July 02, 2011

பாடலுக்குள் பாடல்


பாடலுக்குள் பாடல்
இந்த திருப்புகழ் பாடலில் ஒரு அழகு உள்ளதாகப் எப்போதோ  படித்தேன்.
பாடலின் ஒவ்வொரு இரண்டாவது வரியை மட்டும்  ( தடித்த எழுத்தில் உள்ளது) படித்ததால் அதுவும் ஒரு முழு பாடலாக அமைந்திருப்பதைக் காணலாம்.
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே

யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்
     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன
     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

==== திருப்புகழ்

பொருள்:

ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம் அமை ... ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும்,

கள்ளப் புலாற்கிருமிவீடு ... கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான வீடு,

கனலெழ மொழிதரு சினமென மதமிகு ... நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த

கள்வைத்த தோற்பை சுமவாதே ... மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி,

யுகஇறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள் ... யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை

உள்ளக்கண் நோக்கும் அறிவூறி ... எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக,

ஒளிதிகழ் அருவுருவெனு ... ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற

மறை யிறுதியில் உள்ளத்தை நோக்க அருள்வாயே ... வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.

ம்ருகமத பரிமள விகசித நளினநள் ... கஸ்தூரியின் வாசம் வீசும், நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும்

வெள்ளைப்பிராட்டி இறைகாணா ... வெள்ளை நிறத்தளான ஸரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும்,

விடதர குடில சடிலமிசை ... ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது

வெகுமுக வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே ... ஆயிரம் முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே,

வகுளமு முகுளித வழைகளு மலி ... மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள

புன வள்ளிக் குலாத்திகிரிவாழும் ... தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத ... வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. ... வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :