August 05, 2014

தெரிந்த பெயர், தெரியாத தகவல்கள்: பென் குரியன்

ஒரு முன்குறிப்பு:
 சில வருஷங்களுக்கு முன்பு என் பெண் கூறிய ஒரு சுவையான அனுபவம். அவள் அப்போது AIIMS மருத்துவக் கல்லூரி மாணவி.ஒருநாள் கல்லூரி நூலகத்தில் ‘மூளை’யை ப்பற்றி ஒரு பெரிய புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த போது  அதில் ஒரு இடத்தில் “ மேலும் விரிவான தகவல்களுக்கு  ’ A HANDBOOK OF  CLINICAL NEUROLOGY’ புத்தகத்தைப் பார்க்கவும்”   என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலகத்தில், அந்த புத்தகம் இருக்கிறதா  என்று கேட்டாள். “இல்லை” என்றார்கள்.
தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த போது பல இடங்களில் இந்த ’HANDBOOK-கை பார்க்கவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு  தலையணை அளவுப் புத்தகத்தில் இருப்பதைவிட  அதிக தகவல்கள்   கையடக்கப் புத்தகத்தில் (HANDBOOK !) இருக்கும் என்றால், அது மிகவும்  சிறப்பானதாக இருக்க வேண்டும்; எப்படியாவது அதைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.  பல இடங்களில் வேட்டை ஆடினாள். டில்லியில்  NATIONAL MEDICAL LIBRARY என்ற நூலகம் இருக்கிறது. மிகப் பழமையான நூலகம்.( தூசு அகம் என்றும் சொல்லலாம்!) அங்கு போய்க் கேட்டாள்.
“ ஓ, இருக்கிறதே.. முதல் மாடியில் ஷெல்ஃப்கள் ’எம்’,  ‘என்’னில்  இருக்கிறது” என்றார்கள்.
‘ என்னது..நாம் ஹேண்ட்புக் தானே கேட்டோம். இரண்டு ஷெல்ஃப்கள் என்று சொல்கிறார்களே?” என்று யோசித்தபடியே மேலே சென்றாள்.  ஷெல்ஃப்களைப் பார்த்தபோது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.காரணம், வரிசையாக 26 ஹேண்ட்புக் புத்தகங்கள் இருந்தன;  A முதல்  Z வரை 26 வால்யூம்கள்! ( இப்போது 123 வால்யூம்கள்!)

சரி, திடீரென்று இந்த விஷயம் இப்போது என் நினைவுக்கு வந்ததற்குக் காரணம், இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக இருந்த DAVID BEN GURION-ஐப் பற்றி ஒரு சுவையான தகவலை ஒரு புத்தகத்தில் பார்த்ததுதான்!
========================
DAVID BEN GURION (1886 –1973) இஸ்ரேல் நாட்டு முதல் பிரதமர்.. பயங்கரப் புத்தகப்  பிரியர்.அவ்வப்போது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுவார். அதில் அவருக்குத்  தேவையான புத்தகங்கள் பட்டியல் இருக்கும். பட்டியல் சற்று நீளமாக இருக்கும். நண்பரும், நியூயார்க்கில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகப் பட்டியலைக் கொடுப்பார். கடைக்காரர் பல இடங்களில்  புத்தகங்களைத் தேடிப்பிடித்து சப்ளை செய்வார்.
  ஒரு சமயம் (அக்டோபர் 1952) அந்த நண்பருக்கு பென் குரியனிடமிருந்து கடிதம் வந்தது. புத்தகப் பட்டியலில் ஏழே ஏழு புத்தகங்கள் தான் இருந்தன.
“பரவாயில்லை, ஏழு புத்தகங்கள்தான் ..அப்பாடி. அதிக அலைச்சல் இல்லை”என்று எண்ணியபடி, நியூயார்க் சென்று பட்டியலைப் புத்தகக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவர் ஐந்தே நிமிஷத்தில் 6 புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். பட்டியலில் ஏழாவதாக இருந்தது: “ A COLLECTION OF CASTILLION LITERATURE.”
”ஏழாவது புத்தகத்தை எப்படி எடுத்துப் போவீங்க? காரில் பிடிக்காது.மொத்தம் 134 வால்யூம்கள்!” என்றார் கடைக்காரர்.
நண்பருக்குத் தலை சுற்றியது.
*       *       *
 இந்த சுவையான தகவலுடன்  BEN GURION-ஐப் பற்றிஇன்னும் சில தகவல்கள்
இருந்தன. அவைகளையும் இங்கு போடுவதில் தப்பில்லை.

