August 21, 2011

ஃபோர்ட்- எடிசன்



அமெரிக்க வடக்குக் கோடியில் உள்ளது டெட்ராய்ட் நகரம்  ஃபோர்ட் கார் என்றதும் நினைவுக்கு வரும்   நகரம். அங்கு போர்ட் மியூஸியம் இருக்கிறது. . முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும். அத்தனை வித கார்கள், ரயில் என்ஜின்கள், குட்டி விமானங்கள். (மியூசியப் பொருட்களை விவரிக்கத் தனிக் கட்டுரையே தேவைப்படும்.)


மியூஸியத்திற்குள் நுழையும்போது கண்ணில் படுவது ஒரு கண்ணாடி கேஸில் உள்ள  பெரிய மண்வெட்டி   ஈர சிமெண்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது. அது ஃபோர்ட் மியூஸியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண்வெட்டி  அதன்  அருகில் ஈர சிமெண்டில் அவர் தனது ஆள்காட்டி விரலால் பெரிதாகக் கையெழுத்திட்டிருக்கிறார்.


அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!
    எலெக்ட்ரிக் பல்ப் உட்பட 1100 கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன். அந்த மேதை நின்ற இடத்தில் நான் ( பேதை!)  நிற்கிறேன் என்பதை நினைத்த போது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது!

பின்குறிப்பு:     ஃபோர்ட் மியூஸியத்திற்குள்  போனபோது  ஹென்ரி ஃபோர்ட் பற்றி 1950 வாக்கில்  ரீடர்ஸ் ட் டைஜஸ்ட் பத்திரிகையில்  படித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது.
அலுவலகத்தில் அவர் முக்கியமான வேலையில் இருக்கும்போது, வீண்  அரட்டை அடிக்க யாராவது அவரைச் சந்திக்க  வந்தால் அவர்களை ஒரு குறிப்பிட்ட நாற்காலியில்  உட்காரச் சொல்வாராம். அந்த நாற்காலிக்கு என்ன சிறப்பு? . அதன் முன் இரண்டு கால்களின்  உயரம் சுமார் அரை அங்குலம் குறைவாக இருக்கும்படி வெட்டச் செய்திருப்பாராம். இதனால் என்ன லாபம்? முன்பக்கம் உயரம் குறைவாக இருப்பதால்,உட்காருபவர்களை லேசாகச் சரியச் செய்யும். அதைத்  தடுக்க கால்களை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் நாற்காலியில் உட்காருவது ஒரு மாதிரி அசௌகரிய உணர்வை உண்டாக்கும்..  அவர்கள் அதிக நேரரம்  உட்காராமல்  விரைவில் எழுந்து போய்விடுவார்கள்.. அந்த மியூஸியத்தில் ஃபோர்ட்டின் அலுவலக அறையை அப்படியே வைத்திருக்கிறார்கள். அங்கு இருந்த பணியாளரிடம் அந்த குறிப்பிட்ட நாற்காலியைப் பற்றி கேட்டேன். அவருக்குத்  தெரியவில்லை.. யாரையோ ( மானேஜர்?)  கேட்டு விட்டு வந்து உதட்டைப் பிதுக்கினார்.!

1 comment:

  1. அந்த நாற்காலியில் உட்கார்ந்து‍ மிகவும் சிரமப்பட்ட யாரோ ஒருவர் அதை தன் வீட்டுக்கு‍ எடுத்து‍ சென்றுவிட்டாரோ எனன்வோ?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!