January 05, 2011

ஏழையின் சிரிப்பில் இறைவன்-கடுகு


வெகுநாட்களுக்குப் பிறகு என் பழைய நண்பரை தற்செயலாக ஒரு விழாவில் சந்தித்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தினால் அவர் மனைவியையும் அவரையும் வீட்டிற்கு வரும்படி கூறினேன். சுமார் ஒரு மாதம் கழித்து அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு அவருடைய மனைவி சொன்னார். ``இவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி போன வருஷம் நடந்தது. மூன்று இடத்தில் அடைப்பு இருந்ததாக இரண்டு ஸ்டென்ட்கள் போட்டார்கள். கடவுள் அருளால் இவர் பழையபடி ஆகிவிட்டார்'' என்றார்.
``என்ன பிரதர், உனக்கு ஹார்ட்ல அடைப்பா? நம்பவே முடியலையே... எத்தனையோ வருஷமாக வெயிட் கூடப் போடாத ஆசாமி நீ. நடக்கிறதுக்கு அஞ்ச மாட்டே... உனக்கு எப்படிப்பா அடைப்பு வந்தது?'' என்று கேட்டேன்.
``இதையேதான் டாக்டரும் கேட்டார்...''
``ஆமாம்... செலவு  அதிகம் ஆகி இருக்குமே..? ஓ... நீதான் ரிடையர்ட் கவர்மென்ட் ஊழியன் ஆச்சே. உனக்கு இலவசமாகப் பண்ணி இருப்பாங்களே...'' என்று கேட்டேன்.
``...  அதை ஏன் கேக்கறே?.. கவர்மென்ட் அங்கீகரித்த ஒன்றிரண்டு ஆஸ்பத்திரில ஆபரேஷன் பண்ணிக் கொண்டால்தானாம்.  திடீரென்று மார்பில் வலி வந்து அவஸ்தைப்படும் போது செலவைப் பார்த்தால் முடியுமா? பேர் பெற்ற ஆஸ்பத்திரிக்குத்தான் உடனே போனேன். அங்கு அட்மிட் பண்ணி, டெஸ்ட் பண்ணி மூணு நாட்களுக்குப் பிறகு ஆஞ்சியோ பிளாஸ்டி பண்ணினார்கள். மூணு லட்சம் பில்!''
``அடப்பாவமே...''
``கேளேன்... இனிமேல்தான் என் கதையில் சுவையான பாகம் வரப் போகிறது.''
``சொல்லுப்பா...'' என்றேன் ஆர்வத்துடன்..

``உடம்பு சற்றுத் தேறியதும் நான் மத்திய அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு  மத்திய அரசு பென்ஷனர் என்ற காரணத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும். அங்கு டாக்டரிடம் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடந்ததைச் சொல்லி மருந்துகள் தருமாறு கேட்டேன்.

