July 18, 2014

ஒரு வேண்டுகோள்!

அன்புடையீர், 

வணக்கம். என் வலைப்பூவிற்கு தவறாது வருகை புரிந்து, நான் போடும் பதிவுகளைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன், ” உங்களுக்கு அல்லவா நாங்கள்  THANKS   சொல்ல வேண்டும்?” என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும்.
நீங்கள் வலைப்பூவிற்கு வந்து என் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதே என்னைச்  சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உங்கள் பின்னூட்டங்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எனக்கு இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. 

சிலசமயம் FEEDJIT- ஐப் பார்ப்பேன்.  உலகின் எங்கெங்கோ உள்ளவர்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதே எனக்கு உந்து சக்தியாக செயல் புரிகிறது. பல சமயம்  பெயரே கேள்விப்படாத ஊராக இருக்கிறது. அந்த ஊர்/ நாடு எங்கிருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படிக்கும் அவரது ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். பிழைப்புக்காக  எங்கோ ’டிம்பக்டூ’விற்குப் போனாலும் அந் தமிழரின்  ஆர்வம், ரசனை, ஈர்ப்பு  எல்லாம்   தமிழ் நாட்டிலும், தமிழ் இலக்கியம், கலை ஆகியவைகளில் தான் உள்ளன. 
அவர்  ஒருவருக்காகவாவது   வலைப்பூவில் ஒழுங்காகப் பதிவுகளைப் போட போடவேண்டும் என்று என் மனம் அறிவுறுத்துகிறது! முக்கியமாக அவருக்கு ஒரு ஸ்பெஷல் ’தேங்க்ஸ்’ சொல்லுகிறேன். 

பதிவுகள் போட என் பழைய நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். புதிதாகப் பல (பழைய!) புத்தகங்களை வாங்கி இரவு பகலாகப் படிக்கிறேன். நோட்டுப் புத்தகம், நோட்டுப் புத்தகமாகக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்கிறேன்.
காலையில் கண் விழிக்கும்போது, ’இன்று எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், எவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், மொழி பெயர்க்க வேண்டும்’ என்று உத்தேசமாக திட்டமிடச் செய்கிறது வலைப்பூ பணி. இந்த ‘நிர்ப்பந்தம்’ என்னைச்    சோம்பேறித்தனமின்றி  செயல்பட வைக்கிறது. இதன் காரணமாக அதிக பலன் அடைபவன் நான்தான்.
ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது: ”யார் கஞ்சன்? தான் படித்தவற்றை, ரசித்தவற்றை, அறிந்துகொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருப்பவன்தான் மகா கஞ்சன்!”. நான் வள்ளலாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; கஞ்சனாக இருக்க விரும்பவில்லை!
நான் எழுதும் பல  விஷயங்கள், தகவல்கள், என் வலைப்பூவில் போடும் பொன்மொழிகள் எல்லாம் புதியவை என்று கூறமுடியாது. உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

EMERSON-னின் ஒரு பொன்மொழியைத் தருகிறேன் : What I need is someone who will make me do what I can. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்!

நிற்க, உங்களிடம் ஒரு வேண்டுகோள். சமீபத்தில் எனக்கு வந்த மூன்று கடிதங்கள்தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.  மூன்று பேர் எழுதியுள்ள கடிதங்களிலும் உள்ள முக்கிய வரிகள்: ”உங்கள் வலைப் பூவை இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன்.”, மற்றும், “முதல் பதிவிலிருந்து மூச்சு விடாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன்...”.

இந்த வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர் ஒருவருக்குத் (ஒரே ஒருவருக்குத்) தெரிவியுங்கள். படிப்பதும் படிக்காததும் அவர் இஷ்டம். என் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது ஆசையால்) நான் இதைக் கூறவில்லை.
இந்த வலைப்பூவிற்கு ஒரே  ஒரு வாசகர் இருந்தாலும் எனக்கு ஆர்வம் குறையாது.

அந்த ஒரே வாசகர் நானாக இருந்தாலும் கூட! வலைப்பூவில் எழுதுவது எனக்கு உற்சாகமூட்டும் பணி.
மீண்டும் நன்றி கூறுகிறேன்.
-கடுகு

பி.கு: அடுத்த பதிவை விரைவில் போடப் பார்க்கிறேன்.

8 comments:

  1. How lucky is the reader from 'Rheinland-Pfalz'! - R. J.

    ReplyDelete
  2. எனக்குத் தெரிந்தவர்களிடம் / பழக்கமாகிறவர்களிடம் உங்களின் தளத்தை சொல்லத் தவறுவதில்லை நான்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி. உங்கள் வலைதளத்தின் மூலமாகவும் நிறைய பேர் வருகிறார்கள்.
    -கடுகு

    ReplyDelete
  4. கண்டிப்பாக சார்! எங்கள் பிளாக் தளம் மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்தேன்! தொடர்ந்துவருவேன்! என்னை தொடர்பவர்களுக்கும் அறிமுகம் செய்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  5. கண்டிப்பாக என்னால் முடிந்தவரை நண்பர்களிடம் சேர்க்கிறேன் சார்...

    ReplyDelete
  6. ஸ்கூல் பையன் அவர்களுக்கு,
    மிக்க நன்றி. ஒரே ஒருவர்க்குத் தகவலாகச் சொன்னால் போதும். நிறைய பேர் சேர வேண்டும் என்பது என் நோக்கமில்லை

    ReplyDelete
    Replies
    1. நான் உங்கள் பதிவுகளை படிக்கும் வாசகன். நீண்ட நாளாகவே இது பற்றி சொல்ல வேண்டும் என நினைத்து சொல்லாமலேவிட்டது. இது எனது மிகவும் தாழ்மையான கருத்தே. உங்கள் வலையின் பின்னனி நிறங்கள் உங்களுக்கு விருப்பமானதுதானா?? எனக்கு மஞ்சள் பத்திரிக்கை (:-)) படிப்பது போலவே தோன்றும். போதா குறைக்கு ஆங்காங்கே ஹைலைட் வேறு செய்துவிடுகிறீர்கள். மேலும் பதிவின் அகலம். சிறந்த உங்களின் எழுத்தை இதையெல்லாம் சகித்துக்கொன்டே வாசிக்கிறேன்.

      எனினும் இது முற்றிலும் தங்கள் விருப்பமே. உங்கள் வாசகர்களில் யாரேனும் கைதேர்ந்த விற்பன்னர்கள் உங்களுக்கு உதவ முன்வந்தால் இந்த வலையினை காலத்திற்கேற்றார்போல் சற்றே மறுவடிவாக்கம் செய்தால் சிறப்பாக இருக்குமே??

      Delete
  7. அன்புள்ள கிவியன் அவர்களுக்கு,
    விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஐந்து வருஷத்திற்கு முன்பு திடீரென்று இந்த வலைப்பூவைத் துவங்கினேன். அகப்பட்ட டெம்பிளேட்டை வைத்துத் துவங்கி விட்டேன். அதை மாற்றப் பார்த்தேன். ”பழைய பதிவுகள் போய்விடக்கூடும். ஜாக்கிரதை” என்று சொன்னார்கள். COLUMN அகலத்தை அதிகரிக்கலாமே என்று பலர் சொன்னார்கள். அந்த 65-வது ஆயகலையெல்லாம் எனக்குத் தெரியாது. BLOG அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்று இருந்து விட்டேன். உங்கள் பின்னூட்டம் என்னை உசுப்பி விட்டது. கூடிய விரைவில் புதிய LAYOUT, COLOUR SCHEME-உடன் ‘தாளிப்பு’ கமகமக்கும்
    --கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!