September 24, 2011

மர்ரே எஸ் ராஜம்

 ஐம்பதுகளில் தமிழ்ப் புத்தக பதிப்புலகில் ஒரு புதிய அலை வீசியது. மலிவுப் பதிப்பு
புத்தகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாயின. பாரதியார் பாடல்கள், திருக்குறள் ஆகியவை இவற்றில் முதலிடம் பிடித்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், திடீரென்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித்  திருமகன்’ புத்தகத்தை ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டு, பதிப்பகங்களை சற்று உலுக்கி விட்டது. தொடர்ந்து  ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகத்தையும் வெளியிட்டது. இதைப் பார்த்த மற்ற பதிப்பகங்க்கள் -- பிரேமா பிரசுரம், அருணா பதிப்பகம் போன்றவை -- மதனகாமராஜன் கதைகள், மகா பக்த விஜயம், சித்தர் பாடல்கள் போன்றவற்றையும், புலியூர் கேசிகன் உரையுடன் கூடிய பல சங்க இலக்கியங்களையும்  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலைக்குப் பிரசுரித்தன.

இதில் முக்கியமாகக் குறிப்பட வேண்டியது மர்ரே கம்பெனி ராஜம் அவர்கள் செய்த பணி. மிகுந்த ஈடுபாட்டுடன்,   இலக்கியங்களை  தமிழ் வல்லுனர்களைக் கொண்டு, பதம் பிரிக்கச் செய்து, தரமான அச்சில் பல புத்தகங்களை மாதாமாதம் வெளியிட ஆரம்பித்தார். இவை யாவும் அற்புதமான பதிப்புகள். ஒரு ரூபாய், இரண்டு (?) ரூபாய் விலையில் வந்த ரத்தினங்கள்.
வில்லி பாரதம், கம்ப ராமாயணம், தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று தொடர்ந்து ராஜம் வெளியிட்டார்.  அவை எல்லாவற்றையும் நான் சற்று சிரமப்பட்டுதான் வாங்கினேன். காரணம் சில சமயம் நான்கு, அல்லது ஐந்து புத்தகங்களை ஒரே சமயம் ராஜம் வெளிட்டு விடுவார். ஐந்து ரூபாய் என்பது சற்று அதிகமான தொகைதான்!  இந்த புத்தகங்களின் மற்றொரு சிறப்பு இவைகளின் அட்டைப் படங்களை கோபுலு சிறப்பாக வரைந்து இருப்பார். அதுவும் கம்ப ராமாயண புத்தகங்களுக்கு - 9 பாகங்கள்-  அவர் வரைந்த படங்களில் அழகும் தெய்வீக ஜொலிப்பும்  மிளிரும்.
 (சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கம்பன் கழகம் தனது ஆண்டு விழாவில் கோபுலுவைக் கௌரவித்தது. அப்போது  இந்த அட்டைப் படங்களை எல்லாம்  டிஜிட்டல் பேனராக பெரிய அளவில் அச்சடித்து விழா ஹாலில் வைத்திருந்தார்கள். கண்கொள்ள காட்சியாக இருந்தது!)

ராஜம் அவர்கள் எழுத்தாளர் தேவனின் நண்பர்.  (ஆகவே அவர் கோபுலுவின் நண்பரும் கூட!) தேவன் தனது நாவலில் ராஜம் அவர்களையே ஒரு கேரக்டராக்கி விட்டார், திரு. ராஜம் அவர்கள்தான், ’ராஜத்தின் மனோரத’த்தில் வரும் ஜயம் என்ற கதாபாத்திரம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்,   .
ஒரு விதத்தில் ராஜம் அவர்கள் மற்றொரு உ.வே.சா தான்.  தமிழுக்கு  அவர் செய்த தொண்டு அளவிட முடியாதது.   
(. அவருடய புகைப்படம் எங்கு தேடியும் கிடக்கவில்லை. படம் கேட்டு மர்ரே கம்பனிக்கு  எழுதி உள்ளேன். கிடைத்தால் போடுகிறேன்.

