காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில் ”இதுமட்டும்” என்ற அவருடைய கதை வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.
அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது.. பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.
வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.
அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம்
கொடுத்தேன். ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன். “அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள்” என்று எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) ”என்னென்னமோ பண்ணியிருக்கான்” என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.



