”டாக்டர் மிகவும் நல்லவர். அவர் கேட்டார். ”அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைக்குப் போயிருந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்திருப்பார்களே..சரி...எவ்வளவு செலவு ஆச்சு?' என்று கேட்டார்.
`மூணு லட்சம். டாக்டர்.. ஜாஸ்தி செலவுதான். பில் கொடுத்தால் பணம் திருப்பி (ரீ இம்பர்ஸ்மென்ட்) தருவார்களா?' என்று கேட்டேன்.
`தந்தாலும் தரலாம்.  நான் சொல்கிறபடி நீங்கள் செய்யுங்கள்.இது அவசரமாகச் செய்ய வேண்டிய ஆஞ்சியோ பிளாஸ்டி என்று டாக்டரிடமிருந்து சான்றுக் கடிதத்தை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.    ஒரு பெட்டிஷன் எழுதுங்கள். ’திடீரென்று   மார்பு வலி வந்தது.  எமர்ஜன்ஸியாக தனியார் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்தது. உடனே அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து விட்டார்கள். அது அரசு அங்கீகாரம் பெற்ற ஆஸ்பத்திரி இல்லை என்றாலும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்ட காரணத்தால் அருகில் இருந்த அந்த ஆஸ்பத்திரிக்கு நான் போய் விட்டேன். . இத்துடன் பில்களை இணைத்துள்ளேன். டாக்டரிடமிருந்து சான்றுக் கடிதத்தையும் இணைத்துள்ளேன். மேற்கூறிய காரணங்களால் , பில் தொகையை எனக்கு திருப்பி அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதிக் கொடுங்கள். உங்கள் மனுவுடன் பில் தொகை, டாக்டர் கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்புங்கள். உங்களுக்குப் பணத்தை திருப்பித் தந்தாலும் தருவார்கள்”  என்று கூறினார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ,அவர் சொன்னபடி செய்தேன். என் மனுவைக் கொடுத்த போது, `தனியார் ஆஸ்பத்திரியின் பில் தொகைகள் மிக அதிகமாக இருக்கும்.... மேலே அனுப்பிப் பார்க்கிறேன்' என்று அலுவலக அதிகாரி சொன்னார்..
இதை என் மனைவியிடம் சொன்னதும் என் மனைவி, `அவர்கள் மேலே அனுப்பட்டும். நானே மேலே கோரிக்கை அனுப்புகிறேன். ..என் கோரிக்கையை. அவர் ஓ.கே. பண்ணி விட்டால் பில் நிச்சயம் ஏற்கப்பட்டு நமக்குப் பணம் திரும்பக் கிடைக்கும்' என்றாள்.
என் மனைவி புரியாதபடி பேசுவாள். சில சமயம் புதிராகவும் பேசுவாள். ஆனால் இந்தத் தடவை புரியாத புதிராகச் சொன்னாள்!
``யார் அவர்,  ஓ.கே. பண்ணப் போகிறவர்?'' என்று கேட்டேன்.
``பின்னால் சொல்கிறேன்'' என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு டில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் வந்தது. என் பில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் அளவுக்கு பில் தொகைக்கான செக் தொகை என் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட்டதாகவும் அதில் எழுதியிருந்தது. பில் தொகையில் சுமார் ஒரு லட்ச ரூபாய் குறைக்கப்பட்டிருந்தது. `பரவாயில்லை... இரண்டு லட்சம் வந்ததே! வந்த வரைக்கும் மகிழ்ச்சி' என்று மகிழ்ச்சி அடைந்தேன். என் மனைவியிடம் சொன்னேன்.
`வெரிகுட்... பார்த்தீங்களா... நான் சொன்னேனே, மேலே நானும் கோரிக்கை அனுப்புகிறேன் என்று. அதனாலதான் பணம் வந்தது' என்றாள்.
`கொஞ்சம் புரியும்படி சொல்' என்றேன்.
`சொல்றேன். நம்ம வேலைக்காரி வீடு கட்டறதுக்கு இதுவரை எவ்வளவோ பணம் கடன் கொடுத்திருக்கோம். அதைச் சொல்லுங்கோ...'
`அந்தக் கணக்கு எல்லாம் எதுக்கு திடீர்னு? சரி.. சரி... சொல்றேன். ஒரு லட்சம் இருபத்து அஞ்சு ஆயிரம் அவள் தரணும். சரி, நீ இப்ப சொல்லு...'என்றேன்.
`சொல்றதுக்காகத்தான் கணக்குக் கேட்டேன். நம்ப வேலைக்காரி மொத்தப் பணத்தையும் கொடுத்து விட்டாள். ஆமாம்... அவள் பணம்தான் டில்லியிலிருந்து நமக்கு வங்கிக் கணக்குக்கு வந்திருக்குது' என்றாள்.
`எனக்கு ஒண்ணும் புரியலை' என்றேன். என் மனைவி, `புரியும்படி சொல்றேன். இந்த ஆஞ்சியோ பிளாஸ்டி பில்களை டில்லிக்கு அனுப்பினீங்களா இல்லையா... வந்தால் சரி, வராட்டாலும் சரி என்று நினைத்துத்தானே அனுப்பினீங்க?, கல்லை எறிஞ்சு பார்க்கலாம், மாங்காயாவது விழும், கல்லாவது விழும் என்று சொல்லித்தானே அனுப்பினீங்க... அப்ப நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். பணம் திரும்ப வந்தால் வேலைக்காரிக்குக் கொடுத்த கடனை ரைட் ஆஃப் பண்ணி விடுவதாக...'' என்றாள்.
”ஒரு கணம் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பில் தொகை வந்ததால் லாபமா, நஷ்டமா என்று புரியவில்லை. சில கணங்களில் சுதாரித்துக் கொண்டேன். `நீ செய்தது பெரிய காரியம்' என்று சொன்னேன். மனதாரச் சொன்னேன்.
மறுநாள் வேலைக்காரி வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே, என் மனைவி, `இதபாரு... நீ வீடு கட்டறதுக்குப் பணம் கடன் கொடுத்தேனே   அதை நீ திருப்பித் தர வேண்டாம். கடனைத் தள்ளுபடி செய்து விட்டோம்' என்றாள். .வேலைக்காரி, `சரிம்மா' என்று ஒரு வார்த்தையில் நன்றி தெரிவித்து விட்டு வேலையில் இறங்கி விட்டாள். அவளுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
அவள் மகிழ்ச்சியில் இறைவனைக் கண்டோம்...''
*  *                                 *                               *
என் நண்பர் ஜம்பமாகச் சொல்லவில்லை. ``ஆஞ்சியோ பிளாஸ்டி செய்த டாக்டர் என் இருதயத்தை மட்டும் சரி செய்யவில்லை. எங்கள் இதயத்திலும் அன்பு, ஈரம், உதவி குணத்தைச் செலுத்தி விட்டிருக்கிறார்.'' என்று அவர் சொன்னார். இந்தச் சமயம் அவர் கண்கள் ஈரமாயின.

இந்த அனுபவத்தைக் கேட்டதும் என் மனதிலும் மாற்றம் ஏற்பட்டது. எங்கள் இதயத்திலும் ஈரம் பாய்ந்தது!

