August 08, 2011

நாலாயிரப் பிரபந்தமும் நானும் - பிற் சேர்க்கை

நாலாயிரப் பிரபந்த புத்தகத்தை என் மனைவியும் நானும் ஐந்து வருஷத்திற்கு முன்பு பதிப்பித்ததையும் அதை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் நாரத கான சபாவில் வெளியிட்டதையும் முன்பே ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.
 அந்த புத்தக வெளியீட்டிற்குப் பின் நிகழ்ந்த சில அனுபவங்களை இப்போது எழுதுகிறேன்  சென்ற ஆண்டு மூன்றாவது பதிப்பு வெளியாகியுள்ளது.. எவ்வித விளம்பரமும் செய்யாமல், ஏஜண்ட்கள் இல்லாமல் அதை விற்பனை செய்து வருகிறேன். புத்தகம் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.
 எழுத்துகள் பெரிய அளவில் இருப்பதுடன், பாசுரங்கள் பதம் பிரித்துப் போடப்பட்டிருப்பாதாலும் நாங்கள் எதிபார்க்காத அளவு அதற்கு வரவேற்பு கிட்டியிருக்கிறது.
புத்தக வெளியீட்டு தினத்தன்று அரை மணி நேரத்தில்ச சுமார் 100 பிரதிகள் விற்பனை ஆயின.
சில நாட்கள் கழித்து கோவையிலிருந்து 20 பிரதிகள் கேட்டு ஒரு மாதர் சங்கத்தினர் கேட்டார்கள். கோவையிலிருந்த ஒரு பெண் கல்லூரி மானேஜர் வீடு தேடி வந்தார். 40 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். ஆண்டவன் ஆசிரமத்திலிருந்து 10 காப்பிக்கு ஆர்டர் வந்தது.. டில்லி அட்வகேட் 50 காபி வாங்கி கொண்டார். அவரே  பின்னர் தன் பிள்ளை  கலியாணத்தின் போது தாம்பூலப் பையில் போட்டுக்கொடுக்க  100 காபிகள் வாங்கிக் கொண்டார் .மதுரை அட்வகேட் நேரில் வந்து 20 காபிகளை தூக்க முடியாமல் தூக்கி கோண்டு போனார். ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு .ஆடிட்டர் (?) 30 காபிகள் கேட்டு போன் செய்தார்.
புத்தகத்தை என் அன்பளிப்பாக ஓவியர் கோபுலுவிற்கு அனுப்பினேன்.. இரண்டு நாள் கழித்து அவர் எனக்குப் போன் பண்ணினார். “ நாலாயிரம் புத்தகம் கிடைத்தது.. மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று ஆரம்பித்து  சுமார் 15 - 20 நிமிஷம் பாராட்டினார்.. கடைசியில் ”உங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இருக்கிறேன். அதில் எழுதியது போதவில்லை என்று தோன்றியதால் போன் செய்கிறேன்” என்றார். அன்று பகல்  கவர் வந்தது.. அதிலும் பாராட்டியிருந்ததைப்  படிக்கப் படிக்க மன நெகிழ்ச்சி ஏற்பட்டது.  கவருக்குள் ஒரு வெள்ளைக் காகிதம் மடித்து வைக்கப் பட்டிருந்தது.  அதில் ஒரு செக் வைத்திருந்தார். 500 ரூபாய்க்கு! ( 100 ரூபாய் புத்தகத்திற்கு 500 ரூபாய் அனுப்பி இருக்கிறார்!):
இப்படி புத்தகம் மள மளவென்று  விற்பனை ஆகி, கிட்டத்தட்டத் தீர்ந்து போகும் சமயம், ஒரு பெரிய  வீட்டுமனை நிறுவனத்தினர் 2 காபிகள் வாங்கிக் கொண்டனர். ஒரு வாரம் கழித்து அக்கம்பெனியின் எம்.டி தொடர்பு கொண்டார்.” எங்களுக்கு 100 காபிகள் வேண்டும்” என்றார். “ “அடப் பாவமே... புத்தகம் தீர்ந்து போய்விட்டதே.. அடுத்த பதிப்பு போட்டதும் தெரிவிக்கிறேன்.” என்றேன்.
