July 25, 2011

திருவாளர் பரந்தாமன் - கேரக்டர்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். திருவாளர் பரந்தாமனுக்கு உள்ள லட்சியம் எத்தனை சங்கங்களில் பிரசிடெண்டாக ஆகிறோமோ அத்தனைகளில் ஆக வேண்டும்.  அவருக்குப் பிரதம மந்திரி பதவியோ, ஏன் ஜனாதிபதி பதவியோ கிடைத்தால் கூட அதை ஏற்கத் தயங்குவார். ஆனால் 'ஆபீஸ் நேரத்தில் தூங்கி விழுவோர் சங்கம்' என்பது போன்ற சங்கம் ஏதாவது ஒன்றில் பிரசிடெண்டாக இருக்கிறீர்களா என்று கேட்டால் போதும், இந்திர பதவியே கிடைத்த மாதிரி பூரித்துப் போவார்.
டில்லியில் உள்ள அறுபத்து நான்கு தென்னிந்திய சங்கங்களில் ஒன்பதில் இவர் பிரசிடெண்ட்; பத்தொன்பதில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர். இத்தனை சங்கங்களில் இவருக்கு எப்படி  சந்தா கொடுத்துக் கட்டுப்படியாகிறது என்று ஆச்சரியப்பட வேண்டாம். எப்போது கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரோ, இனி சந்தாவாவது ஒண்ணாவது! அவர் பெயரில் பாக்கி இருக்கும்.
சந்தா தொகைகளைக் கட்டித் தீர்க்க வேண்டுமானால் குறைந்த பட்சம் அவர் வீட்டு டி.வி.யை விற்றால்தான் முடியும். பல சங்கங்களில் தேர்தல்கள் நடக்கும்போதுதான் சந்தா வசூலிப்பார்கள். ஒரு சமயம்  தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் பிறகு அந்த சங்கத்தில் தேர்தல் வராமலே பார்த்துக் கொள்வார்!
பளிச்சென்ற வெள்ளை அரைக்கை சட்டை, வேட்டி, கறுப்புப் பளபளப்பு தேயாத செருப்பு, ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி, கையில் கார் சாவி -- இதுதான் திருவாளர் பரந்தாமன். பெரிய கம்பெனி ஒன்றின் டில்லிப் பிரதிநிதி.  மாளவியா நகரில் மாளிகை. மூன்று போன்கள். எல்லாம் கம்பெனி போன்கள்.
பரந்தாமன் ஒரு கூட்டத்திற்கு முதல் தடவையாக வருகிறார் என்றால் அந்த சங்கத்திற்கு உடனடியாக அதிர்ஷ்டம் அடிக்கும். எப்படி?
"இந்த அசோசியேஷன்ல லைப் மெம்பருக்கு முன்னூறு ரூபாயா? என்னைப் போட்டுக் கொள்ளுங்கள்.. யார் செகரட்டரி? ஓ! நீங்களா? எந்த மினிஸ்ட்ரி?... நம்ம ராமபத்ரனுக்குக் கீழே இருக்கிறீர்களா? நாளைக்கு ராமபத்ரன் கிட்ட சொல்லுங்க, எனக்குப் போன் பண்ணச் சொல்லி. "மினிஸ்டர் கிட்ட சொல்லுங்கள்' என்று ஓடி வந்தான். டிரான்ஸ்ஃப்ர் கேன்ஸல் ஆச்சு. ஒரு வார்த்தை. ஒரு தேங்க்ஸ்... பேச்கூடாது!... ஆமாம்...செகரட்டரி ஸார். தமிழ்நாட்டு வெள்ள நிவாரண நிதிக்கு நம்ம தியேட்டர் டிராமா போட்டுப் பணம் வசூல் பண்ணி அனுப்ப வேண்டும். நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன்... இன்னிக்கி என்ன அஜண்டா? ஆபீஸ் பேரர் எலக் ஷனா?... நடக்கட்டும்'' என்பார்.
