October 23, 2014

புத்தக வேட்டை


ON BOOKS:
These are not books, lumps of lifeless paper, but minds alive on the shelves. From each of them goes out its own voice…and just as the touch of a button on our set will fill the room with music, so by taking down one of these volumes and opening it, one can call into range the voice of a man far distant in time and space, and hear him speaking to us, mind to mind, heart to heart.--Gilbert Highet
***************************
ஞாயிற்றுக் கிழமைகளில்  டில்லி செங்கோட்டை செல்லும்  தாரியாகஞ்சின் அரைமைல் நீள நடைபாதையில்  பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். தாரியாகஞ்சின் வெகு அருகில் இருந்த மின்டோ ரோடில் என் வீடு இருந்ததால் அடிக்கடி போய் வருவேன்.

அறுபதுகளில், ஒரு சமயம் பியர் டேனினாஸ்  (PIEERE DANINOS 1913-2005 ) என்ற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய  LIFE WITH SONIA  என்ற புத்தகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கிடைத்தது. நகைச்சுவைப் புத்தகம் என்று போடப்பட்டிருந்ததால், விலையைப்பற்றி  யோசிக்காமல் முழுதாக ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன்!

தன் மனைவியைக் கிண்டல் அடித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சூப்பர் புத்தகம். ( பின்னால் அவர் கட்டுரை ஒன்றைத் தமிழ்ப்படுத்திப் போடுகிறேன்!) அதன் பிறகு, மேஜர் தாம்ப்ஸன் என்ற கதாபாத்திரத்தை வைத்து அவர் எழுதிய மூன்று லட்டு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன்.  இவரது புத்தகங்கள் 28 மொழிகளில்  வெளிவந்துள்ளன.


 ஒரு ஞாயிற்றுக்கிழமை தாரியாகஞ்சில் அவர் எழுதிய  MR.BLOT  என்ற புத்தகம் கண்ணில் பட்டது. விலை கேட்டேன்.   “ஐந்து ரூபாய்” என்றார் கடைக்காரர்.  அவ்வளவு விலை கொடுத்து வாங்க மனம் வரவில்லை. ( ஒரு டாலர் = 5 ரூபாய் என்று இருந்த காலம் அது.) “ ஒரே விலை. நாலு ரூபாய்” என்றேன். பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
வீட்டுக்கு வந்ததும் மனம் அடித்துக் கொண்டது.
அடுத்த ஞாயிறு படையெடுத்தேன்.  அந்த புத்தகத்தைக் காணவில்லை.   “போன வாரம் பார்த்தேனே அந்த புத்தகம் எங்கேப்பா?” என்று கேட்டேன்.
  “வித்துப் பூடுச்சே” என்றான்.. எனக்கு மிகுந்த ஏமாற்றம்
பிறகு அந்த புத்தகத்தைத் தேடி தேடி அலைந்து கொண்டிருந்தேன். பலனில்லை.

நியூ யார்க்கில் STRAND BOOK STORE   என்ற பிரம்மாண்டமான பழைய புத்தகக் கடைக்குப் போய்ப் பார்க்கச் சொன்னார் அமெரிக்க நண்பர். சரிதான். நியூயார்க் போய் வர ரயில் டிக்கெட்டிற்கும்,, அங்கு டாக்சி செலவிற்கும் 40, 50 டாலர் ஆகும் என்பதால் சும்மா இருந்து விட்டேன். அந்த புத்தக்கடையில் உள்ள புத்தக ஷெல்ஃப்களை வரிசையாக வைத்தால் 18  மைல் நீளம் போகுமாம்.
(அதாவது சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் வரை !)

