September 03, 2011

லஞ்சத்துடன் ஒரு பேட்டி!

      ஆண்டவனுக்கு அடுத்தபடி அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சம் என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர, யாரும் லஞ்சத்துடன் பேசிப் பேட்டி எதுவும் எழுதியதில்லை.  இவ்வளவு பிரபலமான திருவாளர் லஞ்சத்தை நானே சந்திக்கத் தீர்மானித்தேன்.
      லஞ்சம் எங்கும் அபரிமிதமாக இருப்பதால் யாரும் அதைப் பேட்டி கண்டு எழுத முன்வரவில்லை போலும்.
      ஒரு கோர்ட் வராந்தாவில் ""லஞ்சம் கொடுப்பதும் வழங்குவதும் ஒரு குற்றம்''  என்ற போர்டு இருந்த இடத்தில் மிஸ்டர் லஞ்சத்தைக் கண்டு பிடித்தேன்.
      ரொம்பவும் எளிமையாக இருந்தார்.  பேட்டிக்கு முதலில் மறுத்தாலும், நூறு ரூபாய்த் தாளைப் போட்ட ஒரு கவரை இளித்துக் கொண்டே கொடுத்ததும் சர்வ லகுவாக ஒத்துக்கொண்டார்.  ஜன்ம ஜன்மமாகத் தெரிந்தவர் போல் நேசம், பாசம், பரிவு ஆகியவையுடன் பேசினார்.
      ""மிஸ்டர் லஞ்சம், ஏன் உங்களைச் சமூக விரோதி என்கிறார்கள்?''
      ""அப்படிச் சொல்வது ஒரு பாஷன்.  ஆனால் எல்லாருக்கும் நான் வேண்டியவன்.  நான் ஒருத்தன் இருக்கவேதான் பலருக்கும் வேலை கிடைத்திருக்கிறது.  டெண்டர்கள் கிடைத்திருக்கின்றன.  வருமான வரிச் சலுகை, சிமெண்ட் கோட்டா, "கேஸ்' கனக் ஷன், இறக்குமதி லைசென்ஸ் இப்படி எத்தனை எத்தனையோ கிடைத்திருக்கின்றன பலரது செழிப்புக்கு நான் வழி வகுத்திருக்கிறேன்.'' 
      "ஊழல் உங்கள் உறவினர்தானே?''
      "  ஆமாம்.. இருந்தாலும் அவர் ஒரு வி ஐ பி.யாம். எத்தனை பெரிய லஞ்சமாக இருந்தாலும் ஊழலுக்குச் சமமாகாது என்று அவர் சொல்வார்.  போகட்டும்.  சாதாரண மக்களுக்குச் சேவை செய்வதே எங்களுக்குப் பெருமை; கௌரவம்.''
      ""முதல் முதலில் நீங்கள் எப்போது தோன்றினீர்கள்?''
      ""பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் உங்களைப்போன்ற மேதைகள் தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  ஔவையார் கூட "நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று விநாயகரிடம் பாடியிருக்கிறாரே, அதிலிருந்தே தெரியவில்லையா, லஞ்சம் அப்போதே இருந்திருக்கிறது என்று!'
      ""உங்கள் எல்லோரும் இகழ்கிறார்களே?''
      ""யாரும் மனப்பூர்வமாக இகழ்வது கிடையாது.  எல்லாருக்கும் தான் ஏதாவது ஒரு சமயத்தில் நான் உதவி இருக்கிறேனே. .. இப்போது பாருங்கள், சினிமாவில், கதைகளில் ஆபாசம், செக்ஸ் அதிகமாகிவிட்டது என்று கத்துகிறார்கள்.  ஆனால் ஆதரவு தராமல் இருக்கிறார்களா: அப்படிப்பட்ட படம், கதை ஆகியவைகளுக்குத் தானே டிமாண்ட்?''
      ""ஆமாம் "சம்திங்' என்கிறார்களே. . .''
      ""அதுவா அது காலேஜ் டிகிரி வாங்கின லஞ்சம்!  இங்கிலீஷில் சொல்லிவிட்டால் மதிப்பாம்!''
      ""உங்களைப் பற்றித் தப்பு அபிப்பிராயங்கள் நிறைய இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.''
      ""யூ ஆர் ரைட். . இப்போது பாருங்கள்.  பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.' "லஞ்சம், தலைவிரித்தாடுகிறது என்று.என் தலையைப் பாருங்கள். ஸ்டெப் கட்டிங் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  நான் தலைவிரித்து ஆடுகிறேனா?”
       ”பேட்டிக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி..”
       “ போகும்போது என் செகரட்டரியிடம் ஆயிரம் ரூபாய் கேஷாகக் கொடுத்து விட்டு போங்க.”

1 comment:

  1. அருமையான பதிவு.
    நகைச்சுவையாக இருந்தாலும் மனசு வேதனைப்படுகிறது.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!