September 29, 2011

ஒரு தானத்தின் கதை


    செப்டம்பர் 11’ம் தேதி அமெரிக்க சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட தேதி. நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எரிந்து நொறுங்கி வீழ்ந்தது. ஏன்.  ராணுவ கேந்திரமான பென்டகன் கட்டடமும் தாக்கப்பட்டது.
   2001 செப்டம்பர் 12 அன்று நடந்த   உண்மைச் சம்பவம் ஒன்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அதை இங்கு தருகிறேன்.
·                            *       
    ஒரு வகையான புற்று நோய்ப் பிணியாளர்களுக்குப் புதிதாக BONE MARROW செலுத்தப்பட்டால் அவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. ரத்த தானம் மாதிரி. இதுவும் ஒரு தானம் தான், என்றாலும் தானம் செய்பவரை சில நாட்களுக்கு முன்னதாகத் தயார் செய்ய வேண்டும். அவருக்கு மருந்து,  மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் தரப்பட வேண்டும். இந்த மருந்துகள் மிகுந்த வலியை ஏற்படுத்துமாம்.;
ஒரு  நோயாளிக்கு BONE MARROW தேவை என்று  கேள்விப்பட்ட ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தார். (அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல; புற்றுநோய் மருத்துவரும் கூட. மேலும் அவர் ஒரு இந்தியர்..) தானம் BONE MARROW  செய்வதற்கு முன் போடப்படவேண்டிய மருந்துகளைக் கொடுத்தார்கள்.. செப்டம்பர் 11’ம் தேதி காலையில் அவரிடமிருந்து தேவையான அளவு BONE MARROW  எடுத்தார்கள், நார்த் கரோலினா மருத்துவமனை டாக்டர்கள். அதை நோயாளி உள்ள மருத்துவமனைக்கு மறு நாள் அனுப்ப வேண்டும்.

September 24, 2011

மர்ரே எஸ் ராஜம்

 ஐம்பதுகளில் தமிழ்ப் புத்தக பதிப்புலகில் ஒரு புதிய அலை வீசியது. மலிவுப் பதிப்பு
புத்தகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாயின. பாரதியார் பாடல்கள், திருக்குறள் ஆகியவை இவற்றில் முதலிடம் பிடித்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், திடீரென்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித்  திருமகன்’ புத்தகத்தை ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டு, பதிப்பகங்களை சற்று உலுக்கி விட்டது. தொடர்ந்து  ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகத்தையும் வெளியிட்டது. இதைப் பார்த்த மற்ற பதிப்பகங்க்கள் -- பிரேமா பிரசுரம், அருணா பதிப்பகம் போன்றவை -- மதனகாமராஜன் கதைகள், மகா பக்த விஜயம், சித்தர் பாடல்கள் போன்றவற்றையும், புலியூர் கேசிகன் உரையுடன் கூடிய பல சங்க இலக்கியங்களையும்  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலைக்குப் பிரசுரித்தன.

இதில் முக்கியமாகக் குறிப்பட வேண்டியது மர்ரே கம்பெனி ராஜம் அவர்கள் செய்த பணி. மிகுந்த ஈடுபாட்டுடன்,   இலக்கியங்களை  தமிழ் வல்லுனர்களைக் கொண்டு, பதம் பிரிக்கச் செய்து, தரமான அச்சில் பல புத்தகங்களை மாதாமாதம் வெளியிட ஆரம்பித்தார். இவை யாவும் அற்புதமான பதிப்புகள். ஒரு ரூபாய், இரண்டு (?) ரூபாய் விலையில் வந்த ரத்தினங்கள்.
வில்லி பாரதம், கம்ப ராமாயணம், தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று தொடர்ந்து ராஜம் வெளியிட்டார்.  அவை எல்லாவற்றையும் நான் சற்று சிரமப்பட்டுதான் வாங்கினேன். காரணம் சில சமயம் நான்கு, அல்லது ஐந்து புத்தகங்களை ஒரே சமயம் ராஜம் வெளிட்டு விடுவார். ஐந்து ரூபாய் என்பது சற்று அதிகமான தொகைதான்!  இந்த புத்தகங்களின் மற்றொரு சிறப்பு இவைகளின் அட்டைப் படங்களை கோபுலு சிறப்பாக வரைந்து இருப்பார். அதுவும் கம்ப ராமாயண புத்தகங்களுக்கு - 9 பாகங்கள்-  அவர் வரைந்த படங்களில் அழகும் தெய்வீக ஜொலிப்பும்  மிளிரும்.
 (சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கம்பன் கழகம் தனது ஆண்டு விழாவில் கோபுலுவைக் கௌரவித்தது. அப்போது  இந்த அட்டைப் படங்களை எல்லாம்  டிஜிட்டல் பேனராக பெரிய அளவில் அச்சடித்து விழா ஹாலில் வைத்திருந்தார்கள். கண்கொள்ள காட்சியாக இருந்தது!)