1. என்ன புத்தகம் எழுதினார்?
ஒரு பெரிய ஆடிட்டோரியத்தை அரசு கட்டியது. அதற்கு FREDERICK MANN ஆடிட்டோரியம் என்ற பெயரை பென் குரியன் வைத்தார்..
அவரிடம் ஒரு உயர் அதிகாரி. அந்த அரங்கத்திற்கு பிரபல ஜெர்மன்
எழுத்தாளர் ( THOMAS) MANN நினைவைப் போற்றும் வகையில் பெயர் வைத்தது  என்று (தவறாக) நினைத்து ,  THOMAS MANN  பெயரை வைத்தது மன நிறைவைத் தருகிறது.” என்றார்.

 அவரிடம் பென் குரியன் “ இல்லை..இல்லை.. அது FREDERICK MANN  என்ற நன்கொடையாளரைப் போற்றுவதற்காக வைத்த பெயர்” என்றார்.
 “ அப்படியா.. இந்த ஃப்ரெடெரிக் என்ன எழுதினார்?” என்று அதிகாரிகேட்டார்.
“அவர் எழுதியது... அவர் ... ஒரு செக் எழுதினார். பெரிய .... நன்கொடை செக்!” என்று புன்முறுவலுடன் சொன்னார் பென் குரியன்! அவர் கொடுத்த பணத்தால்தான் அந்த அரங்கம் கட்டப்பட்டதாம்.

2. ஒரு சமயம் ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக பென் குரியனை அவரது இல்லத்தில் பேட்டி கண்டது ஒரு டிவி. நிறுவனம்.
படப்பிடிப்பு முடிந்தது டி.வி. தயாரிப்பாளர்  “மிக்க நன்றி. பேட்டி மிகவும் பிரமாதமாக அமைந்து விட்டது” என்று பென் குரியனிடம் சொன்னார்.
” அப்படியா? ..நீங்கள்  1000 வருஷத்திற்கு முன்பு வந்திருந்தால் ஒரு பிரமாதமான  படம் எடுத்திருக்கலாம்.  தூரத்தில் என்ன தெரிகிறது, பாருங்கள்.  அங்கேதான் மவுண்ட் சினாய் இருக்கிறது. அங்குதான் மோசஸ், பத்துக் கட்டளையை கடவுளிடமிருந்து  பெற்றுக் கொண்டார்.  அதை நீங்கள் படம் பிடித்திருந்தால், அதை மிஞ்ச ஒரு நிகழ்ச்சியும் இருக்க முடியாது!” என்றார் பென் குரியன்.

6 comments:

  1. படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  2. இரண்டு தகவல்களைப் பொருத்தமாக் இணைத்து விட்டீர்களே/ Good editing - Raaju

    ReplyDelete
  3. ”சின்ன அறிவிப்பு”
    என்னை பற்றி திரு. ராகவன் என்னும் அன்பர் தன் பிளாக்கில் ஒரு நீண்ட பாராட்டுப் பதிவைப் போட்டிருக்கிறார். அதை எனக்குப் பின்னூட்டமாகவும்
    அனுப்பியுள்ளார். அந்தப் புகழ்ச்சியைப் என் ப்ளாக்கில் போட்டு மார்தட்டிக்கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. அவர் ப்ளாக்கில் போய்ப் பார்ர்ப்பவர்களை நான் தடுக்க முடியாது.
    திரு ராகவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    -கடுகு
    ----------
    Ragavan has left a new comment on your post "தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு":

    TrIbute to Writer ....
    .........about him.
    KRagavan
    25-8-14.
    www.ragavan-creativity.blogspot.com
    -----------

    ReplyDelete
  4. பிரபல எழுத்தாளர் கடுகு அவர்களை பற்றி ,முகநூலிலும் மற்றும் என் ப்ளாக்கில் பதிவு பண்ணியயதைப் படித்து, எனக்கு எழுதிய இந்த கடிதத்தை பெரிய பாக்கியமாகக் கருதி முக நூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

    "கடுகு August 27, 2014 at 5:41 PM ”சின்ன அறிவிப்பு” என்னை பற்றி திரு. ராகவன் என்னும் அன்பர் தன் பிளாக்கில் ஒரு நீண்ட பாராட்டுப் பதிவைப் போட்டிருக்கிறார். அதை எனக்குப் பின்னூட்டமாகவும் அனுப்பியுள்ளார். அந்தப் புகழ்ச்சியைப் என் பிளாக்கில் போட்டு மார்தட்டிக்கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. அவர் பிளாக்கில் போய்ப் பார்ரப்பவர்களை நான் தடுக்க முடியாது. திரு ராகவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    -கடுகு on தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு
    ---KRagavan

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!