February 24, 2010
டாக்டர் தர்மராஜன்- கடுகு
ஒரு சிறு குறிப்பு:
அன்புள்ள டில்லி -11ல் லால்குடி ஜயராமன், என் டில்லி டெலிபோன் நம்பரைக் கண்டுபிடித்து முதன் முதலில் என்னுடன் பேசியதை எழுதியுள்ளேன். அப்போது, தங்கள் ஊர் டாக்டரை அப்படியே அச்சு அசலாகக் கேரக்டர் கட்டுரையில் நான் எழுதி இருப்பதாகக் கூறினார். . அந்த கேரகடர் கட்டுரை இதுதான்.
%%%%%%%%%%%
அந்த போர்டை சற்று உற்றுப் பார்த்தால் தான் "விக்டோரியா டிஸ்பென்சரி, ஸ்தாபிதம் 1932" என்று எழுதப்பட்டிருப்பதைச் சிரமப்பட்டு படிக்க முடியும்.
"விழுந்து விடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓலைப்பந்தல் அலங்கரித்துக் கொண்டிருக்கிற அந்த பழைய கட்டிடத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே போனால், --ஜாக்கிரதை அங்குமிங்கும் பெயர்ந்திருக்கும் செங்கல்கள் உங்கள் கால் நகங்களைப் பெயர்த்துவிடப் போகிறது-- உள்ளே டாக்டர் தர்மராஜனைப் பார்க்கலாம்.
"வி" கழுத்து மல் ஜிப்பா, "நேரு மாடல்" வழுக்கை, முன் மூக்கில் தங்கப் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, பரந்த மேஜையின் முன் எட்டாம் எட்வர்ட் காலத்து நாற்காலியில் அமர்ந்து மருந்து சீட்டு எழுதிக் கொண்டிருப்பவர் தான் டாக்டர். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார், முக்கியமாய் நோயாளிகள் தங்கள் நோயைப் பற்றிச் சொல்வதற்கு சான்ஸே கொடுக்காமல்! அவ்வப்போது டெலிபோன் மணி வேறு அடிக்கும்.
அந்த அறையில் இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்தது அந்த டெலிபோன் தான். மற்றதெல்லாம் டாக்டரின் தாத்தாவின் காலத்தைச் சேர்ந்தவை. மேஜைமேல் தொங்கும் டோம் விளக்கு, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள், காலண்டர் எல்லாம் டிஸ்பென்சரியின் வயதைப் பளிச்சென்று எடுத்துக் கூறும்.
"வாய்யா கனகசபை... என்ன ஏகமாகப் போர்த்திக்கொண்டு வருகிறாய்?''
"ஒரே குளிருது, கண் எரிச்...''
"அதிருக்கட்டும் கனகசபை, கடைத்தெருவிலே என்ன கலாட்டாவாம்? இந்த காண்டீபன் சோடாக் கடையை என்னிக்கி அங்கே போட்டானோ, அப்பவே தெரியும். முனிஸிபாலிடி ஒரு தீர்மானம் கூட போட்டிருக்குது. ஆனா அந்தக் கடையை எவன் இடிக்கிறது?''
"ராத்திரி 102 டிகிரி...''
"ராத்திரி ராஜாபாதர் தர்கா மைதானத்திலே எலக் ஷன் மீட்டிங்கில் வெளுத்துக்கட்டி விட்டானாமே? வியட்நாம் பிரச்னைக்கு இவனைத்தான் வழி கேட்டாங்களா? என்னை வந்து கூப்பிட்டாங்க, "அட இதுக்கெல்லாம் நேரமில்லை எனக்கு,' என்று சொல்லி அனுப்பி விட்டேன்.''
"ராத்திரி 102....''
"அடேடே, வாய்யா, ராஜாபாதர் உன்னைப்பத்தித் தான் பேசிக்கிட்டிருந்தேன். உட்காரு. இந்தா கனகசபை! மருந்து வாங்கிட்டுப்போ...''
"மூணு தடவை ராத்திரி....''
"சரிதான்யா வாங்கிட்டு போ. ஆமாம், உன் மாப்பிள்ளை கூட கார்ப்பரேஷன் விவகாரத்தில் மாட்டிக்க இருந்தானாமே? போ, தப்பிச்சான். ஒரு விஷயம் ஜட்கா வண்டியில் வரும் போது பார்த்தேன். உன் வீட்டு முருங்கைமரத்தில் ஏகமாகக் காய்கள் இருக்குதே. கொஞ்சம் வீட்டுக்குக் கொடுத்தனுப்பு.... என்னது, ஆகாரம் என்னவா? போய்யா, பிரியாணியும் சிக்கனும் சாப்பிடு... ராஜாபாதர், என்ன ரொம்ப ரோஷமா பேசினீங்களாமே, தொண்டைவலிக்கு மருந்து வேண்டுமா?
"இந்த வியட்நாம் விவகாரம் அவ்வளவு சுலபமானது இல்லை. என்ன தெரியுதா?..இந்த வியட்நாம் விவகாரம் அவ்வளவு சுலபமானது இல்லை. என்ன தெரியுதா. ஆனானப்பட்ட அமெரிக்காவே, என்ன? ஆனானப்பட்ட அமெரிக்காவே திணறுகிறான். நீ போய் என்னமோ பிரமாதமாகப் பேசறே! என்ன சொல்றே அங்கமுத்து.'' ( இபப்டி எதையும் இரண்டு இரண்டு முறை சொலவது டாக்டரின் மேனரிசம்!)
