June 25, 2011

கேரக்டர் -அருணாசலம்

சவர்க்கர் குல்லாய், தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி, கணுக்காலுக்கு நாலங்குலம் மேலேயே நின்று விடும் பாண்ட், கட் ஷூ, தலையணை மாதிரி உப்பியிருக்கும் ஜிப்-பை, ஐந்தாறு பேனாக்கள், டைரி, பொடி டப்பி, மூக்குக் கண்ணாடி உறை ஆகியவைகள் ஜேபியில் திணிக்கப்பட்டிருக்கும்., மிதமிஞ்சிய தற்பெருமை.  அளப்பு. -- இதுதான் அருணாசலம்.
அவன் சண்டப் பிரசண்டமாகப் பேசுவதைக் கேட்டு, ``கவர்மென்ட் ஆப் இந்தியாவே உன் தலையில் ஓடுகிறதா?'' என்று யாரும் அவனைக் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் கேட்க விடாமல் அவன்தான் மூச்சு விடாமல் பேசுகிறவனாயிற்றே!
சர்க்கார் வண்டியே இவனால்தான் ஓடுகிறது என்று எண்ணி இவன் அண்டர் செக்ரட்டரியோ என்னவோ என்று கருத வேண்டாம். கால்நடை இலாகாவில் ஒரு எல்.டி.சி. -சாதாரண குமாஸ்தா.
``ஏன் அருணாசலம், நம்ப ராஜுவின் கலியாணத்திற்கு நீ வரவில்லை?'' என்ற சர்வசாதாரண கேள்விக்குக் கூட அத்தியாயங்களில் பதில் சொல்வான். எல்லாம் ஆபீஸ் விவகாரமாகத்தான் இருக்கும்.
அருணாசலம் சொல்வதை அப்படியே வாயைத் திறந்து கொண்டு கேட்டால்தான் பிழைத்தீர்கள். நடுவே ஏதாவது பேசினால் போச்சு, மற்றொரு தனி ஆவர்த்தனம் ஆரம்பமாகி விடும்.

``என்னப்பா அருணாசலம்! ஆபீசிலிருந்து இவ்வளவு லேட்டாக வருகிறாய்?'' என்று ஒருவர் கேட்டு விட்டார் ஒரு நாள்.
``பஸ்ஸா விடுகிறான்? ஒரு மணியாக பஸ்ஸே வரவில்லை. நாளை ஜெனரல் மானேஜருக்குப் போன் பண்ணி உலுக்குகிறேன். சே, எதுக்கு? வீணாக கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. அவன் வயிற்றெரிச்சலை எதுக்குக் கொட்டிக் கொள்ள வேண்டும்?''
``ஏனப்பா, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது?''
``ஆபீசில் `ஐயாயிரம் தருகிறேன். வாங்கிக்கோ' என்கிறார்கள். நான்தான் வேண்டாம் என்று இருக்கிறேன். பெட்ரோல் ரேஷன் இன்னும் பத்து வருஷத்தில் வரப் போகிறது. ஸ்கூட்டர்காரன் எல்லாம் திண்டாடப் போகிறான். நாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ள வேண்டும்? அதனால்தான் `போய்யா, உன் ஐயாயிரம்  வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.''
வெற்றிலை பாக்கு, பூ, பழத்துடன் தட்டில் ரூபாயை வைத்துக் கொடுக்கிறார்களோ என்று எண்ணி விடாதீர்கள். எல்லா சர்க்கார் ஊழியருக்கும் ஸ்கூட்டர் அட்வான்ஸ் கிடைக்கும். இவனுக்கு மட்டும் விசேஷமாக கொடுப்பது போல் சொல்லும் போது ஆச்சரியத்தினால் கண்கள் மலரப் பார்த்தால்தான் அவனுக்கு அபாரத் திருப்தி ஏற்படும்.

 ஒரு நாள் கடைத் தெருவில் பையுடன் போய்க் கொண்டிருந்த அருணாசலத்தைப் பார்த்தேன். ``என்னப்பா, நீ காய்கறி வாங்க வருகிறாய்? அதிசயமாக இருக்கிறதே? ஆபீஸ் லீவா?'' என்று கேட்டேன்.
``ஆபீசைத் தூக்கிக் குப்பையில் போடு! பட்ஜெட் கணக்கில் ஒரே குளறுபடி. சாங்ஷனுக்கு மேல் பன்னிரண்டு லட்சம் செலவு ஆகியிருக்கிறது. உன்னால் கெட்டது, என்னால் கெட்டது என்கிறார்கள். எப்படியாவது சரி செய்ய வேண்டுமாம். `எந்தக் குட்டிச் சுவரிலாவது போய் மோதிக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு லீவு போட்டு விட்டேன். இப்படியே ராஷ்டிரபதி பவனுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடப் போகிறேன்'' என்றான்.
பின்னால் விஷயம் தெரிந்தது. புள்ளி விவரங்களை சரியாகக் கூட்டிப் பார்க்காமல் இவன்தான் அதிகப்படிச் செலவுக்குக் காரணமாக இருந்தானாம். ஆகவே இவனை சஸ்பெண்ட் செய்திருந்தார்கள்!

1 comment:

  1. இதே மாதிரி நிறைய அலட்டல்கள் இருக்கிறார்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!