September 08, 2011

கண்ணீர் வடிக்கத் தயாரா?

 IF YOU HAVE TEARS, BE PREPARED TO SHED THEM!

ஆம், இது உண்மையான நெகிழ்ச்சியூட்டும் தகவல்.

1996 ஆண்டு. அமெரிக்காவில் அட்லாண்டா நகரில்  உள்ள எமரி சர்வகலாசாலயில் பட்டமளிப்பு விழா. . சர்வகலாசாலயின்  எல்லா ’பள்ளி; மாணவர்களூம் அவர்களின் பெற்றோர்களும் பெரிய திறந்த வெளி அரங்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுமார் 5000 பேருக்கு மேலிருக்கும்.
சுகமான, இதமான வெயில். மைதானத்தைச்சுற்றி வரிசையாக கோகா கோலா ஸ்டால்கள்..கோக்  இலவசம்.( அந்த சர்வகலாசாலைக்குக் கோக் நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்களை நன்கொடையாக ஆண்டு தோறும் கொடுத்து வருகிறது.)
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. வரவேற்புரை, பட்டமளிப்பு உரை என்று வழக்கமான நடைமுறை நிகழ்ச்சிகள்.  இந்த விழா பொதுவிழா. இந்த விழாவில் சர்வகலாசாலையின் ஒரு சிறந்த மாணவனுக்கு அல்லது மாணவிக்கு மேடையில் பாராட்டும், பதக்கமும் அளிப்பார்கள். ஒரே  ஒரு பரிசுதான். அதன் பிறகு மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு வரிசையாகச் செல்வார்கள். அங்கு பட்டமளிப்பு  விழா நடைபெறும்; பட்டங்கள் தரப்படும்..

இந்த பொதுவிழாவிற்கு நான்  போயிருந்தேன் -சும்மா வேடிக்கைப் பார்க்க!
யாருக்குச் சிறப்புப் பரிசு என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சர்வகலாசாலையின் டீன்  மைக் முன் வருகிறர். சட்டென்று கூட்டத்தில் அமைதி:
நின்று நிதானமாக அவர் பேசத்துவங்குகிறார்.” இந்த ஆண்டு நமது சர்வகலாசாலையின் சிறந்த மாணவன் பதக்கத்தைப் பெறப் போவது ஒரு மாணவி அவர்......” என்று கூறிவிட்டு;;;;
 “ வெயிட், .. அவரை மேடைக்கு அழைக்குமுன் ஒன்றிரண்டு தகவல்களைச் சொல்ல விரும்புகிறேன். நான் சொல்லி முடித்த பிறகு அவர் இங்கு வந்து பதக்கத்தைப்  பெற்றுக் கொள்வார்...
”பதக்கம் பெறும் இம்மாணவியின் பெற்றோர்  பல வருடங்களுக்கு முன்பே விவாக ரத்து செய்து பிரிந்து விட்டனர். தாயிடம் வளர்ந்த இவருக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்: இவரது தாய் சில வருடங்களிலேயே காலமானார்.பிறகு இவர் தன் தாத்தா - பாட்டியியின் அரவணைப்பில் வளர்ந்து பள்ளியிலும் , கல்லூரியிலும் படித்தார். இப்போது இங்கு மருத்துவக் கல்லூரியில்சேர்ந்து, நமதது சர்வகலாசாலையிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். .. இருங்கள்... கை தட்டாதீர்கள்.....இன்னும் நான் சொல்லவேண்டியது நிறைய உள்ளது...
இந்த அரிய பரிசை இவர் பெறுவதைப் பார்த்து மகிழ இவருடைய தாத்தாவும் பாட்டியும் நேற்று டெக்சாஸ்  நகரத்திலிருந்து (?)  விமானம் மூலம் வந்தணர்... துரதிர்ஷ்டம், அந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. அதுவும் நமது மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய சதுப்பு வனப் பகுத்யில் வீழ்ந்து புதைந்து விட்டது. நேற்றெல்லாம் விமானத்தைத் தேடிப் பார்த்தார்கள். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவரது அருமைப் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இப்படி நேர்ந்தது  எத்தனை பெரிய இடி.. அதுவும் இவர் ஒரு சிகரத்தைத் தொடும் தருணத்தில்! அவரை  இப்போது அழைக்கிறேன் அதற்கு முன்பு அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌனம் காப்போம்  நம் எல்லாருடைய ஆறுதலை அவருக்கு அளிப்போம்” என்று கூறினார்..
அந்த மாபெரும் கூட்டம் அப்படியே அமைதியாகி விட்டது. பல பெற்றோர்களும் மாணவர்களும் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்காமலேயே எழுந்து நின்றார்கள். ஐயாயிரம் ஆறாயிரம் பேர் அமைதியாக எழுந்து நின்றார்கள்.  -- ஆடாமல் அசையாமல்.!
இரண்டு நிமிஷம் கழித்து அனைவரும் உட்கார்ந்த பிறகு, அந்த மாணவி மேடைக்கு வந்தாள்.. அவள் அழவில்லை.  ( அவளுக்குக் கண்ணீர் வறண்டு போயிருக்கவேண்டும்!)
அவளை பார்த்ததும்  கூட்டத்தில் பலர் மீண்டும் அழத் துவங்கினார்கள். சிலர்  விக்கி விக்கி அழுதார்கள்.
அதைப் பார்த்து அந்தப் பெண்ணின் சோகம் ஒரு சதவிகிதமாவது குறைந்திருக்கும்.


8 comments:

  1. நானும் ஒரு சொட்டு கண்ணீல் வடிக்கிறேன்.

    ReplyDelete
  2. கொங்கு நாடோடி said... சந்தோஷம் - பகிர்ந்து கொள்ள பெருகும் துக்கம் - பகிர்ந்து கொள்ள குறையும்....

    ReplyDelete
  3. அறுபதுகளின் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையை படித்தது போன்ற உணர்வு. உயர்தர பதிவு.

    அன்புட்ன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. டோண்டு அவர்களுக்கு...நன்றி...

    கடுகு

    ReplyDelete
  5. இப்போது தான் உங்கள் பதிவு முதன் முதலாக படிக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. மனதை நெகிழ வைத்த பதிவு...

    ReplyDelete
  7. அவளை பார்த்ததும் கூட்டத்தில் பலர் மீண்டும் அழத் துவங்கினார்கள். சிலர் விக்கி விக்கி அழுதார்கள்.
    அதைப் பார்த்து அந்தப் பெண்ணின் சோகம் ஒரு சதவிகிதமாவது குறைந்திருக்கும்.

    அருமையான பதிவு.
    மனசை நெகிழச் செய்கிறது.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!