ராஜம் அவர்கள் எழுத்தாளர் தேவனின் நண்பர்.  (ஆகவே அவர் கோபுலுவின் நண்பரும் கூட!) தேவன் தனது நாவலில் ராஜம் அவர்களையே ஒரு கேரக்டராக்கி விட்டார், திரு. ராஜம் அவர்கள்தான், ’ராஜத்தின் மனோரத’த்தில் வரும் ஜயம் என்ற கதாபாத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்,   .
ஒரு விதத்தில் ராஜம் அவர்கள் மற்றொரு உ.வே.சா தான்.  தமிழுக்கு  அவர் செய்த தொண்டு அளவிட முடியாதது.   
(. அவருடய புகைப்படம் எங்கு தேடியும் கிடக்கவில்லை. படம் கேட்டு மர்ரே கம்பனிக்கு  எழுதி உள்ளேன். கிடைத்தால் போடுகிறேன்.

(இந்தப் பதிவைப் பார்த்து விட்டு புரொஃபசர் பசுபதி அவர்கள் ( கனாடா)  அனுப்பிய புகைப்படத்தை இப்போது இங்கு சேர்த்துள்ளேன். புரொஃபசர் சார், நன்றி.)
+                   +              +
மர்ரே ராஜம் அவர்களைப் பற்றி, பதிப்புக் குழுவிலிருந்த பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன் அவர்கள் எப்போதோ எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை இங்கு தருகிறேன்.
===============
மர்ரே எஸ் ராஜம் -- பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன்

பழைய சாமன்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாக்வே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை. தோன்றிற்று.

September 19, 2011

படம் யாரோ: ஜோக் நான்!

 பல பல வருஷங்களுக்கு முன்பு குமுதம் இதழில் ஒரு போட்டி வைத்தார்கள். அரசியல் தலைவர்களின்  சம்பந்தமான  7,8 புகைப்படங்களைப்   போட்டு அதற்கு எற்ற மாதிரி சுவையான வசனங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.   (இப்போது  குமுதத்தில் வரும் கிளிக் கலாட்டா பாணியில்). அதில் நான் கலந்து கொண்டேன். முதல் பரிசும் பெற்றேன். அதிலிருந்து எந்தப் பத்திரிகையில் எந்த புகைப்படத்தை பார்த்தாலும், ஜோக் எழுத முயற்சிப்பேன். சும்மா டயம் பாஸ்தான்!
 இன்டர்நெட்டில் 60-70 வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த பல பத்திரிகைகளை  இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் வரும்  பல ஜோக்குகள்  புரிவதில்லை. சில படங்களுக்கு ஏற்ற மாதிரி நாமே ஜோக் எழுதலாமே என்று அதி அற்புதமான  (!) யோசனை தோன்றியது.. அதன் பலனை அனுபவியுங்கள்!  முதலில்  ஒரு படம் .

1. பைசா கோபுர ஸ்டாப் வந்தாச்சு.. எல்லாரும் இறங்கிடலாம்...