பின்பு விவாதங்களில் பங்கு கொள்வார். "வருஷத்தில் நாலு டிராமாவாவது போடணும். சாவனீர் விளம்பரப்  பணம்  மூணு வருஷமா வராமல் பாக்கியிருக்கிறதை ரைட் ஆப் பண்ணிடலாம். இந்த வருஷம் சாவனீர் என் பொறுப்பு... பத்து விளம்பரம் நான் வாங்கித் தர்ரேன்.'' -- இந்த ரீதியில் பேசி எல்லாரையும் பிரமிக்க வைப்பார்.
பிறகு தேர்தல் வரும். தலைவருக்கு இவர் பெயரை யாராவது ஒரு அப்பாவி முன்மொழிவார். "நோ... நோ. எனக்கு டயம் இல்லையப்பா. நான் ஒரு வாலன்டியரா இருக்கேன். நம்ம செகரட்ரி பார்க்கிறதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மரியாதையாகச் சரின்னு சம்மதம் சொல்லிடணும்னு நினைக்கிறேன்.... ஒரு விஷயம். பல சங்கங்களுக்குத் தேர்தல்கள்தான் விரோதிகளாக அமைந்து விடுகின்றன.  அதனால யுனானிமஸ் எலக்க் ஷ்ன் என்றால் ஒத்துக்கறேன்.'' என்பார். இவருடைய ஆயிரம் ரூபாயையும் 10 விளம்பரங்களையும் எதிர்பார்க்கும் செகரட்டரி, "நம்ப பிரிசிடெண்ட் சொல்வதுதான் சரி'' என்பார்! அதாவது பரந்தாமன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதாக மறைமுக அறிவிப்பு இது!
வைதீக சங்கம், பேட்டை தொண்டர் படை, பஸ் பயணிகள் சங்கம், பக்தி பஜனை மண்டலி, நண்பர் கலாசாரக் கழகம், இயற்கை வைத்திய மன்றம், மதர் தெரசா சேவா சங்கம், ஹனுமான்ஜி மந்திர் கமிட்டி -- இப்படிப் பலவற்றில் பரந்தாமன் வியாபித்திருப்பார். காரியக் கமிட்டிக் கூட்டங்களில ஆடிக்கொரு தடவைதான் கலந்து கொள்வார். ஆனால் அந்த சங்கம் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் "மினிஸ்டரை நான் போய் அழைச்சிகிட்டு வரேன்,' என்று "தொண்டு' செய்ய முன்வருவார். மேடையில் இவர் தான் இங்குமங்கும் போய் வருவார். வேலை ஒன்றும் செய்யமாட்டார். வேண்டாத யோசனைகளையும் உத்தரவுகளையும் போடுவார்.
பரந்தாமனுக்கு மைக் என்றால் ஒரே நடுக்கம். நாலு வார்த்தை குழறாமல் பேச வராது. அதற்காகப் பேசாமல் இருந்து விடுவாரா?  சபையோர் எவ்வளவு கைதட்டினாலும் ஊளையிட்டாலும் ஏதாவது அறுக்காமல் விடமாட்டார்!

3 comments:

  1. அற்புதமான பதிவு! நிஜம்ம்மாவே இப்படி ஒருத்தர் இருக்கார் நாங்கள் நிகழ்ச்சிகளுக்குப் போகும் சங்கத்தில். எந்த ஊர் என்று சொல்லமாட்டேன்... திரைப்படம் ஆரம்பிக்குமுன் திரைக்குப் பின்னாலிருந்தாவது மைக்கைப் பிடித்துவிடுவார். படம் பார்க்க வந்திருக்கிறவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்.

    ReplyDelete
  2. எல்லா ஊரிலும் இப்படி கேரக்டர்கள் இருக்கிறார்கள்.
    பழைய பதிவுகளில் நிறைய கேரக்டர்கள் எழுதியுள்ளேன். படியுங்கள் - முக்கியமாக “அத்தை”!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!