15 comments:

  1. இந்த வருடத்தின் முதல் பதிவு!! அருமையான பதிவு.

    ReplyDelete
  2. மிக அற்புதமான சம்பவத்தை நீங்கள் எழுதி உள்ளீர்கள். கோரிக்கைக்கு பலனாக பணமும் வந்தது; மேலும் இதயத்தில் ஈரத்தையும் அளித்த இந்த நிகழ்ச்சி என் இதயத்தையும் மிக நெகிழ வைத்து விட்டது. அன்புடன் வெங்கட்ராமன் , பெங்களூர் .

    ReplyDelete
  3. // பணம் திரும்ப வந்தால் வேலைக்காரிக்குக் கொடுத்த கடனை ரைட் ஆஃப் பண்ணி விடுவதாக...'' // நல்ல வேளை, இதைக்கேட்டு நண்பருக்கு ஒன்றும் ஆகாதது அவர் செய்த புண்ணியம். இதில் வேலைக்காரியின் ரி-ஏக்‌ஷன் கொஞ்ஜம் உதைக்கிறது. எப்படியிருந்தாலும், இப்போது அவரும் அவர் மனைவியும் செய்த நல்ல காரியத்தால் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழப் பிறார்த்திக்கிறேன். புண்ணியம் செய்த வேலைக்காரியும் வாழ்க! - ஜெ.

    ReplyDelete
  4. ராஜ சுப்ரமணியன்January 5, 2011 at 7:15 PM

    மத்திய அரசும் பல வேளைகளில் ஈரமான இதயத்துடந்தான் நடந்து கொள்கிறது - என்ன, கொஞ்சம் ஃபார்மாலிட்டிகள், நடைமுறைகள் அதிகமாயிருக்கும், சிறிதே (6 மாதம்?) தாமதமாகும்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. நல்லாரைக் காண்பதுவும் நன்றே!
    நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!
    நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே!
    நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே!


    நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறோம்!
    அதுவே எல்லாமுமாக இருக்கிறது, எங்களுக்கு!
    நன்றி!

    ReplyDelete
  6. Jagannathan said... // பணம் திரும்ப வந்தால் வேலைக்காரிக்குக் கொடுத்த கடனை ரை இதில் வேலைக்காரியின் ரி-ஏக்‌ஷன் கொஞ்ஜம் உதைக்கிறது.>>>
    என் நணபரின் மனைவி சொன்னதை நான் எழுதி இருக்க வேண்டும்: மாதம் 600 ரூபாய் அவளுக்குச் சம்பளம். கடனை அடைக்க அவள் எத்தனை மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கூட தெரியாது. (பார்க்கப் போனால் 15 வருஷம் ஆகும்!) தெரியாததால் அவள் கவலைப் பட்டதே இல்லை. அது மாதிரியே கடன் தள்ளுபடி ஆனதால்
    அவள் குதிக்கவில்லை. கடமையைச் செய்: கடன் அடந்துவிடும் என்பது அவளுக்குத் தெரிந்த கீதையோ என்னவோ!
    இப்படி அறியாமையுடன் இருப்பதே அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனறு நினைக்கிறேன்!

    ReplyDelete
  7. It seems that the couple had written off the loan even when they sanctioned it to the maid! It baffles me that a person who is a salaried employee and who would have been happy to receive even a part of his medical bill from the insurers - was so generous to lend such a huge sum instead of helping her to get a bank loan if possible. Forgive me, I am an average human and find it amazing to hear of such a large-hearted couple. May the Lord Bless them. - R.J.

    ReplyDelete
  8. தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.Swami Vivekananda.

    Good Start 2011 Kadugu Sir,

    Thanks

    ReplyDelete
  9. RESHSU அவர்களுக்கு,
    நன்றி.. ஆண்டவன் அன்றாடம் வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். சில வாய்ப்புகளைப் பார்க்கத் தவறி விடுகிறோம்; சிலவற்றை அலட்சியம் செய்து விடுகிறோம்..

    ReplyDelete
  10. நகைச்சுவைப் பெட்டியும், குதிரை லோகோவும் ஸுபர்ப்! நன்றி! - ஜெகன்னாதன்

    ReplyDelete
  11. நீங்கள் கோடியில் ஒருவர்

    ReplyDelete
  12. <<< ABISS said... நீங்கள் கோடியில் ஒருவர்>>>
    என்னை எதற்குப் பாராட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  13. நீஙகள் சொன்னபடி, அறியாமை ஒரு வரம் மாதிரிதான். இதைத்தான் 'knowing nothing is peaceful'என்று paradise lost சொல்கிறது மதி

    ReplyDelete
  14. i am saerching something related to this topic i find out like this such a great raelstory i thought i got accurate one.thank u kadugu sir.i dont know how i will right in tamil otherwise i write in tamil.

    ReplyDelete
  15. இதைதான் கடவுள் எதிர்பார்க்கிறார்...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!