2. என்னிக்கும்  இவன் நம்ப மாதிரி  இருக்கமாட்டான்...கோணல் புத்திக்காரன்.

3. அவன் நிக்கற ஸ்டைலைப் பாரேன்.

4. இவர்தான் கோபுரத்தை கட்டின கான்டிராக்டராம்!

5. பாவம். இடது கால் ஊனம் போல் இருக்கிறது.

September 14, 2011

புள்ளிகள்; : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவனாக இருந்த போது வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஓரளவே தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஒரு சமயம அவர் ஒரு பிரபல  CELLO  கலைஞரைப் பர்க்கப் போனார். அவரிடம் “ உங்கள் முன் நான் வயலின் வாசித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
“செய்யுங்கள்.. வாசித்துக் காட்டுங்கள்: என்றார் அவர்.
ஐன்ஸ்டீன் வாசித்துக் காட்டினார்.சுமாராகத்தான் இருந்தது  அவரது வாசிப்பு.
பிறகு அவரிடம் ஐன்ஸ்டீன் “ நான் வாசித்தது எப்படி இருந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்.
 ஸெல்லோ கலைஞருக்கு என்ன சொல்வதென்று ஒரு கணம் தெரியவில்லை.
பிறகு அவர் ”  YOU PLAYED VIOLIN  RELATIVELY WELL!" என்றாராம்!

"நிஜ கிருஷ்ணன் வந்து

நாலாயிரமும் நானும் - பிற்சேர்க்கை   http://kadugu-agasthian.blogspot.com/2011/08/blog-post_08.html  பதிவிற்கு வந்த ஒரு  பின்னூட்டம். அதைப் பதிவாகப் போடுகிறேன். எழுதியவர்:: Ganpat
------------------:

//” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” //
ஆஹா என்ன அறிவு! என்ன பக்தி!! என்ன ஞானம்!!! மெய் சிலிர்த்தேன்!

இதே போல ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.. அன்று கோகுலாஷ்டமி தினம்.மதியம் ...

எல்லார் வீட்டிலும் பட்சணம் மணக்கிறது.
ஒரு குழந்தை (வயது 4 இருக்கும்)
தன் வீட்டு சமையல் அறையில் நுழைகிறது ..

அங்கு பட்சணம் செய்துகொண்டிருக்கும் தன அம்மாவிடம் பட்சணம் கேட்கிறது.அம்மா சொல்கிறாள்.
"சாயங்காலம் பூஜை முடிந்து நைவேத்தியம் ஆனதும் உனக்குதாண்டா கண்ணு முதலில்!!கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜா!!"
ஒரே ஓட்டம அங்கிருந்து குழந்தை போன இடம் தெரியவில்லை!
ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் திரும்ப வருகிறான்.வாய்,கையெல்லாம் பட்சணம்!

"எதுடா உனக்கு இது?" என அம்மா வினவ,
அவன் மழலை மாறாமல் "பக்கத்தாத்து மாமி கொடுத்தா!" என்கிறான்!

என்ன இது! இவன் ஏதாவது தெரியாமல் எடுத்து வந்து விட்டானா என்ன,என்ற ஐயத்துடன்,பக்கத்து வீட்டிற்கு விரைகிறாள் அம்மா.

அங்கு அந்த மாமியும் பட்சணம் செய்துகொண்டிருக்கிறாள்.

"மாமி! ரங்கப்பாவிற்கு பட்சணம்??" என்று இழுக்க,

"அட! அவன் ஆசையா கேட்டான்;நான்தான் கொடுத்தேன் மாமி!" என்கிறாள் அவள்.

"என்ன இது? இன்னும் பூஜை,நைவேத்தியம்!!", என்று அம்மா இழுக்க,அந்த மாமி சொல்கிறாள்..

"நிஜ கிருஷ்ணன் வந்து கேட்கும்போது,பொம்மை கிருஷ்ணனுக்கு என்ன மாமி நைவேத்தியம் வேண்டியிருக்கு?"