இரண்டு மாதம் கழித்து, இரண்டாம் பதிப்பு போட்டதும் அவருக்குத் தகவல் அனுப்பினேன். நூறு காபிகள் வாங்கிக் கொண்டார். “ ஆறுமாதம் கழித்து 200 காபிகள் தேவைப் படும்.” என்றார்.  சொன்னபடியே வாங்கிகொண்டார். இப்போது 2 மாதங்களுக்கு முன்பு 100 காபிகள் வாங்கிக் கொண்டார்.
 மடிப்பாக்கம் அன்பர், க்ரோம்பேட்டை பக்தர், மதுரை அட்வகேட் என்று பலர் 50,60 காபிகள் வாங்கிக் கொண்டார்கள்.
சென்னை வைஷ்ணவ சங்க காரியதரிசியும், சிறந்த வைஷ்ணவ அறிஞரும்,. அட்வகேட்டுமான திரு வேணு. ராஜநாராயணன் அவ்வப்போது 20, 25 காபிகள் என்று வாங்கிக்  கொண்டேயிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் போன்ற ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
கத்திரி வெய்யில். உச்சி வேளை. மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தனர். வெள்ளை  வேட்டி, சட்டை. நெற்றியில் சற்று அகலமான திருமண்.  திண்டிவனம் போன்ற ஒரு சிறிய ஊரிலிருந்து வருவதாகவும்அங்கு வைஷ்ணவ சங்கம் வைத்திருப்பதாகவும்  சொன்னார்கள். எளிமையான விவசாயிகள் போல் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைச்  சங்கத்தில் எல்லாரும் சேர்ந்து படிப்பதாகச் சொன்னார்கள். வாராந்திர பாராயணம் பற்றி மேலும் சில விவரங்களைக் கூறினார்கள்.
பாராயணம் செய்ய வருபவர்கள் காலை  எட்டுமணிக்கு வரவேண்டும். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்படும். பிறகு நாலு மணி நேரம் பாராயணம். அதன்  பின்மதிய உணவு, ஓய்வு, 1 மணி நேரம் பாராயணம். தொடர்ந்து மாலை சிற்றுண்டி, காபியுடன் நிறைவு பெறும்.
உணவுக்காகும் மொத்த செலவையும் ஒரு தனவந்தர் ஏற்றுக் கொண்டுள்ளராம். எல்லாரும் பாராயணம் செய்ய ஒரே பதிப்பு புத்தகத்தை வாங்கிப்போக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
“ எத்தனை காபி?” என்று கேட்டேன்.
“ நூறு காபி.”என்றார்கள். (லேசாக எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.}
 ” நூறு செட்கள் என்றால் 200 புத்தகங்கள். இதன் எடை 100 கிலோ இருக்குமே. எப்படி எடுத்துக் கொண்டு போவீர்கள்?..வேண்டுமென்றால் லாரி மூலம் அனுப்பி விடுகிறேன்.” என்றேன்
“ அதில்லாம் தேவை இல்லை... நாங்கள் தலையில் தூக்கிக் கொண்டு போய்விடுவோம்.” என்றார்கள். மடியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.
மூன்று மூட்டைகளாகக் கட்டினார்கள். 30 கிலோ, 30 கிலோ, 40 கிலோ மூட்டைகள்.
சற்று வயதானவர்களாக  இருக்கும் இவர்கள் எப்படி இவ்வளவு கனத்தைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்து, ரயிலைப் பிடித்து ஊருக்குக் கொண்டு போகப்போகிறார்கள் என்று  எண்ணினேன்.
என் மனதில் ஓடும் எண்ணத்தை அறிந்தவர்போல் ஒருத்தர் சொன்னார்: ” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” என்றார். மூவரும் மூட்டைகளைத் தூக்கி தலை மீது வைத்துக் கொண்டு போனார்கள். எவர் பணம் கொடுத்தாரோ அவர் 40 கிலோ மூட்டையைத் தூக்கிக் கொண்டார்!
இவர்களின் எளிமையையும், பக்தியையும், ஈடுபாட்டையும் பார்த்து என் மனம் நெகிழ்ந்தது. கண்களில் நீர் திரையிட்டது!