(இந்தப் பதிவைப் பார்த்து விட்டு புரொஃபசர் பசுபதி அவர்கள் ( கனாடா)  அனுப்பிய புகைப்படத்தை இப்போது இங்கு சேர்த்துள்ளேன். புரொஃபசர் சார், நன்றி.)
+                   +              +
மர்ரே ராஜம் அவர்களைப் பற்றி, பதிப்புக் குழுவிலிருந்த பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன் அவர்கள் எப்போதோ எழுதிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை இங்கு தருகிறேன்.
===============
மர்ரே எஸ் ராஜம் -- பேராசிரியர் அ, ச. ஞானசம்பந்தன்

பழைய சாமன்களை ஏலம் விடும் மிக பெரிய நிறுவனம் மர்ரே அண்ட் கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாக்வே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ். ராஜம் ஆவார். 1945- வாக்கில் பெரும் செல்வராகிய திரு ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை. தோன்றிற்று.

பிறப்பால் வைணவ பிராமண குலத்தில் தோன்றினாலும் பிரபந்தங்களிலோ தமிழ் இலக்கியங்களிலோ அவருக்குப் பயிற்சி ஏதுமில்லை அக்கால  கட்டத்தில்  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பரிதாபமான காகிதங்களீல் பரிதாபமாக அச்சிடப்பெற்று, ஒரு சில இடங்களில் மட்டும் பரவி இருந்தது.. ராஜம், பல் பிரதிகளை ஒப்பு நோக்கி அடக்க விலைப் பதிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார். பல்கலைச் செல்வர் தெ. பொ. மீ, சா. கணேசன், நான் ஆகிய மூவரும் இப்பெரும் பணிக்குப் பதிப்பாசிரியர் குழு என்ற  பெயரில் இடம் பெற்றிருந்தோம்.  நீண்ட காலம் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களிடம் இருந்து ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பு நோக்குதலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த திரு. மு. சண்முகம் பிள்ளை பதிப்புப் பணிகளை முழு நேர பணியாக ஏற்றார்.
1955-இல் திருவாய்மொழி முதலாயிரம் டெம்மி அளவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் அடக்கவிலைப் பதிப்பாக வெளிவந்தது. இந்தப் பதிப்பு வெளிவந்தவுடன் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இதனை வெளியிட முடிவு செய்தார். சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைக் கொண்டு இத்தனை வெளியிடுவது என்று முடிவு செய்தார். அவரிடம் சென்று கேட்டவுடன் ”எனக்கு என்ன தெரியும்  பிரபந்தத்தில்? யாரையாவது தீவிர வைணவரைக் கொண்டு இதனை வெளியிடு” என்றார். ராஜம் விடுவதாக இல்லை.கடைசியாக சி.பி. அவர்கள், வந்து வெளியிடுவதாக ஒப்புக் கொண்டார். சி.பி. அவர்கள் பஞ்சக் கச்சம் வேட்டி கட்டி, ஒரு சட்டைஅணிந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து வெளியீட்டு உரையாக அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தினார்.. பல்கலைச் செல்வர் தெ. பொ.மீ அவர்களும், நானும், எஸ். ராஜம் அவர்களும் வியப்பின் எல்லைக்கே சென்று விட, அவ்வளவு அற்புதமாகச் சி.பி. அவர்கள்  தமிழில் பேசியது அதைவிடப் புதுமை.
இதன் பிறகு ராஜத்திற்கு சங்க இலக்கியங்கள். தொல்காப்பியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் ஆகிய அனைத்தையும் இதே முறையில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது.. இப்பதிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  அன்று வரை எந்த பழைய பாடலை எடுத்துப் படித்தாலும் சொற்களைப் பதம் பிரிக்காமல் சீர் ஒன்றின் அடிப்படையிலேயே அவை அச்சிடப் பெற்றிருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் படித்தால் ஒரு வரி கூட விளங்காது.. அந்த நிலையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் ராஜம். எல்லாப் பாடல்களையும் சீர் பற்றிக் கவலைப் படாமல், தனித் தனிச் சொற்களாகப் பிரித்து, தாமே அச்சிட வேண்டுமென்று விரும்பினார்,