சில மாதங்களுக்கு முன்பு நியார்க்கில் உள்ள நமது தூதரகம் போக வேண்டிய வேலை வந்தது. அருகில் தான் STRAND BOOK STORE  என்பதால், அங்கும் போய் வரத் திட்டமிட்டேன். STRAND BOOK STORE கேட்லாக்கைப் பார்த்தேன். கண்டேன் சீதையை!  Mr. BLOT புத்தகம் ஒரு காபி இருந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மறுநாள் தூதரக வேலை முடிந்ததும்  அந்த புத்தகக் கடைக்குப் போனேன். உள்ளே நுழைந்ததும் ஏற்பட்ட, பிரமிப்பு அடங்க சில நிமிடங்கள்  ஆயிற்று. நூல் நிலயங்களில் வைப்பது போல் ஒரு ஒழுங்குடன்  துறைவாரியாக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.  பிறகு,  குறிப்பிட்ட ஷெல்ஃபைக் கண்டு பிடித்துப் போனேன். அங்கு துழாவினேன்.  Mr BLOT   புத்தகம் இல்லை!
 அங்கிருந்த பணியாளரைக் கேட்டேன்.
1504291 “நான் தேடித் தருகிறேன்” என்று சொல்லி விட்டுத் தேடினார். அவருக்கும் கிடைக்கவில்லை.   “ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு கம்ப்யூட்டரில் பார்த்தார்.
“ கேட்லாக்கில் புத்தகம் இருக்கிறது. ஷெல்ஃபில் இல்லையே! ஹும். இருங்கள்.” என்று சொல்லிவிட்டு முன் தினம் விற்பனையான புத்தகங்கள் விவரப் பட்டியலைப் பார்க்க ஆரம்பித்தார். “சார்.. புத்தகம் நேற்று இரவு ஏழு  மணிக்கு விற்று இருக்கிறது. நேற்று  விற்ற புத்தகங்கள்   விவரங்களை இப்போதுதான் கம்ப்யூட்டரில் பதிவு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வெரி ஸாரி” என்றார்.
எனக்கு ஏமாற்றமோ ஏமாற்றம்! கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு, வேறு ஏதாவது வாங்கலாம் என்று ஷெல்ஃப்களை அலசினேன்.
எனக்குப் பிடித்த ஒரு புத்தகம், (Lifetime Speaker's Encyclopedia Volume I & II)
புது மெருகு குறையாத இரண்டு பாகப் புத்தகமாகக் கிடைத்தது.   ஒவ்வொரு பாகமும்  600 பக்க தலையணை தான்! ஒவ்வொரு பாகத்திலும்  ‘10  டாலர்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்கள். வாங்க சட்டென்று மனசு வரவில்லை.
 வீட்டுக்குப் போனதும் மனது அடித்துக் கொள்ளாது என்பது என்ன நிச்சயம்? ஆகவே வாங்க முடிவெடுத்தேன்.
கவுன்டரில் போய் புத்தகங்களைக் கொடுத்தேன். “பத்து டாலர் கொடுங்க” என்றார் காஷியர்.
 “இரண்டு புத்தகம்...” என்று இழுத்தேன்.
“ஆமாம்.. இதோ பாருங்கள் ‘2V' என்றுஓரத்தில் போட்டிருப்பதை. . ‘2V' என்றால் 2 வால்யூம்கள் சேர்ந்த செட்’ என்று பொருள்” என்றார்.
அட,10 டாலர் லாபம்1
Mr BLOT   புத்தகம்  கிடைக்காத ஏமாற்றம் காணாமல் போய்விட்டது!
   *                            *                      *
டேனினாஸைப் பற்றி சில குட்டித் தகவல்களை இங்கு தருகிறேன்.
 * டேனினாஸின் சகோதரர்  ஜீன் டேனினாஸ்,  காடில்லாக் போன்ற கார்களைத் தயாரிக்கும் கம்பெனியின் சொந்தக்காரர்.
* டேனினாஸின் புத்தகத்தில் முக்கிய கதாபாத்திரமான  Major Thompson-னின்  படம் வரையப் பட்டிருக்கிறது.  அந்தப் படத்தில்,   கண், காது, கோட், டை, குடை, கையில் வைத்திருக்கும் ’டைம்ஸ்’ நாளிதழ்ஆகியவற்றை அம்புக் குறியால் காட்டி,  நையாண்டிக் குறிப்புகளைப்  போட்டிருந்தார்கள். அதைக் கிட்டத்தட்ட பின்பற்றி  ’குமுதம்’, பல வருஷங்களுக்கு முன்பு பலரைக் கார்ட்டூனாகப் போட்டு தமாஷ் குறிப்புகளுடன் வெளியிட்டிருந்தது.    .
இதைப் பார்த்த சாவி என்ன செய்தார் தெரியுமா? இதே பாணியில் தினமணி கதிரில்  எஸ்.ஏ.பி அவர்களைக் கார்ட்டூனாகப் போட்டு விட்டார்!

* ஒரு சமயம், டேனினாஸின் கதாபாத்திரமான Major Thompson  மெழுகுச்சிலை  லண்டன் டஸ்ஸாட் கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததாம்.
 தினந்தோறும்,  அன்றையதின ‘டைம்ஸ்” இதழைச் சிலையின்  கையில் சொருகி வைப்பார்களாம்! (INDEPENDENT (London) பத்திரிகையில் வந்துள்ள  தகவல்).
இப்போது சிலை இல்லையாம்.

 * 1967-ல் கார் விபத்தில் டேனினாஸிற்கு பலமாக அடிபட்டு நினைவிழந்தார். இருந்தாலும் விடாமல் ஏதோ கதையை டிக்டேட் பண்ணுவது போல் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தாராம். ஏழு நாள் கழித்து அவருக்கு நினைவு திரும்பியதாம்.

3 comments:

  1. புத்தகத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் அளவு கடந்த மோகம் இந்த கட்டுரையில் நன்றாக தெரிகிறது. டேனிசா பற்றிய தகவல்களும் அற்புதம். தங்களின் நகைச்சுவை ரசனயை மிகவும் ரசிக்கிரியன் .

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    -கடுகு

    ReplyDelete
  3. Vanakam Sir, Thangal thalipil manum, gunam, suvai. Suvaiyana pudhu thagavalum, puthunarvum yerpadugirathu iya. Adhiyae apadi kuripitten. nandri.
    Vanakam,
    K. Balagurunathan,
    Designer-Dinamani,
    Vellore Edition.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!