12 comments:

  1. Dear Sir,

    Well done. Perumal Anukkrakam Ungallukku Undu.!!!

    Regards
    Ranga

    ReplyDelete
  2. May be, that is why such noble and pious souls visit my house!

    ReplyDelete
  3. // புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” // உண்மையான பக்தர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க பெருமாள் அநுக்ரஹிக்கப் ப்ரார்த்திக்கிறேன். - ஜெ.

    ReplyDelete
  4. Please await orders from Timbakto! - R.J.

    ReplyDelete
  5. ungal elimayane thannadakkamana thanmaikku en panivana namaskaram. The work done by the God to see the publisher hence visited your abode(residence)

    r.suresh

    ReplyDelete
  6. புரியாதோ என்று மிரள வேண்டாம். வாசித்தால் உரையில்லாமலே அனேக பாசுரங்கள் புரியும்- என்று உணர்த்தியதே உங்கள் பதிப்பு தான்.

    சமீபத்தில் ஆடிப்பூரத்தன்று நாச்சியார் திருமொழியில், நான் இதுவரை படித்திராத பல பாடல்களைப் படித்து ரசித்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. இலக்கியவாதிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் என இரு‍ சாரார்க்கும் அட்சய பாத்திரமாக விளங்குவது‍ பிரபந்தமாகும். மக்கள் மத்தியில் தங்களின்‌ பிரபந்த நூல் இலக்கிய ரசனையை வளர்ப்பதோடு‍ ஆன்மீக உணர்வையும் தட்டியெழுப்பும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  8. அற்புதம்..........// ” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” என்றார்// முற்றிலும் உண்மை..கண்கள் பனிக்கின்றன ..விஜயராகவன்

    ReplyDelete
  9. //” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” //

    ஆஹா என்ன அறிவு! என்ன பக்தி!! என்ன ஞானம்!!! மெய் சிலிர்த்தேன்!

    இதே போல ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..

    பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி..

    அன்று கோகுலாஷ்டமி தினம்.மதியம் ...

    எல்லார் வீட்டிலும் பட்சணம் மணக்கிறது.
    ஒரு குழந்தை (வயது 4 இருக்கும்)
    தன் வீட்டு சமையல் அறையில் நுழைகிறது ..

    அங்கு பட்சணம் செய்துகொண்டிருக்கும் தன அம்மாவிடம் பட்சணம் கேட்கிறது.அம்மா சொல்கிறாள்.

    "சாயங்காலம் பூஜை முடிந்து நைவேத்தியம் ஆனதும் உனக்குதாண்டா கண்ணு முதலில்!!கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜா!!"

    ஒரே ஓட்டம அங்கிருந்து குழந்தை போன இடம் தெரியவில்லை!

    ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் திரும்ப வருகிறான்.வாய்,கையெல்லாம் பட்சணம்!

    "எதுடா உனக்கு இது?"

    என அம்மா வினவ,
    அவன் மழலை மாறாமல்

    "பக்கத்தாத்து மாமி கொடுத்தா!" என்கிறான்!

    என்ன இது! இவன் ஏதாவது தெரியாமல் எடுத்து வந்து விட்டானா என்ன,என்ற ஐயத்துடன்,பக்கத்து வீட்டிற்கு விரைகிறாள் அம்மா.

    அங்கு அந்த மாமியும் பட்சணம் செய்துகொண்டிருக்கிறாள்.

    "மாமி! ரங்கப்பாவிற்கு பட்சணம்??"
    என்று இழுக்க,

    "அட! அவன் ஆசையா கேட்டான்;நான்தான் கொடுத்தேன் மாமி!" என்கிறாள் அவள்.

    "என்ன இது? இன்னும் பூஜை,நைவேத்தியம்!!",

    என்று அம்மா இழுக்க,அந்த மாமி சொல்கிறாள்..

    "நிஜ கிருஷ்ணன் வந்து கேட்கும்போது,பொம்மை கிருஷ்ணனுக்கு என்ன மாமி நைவேத்தியம் வேண்டியிருக்கு?"

    இதில் அம்மா எனது பாட்டி;குழந்தை என் அப்பா;
    என் பாட்டி இதை சொல்லக்கேட்டு வியந்து போயிருக்கிறேன்!அதே உணர்வு இவர்கள் சொன்னதை கேட்டதும் வந்தது!

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. Kadugu Sir, FYI

    Sir,

    Will you consider publishing the books with meaning. I purchased the books from your house but I cannot understand it without the vilakka urai. Hope you can do it sometime in the future.

    --Subramanian Senthilnathan

    ReplyDelete
  11. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்குப் பலர் உரை எழுதி இருக்கிறார்கள். அதற்கு ஆழ்ந்த புலமை வேண்டும். என் அறிவிற்கும் திறமைக்கும் அப்பாற்பட்டது அது.

    ReplyDelete
  12. ஸ்ரீமான் கடுகு சார்,
    உங்கள் திவ்ய பிரபந்த பதிப்பு பற்றிய பதிவு இன்றுதான் படித்தேன். மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம். அடியேனும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஆதவின் எழுத்துருவில் மின்வடிவம் அமைத்தேன். கூட்டு முயற்சி. இந்த தளத்தில் உள்ளது. நீங்கள் பார்த்து விமர்சித்தால் இன்புறுவேன்.
    http://www.srivaishnavam.com/4000tamil.htm

    தாசன் வெங்கட்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!