உண்மையிலேயே நான் ரொம்ப சாதுவான ஆசாமி, குழந்தைகளை கண்டால் எனக்கு அபார ஆசை. நேருவிற்கு அடுத்தபடி குழந்தைகளை நேசிப்பவன் நான், "சாச்சா கடுகு' என்று குழந்தைகளால் குறிப்பிடப்படுவதை விரும்புகிறவன். இப்படியிருந்தும் என் தெருவில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் நான் ராட்சசன், பூதம், பூச்சாண்டி, "ரெண்டு கண்ணன்' "கோபக்கார மாமா' என்று ஆகிவிட்டேன். மன்னிக்கவும். ஆக்கப்பட்டுவிட்டேன்.
நான் ராட்சசன் எக்ஸட்ரா ஆன கதை இதுதான்: என் குழந்தை ஏதாவது பிடிவாதம் பிடித்தாள் என்றால் உடனே என் மனைவி, ""இரு இரு சாயங்காலம் அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். தோலை உரிக்கச் சொல்கிறேன்'' என்பாள். அல்லது "போனால் போகிறது என்று பார்க்கிறேன். அப்பாவிடம் சொன்னால் எலும்பை முறிப்பார்'' என்பாள். அல்லது ""நல்லபடியா கொஞ்சி ஆசையா நான் சொன்னால் கேட்க மாட்டாய். அப்பா, விறகுக் கட்டையால் முதுகில் ரத்தம் வருகிற மாதரி அடித்தால் தான் உனக்குச் சரி'' என்பாள்.
இப்படி எல்லாம் சொல்லி என்னை ஒரு கொடுங்கோலனாக, ராட்சசனாக, நரசிம்ம அவதாரமாக, பயங்கர மனிதனாக ஆக்கிவிட்டாள்!
இவள் செய்த கைங்கரியத்துடன் அக்கம் பக்கத்து மாமிகளின் கைங்கரியமும் சேர்ந்து என் இமேஜைப் பயங்கரமாக்கிவிட்டது.
""சிலேட் பலகையை உடைச்சிண்டு வந்து நிக்கறே. எதிர் வீட்டு மாமாகிட்டே சொல்றேன். மரத்திலே தலைகீழாத் தொங்க விடுவார்'' என்று ஒரு மாமியும்,--
""பக்கத்து வீட்டு மாமா வறார். சத்தம் போடாமல் பாலைக் குடிச்சுடு. அவர் வந்தால் கன்னம் சிவந்து போகும்படி அடிப்பார்'' என்று இன்னொரு மாமியும்,--
""ஏண்டா வானரங்களா, வீட்டுக்குள்ளே என்னடா கிரிக்கெட்?. மூன்றாம் வீட்டு மாமாவைக் கூப்பிடட்டுமா... கையை ஒடிச்சுக் கழுத்திலே மாட்டுவார்'' என்று வேறொரு மாமியும்,--
""உங்களைத்தான் மாமா... எங்காத்து லட்சுமி ரொம்பப் படுத்தறா... கோணியிலே மூட்டை கட்டிண்டு எடுத்துண்டு போங்கோ"" என்று பிறிதொரு மாமியும் ---
""இதோ பாருங்கோ... என் பையன் பத்ரிக்குக் கணக்கே வரலை... உங்க கிட்டே அனுப்பறேன். ரெண்டு நாள் சொல்லிக் கொடுங்கோ. சரியாப் போடலைன்னா முட்டி உடையற மாதிரி ரூலர் கட்டையாலே அடியுங்கோ' --
என்று வேறொரு தம்பதியினரும் கூறி என்னை ஒரு "குழந்தைகள் கண்ட கொடுங்கோல"னாக ஆக்கிவிட்டனர்.
என் மனைவி சில சமயம். குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்திச் சாதத்தை ஊட்டுவதற்காக என்னை நாயாகக் குரைக்கச் சொல்வாள். "நீ சமுத்தா சாப்பிடாவிட்டால் கறுப்பு நாய் வந்து கடிக்கும்'' என்று சொல்லிவிட்டு கண்ணால் எனக்குச் சமிக்ஞை காட்டுவாள்.
அடுத்த அறையிலிருந்து கொண்டு, நாய் மாதிரி --அதுவும் கறுப்பு நாய் மாதிரி-- நான் குரைக்க வேண்டும்! இதனால் என் குழந்தைக்கு என்னைக் கண்டாலே குலை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாயைக் கண்டால் பயமே இல்லாது போய்விட்டது!
அடுத்து,.....தொடர நேரமில்லை.
அதோ கமலா சமிக்ஞை செய்கிறாள்... ளொள்... ளொள்... ளொள்!