இதில் அம்மா எனது பாட்டி;குழந்தை என் அப்பா;
என் பாட்டி இதை சொல்லக்கேட்டு வியந்து போயிருக்கிறேன்!

அதே உணர்வு இவர்கள் சொன்னதை கேட்டதும் வந்தது!

September 08, 2011

கண்ணீர் வடிக்கத் தயாரா?

 IF YOU HAVE TEARS, BE PREPARED TO SHED THEM!

ஆம், இது உண்மையான நெகிழ்ச்சியூட்டும் தகவல்.

1996 ஆண்டு. அமெரிக்காவில் அட்லாண்டா நகரில்  உள்ள எமரி சர்வகலாசாலயில் பட்டமளிப்பு விழா. . சர்வகலாசாலயின்  எல்லா ’பள்ளி; மாணவர்களூம் அவர்களின் பெற்றோர்களும் பெரிய திறந்த வெளி அரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுமார் 5000 பேருக்கு மேலிருக்கும்.
சுகமான, இதமான வெயில். மைதானத்தைச்சுற்றி வரிசையாக கோகா கோலா ஸ்டால்கள்..கோக்  இலவசம்.( அந்த சர்வகலாசாலைக்குக் கோக் நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக ஆண்டு தோறும் கொடுத்து வருகிறது.)
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. வரவேற்புரை, பட்டமளிப்பு உரை என்று வழக்கமான நடைமுறை நிகழ்ச்சிகள்.  இந்த விழா பொதுவிழா. இந்த விழாவில் சர்வகலாசாலையின் ஒரு சிறந்த மாணவனுக்கு அல்லது மாணவிக்கு மேடையில் பாராட்டும், பதக்கமும் அளிப்பார்கள். ஒரே  ஒரு பரிசுதான். அதன் பிறகு மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு வரிசையாகச் செல்வார்கள். அங்கு பட்டமளிப்பு  விழா நடைபெறும்; பட்டங்கள் தரப்படும்..

இந்த பொதுவிழாவிற்கு நான்  போயிருந்தேன் -சும்மா வேடிக்கைப் பார்க்க!
யாருக்குச் சிறப்புப் பரிசு என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சர்வகலாசாலையின் டீன்  மைக் முன் வருகிறர். சட்டென்று கூட்டத்தில் அமைதி:
நின்று நிதானமாக அவர் பேசத்துவங்குகிறார்.” இந்த ஆண்டு நமது சர்வகலாசாலையின் சிறந்த மாணவன் பதக்கத்தைப் பெறப் போவது ஒரு மாணவி அவர்......” என்று கூறிவிட்டு;;;;
 “ வெயிட், .. அவரை மேடைக்கு அழைக்குமுன் ஒன்றிரண்டு தகவல்களைச் சொல்ல விரும்புகிறேன். நான் சொல்லி முடித்த பிறகு அவர் இங்கு வந்து பதக்கத்தைப்  பெற்றுக் கொள்வார்...
”பதக்கம் பெறும் இம்மாணவியின் பெற்றோர்  பல வருடங்களுக்கு முன்பே விவாக ரத்து செய்து பிரிந்து விட்டனர். தாயிடம் வளர்ந்த இவருக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்: இவரது தாய் சில வருடங்களிலேயே காலமானார்.பிறகு இவர் தன் தாத்தா - பாட்டியியின் அரவணைப்பில் வளர்ந்து பள்ளியிலும் , கல்லூரியிலும் படித்தார். இப்போது இங்கு மருத்துவக் கல்லூரியில்சேர்ந்து, நமதது சர்வகலாசாலையிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். .. இருங்கள்... கை தட்டாதீர்கள்.....இன்னும் நான் சொல்லவேண்டியது நிறைய உள்ளது...
இந்த அரிய பரிசை இவர் பெறுவதைப் பார்த்து மகிழ இவருடைய தாத்தாவும் பாட்டியும் நேற்று டெக்சாஸ்  நகரத்திலிருந்து (?)  விமானம் மூலம் வந்தணர்... துரதிர்ஷ்டம், அந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. அதுவும் நமது மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய சதுப்பு வனப் பகுத்யில் வீழ்ந்து புதைந்து விட்டது. நேற்றெல்லாம் விமானத்தைத் தேடிப் பார்த்தார்கள். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவரது அருமைப் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இப்படி நேர்ந்தது  எத்தனை பெரிய இடி.. அதுவும் இவர் ஒரு சிகரத்தைத் தொடும் தருணத்தில்! அவரை  இப்போது அழைக்கிறேன் அதற்கு முன்பு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌனம் காப்போம்  நம் எல்லாருடைய ஆறுதலை அவருக்கு அளிப்போம்” என்று கூறினார்..
அந்த மாபெரும் கூட்டம் அப்படியே அமைதியாகி விட்டது. பல பெற்றோர்களும் மாணவர்களும் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்காமலேயே எழுந்து நின்றார்கள். ஐயாயிரம் ஆறாயிரம் பேர் அமைதியாக எழுந்து நின்றார்கள்.  -- ஆடாமல் அசையாமல்.!
இரண்டு நிமிஷம் கழித்து அனைவரும் உட்கார்ந்த பிறகு, அந்த மாணவி மேடைக்கு வந்தாள்.. அவள் அழவில்லை.  ( அவளுக்குக் கண்ணீர் வறண்டு போயிருக்கவேண்டும்!)
அவளை பார்த்ததும்  கூட்டத்தில் பலர் மீண்டும் அழத் துவங்கினார்கள். சிலர்  விக்கி விக்கி அழுதார்கள்.
அதைப் பார்த்து அந்தப் பெண்ணின் சோகம் ஒரு சதவிகிதமாவது குறைந்திருக்கும்.


