலே அடி பட்டிருக்கிறதாலே 'கேட் ஸ்கான்' பண்ணணும்னு சொல்றார்.....''
"அதென்ன பூனை, எலின்னு சொல்றான் '' என்று என் மாமியார் கேட்டாள். (என் மாமியாருக்கு இங்கிலீஷ் தெரியும்.)
"இல்லைம்மா .... தலையிலே ஒயர் ஒட்ட வெச்சு ஏதாவது மூளையிலே அடிபட்டிருக்கா என்று பார்ப்பா ....''
"அடிபட்டிருந்தால் தலைக்குள் ஆபரேஷன் பண்ணுவாளோடீ....''
கமலா என் பக்கம் திரும்பி "எந்த வேளையிலே அந்த ரூபாயைக் கொடுத்தீர்களோ....'' என்று ஆரம்பித்தாள்.
அதற்குள் தொச்சு வந்தான். "அடியே உன் பிள்ளையாண்டானுக்கு மண்டையிலே அடிபட்டிருக்கு, உள் காயம் இருக்குதான்னு பார்க்கணும். இல்லாவிட்டால் ஆபத்துத் தான். டாக்டர் சொன்னார்.''
அங்கச்சி, "அக்கா, பாருங்கோ,என் மேலே எரிஞ்சு விழறார். நானா காத்தாடி விடச் சொன்னேன் ....? விழுந்து அடிபட்டுக்கச் சொன்னேன். அத்திம்பேரும் குழந்தை விளையாடட்டும்னு தானே பணம் கொடுத்தார், இப்படி ஆகும்னு அவர் கண்டாரா என்ன..?''
ஓஹோ.... இந்த விபத்துலே உனக்கும் பொறுப்பு உண்டு என்கிறாளா அங்கச்சி?
"ஏண்டா தொச்சு.... '' -- மாமியார் ஆரம்பித்தாள்.
"ஏண்டா, போண்டா எதுவும் வேண்டாம்மா .... ஸ்கான் பண்ண எவன் கிட்டே பணம் இருக்கு? கையிலே இருந்த பணத்தை பிசினஸ்லே போட்டிருக்கேன். நாலு இடத்திலே கைமாத்துக் கூட வாங்கியாச்சு .... ஆகிறது ஆகட்டும், டிங்சர் போட்டு வீட்டுக்குக் கூட்டிண்டு போ '' என்று மகா விரக்தியாகச் சொன்னான்.
"ஏன்னா.... இந்த ஸ்கானுக்கு எவ்வளவு செலவாகுமாம்? போய் டாக்டரைக் கேளுங்களேன்.'' என்று கமலா கூறிய வாக்கியங்களுக்கு இடையே நான் படித்தது, "நீங்க காத்தாடி வாங்க பணம் குடுத்ததாலே தான் இப்படி ஆச்சு.''
இதன் காரணமாக என் வயிற்றில் புளி கரைத்தது. கிலியும் பிறந்தது. பையனுக்கு ஏதாவது ஏற்பட்டால்.... எனக்குச் சிலிர்ப்பும் ஏற்பட்டது. "தலையிலே மட்டும் அடி என்றாலும் உடம்பிலேயும் ஊமை காயம் பட்டிருக்கு. ஹெட் ஸ்கான் பண்ணுவதோடு பாடி ஸ்கானும் பண்ணணும் .... அப்பத்தான் தைரியமா இருக்கலாம்.... இப்படித்தான் எல். ஐ. சி. குப்புசாமிக்கு சின்ன ஆக்சிடெண்ட் ஆச்சு.. ஸ்கான் பண்ணிக்கங்கன்னு தலையிலே அடிச்சிண்டேன். கேக்கலை, ஆறு மாசம் கழிச்சு ஒரு ப்ளட்- க்ளாட் ஹார்ட்க்குப் போய் .... போனவரைப் பற்றி எதுக்கு பேசணும்.'' என்றார் டாக்டர்.
"டாக்டர்.... ஸ்கான் பண்ண எவ்வளவு ஆகும் ....?''
"இது ஒரு கேள்வியா'' குழந்தை சாகக் கிடக்கிறான், கேக்கறீங்களே, கேள்வி'' - கமலாவின் கர்ஜனை!
"சரி டாக்டர் .... ஸ்கான் பண்ணச் சொல்லுங்க .... பணம் வரும், போகும் குழந்தை கிடைப்பானா?'' என்றேன்.
ஸ்கான் ஆகி ரிப்போர்ட்டும் கிடைத்து. "நல்லகாலம், ஒண்ணும் தப்பாக இல்லை'' என்றார் டாக்டர். "அம்மாடி, இப்பத்தான் மூச்சு வந்தது.'' என்றாள் என் மாமியார். எனக்கு பெருமூச்சு வந்தது!
ஸ்கான் பண்ணியதில் பையன் தலையில் அடி ஒன்றும் இல்லை என்று தெரிந்தமாதிரி என் பர்ஸையும் இப்போது ஸ்கான் பண்ணினால் அதில் மட்டுமில்லை, என் வங்கியிலும் ஒன்றுமில்லை என்பது தெரியவரும்!
Lovely one.I have been reading your postings for the past two months regularly and thrilled with your humorus touch .Very few writers are capable of write Humorus and you are one among them.I am in Denver will be back to Bangalore on 19Sep where i settled.
ReplyDeleteWith Warm Regards
K.Ragavan.
www.ragavan-creativity.blogspot.com
காத்தாடி விட் ஐந்து ரூபாய் கொடுத்து
ReplyDeleteபர்ஸ் ,பாங்க் பணம் எல்லாம் காற்றில் கரைந்துவிட்டதே..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கதை படிக்கிறேன். மிகவும் ரசித்தேன்....
ReplyDeleteதொச்சுவின் படைகள் படுத்திய பாட்டில் சிரித்துச் சிரித்து மாளலை. சூப்பர் ஸார்
ReplyDeleteநான் பட்டுண்டு இருக்கற கஷ்டத்தை நேர FACE TIME பார்க்கிறார்போல் அழகாக எழுதறேள் சார்!
ReplyDeleteஅன்புள்ள ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
ReplyDeleteஅவர்களுக்கு,
அடபாவமே.. உங்க வீட்டிலும் ஒரு ‘ஜில்லு’வோ?!! :” -:)