இவரது கம்பவுண்டர் அங்கமுத்து உடனே, "ஆமாங்க.. நம்ம ராஜாபாதர் இந்த மாதிரி விஷயமெல்லாம் பிச்சி உதறுவாரு. ஆனா அந்தப் பொண் ஜகதா கிட்டே மாட்டிக்கிட்டபோது இவரே என்னமா உதறினார்.'' டாக்டருக்கு அவ்வப்போது இப்படி விஷயத்தை எடுத்துக் கொடுப்பதில் அபார சாமர்த்தியசாலி அங்கமுத்து.
டாக்டரின் கன்சல்டிங்க் ரூமில் சாதாரணமாக ஐந்தாறு பேர் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ரிடயர்ட் ஆசாமிகள். அல்லது டாக்டர் வரவழைக்கும் பத்திரிகை, பேப்பர்களை ஓசியில் படிக்க வருபவர்கள். டாக்டர் இவர்களிடம் உலக அரசியல் முதல் சினிமா நடிகை மரணம் வரை எல்லா விஷயங்களையும் பேசுவார். பேச்சு என்பது டாக்டரைப் பொறுத்தவரை ஒன்- வே டிராபிக் தான்.
"... அங்கமுத்து இந்தா, நம்ம கதிரேசன் பேரனுக்கு இருமலாம். அரை புட்டி தண்ணி ஊத்திக் கொடு... ஏன்யா நீ பால்லே தண்ணி ஊத்தி பணம் பண்ணுகிறே! நானும் உன்னைப் பார்த்து தொழில் பண்றேன். பேப்பரைப் பார்த்தியா? டில்லியில் பால்காரருக்கு 5000 ரூபாய் அபராதம் போட்டாங்க... என்ன சொல்றே? ஊசி போடணுமா? சரியாப்போச்சு! அங்கமுத்து நம்ம போர்டை கழட்டி விட வேண்டியதுதான். கதிரேசன் தான் பெரிய டாக்டராகிவிட்டாரே? ஊசி போடச் சொல்றார்? கோணி ஊசி தான் போடவேண்டும்.... சரி... மருந்தை வாங்கிட்டுப் பேசாமல் போ...
"வாங்க மிஸ்டர் ராமானுஜம், உங்க பையனுக்கு அதே மிக்சர் "ரிபீட்' பண்ணுங்க. நேத்து சாயங்காலம் டென்னிஸ் சுவாரசியப்படவில்லை.யே... இந்தப் பயல் தண்டபாணியை இனிமே சீட்ல சேர்க்கக் கூடாது. ராஜா, ராணி தெரியாத பயலாக இருக்கான். எட்டு பேர் முன்னூற்று நாலு ஆடுகிறோம். மேஜையில ஏழு சீட்டு. எல்லாம் டயமண்ட். இவன் எட்டாவது ஆள். என்ன கேட்கறான் தெரியுமா. "என்ன ஜாதி இறக்கம்' என்று! "என்ன ஜாதியா? போய்யா பொண்ஜாதி' என்று கார்ட்டை விசிறிப் போட்டேன். கிளப் எலக் ஷன் வேறு வருகிறது...... அங்கமுத்து! அந்த அம்மாகிட்டே நாலு என்ட்ரோக்வினால் மாத்திரை கொடுத்து அனுப்பு... யெஸ் ராமானுஜம், என்ன உங்க பையன் கிருதா, கிராப் எல்லாம் தடபுடலாக வைத்திருக்கிறானே!''
"... ஆமாங்க, ஜில்பா சும்மா எம்.கே.டி. பாகவதர் மாதிரி...'' அங்கமுத்துவின் விசிறல்.
"இப்படியே போனால் இரண்டு பின்னல் போட்டு, பூ வைத்துக் கொண்டு விடுவார்கள். யாரய்யா, அங்கே கதவண்டை நிக்கிறது?.. அங்கமுத்து, அந்த ஆளுக்கு நாலு அனாஸின் மாத்திரையைக் கொடுத்து அனுப்பு...''
டாக்டருக்கு ராசியான கை. வெறும் தண்ணீர் கொடுத்தாலும் வியாதிகள் தீர்ந்துவிடும். ஆகவே எப்போதும் கூட்டம். பணம் வசூலிப்பதில் கண்டிப்புக் கிடையாது. பலருக்கு அக்கவுன்ட். ஆகவே டாக்டர் ஊரின் முக்கிய புள்ளி!
Labels:
கேரக்டர்
Subscribe to:
Post Comments (Atom)
என்ன ஒரு சித்தரிப்பு ! உங்கள் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. டாக்டர் தர்மராஜனைப் போன்று பல டாக்டர்கள் பல ஊர்களில் !
ReplyDeleteசிரிப்பு டாக்டர் என்ற பட்டமே இவருக்கு கொடுக்கலாம் போல.
ReplyDeleteMoochu vidaamal paesum doctor-ip patri neengal yezhudiyadhai kan kottaamal padithhu vittaen! Srirangam Subbiah doctor-i patri kelvip pattirukkireergala? (Avar Dharmarrajan illai Aaanaal a great character, konjam musudu maadhiri thonrinaalum romba kairaasi. Ennoda thaathaa, amma, naan yellorukkum marundhu koduththirukkiraar - sumaar 40 / 50 varusham munnaal) - R. Jagannathan
ReplyDeleteI have not heard of Subbiah Doctor. I have described a typical friendly old time doctor.
ReplyDelete-- Kadugu