September 03, 2011

புள்ளிகள்:: ஆர்ட் லிங்க்லேட்டர்

போய்க் கேளு, சொல்லுவார்கள்!

அமெரிக்க ரேடியோ, டி.வி.களில் பல நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றவர் ஆர்ட் லிங்க்லேட்டர். (ART LINKLETTER) அவர்  KIDS SAY THE DARNDEST THINGS,  KIDS STILL SAY THTE DARNDEST THINGS,  Oops! Or, Life's Awful Moments, I Wish I'd Said That! My Favorite Ad-Libs of All Time என்று பல நகைச்சுவைப் புத்தகங்களை எழுதி உள்ளார். (சில புத்தகங்கள் என்னிடம் உள்ளன.)
ஒரு சமயம் அவர் ஒரு மன நோய் மருத்துவ மனைக்கு விஜயம் செய்தார். அங்கு ஒருமூதாட்டியைப் பார்த்தார். அவர் மன  நோயாளி மாதிரி இல்லாமல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவரிடம்  சென்று ” ஹல்லோ...குட் மார்னிங்...நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
மூதாட்டி அவரை ஏற இறங்கப்பார்த்து விட்டு “ தெரியலையே.. ஒண்ணு செய்.. இங்கு ரிசப்ஷனில் போய் கேட்டால், அவர்கள் நிச்சயமாகச் சொல்வார்கள்.. போ.. போய் கேட்டுத் தெரிஞ்சுக்கோடாப்பா..!” என்றார்!

லஞ்சத்துடன் ஒரு பேட்டி!