இந்த முறையில் முதலாயிரம் வெளிவந்தவுடன் பயங்கரமான எதிப்புகள் தோன்றின. ‘தமிழின் அருமை தெரியாதவர்கள், இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பாடலைப் பிய்த்து வெளியிடுவது தமிழுக்கு செய்யும், துரோகம்’ என்று. தமிழ் புலவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலர் ராஜத்திற்குக் கடிதம் எழுதினர். தமிழுக்குச் செய்யும் இக்கொடுமையில் தமிழ் கற்ற தெ.போ.மீ.யும் இடம் பெறுவது மேலும் கொடுமையானது என்றெல்லாம்  கடிதம் வந்தன. வேறு ஒருவராக இருப்பின். ‘நமக்கு ஏன் இந்த வம்பு’ என்று சொல்லி, இந்தப் பணியையே உதறி விட்டிருப்பர். எதிர்ப்பு மிக மிக ராஜம் அவர்களின் உறுதியும் வலுப் பெற்றது. சங்க இலக்கியங்கலோடு நிறுத்திக் கொள்ளலாம்  என்றிருந்த அவர்,தமிழ் இலக்கியம் முழுவதையும் இந்த முறையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்து பத்து பதினைந்து புலவர்களை இதற்கென நியமித்தார், 12-ம்  நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் வரை இப்படிச் சொல் பிரித்து எழுதும் பணி தொடர்ந்தது. இதை விடச் சிறப்பு ஒன்று உண்டு,. சங்க இலக்கியங்களுக்கும்  இராமாயணம், பாரதம் ஆகியவற்றிற்கும் அட்டைகளில் ஓவியம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். தலை சிறந்த ஓவியராக விளங்கும் கோபுலு அவர்களை இதற்கென ஏற்பாடு செய்தார். புறநானூறு போன்ற தொகுப்பு நூல்களுள் ஏதாவது ஒரு சிறந்த பாடலை அடிப்படையாக வைத்து ஓவியம் வரையப் பெற்ற கோட்டு வரைபடம் என்ற முறையில் கோபுலு அவர்கள் வியக்கத் தகுந்த ஓவியங்களை வரைந்து கொடுத்தார். சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போக  சிலப்பதிகாரம், இராமாயாணம், மகாபாரதம், திருவாசகம்  என்பவை வெளிவந்தன. அக்காலத்தில் பல இலட்ச ரூபாய்களை எவ்வித கைம்மாறும்  கருதாது செலவழித்து இந்த மாபெரும் தொண்டை செய்தவர் ராஜம் ஆவார்.

         அவர் நல்ல நேரத்தில் துவங்கியதால் போலும்  இன்று வருகிற பதிப்புகள் எல்லாம் சொல் பிரித்து அச்சிடப் பெறுகின்றன. துரதிஷ்டவசமாக அவர் காலம்சென்ற பிறகு எஞ்சியுள்ள நூல்கள்  சொல் பிரித்து எழுதப்பட்டிருப்பினும் அவற்றை வாங்கி வெளியிடுவார் இல்லாமல்  போகவே, புதுவையில் உள்ள இண்டாலஜி நிறுவனத்தார் அச்சிடாத நூல்களையெல்லாம்  எடுத்துச் சென்று விட்டனர்.
ஐம்பதுகளில் தமிழ் இலக்கியங்களை புதிய முறையில் சொல் பிரித்து அச்சிட்டு அடக்க விலைக்குத் தந்து தமிழ் மொழிக்குப் பெரும்பணி செய்த இவரை மாமனிதர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!

2 comments:

  1. ராஜம் புகழ் வாழ்க.

    ReplyDelete
  2. ஏதேதோ படிக்கிறேன். இந்த மாதிரி விஷய ஞானம் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கின்றன. மிக்க நன்றியும், நமஸ்காரமும். - ஜெகன்னாதன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!