      ஆண்டவனுக்கு அடுத்தபடி அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சம் என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர, யாரும் லஞ்சத்துடன் பேசிப் பேட்டி எதுவும் எழுதியதில்லை.  இவ்வளவு பிரபலமான திருவாளர் லஞ்சத்தை நானே சந்திக்கத் தீர்மானித்தேன்.
      லஞ்சம் எங்கும் அபரிமிதமாக இருப்பதால் யாரும் அதைப் பேட்டி கண்டு எழுத முன்வரவில்லை போலும்.
      ஒரு கோர்ட் வராந்தாவில் ""லஞ்சம் கொடுப்பதும் வழங்குவதும் ஒரு குற்றம்''  என்ற போர்டு இருந்த இடத்தில் மிஸ்டர் லஞ்சத்தைக் கண்டு பிடித்தேன்.
      ரொம்பவும் எளிமையாக இருந்தார்.  பேட்டிக்கு முதலில் மறுத்தாலும், நூறு ரூபாய்த் தாளைப் போட்ட ஒரு கவரை இளித்துக் கொண்டே கொடுத்ததும் சர்வ லகுவாக ஒத்துக்கொண்டார்.  ஜன்ம ஜன்மமாகத் தெரிந்தவர் போல் நேசம், பாசம், பரிவு ஆகியவையுடன் பேசினார்.
      ""மிஸ்டர் லஞ்சம், ஏன் உங்களைச் சமூக விரோதி என்கிறார்கள்?''
      ""அப்படிச் சொல்வது ஒரு பாஷன்.  ஆனால் எல்லாருக்கும் நான் வேண்டியவன்.  நான் ஒருத்தன் இருக்கவேதான் பலருக்கும் வேலை கிடைத்திருக்கிறது.  டெண்டர்கள் கிடைத்திருக்கின்றன.  வருமான வரிச் சலுகை, சிமெண்ட் கோட்டா, "கேஸ்' கனக் ஷன், இறக்குமதி லைசென்ஸ் இப்படி எத்தனை எத்தனையோ கிடைத்திருக்கின்றன பலரது செழிப்புக்கு நான் வழி வகுத்திருக்கிறேன்.'' 
      "ஊழல் உங்கள் உறவினர்தானே?''
      "  ஆமாம்.. இருந்தாலும் அவர் ஒரு வி ஐ பி.யாம். எத்தனை பெரிய லஞ்சமாக இருந்தாலும் ஊழலுக்குச் சமமாகாது என்று அவர் சொல்வார்.  போகட்டும்.  சாதாரண மக்களுக்குச் சேவை செய்வதே எங்களுக்குப் பெருமை; கௌரவம்.''
      ""முதல் முதலில் நீங்கள் எப்போது தோன்றினீர்கள்?''
      ""பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் உங்களைப்போன்ற மேதைகள் தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  ஔவையார் கூட "நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று விநாயகரிடம் பாடியிருக்கிறாரே, அதிலிருந்தே தெரியவில்லையா, லஞ்சம் அப்போதே இருந்திருக்கிறது என்று!'
      ""உங்கள் எல்லோரும் இகழ்கிறார்களே?''
      ""யாரும் மனப்பூர்வமாக இகழ்வது கிடையாது.  எல்லாருக்கும் தான் ஏதாவது ஒரு சமயத்தில் நான் உதவி இருக்கிறேனே. .. இப்போது பாருங்கள், சினிமாவில், கதைகளில் ஆபாசம், செக்ஸ் அதிகமாகிவிட்டது என்று கத்துகிறார்கள்.  ஆனால் ஆதரவு தராமல் இருக்கிறார்களா: அப்படிப்பட்ட படம், கதை ஆகியவைகளுக்குத் தானே டிமாண்ட்?''
      ""ஆமாம் "சம்திங்' என்கிறார்களே. . .''
      ""அதுவா அது காலேஜ் டிகிரி வாங்கின லஞ்சம்!  இங்கிலீஷில் சொல்லிவிட்டால் மதிப்பாம்!''
      ""உங்களைப் பற்றித் தப்பு அபிப்பிராயங்கள் நிறைய இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.''
      ""யூ ஆர் ரைட். . இப்போது பாருங்கள்.  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.' "லஞ்சம், தலைவிரித்தாடுகிறது என்று.என் தலையைப் பாருங்கள். ஸ்டெப் கட்டிங் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  நான் தலைவிரித்து ஆடுகிறேனா?”
       ”பேட்டிக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி..”
       “ போகும்போது என் செகரட்டரியிடம் ஆயிரம் ரூபாய் கேஷாகக் கொடுத்து விட்டு போங்க.”